`பெண்கள் பாதுகாப்பு’ தமிழ்நாட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார் ஆர்.என்.ரவி!

அருணாச்சல பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள் உருவான தினவிழாவில் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்து சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடகிழக்கு பெண்கள் தமிழ்நாட்டிற்கு படிக்க சென்றால் அவர்கள் பெற்றோர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு அனுப்பலாம். தமிழ்நாடுபோல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அக்கறையுடன், நண்பர்களாக நம்மை கவனித்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டைப் போல் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு பெண்களை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்ற ஆளுநர் ரவிக்கு இந்த "அறிவு ஒளி" கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று புலம்பும் சங்கிகளுக்கு ஆளுநர் ரவியே பதில் கூறிவிட்டார்.

ஜாதி தேவை என்கிறது ஆர்.எஸ்.எஸ்!

ஜாதிக் கட்டமைப்பு நீடிக்க வேண்டும்; ஆனால் ஜாதிகளுக்குள்ளே நல்லிணக்கம் வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்று அமைப்பின் தேசிய பரப்புரைத் தலைவர் சுனில் அம்பேத்கர் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறது. ஆனால் அந்த கணக்கெடுப்பை அரசியலுக்கு பயன்படுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு ஜாதியும் மற்ற பிற ஜாதிகளுடன் நட்புடன் பழகி பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றார். கோயில், சுடுகாடு, நீர்நிலை, பொது இடங்களில் ஜாதிப் பாகுபாடுகளை ஆர்.எஸ்.எஸ் சேர்க்கவில்லை என்றும் சுயம் சேவக்குகள் உள்ளூர் வட்டங்களில் இந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் சேர்க்கப்படுவது இல்லை; சுயம் சேவக்குகளாக பெண்கள் வர முடியாது என்ற கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை அவரது பேட்டி உறுதிப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இணையாக "ராஷ்டிய சேவிகா சமிதி" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதில் பெண்கள் சேரலாம் இதிலும் ஆர்.எஸ்.எஸ்-சில் இருப்பது போலவே சாகாக்கள் உண்டு என்றார் சுனில் அம்பேத்கர்.

விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.