சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் - நடிகர் - ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம்.velu prabhakaran 5091980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன், பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய 'கடவுள்', 'புரட்சிக்காரன்' போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு - பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு - பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர்.

தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன்.

திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன்.

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து அவர் வைத்த விமர்சனத்திற்காக, எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் கடுமையான பதிலடியைக் கொடுத்த துணிச்சல்காரர். கந்தசஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வலையொளியில் வெளியான காணொளிகளுக்காக, அதில் பணிபுரிந்த தோழர்கள் மீது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதிந்து கைது செய்தபோது, அந்த கைதைக் கண்டித்து கந்த சஷ்டி கவசத்தில் என்ன உள்ளது என்று பேசி காணொளிகளை வெளியிட்டு எதிர்வினையாற்றியவர் வேலு பிரபாகரன். அதற்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையிலும் இருந்தார்.

தொலைக்காட்சி விவாதங்கள், வலையொளிகள் மூலமாக பெரியாரின் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வந்தவர். பெரியார் போலவே வேடமணிந்துகொண்டு, பெரியார் குரலிலேயே பேசி காணொலிகளை வெளியிட்டு வந்தார். பெரியாரியலுக்காக தனிமனிதராக ஒரு இயக்கம் போலவே செயல்பட்டு வந்தார் என்றால் மிகையல்ல. வேலு பிரபாகரன் மறைவு திரைப்படத்துறையினருக்கும், முற்போக்காளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் சீரிய பெரியாரியராக, தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.