தொடர்புடைய படைப்புகள்

அரசியலிலும் சமூகத்திலும் பார்ப்பனியமும் மனுசாஸ்திரமும் அதிகாரம் பெற்று வருகிறது; இதை உறுதிப்படுத்தும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு.

brahmins in courtதிருட்டுக்கு ’தீண்டாமை’ இல்லை

கோயில் கர்ப்பக் கிரகத்தில் "தீண்டாமை"யை ஆகமங்களைக்கூறி பின்பற்றி வருகிறது பார்ப்பனியம். அந்த ’கர்ப்பக்கிரகத்தில்’ அம்மன் நகைகளை திருடுகிறார்கள் அர்ச்சகர்கள்.

ஆலந்தூர் பொன்னி அம்மன் கோயில் அர்ச்சகராக இருக்கும் ரெங்கநாதன் கருவறையில் இருந்த 190 கிராம் வெள்ளி கிரீடம், 270கிராம் வெள்ளி ஜல்லடை, 10 கிராம் தங்கத் தாலியை திருடி கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் அறங்காவலர் புகாரில் அர்ச்சகர் வீட்டில் இருந்த திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பார்ப்பனர் அல்லாதார் கருவறையில் நுழைந்தால் தீட்டு; ஆனால் கருவறையில் நுழையும் பிறவி உரிமை பெற்றவர்களே கடவுளுக்கு ஏதும் சக்தி இல்லை என்பதை நன்கு உணர்ந்ததால் அம்மன் தாலியையே திருடி கைதாகிறார்கள்.

சாக்கடைக் குழியில் இட ஒதுக்கீடு

கருவறையில் 'பிராமணர்'களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல் கழிவுநீர் அடைப்பைச் சுத்தம் செய்யும் வேலை பட்டியலினப் பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது‌. மனு சாஸ்திரம் தான் இப்போது நாட்டை வழிநடத்துகிறது. என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

திருவொற்றியூர் சாத்துமா நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட பூமிநாதன் மண் சரிந்து பள்ளக்குழியிலேயே மரணம் அடைந்துள்ளார். பட்டியலின உழைப்பாளிகளின் இத்தகைய கொடூர மரணங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த வேலைக்கு ஒப்பந்தம் எடுத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான வேலைக்கு அரசு அதிகாரியான பொறியாளர் வாய் வழியாக அனுமதி வழங்கி இருக்கிறார். எவ்வித பாதுகாப்புக் கவசங்களும் இறந்து போன தொழிலாளிக்கு வழங்கப்படவில்லை. இந்த மனித உயிர்களுக்கு ஜாதிய சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறதா? பார்ப்பனிய மனுவாத நோய் பீடித்துள்ள இந்தச் சமூகத்தில் தான் இவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

கேட்பது கார் அல்ல; கழிப்பறைதான்!

தூய்மைப் பணியாளர்கள் அடிப்படைத் தேவைகளுக்காக நடத்தும் போராட்டம் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சென்னை மாநகரம் நாறிப் போய்விடும்.

ஒப்பந்தக்காரர்களின் பிடியில் தூய்மைப் பணியாளர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். பணி நிரந்தரம், கழிப்பறை, ஓய்வறை வசதிகள், ஊதியத்துடன் விடுமுறை, மகப்பேறு விடுப்பு என்ற அடிப்படை வாழ்வுரிமைக்கு இவர்கள் போராடி வருகிறார்கள்.

சென்னை பெரியமேடு பகுதியில் தொடர்ந்து போராடும் தூய்மைப் பணியாளர்களை சீருடை அணியாத காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தி வருகிறார்களாம். கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கைகளில் துடைப்பங்களோடு பணியாற்றும் பெண் தோழர்களுக்கு வார விடுமுறைக்கு ஊதியம் இல்லையா? கழிப்பறை சுத்தம் செய்பவர்களுக்குக் கழிப்பறை இல்லையா? இதைக் கேட்டால் காவல்துறை ஒடுக்கு முறையா?

சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் இலவசம்; தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை கூட இல்லை. இப்படி ஒரு ஜாதிய சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்காக வெட்கப்பட்டாக வேண்டும்.

ரூ.5 கோடியை திரும்பப் பெற்ற ‘யோகா’ ரவிசங்கர்

வாழும் கலை என்ற யோகா பயிற்சி நிறுவனங்களை உலகம் முழுதும் நடத்தி வருகிறார் கார்ப்பரேட் சாமியார் . ரவிசங்கர் என்ற பார்ப்பனர். 2016-ல் டெல்லி யமுனை நதிக்கரையில் உலக கலாச்சாரத் திருவிழா ஒன்றை ஆடம்பரமாக நடத்தினார். சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இப்படி ஒரு சர்வதேச விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதே தவறு.

 தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ’யமுனை நதியைக் காப்போம்’ என்ற பசுமை இயக்கத்தினர் இந்தத் திருவிழா, பசுமைச் சூழலை பாதித்திருப்பதைச் சுட்டிக்காட்டி முறையிட்டனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் குற்றச்சாட்டை உறுதி செய்து ரூ. 5 கோடி அபராதம் விதித்தது. டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு தண்டனைத் தொகையையும் செலுத்தி விட்டது.

அதன் பிறகு ரவிசங்கர் உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இப்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் யமுனை நதிக்கரையில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளானது உண்மைதான். அதற்கு ரவிசங்கர் நடத்திய உலகத் திருவிழா தான் காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை, என்று கூறியதோடு வசூலிக்கப்பட்ட தண்டத் தொகை ரூ.5 கோடியையும் ரவிசங்கரிடம் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

யமுனை நதிக்கரையைப் பாதுகாக்க தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் டெல்லி வளர்ச்சி ஆணையத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு அரசு அமைப்பிடம் கட்டிய அபராதத் தொகையைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிட முடியுமா? ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகைகள் கிடைக்கும். சூழலைக் கெடுத்தாலும் பார்ப்பனர் என்றால் பரிசுத் தொகை உண்டு.

இது `ஆரியக் கட்டளை’; அறக்கட்டளை அல்ல!

திருட்டு மோசடி வழக்குகள் என்றாலும் கூட பார்ப்பனர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவது இல்லை. `பிராமணர்' கொலை செய்தால் அவர் உச்சிக் குடுமியில் ஒரு மயிரைப் பிடுங்கினால் போதும்; தண்டனை வழங்கக்கூடாது என்கிறது மனுசாஸ்திரம். அயோத்தி இராமர் கோயிலில் உண்டியல் நகை திருட்டு நாடுமுழுதும் சந்தி சிரிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ராமன் கோயில் அறக்கட்டளை ஒரு புனிதமான அமைப்பு என்றும் அதற்கு நீதிமன்றம் தாக்கீது அனுப்பக்கூடாது என்றும் அறக்கட்டளையின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

உச்ச நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. நோட்டீஸ் அனுப்பிவிட்டது. அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சம்பத்ராய்; அணில் மிஸ்ரா, கோபால் ராவ் என்ற மூவரும் பார்ப்பனர்கள். உண்டியல் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 8 பேரில் 5 பேர் பார்ப்பனர்கள். இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?.. ராம் ராம் என்ற ஒற்றை வரி ராம பஜனை தான் அவர் அளித்த பதில்.

பஜ்ரங்தள் தலைவராக இருந்த பார்ப்பனர் வினாய்க் கட்டியார் அறக்கட்டளை உறுப்பினர்களை ஏன் கைது செய்யவில்லை? நான் இதை மோடியிடம் புகார் செய்யப் போகிறேன் என்று பொங்கியிருக்கிறார். மோடி கைது செய்வாரா? ராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியவர் மோடி; திறப்பதற்கு தேதி குறித்தவர் மோடி; ராம பகவானே கனவில் வந்து கூறினார் என்றவர் மோடி; கொடியேற்றி வைத்தவர் மோடி; கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தவர் மோடி. ராமர் கோயில் அறக்கட்டளைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்தவர் மோடி. கர்ப்பக் கிரகத்துக்கு வெளியே பலராமன் சிலைக்கு முதல் பூஜை செய்தவர் மோடி. ஆனால் ராமன் திருட்டு குறித்து கள்ள மவுனம் சாதித்து வருவதும் மோடி தான்! திருட்டு கொள்ளை என்றாலும் "பிராமணர்கள்" புனிதமானவராகவே இந்த நாட்டில் கருதப்படுகிறார்கள் இதுதான் பார்ப்பனியம். தீர்ப்பளித்த தலைமை நீதிபதி கனவிலும் மோடியின் கனவிலும் வந்த கனவு நாயகன் ராமன் களவாடிகளை ஏன் தடுக்கவில்லை?

பொதுத்துறை நிறுவனங்களும் `அவாள்’ சொத்து

 எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு டெல்லியில் பல லட்சம் ஏக்கரில் 12 அடுக்கு மாளிகை கட்டியிருக்கிறது. திறப்பு விழாவில் அமித்ஷா, பாஜக தலைவர்கள் பங்கேற்றார்கள். சட்ட ஏற்பு இல்லாத ஒரு அமைப்புக்கு கட்டிட அனுமதி வழங்குவது பற்றியோ, கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி வழங்குவது குறித்தோ எந்த கேள்வியையும் எவரும் இங்கே கேட்பதில்லை.

பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கடந்த 10 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-க்கு வழங்கிய நிதி ரூ.670 கோடி ரூபாய். 2015- 2025வரை இந்த நிறுவனம் 670 நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி இருக்கிறது. இதில் 20ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகள் மட்டும் ரூ.670 கோடி பெற்றுள்ளது என்ற செய்தி தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டு இருக்கிறது.

ஆனால் கல்லூரி, மருத்துவமனைகளுக்கு தொண்டு செய்யும் நிறுவனங்களுக்கு வரும் நிதியைத் தடுக்க சட்டம் கொண்டு வருகிறார்கள். பார்ப்பனியத்தைப் பரப்பிட இங்கே சட்டங்களை மீறலாம் மனு சாஸ்திரமே வழிநடத்தும்.

நீதிமன்றங்களில் பார்ப்பன ஆதிக்கம்

 அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளில் பட்டியல் இனப்பிரிவினரோ, பிற்படுத்தப்பட்டோரோ, இஸ்லாமியரோ, கிருத்துவரோ, பெண்களோ ஒருவர் கூட இடம் பெறவில்லை. 8 பேர் வழக்கறிஞர்கள் சங்கத்தினரிலிருந்தும், 7 பேர் பணிமூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 8 பேரில் 2 பேர் பார்ப்பனர்கள். ஏற்கனவே 8 பேர் பார்ப்பன நீதிபதிகளாக உள்ளனர். இப்போது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பங்கினை விட பல மடங்கு அதிகம். இதில் 6 பேர் ஒன்றிய ஆட்சியின் சிபிஅய், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளில் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள்.

உச்ச நீதிமன்றத்தில் 1980 வரை ஒரு பட்டியல் இனப்பிரிவினரும் பிற்படுத்தப்பட்டோர் நீதிபதிகளாக வர முடியவில்லை. இதுவரை நீதிபதிகளாக வர முடியாத சமூகத்திலிருந்து ஒரு நீதிபதி கூட நியமிக்கப்படவில்லை. இத்தகவல்களை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நந்தனத்தில் நடைபெற்ற அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்தார்.

தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

Comments

1 comment

1
PP Mahadevan
Iam Tamal Civilization Answer wri tter Oldest World old Tamal I want register and copyright Great research my work

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.