kolathoor mani & viduthalai rajendran

கடந்த 11 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன், தே.மு.தி.க.வின் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பால. அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார்.

      பி.ஆர். பாண்டியன், “விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கொடியினை தலைவர் அண்ணன் கொளத்தூர் மணிதான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணியதற்குக் காரணம், இன்றைக்கு விவசாயிகள் தங்களுடைய வாழ்வதாரத்திற்கான போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கின்றோம், போராளிகளாக.

      அப்படிப்பட்ட எங்களுடைய இயக்கத்தின் கொடியினை உண்மையான ஒரு போராளியைக் கொண்டு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவேதான் தகுதியான ஒரு போராளியைக் கொண்டு, எங்கள் விவசாயத் தோழர்கள் எல்லோரின் ஒப்புதலோடு தலைவர் கொளத்தூர் மணியைக் கொண்டு எங்கள் இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்றோம்” என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார்.

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர்

      13.8.2015 அன்று 2 மணிக்கு, மூத்த பெரியாரியலாளரும், கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடி தாங்கி நிகழ்வில், (தலித் சடலம், ஆதிக்க ஜாதி வீதி வழியாகச் செல்லத் தடை போட்ட ஊர் - குடிதாங்கி. அதை மீறி சடலம் எடுத்துச் செல்லப்பட்டது) மையப் புள்ளியாய் நின்று இயங்கியவருமான ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், உடல் நலிவுற்றிருக்கிற செய்தியறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும், எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோணத்தில் அவரது இல்லமான அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில் சந்தித்தனர்.

      அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றிலுள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.