இந்திய அறிவுசார் முறை என்ற பெயரில் அய்.அய்.டிகளில் போலி அறிவியல் பாடமாக கற்பிக்கப்பட்டு இந்துத்துவா பழமை வாதத்துக்கு உயிர் கொடுப்பதை விளக்குகிறது இக்கட்டுரை.indian knowledge system at iit madrasகடந்த சில ஆண்டுகளாக, "இந்திய அறிவு முறை" (Indian Knowledge System -IKS) என்ற திட்டம் குறித்த மூடநம்பிக்கையை பாரம்பரிய இந்திய அறிவு முறை என்ற பெயரில் மறுபிறவி கருத்துக்களை நவீன கல்விப் பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது.

கடந்த கால வரலாறுகளைப் பேசுவது தவறு அல்ல! ஆனால் மதம் சார்ந்த பழமை கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாணினியின் மொழி ஆய்வு, நியாய (Nyaya)வாதம், , இரும்பின் பயன்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? மாண்டி அய்.அய்.டி இயக்குநர் லட்சுமிதர் பெஹேராவின் தலைமையின் கீழ் அமைத்த குழு புராணங்களை வரலாறாகக் கருதுதல், சடங்குகளை தொழில்நுட்பமாக திரித்துக் கூறல் போன்ற பாடத்திட்டங்களை பரிந்துரைக்கிறது. அறிவியல் அடிப்படையில் மறுக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. 2020 - ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை இந்த போலி அறிவியலுக்கு ஏற்பு வழங்கியுள்ளது.

தற்போது அய்.அய்.டி காரக்பூர், அய்.அய்.டி காந்திநகர், அய்.அய்.டி பம்பாய் மற்றும் அய்.அய்.டி கான்பூரில் இந்திய அறிவு மய்யங்கள் உள்ளன. குறிப்பாக கான்பூர் மற்றும் மாண்டி மய்யங்கள் "நனவு" (Consciousness), மறுபிறவி மற்றும் "வேத உயிரியல்" குறித்த "ஆராய்ச்சிகளில்" இறங்கியுள்ளன. இந்த போலி அறிவியல் ஆதரவாளர்கள், "இந்திய மனதை காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்க" முயல்கிறோம் என்று கூறுகின்றனர். இது நகைப்புக்குரியதாகும். 19-ஆம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சிக் காலத்தில், ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் பிரஃபுல்ல சந்திரா போன்ற ஆளுமைகள் இந்திய அடையாளத்தையும் அறிவியல் ஆராய்ச்சியையும் ஒருங்கிணைத்தனர். காலனித்துவ நீக்கம் என்ற பெயரில் போலி அறிவியலுக்கான கதவைத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதோடு தங்கள் முடிவுகளை அறிவியலாக நிரூபித்தனர். ஆனால் இந்திய அறிவு மய்யங்கள், புராண அடிப்படையிலான ஆய்வுகளை அய்.அய்.டி-களின் கட்டமைப்பிற்குள் பதியச்செய்ய முயல்கின்றன. நிறுவனங்களின் மதிப்பையும் புகழையும் பயன்படுத்தி, தங்களின் அரசியல்-மதக் கோட்பாடுகளுக்கு அறிவியல் நம்பகத்தன்மை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க விரும்புகின்றன.

சமீபத்தில், அய்.அய்.டி மாண்டி மற்றும் அய்.அய்.டி கான்பூர் ஆகியவை மறுபிறவியின் "அறிவியல்" குறித்த ஒரு "சிறப்பு அமர்வை" நடத்தின. குழந்தைகளின் "முந்தைய பிறவி நினைவுகளை" கண்டறிய முடியும் என்றும். ஜோதிடப் பிறப்புச் சக்கரங்களை பயன்படுத்தலாம் என்றும் கருத்தரங்குகளை நடத்தினார்கள். இந்த நிகழ்வில், அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய அமைப்பிலிருந்து பேச்சாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு உயர்கல்வித் துறைக்கு ஒரு நெருக்கடியாக அமைந்தது. போலி அறிவியல் தற்போது முழுமையாக காவி நிறுவன ஆதரவைப் பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற அய்.அய்.டிகள், தங்களின் கல்வி நம்பகத் தன்மையை மதக் கோட்பாடுகளுக்காக பரிமாறத் தயாராக இருக்கின்றன.

அந்த நிகழ்வில் பங்கேற்ற "ஆராய்ச்சியாளர்கள்", வட இந்தியாவில் உள்ள 6-வயது குழந்தையின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உலகளாவிய ஆன்மிகக் கோட்பாட்டிற்கான "முறையான ஆய்வு முறையை" உருவாக்குவது குறித்து விவாதித்தனர். சாதாரணமாக இதை ஒரு தனிப்பட்ட சம்பவக் கதை (anecdote) என்பார்கள். ஒரு குழந்தையின் நரம்பியல் பரிசோதனையின் வழியாக மறுபிறவி என்ற கருத்தை "நிரூபிக்க" முடியும் என்று கூறுவது இந்தியத் தத்துவத்தின் சிறந்த மரபுகளுக்கே அவமதிப்பாகும். அந்த மரபுகள் சிறந்தவையாக இருப்பதற்குக் காரணம், அவற்றின் சிந்தனையாளர்கள் தங்களிடம் இருந்த உண்மைகளை மூடநம்பிக்கைகளுக்கு பயன்படுத்தவில்லை.இன்று நமக்குக் கிடைத்துள்ள அறிவியல் ஆதாரங்களை அறிந்திருந்தும், ஒரே ஒரு தனிநபரை மட்டும் ஆய்வு செய்து உடலியல் சோதனை கருவி வழியாக மறுபிறவியை நிரூபிக்க முடியும் என்று கருதுவது அபத்தமானதாகும். நிரூபிப்பதில் கூட மோசடிகள் நடந்துள்ளன.

முனைவர் பட்ட மாணவர்கள் இந்த "சிறப்பு அமர்வில்" பங்கேற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். சில மய்யங்கள் அய்.அய்.டி நிதியையும் ஆராய்ச்சி உதவியாளர்களையும் பயன்படுத்தி, "பேய்களை வேட்டையாடும்" களப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழிகாட்டுதல்களின்படி, உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் இந்த போலி அறிவியலைக் கற்பது கட்டாயம்; நிறுவனங்களின் பெயர் சீரழிந்து விடும் என்று அறிந்தே அய்.அய்.டி நிர்வாகங்கள் இதை கற்பித்து வருகின்றன. ஏனெனில் அவர்களின் நோக்கம் இந்துத்துவ கருத்தியலுக்கு வலு சேர்ப்பதுதான்.

அய்.அய்.டிகளில் பரவி வரும் போலி அறிவியல், திறமையான இந்திய மாணவர்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை நோக்கி நகர்த்துகிறது. இந்த போலி அறிவியல் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படாது என்று கருதி வெளிநாட்டு பல்கலைகழகத்துக்கு சென்று விடுகிறார்கள். இந்த "சிறப்பு அமர்வுகள்" இந்திய உயர்கல்வியை உலகளாவிய தரநிலைகளிலிருந்து பிரித்துவிடும். இறுதியில், இந்திய அறிஞர்கள் தங்களின் அறிவியல் திறமையால் அல்லாமல், இந்துத்துவ மதவாத கருத்தியலின் ஆதரவாளர்களாக மாறி விடுவார்கள். இந்திய அறிவு முறை மய்யங்கள், புராண அடிப்படையிலான ஆய்வுகளை அய்.அய்.டிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

(‘இந்து’ ஆங்கில (ஜூன்23,2026) நாளேட்டில் ‘வாசுதேவன் முகுந்த்’ எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.