Birdsகோபுர கலசத்தின் உச்சியில்

கடவுளின் கடவுளாய்

அமர்ந்திருக்கிறதோர் பறவை

கடவுளை

ஆசீர்வதித்ததின்

அடையாளமாய் பிரசாதமென

எச்சமிட்டு பறக்கிறது

மின் கம்பங்களின் எண்ணிக்கைக்கு

இணையாகக்கூட

மரங்கள் நடப்படாத நகரத்தில்

பறவைகள் இறங்குவதில்லை

பறவைகளின் சிறகசைவில்

சுழலும் காற்றில் மாசு நீங்கக்கூடும்

தங்க நாற்கர சாலைகளால்

இணைக்கப்படும் இந்நகரத்தின்

பழைய வரைபடத்தில்

பறவைகள்

இரையருந்திப் பறக்கும்

மாபெரும் மண் கிண்ணத்தைப்போல்

குளமொன்று இருந்தது

பெரும் மழைக்காலங்களில்

குளம்தேடி நீர்சூழ

நகராத காங்கிரிட் கப்பல்களாய்

மிதக்கும் குடியிருப்புகள்.

Pin It