கோவை நகரத்தில் கடந்த இரண்டு மாதங்களில் அதன் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை முன்னிறுத்தி அடுத்தடுத்து இரண்டுவிழாக்கள் நடைபெற்றன.

கோயமுத்தூர் நகரம் உருவாக்கப்பட்டு இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறி கோயமுத்தூர் தினம் என்று ஒரு விழா நடத்தப்பட்டது. கோவையில் ஓடும் (!) நொய்யல் ஆற்றை சீர்படுத்துவதாகக் கூறும் சிறுதுளி அமைப்பு மற்றும் பிரிக்கால் நிறுவனங்களின் தலைவர் வனிதா மோகன் இவ்விழாவை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். பெரும்பாலும் நாயக்கர் சாதி தொழிலதிபர்களே பங்குகொண்ட இவ்விழாவை கோவை மக்கள் நாயக்கர் விழா என்றார்கள்.

அடுத்து ஒருமாதம் கழித்து பெரிய அளவில் செய்தி ஊடகங்களின் பங்களிப்போடு இன்னொரு விழா நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த ‘யங் இன்டியன்ஸ்’ என்ற அமைப்பின் கோவை கிளை இவ்விழாவை நடத்துவதாக சொல்லப்பட்டது.மேற்படி அமைப்பின் தலைவரும் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகள் வயிற்றுப்பேரனும் இன்னொரு தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வானவராயரின் மகனுமான சங்கர் வானவராயரே இவ்விழாவின் நடுநாயகமாக இருந்தார். இவ்விழா ‘கவுண்டர் விழா’ என்றும் சங்கர் வானவராயரை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் விழா என்றும் பேசப்பட்டது. ஒன்பது நாட்கள் நடைபெற்ற இவ்விழா 11-02-09 அன்று முடிவுற்றது. அந்த நாள் சங்கர் வானவராயரின் பிறந்த நாள். இது ‘தற்செயலாக’ அமைந்துவிட்டதாம்.

இரண்டு விழாக்களும் அவற்றை நடத்தியவர்களின் சாதிகளைக் கொண்டே அறியப்பட்டாலும் இரண்டு விழாக்களிலும் எல்லா சாதிகளையும் சேர்ந்த தொழிலதிபர்களும் முக்கிய பிரமுகர்களும் தவறாமல் கலந்து கொண்டனர்.

அதிலும் வானவராயரின் கோயமுத்தூர் விழா கோவையின் பல்வேறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு நடத்தப் பட்டது. நாளேடுகள் இவ்விழா குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டன. கோவையின் 2000 ஆண்டு வரலாறு, ரோமாபுரியுடனான வணிகத்தொடர்பு தற்போதைய தொழில் வளம், திரையுலகிற்கு அது அளித்த கொடை போன்றவை குறித்தெல்லாம் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பட்டன. கோவையின் கட்டிடக்கலை, காலனியாதிக்க கால கட்டிடங்களின் சிறப்பு குறித்து சங்கர் வானவராயரே இந்துவில் கட்டுரைகள் எழுதினார்.

அவருக்கு கோவையின் பிரம்மாண்டமான கலைநயம் மிக்க வீடுகளின் மேல் ஆர்வம் என்பதை உணர்ந்துகொண்ட அரண்மனை ஓவியர்கள் செயலில் இறங்கினர். கோவில் கள், வெள்ளைக்காரர் கட்டிய கட்டிடங்கள், தற்போது விழா கொண்டாடிக் கொண்டு இருப்பவர்களின் மூதாதையர்கள் கட்டி எழுப்பிய பிரம்மாண்டமான வீடுகள் அனைத்தும் சன் மார்க்க சங்கத்தில் ஓவியங்களாகத் தொங்கின. க்விஸ் போட்டி, பல்சமயப் பிரார்த்தனை, உணவுத்திருவிழா பாரம் பரிய இடங்களுக்கு டூர் என்று தொடர்ந்து நிகழ்ச்சிகள்...

இந்த இரண்டு விழாக்களிலும் கோவையின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் வாயார, மனமார பாராட்டப்பட்டனர். ஆங்கில தமிழ் நாளேடுகள் நாளுக்கு ஒன்றாக இவர்களின் வெற்றிக்கதைகளை மக்களுக்கு அறி வித்தன. அவற்றின் பக்கங்களில் ஒவ்வொரு நாளும் தொழிலதிபர்கள் சிரித்த னர். கனிவுடன் உற்றுப் பார்த்தனர்.

இந்த இரண்டு விழாக்களிலும் நகரத்தை உருவாக்கியதில் பங்காற்றிய வெள்ளையர்கள் நன்றியுடன் நினைவுகூரப் பட்டனர். ராபர்ட் ஸ்டேன்சுக்கும், வெள்ளையர் கட்டிய கட்டிடங்களுக்கும் புகழ்மாலைகள் சூட்டப்பட்டன.

அதிலும் வனிதாமோகன் நடத்திய ‘கோவைதினம்’ (கோவையின் 200 வது ஆண்டுவிழா) விழாவின் மூலமே வேடிக்கையானது. கோவைக்கு 2000 வருட வரலாறு உண்டு என்பதெல்லாம் இருக்கட்டும். கோவை நகரம் தற் போது உள்ள இடத்திலேயே சுமார் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்திருக்கிறது என்பது வரலாற்று அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒன்று.

கொங்குப்பகுதி 1799ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. 24-11-1804ல் கோவை நகரம் கோவை மாவட் டத்தின் தலைநகரானது. இந்த நாளைத்தான் கோவை உரு வாக்கப்பட்ட நாளாகக் கொண்டாடுகிறார் வனிதா மோகன். இதில் முரண்நகை என்னவென்றால் அதற்கு முன்பு இதே கோவையை பலகாலம் ஆண்டவர்கள் அவரது சொந்த சாதியைச் சேர்ந்த மதுரை நாயக்கர்கள்தான். வெள்ளையர் மேலுள்ள மரியாதையின் முன் சொந்த சாதிப்பற்றுகூட அடிபட்டுப் போய்விடும் போலும்.

இத்தகைய விழாக்களின் மூலம் கோவையின் மூலதனத்தை யும் தொழில்வளத்தையும் அனைத்து வியாபார நிறுவனங்களையும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் இரு வேறு குழுக்கள் தனித்தனியாக இம் மாநகரின் அனைத்து பெருமைகளுக்கும் தாங்களே சொந்தக்காரர்கள் என்று நிலை நாட்ட முயல்கின்றனர். ஆனால் இந்த இரண்டு விழாக்களுமே சில அடிப்படையான அம்சங்களில் தங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

1. இந்த இரண்டு குழுக்களும் கோவை நகரத்தையும் அதன் நவீன வரலாற்றையும் வெள்ளைக்காரர்களோடு அடை யாளப்படுத்துவதில் போட்டியிடுகின்றன.

2.நகரின் கீழ்மட்ட குடிகளான தலித்துகள், மற்ற சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் அவர்களது கலை வடிவங் களையும், பாரம்பரிய சின்னங்களையும் அடியோடு புறக் கணிப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

வெள்ளைக்காரர்கள் நவீன யுகத்தை கோவைக்கு இறக்குமதி செய்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்றைய விழா நாயகர்களின் முன்னோர்கள் ஒரு பெரும் தொழில் நகரத்தை வறண்ட கொங்கு நாட்டு பொட்டல்வெளிகளில் நிறுவினர். இதற்காக ஒவ்வொரு கோவைவாசியும் நன்றி யுணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று விழா அமைப் பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2000 ஆண்டு பழமைவாய்ந்த நாகரிகம், பண் பாடு, பாரம்பரியம் அனைத்திற்கும் தொடர்ச்சி யாக தாங்கள் தான், இந்த நகரத்தின் வாழ்வும் தாழ்வும், பழம்பெருமை பேசும் உரிமையும் தங்களுக்கே உள்ளதென இவர்கள் ஒவ்வொரு கணமும் நமக்கு நினைவூட்டத் துடிக்கின்றனர்.

உண்மையிலேயே இந்த நகரின் ‘சிறப்புக்கு’ இந்த நாயக்கர்கள், முதலியார்கள், கவுண்டர்கள், செட்டியார்களின் கடின உழைப்பும், அறிவுத் திறனும் மட்டும்தான் காரணமா? இவர்கள் ‘கட்டியெழுப்பிய’ நகரம் ஒரு பொன்னுலகமா?

கோவை நகரத்தின் வரலாற்றை எழுதுவது கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் ‘கோய முத்தூர் தினத்திலிருந்தே’ தொடங்குவோம்.

திப்புசுல்தான் கொல்லப்பட்ட பின்பு புதிய மைசூர் மன்னர்களுடனான ஒப்பந்தத்தின்படி கோவை உள்ளிட்ட கொங்குப்பகுதிகள் 1799ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கரங்களுக்கு வந்தன. 1830க்குப் பின்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆங்கிலேயர்கள் பெருந்தோட்டங் களை உருவாக்கத் தொடங்கிய பின்புதான் கோய முத்தூர் அவர்களுக்கு முக்கிய நகரமாக தளமாக மாறியது. வெள்ளையர்கள் மலைகளில் காலங் காலமாக வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை உட்புற காடுகளுக்கு விரட்டியடித்தனர்.

சமவெளிகளில் இருந்து தலித்துகளைக் கொண்டுவந்து அவர்களைக் கொண்டு அடர்ந்த பசிய காடுகளை சூறையாடி அழித்துவிட்டு காப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களை உரு வாக்கினார்கள். அப்போது கோவை நகரில் வீசிய காற்றில் ஈரப்பதம் இருந்ததாம். எனவே 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நூற்பாலைகளும், பவுண்டரித் தொழில்களும் வளர்ந்தன.

வெள்ளையர்கள் மலைகளில் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு நகரில் தொழில் நிறுவனங் களையும், மாளிகைகளையும், ஓய்வு விடுதிகளை யும் கட்டினர். அந்த வெள்ளையருக்கு மட்டுமே யான கிளப்பில் பலூன் போன்ற கவுன்கள் அணிந்த, இடுப்பை இறுக்கிச் சிறுக்கச் செய்து கொண்டிருந்த வெள்ளைக்கார யுவதிகள் நீக்ரோக் களையும் நேட்டிவ்களையும் பற்றிய ரசம் மிகுந்த பாடல்களைப் பாடி மென்மையாகச் சுழன்று ஆடினர்.

அதேநேரத்தில் கிளப்புகளுக்கு வெளியே நிலைமை வேறுவிதமாயிருந்தது. வெள்ளையர் தாங்கள் வெற்றி கொண்ட பகுதிகளிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு அனுப்பவும், இயந்திரங்களை இறக்குமதி செய்யவும்,ராணுவ, நிர்வாக வசதிக்காகவும் சாலைகள், பாலங்கள் அமைப்பதில்தான் அக்கறை காட்டினார்கள். மக்களுக்கு உயிராதாரமாக இருந்த நீர்நிலைகள் அடியோடு புறக்கணிக்கப்பட்டன. பணமாக வரி வசூல் செய்யும் புதிய ரயத்துவாரி முறை வேறு விவசாயிகளைக் கசக்கிப் பிழிந் தது. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பஞ்சம் கொங்கு நாட்டுப்புறத்தை விட்டு முழுமையாக அகலவேயில்லை. 

“அநேகமாக 10,12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அத்தகைய பஞ்சம் 1833, 1845, 1857, 1866, 1877-78, 1891-92 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது. 1866-ல் மழை பெய்யாமல் போகவே தொத்து நோய்கள் ஏற்பட்டு மக்களோடு கால்நடைகளும் இறந்தன. ஏழைகள் புளியங்கொட்டை வேர்கள், கத்தாழைப் பழங்கள் இவைகளைச் சாப்பிட்டார் கள். கஞ்சித்தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்றரை லட்சம் கால்நடைகள் இறந்தன.

1877-78ல் நிகழ்ந்த பஞ்சம் மிகவும் கொடியது. ஈஸ்வர வருடத்துப் பஞ்சம் என்று அது ஒரு பழ மொழியாகவே ஆகிவிட்டது. 1,37,000 மக்கள் இறந்துவிட்டார்கள். 3 லட்சம் பேர்களுக்குக் கஞ்சி வார்க்கப்பட்டது. நோய்களுக்கு அள வில்லை. 24 பிணங்கள் ஒரேசமயத்தில் சுடப் பட்டன என் றால் காலக்கொடுமையைப் பற்றிக் கூறுவும் வேண்டுமா? நாட்டில் கொலையும் குற்றங்களும் 5 மடங்கு அதிகமாயின.

இவ்வகைப்பட்ட பஞ்சங்கள் வராமல் காப்பதற்கு நீர்ப்பாசன வசதிகளே மருந்தாகும். அவைகளை அரசாங்கத்தார் அந்தக் காலங்களில் கைக்கொள்ள வில்லை. பஞ்சத்திற்கு நிவாரணமாக பாதை களைப் போடுவதைக் காட்டிலும் ஆறுகளுக்கு அணை போடுவதே உத்தமம்.” (கோவைக்கிழார் கோ.ம.இராமச்சந்திரன் செட்டியார், கொங்கு நாட்டு வரலாறு, பக்கம் :364)

வெள்ளையர்கள் அமைத்த சாலைகளில் ஒரு போதும் உணவு தானியங்கள் பஞ்சப்பிரதேசங் களுக்கு கொண்டுவரப் படவேயில்லை. பஞ்சத்தி லடிபட்ட பகுதிகளிலிருந்து உணவு தானியங் களையும் மற்ற லாபம் தரும் பொருட்களையும் வெளிப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வது ஒரு நாளும் நிற்கவும் இல்லை. இப்பஞ்சங்களின் காரணமாக சாலைகள், இருப்புப்பாதைகள் அமைக்கவும், மலைகளிலும் ஆலைகளிலும் பணியாற்றவும் மிகமிக அற்பமான கூலிக்கு வெள்ளையர்க்கு ஆட்கள் கிடைத்தார்கள் என்பது தான் உண்மை.

இப்பஞ்சங்களின்போது அரசு ஒரு உறுதியான திட்டவட்ட மான நடவடிக்கை எடுத்தது. “முந்திய சிறைச்சாலை போதாமல் போக ஊருக்கு வடபுறத்தில் 190 ஏகரா அளவில் ஒரு பெரிய சிறைச்சாலையானது 1862ல் தொடங்கி 1868ல் முடிக்கப்பட்டது. அதில் 2,000 கைதிகள் இருக்க வசதி செய்யப்பட்டது’’ (கொங்கு நாட்டு வரலாறு. பக் -361)

1866ல் கோவை நகரத்தின் மக்கள் தொகை 24,241 தான். 1880களில் கோவையில் இருப்புப்பாதை அமைக்க கோபி, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து போயர் மற்றும் அருந்ததியர் இன மக்களை வெள்ளையர்கள் கொண்டு வந்தனர். இவர் களில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான அருந்ததியர்கள் தோல் தொழிலிலும், நகரத்தை சுத்திகரிக்கும் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

1927ல் இந்த இரண்டு இனங்களையும் சேர்ந்த தொழிலாளர் களே சூரிய ஒளிகூட புகமுடியாமல் இருந்த அடர்ந்த வனங் களில் கடுங்குளிரிலும், மழையிலும் கடுமையாக உழைத்து சிறுவாணி, பைகாரா அணைகளை கட்டியெழுப்பினர். இவர்களுக்குப் பாதுகாப்பாக ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருந்தனர். வனவிலங்குகளிடமிருந்து தொழிலாளர் களைப் பாதுகாக்கத்தான் துப்பாக்கி என்று கூறுப்பட்டது.

இதேபோல கோவையின் ஒவ்வொரு சாலையையும், அணையையும் கட்டும்போதும் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த தலித்துகள் கொண்டுவரப்பட்டு அடிமைகளைப் போல வேலை வாங்கப்பட்டனர். பணிகள் முடிந்ததும் கொள்ளை நோய்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் பலி யானவர் போக மீதியுள்ளவர்களை அப்படியே அனாதரவாக விட்டு விடுவதுதான் நகரத்தின் சிற்பிகளான ஆங்கிலேயர் களின் வழக்கம். இந்தத் தொழிலாளிகள் தங்கள் கிராமத் திற்கு திரும்பிச் செல்ல ஒருபோதும் விரும்பவில்லை. இவர்கள் சாக்கடைப் பள்ளங்களுக்கு அருகிலும், வெள்ளை அபாயம் மிகுந்த குளங்களைச் சுற்றிலும் தங்களது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர். (இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்பும் இந்த மக்கள் தங்கள் கிராமங் களுக்குத் திரும்பிச் செல்லவிரும்பவில்லை என்றால் கறுப்பு எஜமான்களின் இலட்சணத்தை என்னவென்று சொல்வது?)

1890களில் இத்தகைய உழைக்கும் மக்கள் நிரம்பிய, ஏராள மான சேரிகளையும் அழுக்கடைந்து இருண்டிருந்த சந்து களையும் உடையதாக இருந்தது கோவை நகரம். மனிதர் களும் எலிகளும் சமமான அளவில் இந்த பொந்துகளில் வாழ்ந்து வந்தனர். மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நகரத்திற்கு மிகக்குறைந்த கூலிக்குப் பணிபுரியத் தயாராக இருந்த இந்த மக்கள் வரப்பிரசாதமாய் அமைந்தனர்.

1855ல் சீனாவிலிருந்து கிளம்பி மூன்றுமுறை உலகைச் சூறையாடிய பிளேக், 1903-ல் கோவையையும் தாக்கியது. நகரில் பல்கிப் பெருகியிருந்த எலிகள் மரணத்தை ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் தாங்கிச் சென்றன. பின்பு 1904, 09, 16, 17, 20, 21, 23, 25, 27, 28, 29, 30 ஆகிய ஆண்டுகளில் திரும்பத் திரும்ப இந்நோயால் கோவை நகரம் சின்னாபின்னமாக்கப்பட்டது.

பிளேக் நோயால் 1904ல் 3,045 பேரும், 1909ல் 2973 பேரும், 1916ல் 5582பேரும், 1917ல் 3284பேரும், 1920ல் 3869 பேரும், 1921ல் 4123பேரும், 1923ல் 3888பேரும், 1925ல் 392 பேரும், 1927ல் 109 பேரும் இறந்துபோயினர். 1901ல் 53,080 ஆக இருந்த கோவை மக்கள்தொகை 1911ல் 47,007ஆகக் குறைந்துபோயிற்று. (கோவை மாநகர மேம்பாடு மாற்றுத் திட்டத்திற்கான பரிந்துரை, கோவை மாநகர மேம்பாட்டிற் கான மக்கள் கண்காணிப்புக் குழு. மார்ச் 2007 பக் 36-37).

இது பிளேகால் இறந்தவர்களைப் பற்றிய புள்ளி விவரம் மட்டும்தான். காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோயால் உயிர்விட்டவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் தலித்துகள். உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்த சேரிகளே பேரழிவைச் சந்தித்தன.

செத்துப்போன தகப்பனை மகனும், மகனைத் தாயும் தொட பயந்த அந்தக் காலத்தில் “இன்று குளங்களில் குடியிருந்து நீராதாரங்களுக்குச் சேதம் விளைவிக்கிறார்கள்” என்று சிறு துளியும், மேட்டுக்குடிகளும் குற்றம் சாட்டும் அருந்ததியர் களின் முன்னோர்கள்தான் சடலங்களைச் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். வீடுகளைச் சுத்தம் செய்து சீல் வைத்தனர்.

பிளேகும், காலராவும், பெரியம்மையும் ஏற்படுத்திய சர்வ நாசத்தைப் பற்றி அப்போது கோவையில் வாழ்ந்த பலர் எழுதியுள்ளனர். உதாரணத்திற்கு இரண்டு. “அப்போது எனக்கு இரண்டு வயது. இந்த நோய்க்கு முதலில் பலி யானவர் என் தந்தை. பிணத்தை அடக்கம் செய்யக்கூட ஆள் கிடைக்கவில்லை. அம்மா எப்படியோ இரண்டு பேரைப் பிடித்து அடக்கம் செய்தார். பின்பு என் நான்காவது அண்ண னும் பிளேகிற்குப் பலியானார். மறுபடியும் அதே கதை. அம்மா அழுதும் தொழுதும் ஆட்களை அழைத்து வந்து அண்ணணின் பிரேதத்தை அடக்கம் செய்தாள். தலைவனை இழந்துவிட்ட குடும்பம் எப்படி உயிர் வாழமுடியும்?” (ல.கண்ணாக்குட்டி, போராட்டம் என் வாழ்க்கை, பக், 19)

“வீட்டைத் துறந்துவிட்டு தந்தை எங்கோ சென்றுவிட்ட தால் ரமணி 14வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டுக் குடும்பச்சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டி வந் தது. அவர் தன் பாட்டி, தாயார், ஒன்றுவிட்ட தங்கை மற்றும் சகோதரனோடு வேலை தேடிப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற கனவுடன் கோவை நகரை வந்தடைந்தார். அது 1930ஆம் வருடம். நகரிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தினக் கூலி வேலை. வேலையில் சேர்ந்து சில மாதங்களிலேயே அந்தப் பயங்கரமான இடி விழுந்தது. காலரா நோயால் பாதிக்கப்பட்ட ரமணியின் பாட்டி, தாயார், மற்றும் சகோத ரன் ஒன்றன்பின் ஒன்றாக வெறும் ஐந்து நாட்களுக்குள் ளேயே மாண்டு போயினர். (தியாகத்தின் சின்னம் தோழர் கே.ரமணி, றிமீஷீஜீறீமீs ஞிமீனீஷீநீrணீநீஹ் ஸ்ஷீறீ.ஜ்ஜ்ஜ் ழிஷீ.24 யிuஸீமீ11. 2006.)

தங்கள் நகரம் வளம்மிக்கது. எழில் மிக்கது. பாரம்பரியம் மிக்கது என்று உலகறியப் பறைசாற்றும் விழா அமைப் பாளர்கள் இந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கவிஞர்களோ கலைஞர்களோ இந்த மக்கள் குறித்து ஒரு சொல்லும் சொல்லவில்லை.

இந்த இடத்தில் அரண்மனை ஓவியர்கள் குறித்துக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. கோவையின் அழகிய வீடுகள் பலவற்றை இவர்கள் ஓவியமாகத் தீட்டி கண் காட்சிக்கு வைத்திருந்தார்கள். பிளேக் வந்த காலத்தில் ‘கடை வீதிக்கு அருகே ஒத்த செக்கார், கெம்பட்டி போன்ற வகுப்பு மக்கள் வசித்து வந்த இடங்கள் மிகவும் நெருக்கடி யாகவும், நாற்றம் வீசும் இடங்களாகவும் இருந்தன. நகர சபை அவைகளைப் பலவந்தமாக வாங்கி அழித்து வெட்ட வெளியாக்கியது. அவ்விதம் அகற்றப்பட்ட மக்களுக்கு கெம்பட்டி காலனி, தேவாங்கப்பேட்டை, ஹபீஸ் பேட்டை போன்றவற்றை உருவாக்கினார்கள். 

பிராமணர்களுக்கு 1911ல் ராம் நகர் என்ற அக்ரஹாரம் உரு வாக்கப்பட்டது. காற்றோட்ட வசதியோடு சுகாதாரமாக வீடுகள் அமைக்கப்பட்டனர். (தெரிந்த கோவை, தெரியாத கதை, கவியன்பன், கே.ஆர். பாபு)

ஓவியங்களாகத் தீட்டப்பட்ட பெரும்பாலான வீடுகள் இந்த ராம்நகரில் இருப்பவைதான். சேரிமக்கள் குடியமர்த்தப் பட்ட இடங்களை ஓவியர்கள் கண்ணெடுத்தும் பார்க்க வில்லை. அவற்றிலும் பிளேக் வந்தது என்பதையும் சொல்லவே வேண்டியதில்லை அல்லவா.

பணமுதலைகளால் சூறையாடப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் அடிவாரங்களிலும் வனவிலங்குகளும் விவ சாயிகளும் ஜீவமரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க இவர்கள் காட்டுயானைகளின் கம்பீரத்தையும் மலைகளில் சூரியன் மறையும் அழகையும் வரைந்து தள்ளியிருந் தார்கள்.

இந்த விழாக்களில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தலித்துகள் மட்டுமல்ல. தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் உரி மைகளுக்காகப் போராடிய இடைநிலை சாதிகளைச் சேர்ந்த வர்களும், அவர்களது தலைவர்களும் கூட புறக்கணிக்கப் பட்டனர். ஸ்டேன்ஸ்மில் வாயிலில் சுட்டும், துப்பாக்கி பைனட்டுகளால் குத்தியும், கழுத்தறுத்தும் கொல்லப்பட்ட ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், தொழிலாளர் உரிமைகளுக்காக தூக்குமேடை ஏறிய சின்னியம்பாளையம் தியாகிகள் போன்றவர்கள் ஏதோ வேறு கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று விழாவினர் நினைத்துவிட்டார்கள் போலும். அதுசரி இந்தத் தொழில் நிறுவனங்கள் பொன்னுலகை கோவைக்கு இறக்குமதி செய்துவிட்டன என்று பேசிக் கொண்டிருப் பவர்கள் தொழி லாளர் உரிமைகளுக்காக போராடி உயிரை விட்டவர்களைப் பற்றி வாயைத் திறப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாததுதான்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டரில் 20ம் நூற்றாண்டின் முற்பாதியில் தொழிலாளர்களின் நிலைமை எப்படி இறந் தது என்பது கீழ்கண்ட உதாரணத்தைப் பார்த்தால் தெரிந்து விடும். “காலை ஐந்தே முக்கால் மணிக்கு ஆலையின் சங்கு கள் முழங்கும். உடனே தெருக்களில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வெக்குவெக்கென்று விரைந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் அலறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்குவார் கள். ஆறுமணி அடித்தால் மில் கேட்டுகளைச் சாத்திவிடு வார்கள். அதனால் பலமைல் தூரத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்களும் வெளியே நிற்க நேரிடும்.

மேஸ்திரிகளின் கண்காணிப்பின் கொடுமைகளை வர்ணிக் கவே முடியாது. ஒருவினாடி நேரம் நின்றுவிட்டால் சுளீர் என்று சாட்டையடி விழும். வேலை, வேலை, வேலை. காலை 6மணி முதல் மாலை 6மணி வரை 12மணிநேரம் ஓயாத வேலை. அதற்குப் பிறகுகூட வெளியே போக முடி யாது. மேஸ்திரிகள் மனதுவைத்து அனுப்புகிற போதுதான் போகலாம். கால்கள் தள்ளாடும். கண்கள் வட்டமிடும். மயக்கம் வரும். அங்கங்கள் யாவும் தஞ்சம் என்று கெஞ்சும். ஆனாலும் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இப்படி கசக்கிப் பிழியப்படும் தொழிலாளிக்கு கூலி மாதம் ஆறு, ஏழு, எட்டு ரூபாய்தான். சில மில்களில் அதைக்கூட பணமாகக் கொடுக்காமல் தங்கள் தோட்டங்களில் விளை யும் சோளம், கம்பு, ராகியைக் கொண்டு வந்து அளந்து கொடுத்து விடுவார்கள்.

18 வயது நிரம்பியவர்களே பாக்டரிகளில் வேலை செய்ய லாம் என்பது சட்டம். பாக்டரி இன்ஸ்பெக்டர் வந்துவிட் டால் 12 வயதான என்னையும், என்னைப் போன்ற சிறுவர் களையும் கோழிக்குஞ்சுகளை அடைப்பது போல கூடை களைப் போட்டு மூடி அடைத்துவிடுவார்கள். (கண்ணாக் குட்டி போராட்டம் என் வாழ்க்கை. பக்-25-26)

இந்த மக்களுக்கு, ஆண்களுக்கு பெண்களுக்கு, குழந்தை களுக்கு இந்த நகரின் பெருமையில் வரலாற்றுச் சிறப்பில் -அப்படி ஏதாவது இருந்தால் - பங்கே இல்லையா?)

25ஆண்டுகாலம் பொதுவுடமை இயக்கத்தின் தலைமையி லான சோர்வறியாத போராட்டத்திற்குப் பின்பே எண்ணற்ற தியாகங்களுக்குப் பின்பே கோவை நகர ஆலைத் தொழி லாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்தனர். அந்தக் காலக்கட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் கோவை யின் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு ஆலை வாயிலி லும் ரத்தம் சிந்தப்பட்டது. அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் பலர் இன்றும் இதே கோவையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கோவை விழாக் களில் நன்றியுடன் நினைவுகூரப்பட்ட தொழிலதிபர்களின் புன்னகை அந்த முதிய தொழிலாளர்களுக்கு இவ்வளவு கனிவு நிரம்பியதாகத் தோன்றியிருக்காது.

இருட்டடிப்புக்கு ஆளான இன்னொரு பிரிவு மக்கள் இஸ்லாமியர்கள். முகமது அப்துல் ஹபிஸ் சாயுபு என்பவர் பிளேக் தாண்டவமாடிய 1903ல் கோவை நகர கமிஷனராக நியமிக்கப்பட்டாராம். அவர் இரவுபகலாக தனது கோச் வண்டியில் நகரைச் சுற்றிவந்து பிளேக் ஒழிப்புப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருப்பாராம். அவர் அந்த வண்டியிலேயே குடியிருக்கிறாரோ என்னும் அளவிற்கு நகர வீதிகளில் பறந்து கொண்டேயிருப்பாராம்.

விழாக்களில் எங்கே ஹபிஸ் சாயபு என்று தேடியபோது ஏமாற்றமே மிஞ்சியது. ஸ்டேன்ஸ்கள், நாயுடுகள், முதலி யார்கள், செட்டியார்கள் கூட்டத்திற்கு நடுவே அவர் கரைந்து காணாமல் போய்விட்டார். ஒருவேளை அவர் இஸ் லாமியராக இல்லாதிருந்திருந்தால் அவரை தியாகி என்று இந்த நகரம் கொண்டாடி இருக்குமோ என்னவோ? கோவை சிறையில் தூக்கிலிடப்பட்ட மலபார் மாப்ளா புரட்சிப் போராளிகள் புதைக்கப்பட்டுள்ள கல்லறைகள் எல்லாம் விழாக்காரர்கள் சொல்லும் பாரம்பரியத் தலங்களின் பட்டியலில் இடம்பெறவே இல்லை.

இந்த இருட்டடிப்புகள் ஏதோ தற்செயலாக நடந்தவை அல்ல என்பது இவர்களது எதிர்காலத் திட்டங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துவிடும்.

இந்திய நகரங்களை மேம்படுத்துவதற்காக உலகவங்கியின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டிருக்கும் திட்டம் ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டம். இதன்படி கோவையில் 23சேரிகள் இடம் மாற்றப்படவுள்ளன. இத் திட்டத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறுதுளி விழாவில் பேசப்பட்டது. வெளியேற்றப் பட உள்ள மக்களின் கதி, அவர்களுக்கு மாற்று இடம் தரப் படவேண்டும் என்பது பற்றியெல்லாம் ஒரு சொல்லும் உச்சரிக்கப்படவில்லை.

குடிசைவாசிகள் குளங்களை ஆக்கிரமித்து நீராதாரங்களை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை வெளி யேற்றவேண்டும் என்று சிறுதுளி பலமுறை பேசியுள்ளது. மாநகராட்சியின் இத்தகு நடவடிக்கைகளை ஊக்குவித்தும் வருகிறது. நொய்யல்நதிக்கரைக் குளங்களில் அரசு நட் டுள்ள கருவேல மரங்கள்தான் அவற்றின் 90% பகுதியை மேடுதட்டிப் போகச் செய்து உபயோகமற்றவையாக்கி உள் ளன. சாயப்பட்டறைகள், ஆலைகளிலிருந்து வெளியேறி வரும் கழிவுநீர் ஒரத்துப்பாளையம் அணையை ஒரு அமிலக் கடலாக மாற்றிவிட்டது. இன்றைய தமிழ் மக்களுக்கு நொய்யலைவிட ஒரத்துப்பாளையம் அணையை நன்கு தெரியும். இவற்றைப் பற்றி எல்லாம் சிறுதுளியோ, அதன் சக அமைப்புகளோ வாயே திறப்பதில்லை. போக்கிடமற்ற இந்த மக்கள்தான் நீராதாரங்களை நாசமாக்குகிறார்கள் என்று கூறி இவர்கள் தற்போது இருக்கும் இந்த பாழ்வெளி களிலிருந்தும் விரட்டியடிக்க விரும்புகிறது சிறுதுளி. 

இன்றுவரை கோவையின் அனைத்துத் தொழில் வியா பார நிறுவனங்களுக்கு மின்சாரம் அளித்துவரும் பைகாரா அணையைக் கட்டியவர்களின் வாரிசுகள் இந்த மக்கள். இன்றுவரை தங்களது கடின உழைப்பால் இந்த நகரத்தை செழிப்பாக்கி வருபவர்கள் இவர்கள். நீராதாரங்களைப் பாது காக்க வேண்டுமென்றால் குடிசைகளை அகற்ற வேண்டும், நகரை அழகுபடுத்த வேண்டுமென்றால் குடிசைகளை அகற்ற வேண்டும். நகர் மேம்பாட்டுத் திட்டத்தால் பெறப் போகும் புதிய வணிக வாய்ப்புகளை ஆர்வத்துடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனங்கள் மக்கள் வாழ்க்கையின் மேல் எவ்வளவு அலட்சியமான மனோ பாவத்தைக் கொண்டுள்ளன என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.

இந்த விழாக்கள் மிக இனிமையாக, நயமாக, வசீகரத்துடன் நடந்து முடிந்தன. குளிர்கால இரவில் கரும்பச்சை மரங் களில் தொங்கும் சீரியல் லைட்டுகளைப் பார்த்தால் மனதில் ஒரு இனிமை உண்டாகுமே அதைப் போன்ற மனநிலையை இந்த விழாக்கள் கொடுத்தன. ரோமானிய வணிகர்களும், தங்கப் புதையல்களும், அறிவுத்திறனும் எட்டப்பட்ட சிகரங்களும் மட்டுமே பேசப்பட்ட இவ்விழாக்களில் வலிக்கும், வேதனைக்கும், வியர்வைக்கும், இரத்தத்திற்கும் இடமேயில்லை.

என்றாவது ஒருநாள் கோவையின் உண்மையான குடிமக்கள் தம் பாரம்பரியம் குறித்து விழாக் கொண்டாடினால் அதில் இந்நகரின் செல்வச் செழிப்பிற்காக நகரத்துச் சேரிகளிலும், சுற்றுப்புற மலைகளிலும் கூட்டம் கூட்டமாக பலி கொடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இடம் பெறுவார்கள். இந்த அணைகள் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றிற்காக தங்கள் வாழ்வை இழந்த ஆதிவாசிகள் இடம்பெறுவார்கள். ஏறக்குறைய அடிமைகளைப்போல மில்களிலும், கட்டு மானப் பணியிடங்களிலும், இரவுபகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் கேம்ப் கூலிப் பெண்களும், அஸ்ஸாம், பீகார், வங்காளத் தொழிலாளர்களும் கட்டாயம் இடம் பெறுவார்கள்.

பெட்டிச்செய்திகள்:

1.

ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் கோவை நகரத்தை மேம்படுத்த 3223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு நகரமும் தனக்கான நிதியைப் பெற முதல் கட்டமாக நகர மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை மத்திய அரசின் நகர மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். நகர மேம்பாட்டுத் திட்டத்தினை உருவாக்குவதற்கென்றே இந்த அமைச்சகம் சுமார் 21 நிறுவனங்களில் பரிந்துரை செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ‘வில்பர்ஸ்மித் அசோஸியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனமே கோயமுத்தூர் மற்றம் மதுரை நகரங்களுக்கான நகர மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் தலைநகரான கொலம்பியாவில் உள்ளது. இந்நிறுவனம் உருவாக்கிய திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட நிதியில் போக்கு வரத்து மற்றும் சாலைகளுக்காக சுமார் 70 சதவீதமும், நகர்ப்புற ஏழை களுக்கு வீடுகள் கட்டுவதற்கு 9 சதவீதமும், குளங்களை சீரமைக்க 4 சதவீதமும், நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை அளிக்க 4 சதவீதமும், குடிதண்ணிர் திட்டத்திற்காக 4 சதவீதமும், திடக்கழிவு மேலாண்மைக்காக 2 சதவீதமும் மற்ற செலவுகளுக்கு இரு சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகரின் சாலைகளை மேம்படுத்துவதற்கும் புதிய மேம்பாலம் கட்டுவதற் கும் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் செலவிடப்பட வேண்டும் என்று ‘வில்பர்ஸ்மித் நிறுவனம்’ கூறியுள்ளது. இந்த நிறுவனம் அடிப்படை யில் சாலைகளுக்கும், பாலங்களுக்கும் ஆலோசனை கூறிடும் ஒரு நிறுவனம். நகரின் ஒட்டுமொத்தப் பரப்பளவில் சாலைகளின் பரப்பு குறைந்தது 10 சதவீதமாவது இருக்க வேண்டும். கோவையில் அது வெறும் 5 சதவீதமாகத்தான் உள்ளது. எனவே இதை நியாயப்படுத்து கிறது ‘வில்பர்ஸ்மித் நிறுவனம்’.

ஏதோ கோவையில் சாலைகளே இல்லை போலவும், இத்திட்டம் வந்த பிறகுதான் காடுவெட்டி சாலையமைக்கப் போகிறார்கள் என்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது இந்த நிறுவனம்.

இந்த நகரில் அமையப் போகும் இந்த அதிநவீன, பிரம்மாண்டமான சாலைகளால் கட்டுமான நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் பலனடையலாம். ஆனால் நகரத்தைப் பிடித்து ஆட்டிவரும் தொற்று நோய்களும், வறுமையையும், குடிநீர்ப் பிரச்சினையும் இந்த சாலை களால் தீர்ந்துவிடும் என்று கற்பனைகூட செய்துவிட முடியாது. அது தவிர சங்கனூர் ஓடையின் கரைகளிலும், குளங்களின் கரைகளிலும் உள்ள குடிசை வீடுகள் மழைநீரை ஓடையில் கலக்கவிடாமல் தடுக்கின்றன என்றும் அதனால் சுகாதாரக்கேடுகள் உண்டாகின்றன என்றும் கூறி இக்குடிசை வீடுகள் அனைத்தையுமே அகற்றிவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது வில்பர்ஸ்மித் நிறுவனம். இதற்கு மொட்டையாகக்கூட எந்த சானறுகளையும் ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை.

ஆனால் சுற்றுச்சூழல் மாசுபடுத்துவதில் குளக்கரை ஓர மக்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள். அவர்களை வெளியேற்றிவிட்டால் நகரம் சுத்த மாகிவிடும் என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறது இந்த நிறுவனம்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் அரசும், மற்ற நிறுவனங்களும் ஆற்றி யுள்ள பங்கோடு ஒப்பிடும்போது இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி மிக மிக அற்பமானதாகத்தான் இருக்கும். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டான்ட், மின் நிலையங்கள், சாலைகள் என்று எத்தனை குளங்களை மாநகராட்சி அழித்துள்ளது.

இதுதவிர நகரின் நிலத்தடி நீரின் தன்மை குறித்து பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியின் மூத்த விரிவுரையாளரான எம்.இப்ரஹீம் பாதுஷா, அவர்கள் தலைமையிலான குழு ஒன்று 2004ஆம் வருடம் கோவை யின் 72 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டது. அதில் வடக்கு மண்டலத்தைச் சார்ந்த ஏழு வார்டுகளிலும் நிலத்தடி நீர் குடிநீருக்கு மட்டுமல்ல, கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசுபட்டு போயிருப்பது தெரிய வந்தது.

மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் சல்ஃபேட்டின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவான லிட்டருக்கு நானூறு மில்லிகிராம் என்பதைவிட இரண்டு மடங்கு இருந்தது. குளோரின் வேதிப் பொருட் களின் அளவு அங்கீகரிக்கப்பட்டதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. நீரில் ஈயமும், காட்மியமும் அதிக அளவில் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்த விசித்திரமான வேதிப்பொருட்கள் எல்லாம் சேரி மக்கள் கை, கால், முகம் கழுவுவதாலேயே உருப்பெற்று வந்து விடுகின்றனவா? நகரின் ஆலைகளுக்கும் எலக்ட்ரோ பிளேட்டிங் தொழிற்கூடங்களுக்கும் இந்த வேதிப்பொருட்களுக்கும் சம்மந்தமே இல்லையா? எல்லாம் வில்பர்ஸ்மித்துக்குத்தான் வெளிச்சம். இப்படிப் பட்ட ஒரு மேதமை மிகுந்த அறிக்கையின் அடிப்படையில்தான் கோவை நகரம் புனரமைக்கப்பட உள்ளதாம்.

கோவையின் அற்புதமான இறந்தகாலத்தையும், ஒளிமயமான எதிர் காலத்தையும் பற்றி பேசித் தீர்த்தவர்கள், தங்கள் அற்பமான குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய ஆபத்தை எதிர் நோக்கி உள்ள மக்களைப்பற்றி வாயே திறக்கவில்லை. மாறாக இந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தில் ஊக்கத்துடன் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றே பேசப்பட்டது.

ஒரு அன்னிய நிறுவனம் உருவாக்கிய திட்டத்தை விவாதமின்றி ஏற்றுக் கொள்வதில்தான் கோவையின் பாரம்பரியமும் அறிவும் உள்ளது போலும்.

மாநகராட்சியின் ஓரவஞ்சனை

நகரை அழகுபடுத்துவதற்காக காலி செய்யப்பட உள்ள 23 சேரிகளிலும் உள்ளவர்களுக்கு குடும்பத்திற்கு 272 சதுரடி வழங்கப்படும் என்று நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மாநகராட்சி அறிவித்தது. இந்த 272 சதுரடியில் கழிவறையும், சுவர்களின் பரப்பளவும் அடங்கும். வாடகைக்குக் குடியிருப்பவர்களுக்கு இதுவும் கிடையாது. இதைக் கேள்விப்பட்ட தோழர்கள் கார்க்கியும், மெய்யரசும் உணர்ச்சிவசப்பட்டு கோவை மிருகக்காட்சி சாலைக்குச் சென்று குரங்குகளுக்கு எத்தனை சதுரடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அளந்து பார்த்தனர். இந்த ஆய்வில் இரண்டே இரண்டு திரேசியஸ் எனப்படும் சிங்கவால் குரங்குகளுக்கு 520 சதுரடி இடம் ஒதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை விழாக்காரர்கள் 200 வருட பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும்போது அதற்குப் பலபடிகள் மேலே சென்று 10 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரம்பரியத்திற்கு மாநகராட்சி அளித்துவரும் மதிப்பு பிரமிக்கச் செய்கிறது.

(இங்கே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் வில்பர்ஸ்மித் நிறுவனம் சமர்ப்பித்த நகர மேம்பாட்டிற்கான அறிக்கைக்கு மாற்றாக, கோவை மாநகர மேம்பாட்டிற்கான மக்கள் கண்காணிப்புக்குழு சமர்ப்பித்த மாற்றுத் திட்டத்திலிருந்தும் டாக்டர்.ரமேஷ் தொகுத்த "கோவைக்குரல்' கட்டுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை)

Pin It