ஆண்டின் 365 நாட்களில் அன்னையர் தினம், மனித உரிமைகள் தினம், மே தினம், சுற்றுச்சூழல் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் என எத்தனையோ சிறப்பு தினங்களை ஆளும் அரசுகள் அறிவித்தவண்ணம் உள்ளன. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் ஆளும் வர்க்க அதிகாரங்களுக்கும், சாதி வெறி, இன வெறி, மொழி வெறிகளை தங்களின் ஊண் உடம்பு முழுவதும் நிரப்பி வைத்துள்ள ஆதிக்க வெறி பிடித்த இராட்சசர்களுக்கும் எதிராக சமூகத்தில் சமநீதி நிலவ வேண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் வாயிலாக டிசம்பர் 25ல் வெண்மணி தினம், ஜூன் 30ல் மேலவளவு தினம், நவம்பர் 17ல் சங்கரலிங்கபுரம் தினம் போன்ற தினங்கள் உருவாயின. அந்த வரிசையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது 1919ல் ஆங்கிலேயர்களால் மிகக்கொடூரமாக நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக் நிகழ்வுக்கு ஒப்பாகக் கருதப்பட்டதும், கடந்த 11 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டதும், கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்றதுமான ஜுலை 23- தாமிரபரணி நினைவு தினம். 

 சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற அரியணைப் போராட்டத்தில் “எட்டு வீட்டில் பிள்ளைமார்” என்ற குழுவினர், இளவராக இருந்த உண்மையான வாரிசான சேரன் மார்த்தாண்டவர்மனை துரத்திவிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்தபோது வேல்கம்பு வீச்சிலும், குதிரையேற்றத்திலும் திறன்படைத்த திருநெல்வேலி மாவட்டம், சிங்கம்பட்டி ஜமீன்தாருடன் கிடைத்த தொடர்பின்மூலம் அவர்களின் உதவியோடு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய சேரன் மார்த்தாண்டவர்மன், தனது வெற்றிக்கு உதவியதற்காகவும், அந்த போரில் தனது வாரிசான நல்லபுலிக்குட்டியை இழந்ததற்காகவும் மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார். 

 1918ல் ஒரு கொலை வழக்கில் சிக்கிய தனது வாரிசைக் காக்கவேண்டி வழக்குச் செலவிற்காக சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருடத்திற்க்கான குத்தகை ஒப்பந்தம் மூலமாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பார்சி இனத்தவரான நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு 1930ம் ஆண்டில் கைமாற்றினார். அப்படி கைமாற்றப்பட்ட நிலம்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. 

 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகள் அமைந்துள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பட்டியலின மக்களும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈழவ மக்களும் தொழிலாளர்களாக, முதலாளிகளின் தரகர்களால் இங்கு அழைத்துவரப்பட்டனர். எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் தவிர்த்து ‘கங்காணி’ என அழைக்கப்படும் மேற்பார்வையாளர்கள், அவர்களுக்குமேல் ‘அய்யா’ என அழைக்கப்படும் காட்டு அதிகாரிகள், ‘துரை’ என அழைக்கப்படும் எஸ்டேட் மேலாளர்கள் பணிபுரிகின்றனர். மேலாளர்கள் அனைவரும் கர்நாடகம், பஞ்சாப், உள்ளிட்ட வெளிமாநிலங்களையும், காட்டு அதிகாரிகள் அனைவரும் தமிழகத்தின் பிறமாவட்டங்ளையும் சேர்ந்தவர்கள். 

 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. இதன் காரணமாக பிபிடிசி நிறுவனம், அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் தொடர்ந்தது. 

 மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்க்கெதிரான தங்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பல்வேறு காலங்களில் போராட்டதில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற்றும் உள்ளனர். 

 1998ம் ஆண்டில் மாஞ்சோலையில் தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில் பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர்.கிருஷ்ணசாமி, மாஞ்சோலைப் பகுதி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். அந்த அடிப்படையில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் அவர் மாஞ்சோலை பகுதிக்கு வருகைதந்து தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்தி பெற்றுத் தருவது, அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 வாங்கித்தருவது, எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிப்பது உள்ளிட்ட 33 கோரிக்கைகளை மையப்படுத்தி அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும். அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் தோட்டத்தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்ய அழைப்புவிடுத்து அதற்கு புதிய தமிழகம் தலைமையேற்கும் என அறிவிப்பு செய்தார். 

 பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததைத் தொடர்ந்து மருத்துவர்.கிருஷ்ணசாமியின் அழைப்பையேற்று தோட்டத்தொழிலாளர்கள் அனைவரும் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். 03.09.1998ல் மருத்துவர்.கிருஷ்ணசாமி எஸ்டேட் பகுதிக்கு வருகைபுரிந்து, எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடப்போவதாகவும், தேயிலைத் தொழிற்சாலையை கைப்பற்றப்போவதாகவும் அறிவித்தார். மாஞ்சோலையில் செயல்பட்டு வந்த தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் போன்ற அனைத்துத் தொழிற்சங்கங்களும் கலைக்கப்பட்டு, அவைகள் புதிய தமிழகம் தொழிற்சங்கங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 

 அன்று இரவு எஸ்டேட் நிர்வாகம், ஊத்து எஸ்டேட் தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்திருந்த தேயிலைத்தூள்களை விற்பனைக்காக எடுத்துச்செல்ல தனியார் லாரியை எற்பாடு செய்தது. இதனையறிந்த தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலையின் கதவையடைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகு எஸ்டேட் நிர்வாகம் காவல்துறையை அழைத்து வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையையினர் வீடுகளிலும், சாலை ஓரங்களிலும் சென்று கொண்டிருந்த 127தொழிலாளர்களை அடித்து, கைதுசெய்து, திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு போராட்டம் மேலும் வலுப்பெற்றது. 

 இடையிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலமாக பயனேதும் ஏற்படவில்லை. டிசம்பர் 1998 வரையிலான அய்ந்தரை மாத வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தும் எந்தவித சுமூகமான முடிவும் எட்டப்படாத சூழலில் மீண்டும் பணிக்குத் திரும்புவது என தொழிற்சங்கங்கள் தீர்மானித்ததன் அடிப்படையில் அனைத்துத் தொழிலாளர்களும் ஜனவரி 1999 முதல் பணிக்குத் திரும்பினார்கள். வேலைக்குத் திரும்பிய அடுத்த மாதத்திலேயே எஸ்டேட் நிர்வாகம், தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டபுறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என காரண விளக்கம் கோரும் அறிவிப்பு கொடுத்தது. இது மட்டுமின்றி தொழிலாளர்கள், நிர்வாகத் தரப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான நிரந்தரத் தொழிலாளர்கள் அரைநாள் வேலை நிறுத்ததில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்ட நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தையும் பாதியாகக் குறைத்தது நிர்வாகம். 

 இதனைத் தொடர்ந்து, முழு ஊதியம் கொடுக்க வேண்டியும், தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களுக்கு ஆதரவாய் வேலைநிறுத்ததில் ஈடுபட்ட நிரந்தரத் தொழிலாளர்களையும் பழிவாங்கும் எஸ்டேட் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 மற்றும் 08.06.1999 ஆகிய இரு நாட்களும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை செய்ததின் காரணமாக 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

 இப்படியாக கைதுசெய்யப்பட்டு 47 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 23.07.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்க பல்வேறு பகுதியிலிருந்த மக்களுடன், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட பட்டியலின மக்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்துவதா? இதை எப்படி அனுமதிப்பது என்ற எண்ணத்தின் அடிப்படையில் அப்போதைய திமுக அரசு, திட்டமிட்டு, காவல்துறையினரையும் அரசு எந்திரங்களையும் தயார்படுத்தியது. பேரணியையும், பேரணிக்கான காரணத்தையும் சீர்குலைக்கும் வகையில், பேரணியை வழிநடத்திவந்த அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் அனுமதிக்க மறுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதோடு மட்டுமின்றி அங்கே அணிவகுத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும், அரசியல்கட்சித் தலைவர்களையும் காவல்துறையினர் திடீரென விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தார்கள். 

 காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிபாராத மக்கள் நிலைகுலைந்து சிதறி ஓடினார்கள். ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி நதி. தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி நதிக்குள் குதித்து தப்பிக்க முயன்றார்கள். ஆனால் நீதிகேட்டு, தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டி அங்கே திரளாக திரண்டிருந்த மக்களை கலைக்கும்நோக்கம் மட்டுமின்றி அவர்களையும். அவர்களுக்கு ஆதரவானவர்களையும் குலைநடுங்க செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது திமுக அரசின் காவல்துறை. ஆற்றுக்குள் விழுந்து தப்பிக்க முயன்ற மக்களையும் விரட்டி விரட்டி அடித்தார்கள். இதில் அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் காயமடைந்தார்கள். மேலும் ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த 17 பேரை அநியாயமாக அடித்தே கொலை செய்தார்கள். 

 இவ்வளவு கொடுமைகளுக்கும் பிறகே ஏற்கனவே கைதுசெய்து சிறையில் வைக்கப்பட்டிருந்த 653 தொழிலாளர்களும் 52 நாட்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட 17 போராளிகளின் உடல்களை, நீதி கிடைக்கும் வரையிலும் வாங்க மாட்டோம் என உரிய தரப்பினர்கள் தெரிவித்ததின் அடிப்படையில், நீதி கிடைக்க வழி வகுப்பதற்குப் பதிலாக அனாதைப் பிணங்களாக வேறுவேறு பகுதியில் அரசால் புதைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நீதிமன்றமோ வெளி நாடுகளின் மனிதஉரிமை அமைப்புகளோ நுழைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், கொலைசெய்யப்பட்ட உடல்களை வெளிமாநில மருத்துவர்களைக் கொண்டு, பரிசோதனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினர்களும் எழுப்பிய சூழலில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, இதுபோன்ற கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது திமுக அரசு. 

 பதினோரு மாத இடைவெளிக்குப் பிறகு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட நீதிபதி மோகன் தனது அறிக்கையில், காவல்துறை உதவி ஆணையர்கள் இருவர் மற்றும் ஒரு வட்டாட்சியர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார். மேலும், பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான் என்றும் மற்றும் சிலர் சாலையில் முதற்கண் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இறந்து போனார்கள். இருப்பினும் இந்த நபர்களுக்கு இறப்பு ஏற்படுத்துவதைத்தான் காவல்துறையினர் தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று சொல்லமுடியாது என்று அதிசயிக்கத்தக்க உண்மையையும் கண்டறிந்து அவரது அறிக்கையில் கூறியிருந்தார். 

 இதற்குப் பிறகு தங்களது கோரிக்கைகள் அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், மாஞ்சோலையில் தோட்டத் தொழிலாளர்கள் நிராயுதபாணியாக மீண்டும் அதே பிபிடிசி நிறுவனத்திடம் வேலைக்குச் சென்றார்கள். எஸ்டேட் நிர்வாகம் முன்னிலும் அதிகமாக தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தத் துவங்கியது. இதன்காரணமாக அதிகமான தொழிலாளர்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் அறிமுகமில்லாத பல்வேறு ஊர்களுக்குச் சென்று கூலி வேலைபார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மண்ணின் மைந்தர்கள் உள்நாட்டுக்குள்ளாகவே மீண்டும் நாடோடிகளாக்கப்பட்டார்கள். 

 பதினோரு ஆண்டுகள் கடந்த பிறகும், ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மட்டும் தேயிலைக்கொழுந்து போல இன்னமும் பசுமையாக அப்படியே உள்ளது. ஆனால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டும் வறண்ட பாலையாக மாறிவிட்டது.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It