“எப்போது என் மனம் அமைதிக்கான பாதுகாப்பான இடத்தை அடையும், எங்கே என் மனம் அமைதி பெறும்’’ இந்தக் கேள்விதான் சுப்புலட்சுமியின் மனதை வாழ்நாள் முழுக்கக் குடைந்து கொண்டிருந்தது. ஆனால், 81 ஆண்டு கால வாழ்க்கையில் - ஒரு போதும் அவரது மனம் விரும்பிய அமைதியையோ - பாதுகாப்பையோ பெறவேயில்லை! காரணம் - அதே பெண்ணின் இன்னொரு குறிப்பில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது: “...நான் மறந்து விடுகிறேன்; எப்போதும் மறந்து விடுகிறேன் - என்னிடம் பறக்கும் குதிரை இல்லையென்பதையும், நான் வசிக்கும் வீட்டின் கதவுகள் எல்லாம் மூடி இருக்கின்றன என்பதையும்...”

(தாகூரின் கவிதை வரிகள்)

- இக்குறிப்புகள் இடம்பெற்றிருப்பது சுப்புலட்சுமி என்ற ஒரு பெண் (1897 - 1978) தனது சென்னை வாசத்தின்போது எழுதியுள்ள (1924 - 26) இரண்டாண்டு கால நாட்குறிப்பேட்டின் பக்கங்களில். இந்த நோட்டு, சுப்புலட்சுமி படித்த புத்தகங்களின் பட்டியல், இவரது நண்பர் கிரேஸ் சாமுவேல் எழுதிய கடிதங்கள், சுப்புலட்சுமி தான் படித்தவற்றில் இருந்து அவ்வப்போது பதிவுசெய்துள்ள ஏராளமான குறிப்புகள் போன்ற ஆவணங்களின் வழியாகப் பேத்தி மைதிலி சிவராமன் ஒரு சொற்கோயிலைக் கட்டி எழுப்பியிருக்கிறார்.

மைதிலி சிவராமனின் தாய்வழிப்பாட்டி சுப்புலட்சுமி. ஒரு நடுத்தர பிராமணக் குடும்பத்தில், 11-வயதில் திருமணமாகி 14- வது வயதிலேயே தாயாகும் ‘பேறு’ பெற்றவர். இவரது வாழ்க்கை முழுவதும் இந்தச் சிறுவயதுத் திருமணமும், தாய்மை நிலையும் எந்தெந்த வகையிலெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது இன்றைய சூழலில் உடல், மன நலம் பற்றிச் சாதாரணமாக யோசிக்கும் எந்த ஒருவராலும் புரிந்து கொள்ளப்படக்கூடியதே!

வரலாறு என்பது, பேரரசர்களும் - மாமனிதர்களான பெருந்தலைவர்களும் மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. சாமானிய மனிதர்கள் வாழ்ந்து மடிந்து போகும் ஒண்டுக்குடித்தன வீடுகளின் மூலைகளில் - பரண்களில், புழுதிபடிந்து கிடக்கும் தகர ட்ரங்குப் பெட்டிகளில் - மங்கிப் போய் மடிப்புகளில் நைந்து பொடியாகும் நிலையில் கிடக்கும் காகிதத்துண்டுகளுக்குள் கூட, கற்பனை செய்து எழுதிவிட முடியாத ஓர் அபூர்வமிக்க வாழ்க்கையின் வரலாற்றுச் சுவடுகள் பொதிந்து கிடக்கக்கூடும்!

இதையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து, அவற்றின் மறைபொருள் உணர்ந்து, எழுத்து வடிவம் கொடுத்து, எந்தக் காலத்திலோ காற்றில் கலந்து விட்ட அந்நாளைய மானுடத்தின் அவலக் குரல்களை மீட்டுருச் செய்து நம் மனச்சுவர்களைப் பிளந்தெறியும் வகையில் பேரோசையாக ஒலிக்கச் செய்வதற்கு - மைதிலி சிவராமனைப் போல் தீவிரமான மன ஒருமையுடன் அயராத உழைப்பையும் தந்துதானாக வேண்டும்!

மைதிலி சிவராமனின் வார்த்தைகளில், இந்த சுப்புலட்சுமி என்கிற ஆளுமையின் பிம்பங்களைப் பார்க்கலாம்:

“... சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மீண்டும் கண்டுபிடித்து மறுகட்டுமானம் செய்யும் முயற்சியில் நான் அவரின் எண்ணற்ற சூழல்களையும், மனோநிலைகளையும் எதிர்கொண்டேன். கிரேஸ§டன் ஆழமான நட்பு கொண்டவர்; தனது பெண்ணுக்குக் கல்வியளிக்க மெட்ராசுக்கு ஓடியவர்; பாரதியின் கவிதை வரிகளால் ஆகர்ஷிக்கப் பட்டவர்; வேல்ஸ் இளவரசரின் வருகையை எதிர்த்து நடைபெற்ற மறியலில் - ஒரு கருப்புக்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பங்கு பெற்று, தன் மீது சாக்கடைத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கக் கண்டவர்; குருதேவர் தாகூரின் கவிதை களைக் கண்டு பிரமித்தவர், பள்ளியில் சென்று படிக்காத தனக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகம் அளித்த நூலக உறுப்பினர் தகுதியைப் பயன்படுத்திப் புத்தகங்களைப் பேராவலுடன் படித்தவர்; புதர்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு பறவைகளைக் கவனித்தவர்; மங்கலான சிம்னி விளக்கொளியில் தன் சகோதரனின் வீட்டில் நாட்குறிப்பு எழுதியவர்; மெட்ராசில் கிடைத்த அறிவைத் தூண்டும் வாழ்விலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டு அவரது கணவருடன் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டவர்; மெட்ராசுக்குத் திரும்பி தன் புதல்வியின் குடும்பத்தருகே வசித்தது; தனக்குள்ளேயே மேலும் மேலும் ஒடுங்குதல், பார்வை வெறிச்சோடிப் போனவர், பத்து ஆண்டு கால மனச்சிதைவு - இறுதியில் இத்தனையிலிருந்தும் மரணத்தின் மூலம் மட்டுமே விடுதலை பெற்றவர்!’’

81 ஆண்டுகள்; எண்ணற்ற நிகழ்ச்சிகள். மிக அபூர்வமாகவே மகிழ்ச்சியான கணங்கள் வாய்த்திருக் கின்றன. கணவர் பி.ஆர். கோபாலகிருஷ்ணன்

(பி.ஆர்.ஜி) அன்றைய பிரிட்டிஷ் அரசில் சால்ட் இன்ஸ்பெக்டர். மனதளவில் விடுதலைப்போரின்

மீது அனுதாபம் கொண்டிருந்தவர். எனினும், சுப்புலட்சுமியைப் போன்ற ஓர் அபூர்வப் பெண்ணின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரே வீட்டில் இரு துருவங்களில் ஒரு துருவமாய் வாழ்ந்து மடிந்தவர்.

சுப்புலட்சுமி, தனக்கான ஒரு ‘வெளி’யை இத்தனை இன்னல்களுக்கு நடுவேயும் உருவாக்கிக் கொண்டிருந்திருக்கிறார். விடுதலைப் போராட்டமும், இடைவிடாத வாசிப்பும், பறவைகள் - தாவரங்களின் மீதான நுண்ணார்வங்களும், பாரதி - தாகூர் கவிதைகளில் மனம் தோய்ந்ததும், ஓவியக்கலை ஈடுபாடும் - அந்த, அவருக்கேயான ‘வெளி’யின் துகள்களாகும்! தெளிந்த வெண்ணிலாவையும், மேகங்கள் தவழ்ந்த வானையும் பற்றிய இவரின் குறிப்புகளைப் படித்தால் - எத்தகைய ஓர் அரிய எழுத்தாற்றல் படைத்த பெண்ணைத் தமிழ்ச்சமூகம் இழந்து விட்டதென்று தெரியவரும்.

சுப்புலட்சுமியின் நாட்குறிப்புகளில், அவர் அனுபவித்த உள்ளார்ந்த மனவேதனையின் சுவடுகள் அனேகமாகத் தென்படவே இல்லை எனலாம். பேச்சற்ற மௌனத்தின் உயிர்த்துடிப்பற்ற உருவமாகச் சுப்புலட்சுமி இப்புத்தகத்தின் பக்கங்களினூடாக உருப்பெறுகிறார். ‘தான் விரும்பியதைச் செய்வதற்கான போராட்டத்தில் ஒரு பெண் அடைந்த வருந்தத்தக்க தோல்வியை மட்டும் அல்ல; விரும்பியதை, அது எதுவாக இருப்பினும் செய்வதில் அவர்களுக்கிருந்த இன்னல்களையும் சுருக்கமாகத் தெரிவிக்கிறது சுப்புலட்சுமியின் வாழ்க்கை’ - என்கிறது பின்னுரை.

“ சுப்புலட்சுமி, தன் வாழ்வோடு தான் இறுதிவரை அடைய முடியாத ஒத்திசைவைத் தான் சேர்த்து வைத்த பொருட்களிலும், எழுத்துகளிலும் விட்டுச் சென்றிருக்கிறார். அவை அந்த நீலத் தகரப்பெட்டியில் அடைக்கலம் புகுந்தன. அவைதான் சுப்புலட்சுமியின் பெண்கள் வரலாற்றிற்காக விட்டுச் சென்ற எச்சங்கள். இதைப்போல நம்முடைய முன்னோர்கள் தகரப்பெட்டியில் விட்டுச் சென்றுள்ள வாழ்க்கைத் துகள்களை, அழிய விடாமல் பாதுகாத்து சிரத்தையுடன் மைதிலி செய்தது போல் அவற்றிற்கு உருவம் கொடுக்க முயற்சிப்பது அவசியமாகும்..”

- என்பதாக முடிகிற பின்னுரை நமக்கு வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆங்கில நூலின் முன் அட்டையில் உட்புறம் இடம் பெற்றுள்ள குறிப்பு ஆழமானது; அர்த்தங்கள் நிறைந்தது: “மைதிலி, பரந்த சமூக வெளியிலும்- மிக அந்தரங்கமான குடும்பச் சூழலிலும் சுப்புலட்சுமியின் வாழ்க்கையை ஆராய்வதில் வலிமிகுந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். இது, பெண்களை மிக வலிந்த மௌனத்தில் ஆழ்த்தி அவர்களின் சிந்தனைகளையும் - உணர்ச்சிகளையும் மறுதலிக்கும் தமிழ்ப் பிராமணக் கலாசாரத்தின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது. பெண்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தில், மௌனமும் - இரகசியமும் எப்படி ஓர் ஆயுதமாகவும் - வாழ்வாதார நடைமுறைக் கொள்கையாகவும் விளங்குகின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது.”

- உண்மைதான். Adrierne Rich -ன் கவிதை - இதே பின்னுரையில் உள்ளது நம் கவனத்தில் பதிய வேண்டிய ஒன்று:

“மௌனம் - கவனமாகச்

செயல்படுத்தப்படும் ஒரு திட்டம்

ஒரு வாழ்க்கையின் ஆதார வரைபடம்

அதில் ஓர் அர்த்தம் உண்டு

அதற்காக வரலாறு

வடிவம் ஒன்று உண்டு

அதைக் குழப்பாதீர்கள்

அது வெறுமை என்றெண்ணி....!”

வரலாற்றாளர் உமா சக்ரவர்த்தி உத்வேகமளித்து இந்தத் ‘தங்கச்சுரங்க’த்தைத் தோண்டி எடுத்துக் காட்சிப்படுத்தவும் உதவியிருக்கிறார் -

‘A quite little entry’ என்ற தன் குறும்படத்தின் மூலம்! ரமேஷின் தமிழாக்கம் மிக அருமையானது. அவரது கடும் உழைப்பின் வெளிப்பாடு இது.

Pin It