மேசை நாற்காலியும் வீட்டின் விட்டமும் மட்டுமே படைப்பாளிகள் பலருக்கு சிந்தனைக் களமாகவும், ஆய்வுக் களமாகவும் நடைமுறை ஆகிப்போன இக்காலத்தில், நிகழ்விடங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி உயிருள்ள பாத்திரங்களை நேர்கண்டு உயிர்ப்புள்ள படைப்புகளை வழங்கியவர் இராஜம் கிருஷ்ணன். அவர் அக்டோபர் 20 அன்று காலமானது துயரச் செய்தியாகும்.

ஆண் படைப்பாளிகளே கள ஆய்வுக்குச் செல்லத் தயங்கும் நிலையில், ஒரு பெண் காடு மேடுகள், கடற்கரைகள், உப்பளங்கள் என சுற்றித் திரிந்து அங்கங்கே தங்கி இலக்கியம் படைத்திருப்பது, பாராட்டத்தக்கப் பணியாகும்.

“நான் ஏதாவது ஒரு படைப்புக்காக கள ஆய்வு செய்ய அந்தப் பகுதிக்குச் சென்று அந்த மக்களோடு தங்கி ஆய்வில் ஈடுபட்டிருக்கும்போது, யாராவது ஒருவர் நீங்கள் ஏன் அந்த மக்களை பற்றி கள ஆய்வு செய்து எழுதக் கூடாது; இந்த மக்களைப் பற்றி எழுதக் கூடாது எழுதினால் இந்த உலகிற்கு அவர்களைப் பற்றியும் ஒரு செய்தி போய் சேரும் என்று சொல்வார்கள். மேலும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் நான் படித்த கேட்டச் செய்திகளும் என்னை அந்த பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் சந்திக்கத் தூண்டும். இவ்வாறுதான் என்னுடைய கள ஆய்வுப் பணி சங்கிலித் தொடர் போல தொடர்ந்து வந்து கொண்டிருந்தது”. இவ்வாறு தமது கள ஆய்வு பற்றி இராஜம் கிருஷ்ணன் கூறுகிறார்.

‘அலை வாய்க்கரை’ என்ற புதினம் எழுதுவதற்காக அவர் தூத்துக்குடிப் பகுதிக்குச் சென்றதை பின்வரு மாறு கூறுகிறார்.

“தூத்துக்குடி மீனவர் பகுதி களில் நான் தங்கியிருக்கும் போது தான் எழுத்தாளரும் திறனாய் வாளருமான திரு சிட்டியை சந்தித்தேன். அப்போது அவர் தான் என்னை உப்பளத் தொழிலாளர் களை சந்தித்து அவர்களின் வாழ்க் கையை இலக்கியமாகப் படைக்கத் தூண்டினார்”.

“சுள் என்று ஊசிகள் குத்துவது போன்று தகிக்கும் வெயில்; அந்தக் கடும் வெயிலில் அம்பாரம் அம்பார மாய் உப்பைக் குவித்துக் கொண்டி ருக்கிறார்கள். சூரிய ஒளியில் வெள்ளை வெளேரென்ற உப்பின் ஒளி கண்களைக் கூச வைக்கிறது. பத்து நிமிடங்கள்தான் நின்றி ருப்பேன். தொண்டை வரண்டது. குடிநீர் கேட்டேன் இல்லை என்று கைவிரித்தார்கள். தவித்த வாய்க்கே தண்ணீர் இல்லை என்றால், பணி நேரத்தில் இந்தத் தொழிலாளர் களுக்கு ஏதேனும் நேர்ந்து விட் டால் முதல் உதவி கிடைப்பதற்கும் நாதியற்ற நிலையில் அல்லவா இவர்கள் இருக்கிறார்கள் நம் நாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழிலாளர் நல வாரியங்களும் இருக்கின்றனவா? என்ற கேள்வியில் பிறந்ததுதான் எனது ‘கரிப்பு மணிகள்’ நாவல்” என்கிறார்.

‘முள்ளும் மலர்ந்தது’ புதினத்திற் காக பீகார் காடுகளில் தனித்தர்பார் நடத்திக் கொண்டிருந்த கொள்ளை யர் தலைவன் தாசில்தார் சிங்கை வனப் பகுதியில் நேரில் ராஜம் கிருஷ்ணன் சந்தித்தது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு. 400 கொலைகள் புரிந்தவன் என்று பேசப்பட்ட தாசில்தார் சிங் முன் இராஜம் கிருஷ்ணன் நின்று கொண்டிருக்கி றார்; அவனோ நாளிதழ் ஒன்றால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவன் எதுவும் பேசவில்லை. நிமிடங்கள் நகர்கின்றன. நிற்பதா, போவதா என்ற நிலையில் இராஜம் கிருஷ் ணன், பின்னர் அவன் எதிரேயும் அமர்ந்து விட்டார். முள் மலர்ந்தது போல் முப்பது நிமிடங்கள் கழித் துப் பேசத் தொடங்கினான். நிறுத்த வேயில்லை. நான்கு மணி நேரம் பேசினான். நாவல் தயாராகி விட்டது. வினோபா பாவேயிடம் அணிந்துரை வாங்கினார் இராஜம் கிருஷ்ணன்.

இராஜம் கிருஷ்ணன் கணவர் திரு. கிருஷ்ணன் குந்தார் நீர் மின் நிலையத்திட்டத்தில் பொறியா ளராக பணியாற்றிய போது, அப் பகுதி மலைவாழ் மக்களின் வாழ்க்கையைப் படித்து இராஜம் கிருஷ்ணன் படைத்ததுதான் ‘குறிஞ்சித் தேன்’.

1973ஆம் ஆண்டு, சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘வேருக்கு நீர்’ என்ற புதினம், காந்தியடிகளின் நூற்றாண்டையட்டி, காந்தியின் சிந்தனைகள் விடுதலைப் போராட் டக்காலத்திலும் அதற்குப் பின்ன ரும் சிதைக்கப்பட்ட பின்னணி குறித்து, இராஜம் கிருஷ்ணன் எழுதியதாகும்.

பெண்ணுரிமைக்காக ‘காலந் தோறும் பெண்’, ‘காலந்தோறும் பெண்மை’, ‘யாதுமாகி நின்றாள்’ போன்ற கட்டுரைகள் எழுதினார்.

தஞ்சை உழவுத் தொழிலாளி களின் வாழ்க்கையை ‘சேற்றில் மனி தர்கள்’ என்ற புதினத்தில் காட்டி னார். இதனை பாரதிய பாஷா பரிசத்தும், இலக்கியச் சிந்தனை அமைப்பும் இணைந்து 1982இல் சிறந்த படைப்பாக தேர்வு செய்தன. 2007இல் தி.மு.க. ஆட்சியின் போது, இவரது வேண்டுகோளுக்குச் செவி மடுத்து இவரது படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப் பட்டன. தமிழக அரசின் திரு.வி.க. விருது இவருக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகள் இல்லாத இவர், தமது இறுதிக் காலத்தை ‘விஸ் ராந்தி’ முதியோர் இல்லத்தில் கழித்தார். நோய்வாய்ப்பட்ட நிலை யில், சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்ந்தார். அம் மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவர்களும் பணியாளர்களும் ஆறாண்டுகள் மருத்துவமனையில் தங்க வைத்து கட்டணமின்றி சிகிச்சை அளித்து பாதுகாத்தனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இராஜம் கிருஷ்ணன் அவர்கள் எளிய நடை, படிக்கும் போதே காட்சிப்படுத்தும் ஆற்றல் மிக்க சொற்கோவைகள், மக்கள் மீது தீராத அன்பு என பன்முக ஆற்ற லும் பண்பும் கொண்ட படைப் பாளி. மரணத்திற்குப் பின் மரண மில்லா அவருடைய படைப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Pin It