தேசம் என்றால் இந்தியா
தேசியம் என்றால் இந்தியம்
தேசியர் என்றால் இந்தியர்

இறுகிப் போன கருத்தியலை
உருக்குலையா உறுதியுடன்
சுக்கு நூறாய் உடைத்தெறியும்
எஃகு நிகர் இயக்கம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

வெளியாரை வெளியேற்று
இது நமது முழக்கம்
மானிடத்தில் பிரிவினையா?
இது என்ன குதர்க்கம்
தேசியத்தின் பெயராலே
பாசிச முழக்கம்!

டீக்கடையில் பிழைக்கிறான்
மலையாளி
அவனா தமிழனுக்கு
பகையாளி?

பிறந்த மண்ணை விட்டு
பிழைக்க வந்தவன் பீகாரி
அவனுக்கு எதிராக
ஏன் ஒப்பாரி?

ஒட்டிய வயிறோடு
வருகிறான் வடவன்
ஏழை மனிதன்
அவனா பகைவன்?

மார்வாடியை எதிர்க்கிறோம்
அவன் - பணக்காரன்
பாட்டாளியை எதிர்ப்பது
என்ன ஞாயம்?

இது
அறமாகுமா?
இனத்தின் பண்பிற்கு
அழகாகுமா?
கேள்விகள் ஆயிரம்
பாயுது நம்மிடம்.
பதட்டத்தில்
பல பேர்.
குதர்க்கத்தில்
சில பேர்.

வினாக்கள்
வேறு வேறு
விடை ஒன்று தான்.
இமயம் முதல்
குமரி வரை
கடலென
இருந்த தேசம்
குறுகிக் குறுகி
குட்டையென
சிறுத்துப் போன
சின்ன தேசம்.

இந்தியன்
பிடுங்கிக் கொண்டது போக
இறுதியில் கிடைத்தது
இந்தத் தேசம்.

மண்ணின் மைந்தனின்
நாளைய தலைமுறைக்கே
போதாது
இந்தத் தமிழ்த் தேசம்.

இருப்பதை எல்லாம்
இழந்து விட்டு - மிஞ்சி
இருப்பதையும் இழக்கத்
துடிக்கும் தமிழா
கண் என்ன
உனக்குப் பழுதா?

இழந்தது
போதாதா?
இருப்பதும்
போவதா?

வரலாற்றை
திரும்பிப் பார்.
வரும் - காலம்
திருத்தம் செய்.

வள்ளுவன்
உன் பாட்டன்
அவன் பாட்டனின் நாடு
உன்னிடம் இல்லை.

வள்ளுவன்
உன் பாட்டன்
அவன் வாழ்ந்த நாடும்
உன்னிடம் இல்லை.

இராஜராஜன்
உன் அரசன்
பேராண்மை மிக்க
பேரரசன்.
அவன் அரசாண்ட நாடு
உன்னிடம் இல்லை.

இராசேந்திர சோழன்
இராசராசனின் பிள்ளை
அவன் விரித்த
தேசத்தின் எல்லை
உன்னிடம் இல்லை.

பட்டாடை தரித்துப்
பரிவட்டம் கட்டிய நீ
மேலாடை இழந்து
வேட்டியோடு நிற்கிறாய்.

உன்
குருட்டுப் பார்வையால்
கோவணத்தையும்
இழந்து விடாதே!

தன் மண்
தன் மொழி
தன் தேசம்
என்று இல்லாதவன்
இந்தியாவில் இல்லை.

தன் தேசம் நீங்கி
மாற்றுத் தேசம் பிழைப்பது
எங்கும் இல்லாமல் இல்லை.

அது.. விதி விலக்கு.
இங்கு நடப்பது
படையெடுப்பு.

அத்துமீறும்
அரசனும்
ஆக்கிரமிப்பாளனே!
அளவுமீறும்
ஆண்டியும்
ஆக்கிரமிப்பாளனே!
அளவு மாற்றம்
பண்பை மாற்றும்
பண்பாட்டைச் சிதைக்கும்.

தமிழன் மொழி
அவன் கலை
அவன் இலக்கியம்
அவன் இதிகாசம்
அவன் தொழில்
அவன் உழவு
அவன் வணிகம்
அவன் மாண்பு
அவன் வாழ்க்கை
எல்லாம் கடந்து

தமிழன்
அடையாளம்
அழிந்து இருப்பான்.

நாடற்றுப் போனவன்
வரிசையில்
நாதியற்று நிற்பான்.

இவை
மிகை அல்ல.
நடக்கும்
நாளை.
நடக்கக் கூடாதென்றால்
களம்
காண வேண்டும்
இவ்வேளை.
அதனால்தான்
துடிக்கிறோம்!

வெளியாரை வெளியேற்று
என கொதிக்கிறோம்!
இது என்னடா
பாசிச முழக்கம்?
வேண்டாம்
பாட்டாளி மயக்கம்!
தேசம் என்பது
மண்ணும் மக்களும்
ஒன்று - உடல்
மற்றொன்று - உயிர்
உடலுக்கு
உயிர் தேவை
உயிருக்கு
உடல் தேவை

வரும் காலம் காக்க
நிகழ் காலத்தில் போராடு!

வணிகம்
வளர்த்தெடு.
வேளாண்மை
விரிவு செய்.
உழைப்பை
உரிமையாக்கு
தொழிலை உனதாக்கு!

உன் நிலத்தின்
ஆழத்தில்
ஊன்றி நில்!

உன் வானத்தின்
உயரத்தைத்
தழுவி நில்!

உன் தேசத்தின்
இறையாண்மையை
இறுக்கமாக்கு.

நீ
நீயாக இருந்து
உலகைப் பார்.
உறவாடு!
உதவி செய்!

யாவரும் கேளிர் என
ஆடிப் பாடு.

இதற்கெல்லாம் வேண்டும்
உனக்கென்று
ஒரு நாடு!

Pin It