சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநூற்றாண்டு விழா கருத்தரங்கம் 04.05.2014 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் ஓமகுளத்தில் உள்ள நந்தனார் கல்வி கழக அறக்கட்டளை மட வளாகத்தில் நடைபெற்றது.

அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜாநந்தர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி.எஸ்.ட்டி ஆசிரியர், அலுவலர் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்கு திரு..ஜி. னோகர் தலைமை தாங்கினார்.

ayothidasar and sakajanandhaதிரு .செ.ஜெயப்பிரகாஷ் வரவேற்றுப் பேசினார். மூத்த வழக்கறிஞர் திரு.பி.கோபாலகிருஷ்ணன், நந்தனார் கல்விக் கழக செயலாளர் திரு.டி.இராமமூர்த்தி, லயன்ஸ் கிளப் தலைவர். பேரா கே.வி.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திரு.வி.பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக உழவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, சகஜாநந்தா நற்பணி மன்றம், நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், தமிழக மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும், திரளான உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்கத்தில் ”தமிழக வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜானந்தர் ஆகியோரின் சாதனைகள்” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் தோழர். கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

 “தன்னுடைய வரலாற்றை, தம்மிடையே தோன்றிய முன்னோடிப் போராளிகளின் வரலாற்றை அறிந்திடாத சமூகம் புதிய வரலாற்றை படைக்க முடியாது. அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தில் உரியவாறு கவனிக்கப்படாத சிந்தனையாளர்களான அயோத்திதாசப் பண்டிதர், சுவாமி சகஜானந்தா, ஆகிய இருவரின் வரலாற்றை, அவர்களது சாதனைகளை சிந்திப்பதற்கான இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் அயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி., எஸ்.டி.ஆசிரியர், அலுவலர், மாணவர், கூட்டமைப்பு தோழர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி வரும் முனைவர்.அ. அன்பாநந்தன் மற்றும் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் தோழர். ஏ.ஜி. மனோகரன் ஆகியோருக்கும், குழுமியுள்ள உள்ள சான்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வணக்கம்.

இந்த 2014- மே- 5 என்பது அயோத்திதாசப் பண்டிதரின் மறைவு நூற்றாண்டு தொடங்கும் நாளாகும். அயோத்தி தாசப் பண்டிதர் 1945-மே-20-ல் காத்தவராயன் என்ற இயற்பெயரோடு தோன்றி மாபெரும் தொண்டாற்றி 1914. மே. 5-ம் நாள் மறைந்தார்.

                இவருக்கு 45 ஆண்டுகளுக்கு பின்னால் 1890 ஜனவரி 27-ல் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுபாக்கம் கிராமத்தில் முனுசாமி என்ற இயற்பெயரோடு தோன்றிய சுவாமி சகஜானந்தா சிதம்பரத்தில் தங்கி மிகச் சிறந்த மக்கள் தொண்டாற்றி 1959 மே 1-ஆம் நாள் மறைந்தார்.

                இவர்களது சிந்தனையும், செயல்பாடும், அவற்றின் இன்றைய பொருத்தபாடும் இன்னும் தமிழ்ச் சமூகத்தில் சரிவர உணரப்படவில்லை.

                நடுவண் அமைச்சராக இருந்த தோழர். தலித் எழில்மலை அவர்களது முயற்சியால் தலித் சாகித்ய அகாடமி சார்பில் அயோத்திதாச எழுத்துகள் தொகுப்பாக வெளிவந்தன. அயோத்தி தாசரின் சிந்தனைகளை, எழுத்துக்களை தொகுத்ததில் திரு. ஞானஅலோசியஸ் அவர்களின் பங்கு மகத்தானது.

                இவை வெளியான பின்பே இவற்றை அறிந்துக் கொண்டு முன்னெடுக்கும் முயற்சிகள் அண்மைக் காலமாக வேகம் பெற்றுள்ளன.

                வரலாறு நெடுகிலும் ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் இனத்தின் போராட்டம் அனைத்து தளங்களிலும் நடந்துக் கொண்டுதான் வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 20-ஆம் நூற்றாண்டில் தமிழர்களிடையே மறுமலர்ச்சி சிந்தனையும், அவற்றை செயல்படுத்துவதற்கு மக்களைத் திரட்டும் இயக்கங்களும் நவீன வடிவத்தில் எழுச்சிப் பெற்றன.

20-ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கு தமிழ்த்தேசிய முயற்சிக்கும் 19-ம் நூற்றாண்டிலேயேஅடித்தளம் இடப்பட்டுவிட்டது. சமூக அடித்தளத்தில் கொந்தளிப்புகளும், புதிய சிந்தனைகளும், புதிய வகை முன்னெடுப்புகளும் தொடங்கிய காலம் அது.

தொடக்க முயற்சிகள் சமயத்துறை சார்ந்தே நடைபெற்றன. ஆரியத்திற்கும், ஐரோப்பியர்களின் கிறித்துவத்திற்கும் மாற்றான அடையாளங்கள் அப்போது முன் வைக்கப்பட்டன.

                இவற்றின் தொடக்கப் புள்ளியாக ஆறுமுக நாவலரை குறிப்பிடலாம். தமிழீழத்தில் தோன்றிய ஆறுமுகநாவலர் (1822-1879) சைவம் சார்ந்து தமிழ் அடையாளத்தை முன் வைத்தார். வேத மதம், சமஸ்கிருதம், பார்ப்பன மேலாண்மை, கிறித்துவ மத மாற்றம் ஆகிய அனைத்திற்கும் எதிராக சைவம் - தமிழ் - தமிழர் என்ற அடையாளத்தை நாவலர் முன்வைத்தார். ஆயினும் அவர் முன்வைத்த தமிழர் என்ற அடையாளம் பெரிதும் சைவ சமயத்தின் மேல் சாதி அடையாளமாகவே இருந்தது. தீண்டாமையை ஆறுமுக நாவலர் ஒரு பொருட்டாகவே கருதிப்பார்த்ததாக தெரியவில்லை.

                ஆயினும் இவர் காலத்திலேயே வாழ்ந்த வள்ளலார் இராமலிங்க அடிகள் (1823 -1874) தமிழர் அறம் சார்ந்து சமயத் துறைக்குளேயே ‘சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற மகத்தான மறுமலர்ச்சி சிந்தனையை முன் வைத்தார். சமத்துவத்தை வலியுறுத்தும் மாற்றுச் சிந்தனையாகவும், மாற்றுச் செயல்பாடாகவும், புதிதாக வரலாற்றில் அது தடம் பதித்தது. பசி தீர்க்கும் செயல்பாட்டோடு, வேத மத எதிர்ப்பும் இணைந்து சாதி வேறுபாடின்றி, ஆண், பெண் வேறுபாடின்றி சேர்ந்து உண்ணுதல் சேர்ந்து வழிபடுதல், சுடர் வழிவாடு, ஆகிய சமத்துவ மாற்றாக அது அமைந்தது.

                வள்ளலாரின் சன்மார்க்கம், மதசார்பற்ற தளத்தில் அதே நேரத்தில் உருவமற்ற வழிப்பாட்டோடு இணைந்து அடித்தட்டு மக்களின் உயர்வை வலியுறுத்திய மாற்று அடையாளமாக தமிழ், தமிழர் என்பதை முன்வைத்தது.

                இதன் பிறகு 1856-ல் இராபர்ட் கால்டுவெல் எழுதி வெளிட்ட திராவிட மொழிகள், அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் மொழியியல் சிந்தனைகளில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் அதிர்வை ஏற்படுத்திய நூலாகும். அதுவரை இந்திய மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று கருதப்பட்டு வந்த நிலையை இந்நூல் தகர்த்தது. தமிழும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்திய மொழிகளும் தனி வகையின என்ற உண்மையை அது எடுத்துக் கூறியது. அதே நேரம் திராவிடர் என்ற முகமூடி தமிழர்கள் மீது பூட்டப்படுவதற்கும், அது வழிவகுத்தது. கால்டுவெல்லுக்கு பிறகு வந்த பல சிந்தனையாளர்கள் தமிழர் என்பதை குறிக்க ஓர் மாற்றுச் சொல்லாக “திராவிடர்’’ என்பதை பயன்படுத்தி வந்ததைக் காணமுடியும்.

அச்சு ஊடகம் பரவலான காலமும் அதுதான். ஓலைச்சுவடியில் ஒருசிலரிடம் மட்டும் இருந்த பழைய தமிழ் இலக்கியங்கள் அச்சு வடிவில் நூல்களாக வெளிவரத் தொடங்கிய காலம் அது. தமிழரின் வளமான அறச்சிந்தனைகள் மக்களிடம் அப்போது பரவலாகத் தொடங்கியது இன்னொரு புறம் ஆங்கிலேயர்களின் நவீனக் கல்வி முறை பரவலாகத் தொடங்கியது.

இந்த பின்னணியில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான பல முயற்சிகள் நடந்தன. அவற்றுள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் சமத்துவ உரிமைகோரியபோராட்டங்களே முகாமையாக வெளிப்பட்டன.

பாவலர் வைரக்கண்ணு, வேலாயுதம். வெங்கடசாமி பண்டிதர். அரங்கையார்தாசப் பண்டிதர், மயிலைச்சின்னதம்பி, சங்குசித்தர். சிவலிங்கநயனார் போன்ற தலைவர்கள் அந்தந்தப் பகுதியில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்தச் சூழலில் அயோத்தி தாசப் பண்டிதரின் வருகை தமிழ்ச் சமூக வரலாற்றில் மிகப் பெரும் பாய்ச்சலைக் குறித்தது.

                சமயம் சார்ந்தும், நவீன் அரசியல் சார்ந்தும், ஓர் மாற்றுச் சிந்தனையை, மாற்று செயல்பாட்டை அயோத்தி தாசர் முன்வைத்தார். பின்னாளில் வந்த பல முற்போக்கு முயற்சிகளுக்கும் முன்னோடியாக அவர் திகழ்ந்தார்.

                பௌத்த சமயத்தை தழுவுவதுதான் சாதியிலிருந்து விடுதலைப் பெற ஒரே வழி என்று கூறியதிலும், அயோத்திதாசப் பண்டிதர் என்ற தனது ஆசிரியரின் பெயரையே அவர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக தனக்கு சூட்டிக்கொண்டதிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் ஓர் அரசியல் சக்தியாக ஒன்றுபட வேண்டும் என்று கருதியதிலும், அயோத்தி தாசர், அம்பேத்கருக்கு முன்னோடி ஆவார்.

                பூர்வ தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்று அறிவித்துக் கொண்டதிலும், தமிழ் எழுத்து சீர்திருத்தம் கோரியதிலும் அயோத்தி தாசர் பெரியாருக்கு முன்னோடி.

தமிழர்களின் மரபான அறம் சார்ந்து சிந்தித்து நவீன காலத்தின் தேவைக்கு ஏற்ப அதை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழர் என்றால் சாதி அற்றவர்கள் என்று அறிவித்ததில் தமிழ்த் தேசியர்களுக்கு அயோத்தி தாசர் முன்னோடி.

பார்ப்பனியத்தையும், ஆரியத்தையும். வர்ணசாதி ஒடுக்கு முறைகளையும், அதன் நவீன வடிவமாக இந்தியம் என்ற பெயரில் வரும் சுதேசியத்தையும் அயோத்தி தாசர் சாடினார். அதே நேரம் நமது வரலாற்றையும், பண்பாட்டையும், மறுக்கும் மேற்கத்திய வாதத்தில் மூழ்கிவிடவில்லை. தமிழர்களின் வளமான மரபை மறுத்து ஒதுக்காமல் அதன் அறம் சார்ந்த தன்மையை முன்னெடுத்தார். அதற்கு ‘தமிழ் பௌத்தம்” என்ற புது விளக்கம் அளித்தார். ஆரிய பார்ப்பனர்களை ‘வேஷப்பார்பனர்கள்” என்று வரையறுத்தார். வரலாற்றில் அதுவரையில் நடந்திராத ஓர் வித்தியாசமான முயற்சி அது.

சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழர்களின் அறச்சிந்தனைகள் அனைத்தையும் தமிழ் பௌத்தம் என்ற நெறிக்குள் அவர் அடக்கினார். தீபாவளி, கார்த்திகை, உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை தமிழ் பௌத்தம் என்ற வகையில் வேத மதத்திற்கு எதிரான முறையில், ஆரியத்தை விளக்கிய வகையில் விளக்கம் அளித்தார். திருக்குறள். திருவாசகம், ஆகியவற்றை திரிக்குறள், திரிவாசகம், என அழைத்து அவற்றை தமிழ் பௌத்த நூல்களாக வரையறுத்து விளக்கம் அளித்தார்.

இவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்க முடியாது என்ற போதிலும் தமிழர்களின் அறம் சார்ந்து சமத்துவ நெறியையும், தனிமனித ஒழுக்கங்களையும்முன்வைத்ததில் அயோத்தி தாசரின் முயற்சி ஓர் முன்னோடியான முயற்சியாகும்.

அயோத்தி தாசப் பண்டிதரும் சரி, சுவாமி சகஜானந்தா அவர்களும் சரி, தீண்டாமை தமிழ்ச் சமூகத்தில் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ஓட்டத்தில் ஆரியத்தின் ஊடுருவலால் இடையில் வந்த தீங்கு என்பதையும் தெளிவாக எடுத்து வைத்தனர்.

ஆப்பிரிக்க விடுதலைச் சிந்தனையில் ‘கடந்த காலமே எங்கள் எதிர்காலம்” (past is our future) என்ற முழக்கம் புகழ் வாய்ந்தது. கடந்த கால சமத்துவ சிந்தனையை நவீன காலத்திற்கு பொருத்தி மீட்டெடுக்கும் விடுதலைச் சிந்தனை மரபு அது.அயோத்தி தாசரும், சுவாமி சகஜானந்தாவும்,இந்த விடுதலைச் சிந்தனையை தமிழர்களின் எதிர்காலம் நோக்கி முன்வைத்தனர். ஆனால் அயோத்தி தாசர் தமிழ் பௌத்தம் என்ற வகையில் முன்வைத்தார். சகஜானந்தா வைணவம், சைவம் என்ற வழியில் முன்வைத்தார்.

அரசியல் தளத்தில் அயோத்தி தாசர் சுதேசியத்தையும், காங்கிரசுக் கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். சுவாமி சகஜானந்தா காங்கிரசுக் கட்சியிலேயே இருந்து சட்டமன்றத்தில் செயலாற்றினார்.

அயோத்தி தாசரின் ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், புத்தர் எனும் இரவு பகலற ஒளி ஆகிய நூல்கள் இந்தியாவின் வரலாற்றை பௌத்த நோக்கில் விளக்கியவை ஆகும்.

1907 ஜீன் 19 தொடங்கி, 1914 மே மாதத்தில் அவர் இறக்கும் வரையிலும் ”தமிழன்” என்ற வாரஏட்டை அயோத்தி தாசர் நடத்தினார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் தமிழன் ஏடு பெரும் சிந்தனைப் புயலை கிளப்பியது. சமயம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும், பல புதிய முன்னெடுப்புகளை ”தமிழன்’’ ஏடு முன்வைத்தது.

சுதேசி யார்? என்ற கேள்விக்கு அயோத்திதாசரின் விளக்கம் தெளிவானது, தமிழ்த் தேசியத்திற்கு முன்னோட்டமானது.

‘இத்தேசப் பூர்வ குடிகளும், இத்தேசத்தை சீர்பெறச் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே சுய தேசியவாதிகள் என்று கூறத் தகும். அவர்கள் யாரென்னில் தமிழ் பாஷையில் பிறந்து, தமிழ் பாஷையில் வளர்ந்து தமிழ் பாஷைக்கு உரியவர்களாக விளங்கும் பூர்வ திராவிட குடிகளே ஆகும்.” என்கிறார் அயோத்தி தாசர். (தமிழன் -30.10.1912)

தொடக்கத்தில் ‘ஒரு பைசா தமிழன்“ என்ற பெயரில் இந்த இதழை அயோத்தி தாசர் தொடங்கினார். இதில் ஒரு பைசா என்பது விலையை மட்டுமின்றி அவ்விதழ் எளிய மக்களுக்காக நடத்தப்படுகிறது என்பதையும் குறித்து நின்றது. பிறகு அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழன் என்ற பெயரிலேயே அந்த இதழ் வெளிவந்தது.

தேசியம் என்பது சமத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே நிலவ முடியும் என்பது அயோத்தி தாசரின் கருத்து. அதனால் தான்,

‘ஒற்றுமெய் பேதமும், சாதி பேதமும், சமயபேதமும் வேண்டும். நேஷ்னல் காங்கிரஸ் என்னும் பெயரும் வேண்டும் என்றால் பொருத்தமோ? ஒருகாலும் பொருந்தாவாம்”

என்று சாடுகிறார். (தமிழன், 14.09.1910)

இந்தியா அதே வடிவில் சுதந்திரம் பெற்றால் யாரிடம் சுயராஜ்யம் வழங்கப்படும் என்ற கேள்வியை முன்வைத்து அவர் அளிக்கும் விடை முக்கியமானது.

சுதந்திர இந்தியாவில் வெள்ளையர்கள் யாரிடம் ஆட்சியை ஒப்படைப்பார்கள்? மராட்டியரிடமா? கன்னடரிடமா? திராவிடரிடமா?என்று கேள்வி எழுப்பினார் அயோத்தி தாசர். அன்றைக்கு மராட்டிய பார்ப்பனரான திலகர் தலைமையில் வங்காள பார்ப்பனர்கள் அதிகம் பேர் தலைமை குழுவில் இருந்த கட்சியாக காங்கிரசு கட்சி இருந்தது என்பது கவனம்கொள்ளத்தக்கது. எந்த மொழி இனத்தாரிடம் ஆட்சி ஒப்படைக்கப்படுகிறதோ, அவர்களது மொழி - இன ஆதிக்கம் மேலோங்கும்: தமிழர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அயோத்திதாசரிடம் இருந்தது. அன்று ஒரு மாற்று அமைப்பாக வலுவான நிலையில் தமிழின அமைப்பு ஏதும் இல்லை. இச்சூழலில் இந்திய சுதந்திரம் வேண்டாம், வெள்ளைக்காரர்களே இருந்துவிட்டுப் போகட்டும் என்ற முடிவை அயோத்திதாசர் முன்வைத்தார்.

இது ஏற்கத்தக்கதல்ல என்ற போதிலும் இந்த முடிவுக்கு அவர் வந்த சூழலை நாம் புரிந்துகொள்ள முடியும்.

திராவிட மகாஜன சபை வழியாக ‘தீண்டப்படாத சாதியினர் இந்துக்கள் அல்லர். அவர்களை பூர்வ தமிழர் என்றே மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வெள்ளை அரசுக்கு அயோத்தி தாசர் முன்வைத்தார்.

இரட்டை மலை சீனிவாசன் அவர்களும், அயோத்தி தாசப் பண்டிதரும் இணைந்து 1891 டிசம்பரில் நீலகிரியில் நடத்திய மாநாட்டு தீர்மானம் வரலாற்றில் குறிக்கத்தகுந்த ஒன்றாகும். உள்ளாட்சிகளிலும், சிறைகளிலும் மனித மலம் அல்லும் பணியை தீண்டப்படாத சாதியார் செய்வதை தடைச் செய்ய வேண்டும் என்றும், கிராம அதிகாரிகள் உள்ளிட்டு அனைத்து மட்டத்திலும் தகுதியானதீண்டப்படாத சாதியினருக்கு முன்னுரிமை வழங்கி நியமிக்க வேண்டும் என்றும், உணவு கூடங்களில் கடைபிடிக்கும் தீண்டாமை நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் இன்னும் பல கோரிக்கைகளையம் அத்தீர்மானம் முன்வைத்தது. மாநாட்டின் சார்பில் அரசுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தி தாசர் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் விடுதலையோடு இணைந்த ஒன்றாக மதுவிலக்கையும் முன் வைத்தார். மதுவால் அதிகம் பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட சமூகத்தவரே எனக் கண்டறிந்து கூறினார்.

சாதி அடையாளத்தை மறுத்து சமத்துவத்தின் அடையாளமாக பூர்வ தமிழர் என்ற மாற்று அடையாளத்தை முன் வைத்த அயோத்தி தாசரின் சிந்தனை வரலாற்றில் மிகப் பெரிய பாய்ச்சலை குறிக்கிறது. சாதி அடையாள மறுப்பு ஓர் மனிதனை அடையாளம் அற்றவராக மாற்றுவதில் போய் முடியக்கூடாது என்ற தெளிவு அவரிடம் இருந்தது. அடையாள மறுப்பானது மனிதர்களை உதிரிகளாக மாற்றிவிடும் என்ற சமூகவியல் தெளிவும் அயோத்தி தாசரிடம் இருந்தது.

மேற்கத்திய பகுத்தறிவு வாதத்தில் மூழ்கிப் போவது தமிழர்களை உதிரிகளாக மாற்றிவிடும் என்ற எச்சரிக்கை நாம் இன்றும் பெறவேண்டிய ஒன்றாகும்.

சுவாமி சகஜானந்தா

தமிழர்களின் மரபான அறச்சிந்தனைகளிருந்து தொடங்கினாலும் சுவாமி சகஜானந்தரின் வழி வேறுப்பட்ட ஒன்று. 17 வயதிலேயே துறவு வாழ்க்கை மேற்கொண்டு இல்லத்தை விட்டு வெளியேறி பல்வேறு சிந்தனையாளர்களிடம் உரையாடி தன்னுடைய சிந்தனையை வளர்த்துக் கொண்ட அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த கரபாத்திர சுவாமிகளை சந்தித்தது ஓர் திருப்பு முனையாக அமைந்தது. கரபாத்திர சுவாமிகள் முனுசாமி என்ற இவரது பெயரை சகஜானந்தா என மாற்றம் செய்து ஆன்மீகப் பணியில் ஈடுபடும் போதே சமூகப் பணியையும் செய்யுமாறு பணித்து, சிதம்பரம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். 1910-ல் அ. முருகேசன் பிள்ளை என்பார் சகஜானந்தரை சிதம்பரத்திற்கு அழைத்து வந்தார் என்று சொல்லுவோரும் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அவர்கள் கல்வி பெறுவது முதன்மைத் தேவை என்று உணர்ந்த சகஜானந்தா 1916-ல் நந்தனார் கல்விக் கழகம் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் சார்பில் 1917 நந்தனார் ஆண்கள் பள்ளியையும், 1920-இல் பெண்கள் பள்ளியையும் நிறுவினார். அது நிலைப்பெற்ற பிறகு அதனை இன்னும் விரிவாக்குவதற்கு 1938-ல் தாமே முன்வந்து அரசிடம் ஒப்படைத்தார். அறக்கட்டளையின் தலைவராகவும், கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளராகவும், அவரே தொடரவேண்டும் என்று அரசுக் கேட்டுக் கொண்டது.

1926 முதல் 1932 வரையிலும், 1936 முதல் 1947 வரையிலும் சென்னை மகாண மேலவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில் 1952 தேர்தலிலும், 1957 தேர்தலிலும் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக சிதம்பரம் தொகுதியிலிருந்து காங்கிரசு சார்பில் சுவாமி சகஜானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959-ல் அவர் மறையும் வரையிலும் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.

ஆலயம் என்பது அரிசனங்களுக்கே, தீண்டாமை ஒழிப்பு, சிதம்பர இரகசியம், தீண்டாமை என்பது சாஸ்திரம் அல்ல, நமது தொன்மை ஆகியவை அவர் எழுதிய நூல்களில் சில ஆகும்.

ஆலயம் என்பது அரிசனங்களுக்கே, என்பதற்கு சட்டமேலவையில் சகஜானந்தா முன்வைத்த வாதம் சிறப்பானது.

சைவத்திலும், வைணவத்திலும் சுவார்த்தம், பரார்த்தம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் உள்ளதை எடுத்துக்காட்டி சகஜானந்தா வாதாடினார்.

தங்கள் இல்லத்திலேயே இறை உருவங்களை வைத்து வழிபடுவது சுவார்த்தம் எனப்படும். அவ்வாறான வாய்ப்பற்ற சிறிய குடில்களில் வாழும் எளிய மக்கள் பொது இடத்தில் அமைக்கப்படும் வழிபாட்டு இடங்களில் வழிபாடு செய்வது பரார்த்தம் எனப்படும். வாய்ப்பற்ற எளிய மக்கள் வழிப்படுவதற்கான இடங்கள் தான் பொது ஆலயங்கள்.

எனவே ஆலயத்தில் வழிபடுவதற்கு அரிசனங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சகஜானந்தா எடுத்து வைத்த வாதம் ஆதிக்க சாதிகளில் உள்ள நேர்மையாளர்களையும் சிந்திக்க வைத்தது.

......இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் நிறைவு பெறும்......

Pin It