சனவரி 26ஆம் நாள். தமிழக _- இந்திய ஊடகங்கள், இந்தியக் குடியரசு நாள் கொண்டாட் டங்களையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கொஞ்சிக் குலாவிக் கொண்டதை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. நரேந்திர மோடியின் தங்க இழையூட்டப்பட்ட நவீன ஆடையும் அதிலொரு ‘முக்கிய’ செய்தியாக இடம் பிடித்தது. ஊடகங்கள், ஒளிபரப்ப மறுத்த பல நிகழ்வுகள், அதே நாளன்று நடைபெற்றன. சீக்கியர்கள், காசுமீரிகள், வடகிழக்கு தேசிய இனத்தவர்கள் என இந்தியக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடிவரும் தேசிய இனங்கள், இந்தியக் குடியரசு நாளை தங்கள் தேசம் அடிமையான துக்க நாளாகக் கடைபிடித்த நிகழ்வுகளே அவை!

பஞ்சாபில், சீக்கியர்கள் வெளிப்படையான போராட்டங்களை அந்நாளில் மேற்கொண்டது, சமூக வலைத்தளங்களில் மட்டுமே வெளியானது. தல் கல்சா என்ற சீக்கியர் அமைப்பின் சார்பில், பஞ்சாப் மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில், கறுப்புக் குடியரசு நாள் கடைபிடிக்கப்பட்டது. “நாங்கள் சீக்கியர்கள், இந்தி யர்கள் அல்ல”, “இந்தியக் குடியரசு நாள்- எங்களுக்கு கருப்பு நாள்” உள்ளிட்ட முழக்கங்கள் அடங்கிய பதாகைகளையும், கருப்புக் கொடிகளையும் ஏந்தி, சீக்கிய இளைஞர்கள் தெருக்களில் நின்ற புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் கன்வர் பால் சிங் என்பவர், “உலகின் மிகப்பெரும் சனநாயக அரசு என்று சொல்லிக் கொள்ளும் இந்திய அரசு, சீக்கியர்களின் சனநாயக உரிமைகளை மறுக்கிறது. சீக்கியர்களின் அடையாளங்களை மறுக்கிறது. சீக்கியர்கள் மேல் இந்துச் சட்டத்தைத் திணிக்கிறது” என்று அப்போராட்டத்தின் போது பேசினார்.

சனவரி 26 அன்று, காசுமீரில், இந்திய ஆக்கிர மிப்பிலுள்ள காசுமீர் பகுதிகளிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காசுமீர் பகுதிகளிலும், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சம்மு _ காசுமீரி விடுதலை முன்னணி, ஹ¨ரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள், காசுமீரி மக்கள் குடியரசு நாளைக் கருப்பு நாளாகக் கடைபிடிக்க அழைப்பு விடுத்தன. பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, ஐரோப்பிய ஒன்றிய காசுமீர் பேரவை (Kashmir Council EU) என்ற அமைப்பின் சார்பில், காசுமீரிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, இந்திய அரசு காசுமீரை விட்டு வெளியேற வேண்டும், தங்கள் தாயகத்தை தங்களிடமே திருப்பித் தர வேண்டுமென்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இலண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன், புலம் பெயர்ந்த காசுமீரிகளும் சீக்கியர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள போராளி அமைப்புகள் அங்கு குடியரசு நாளன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதன் காரணமாக, பெரிய அளவில் இந்திய இராணுவத்தினர் வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய நகங்களில் குவிக்கப்பட்டனர்.

இது போன்ற போராட்டங்களின் காரணமாகவே, புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு நாள் கொண்டாட் டத்தின் போது, கருப்புத் தொப்பிகளுக்கும் போர்வை களுக்கும் காவல் துறையினரால் தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வெளிப்படையாக பொது இடங்களில், இந்தியக் குடியரசு நாள் கருப்பு நாளாகக் கடைபிடிக் கப்படவில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, இந்தியக் குடியரசு நாளுக்குக் கண்டனங்கள் பிறந்தன.

இந்தி -_ சமற்கிருத மொழிகள் திணிப்பு, கூடங்குளம் அணு உலை, - நியூட்ரினோ ஆலைகள் திணிப்பு, மீனவர் படுகொலை, -காவிரிச் சிக்கல்களில் பாராமுகம் என ஒவ்வொரு நாளும் புதிய புதிய சிக்கல்களில், இந்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகின்றது. குடியரசு நாளை, தமிழகத்திலும் வெளிப்படையாக கருப்பு நாளாக கடைபிடிக்கும் காலமும் வரும்.

Pin It