“சட்டத்தின்” முன் அனைவரும் சமம், “அரசமைப்புச் சட்டம் புனிதமானது.” “இந்திய சனநாயகம் ஏற்றம் மிக்கது.”, பத்துக் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஓர் அப்பாவியைத் தண்டித்து விடக்கூடாது” - இவையெல்லாம் காங்கிரசுக்காரர்களும், இந்திய ஆளும் வர்க்க அறிவாளிகளும் நாத்தழும்பேற நவின்று வந்த பொன்மொழிகள்!

ஆனால் இன்று? பண்டித நேருவின் பரம்பரையும் பாமரத் தமிழனும் சரிசமமா? சோனியா காந்தி ராகுல் காந்தி குடும்பத்தை விடப் புனிதமானதா அரசமைப்புச் சட்டம்? இந்திய மக்களுக்குக் காங்கிரசு போட்ட பிச்சைதான் சனநாயகம்! காங்கிரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே மேலான சனநாயகம் - என்று கேட்கும் பாணியில் காங்கிரசார் குதியாட்டம் போடுகிறார்கள்.

இராசீவ் காந்தி கொலையானது இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கிய செயலாகும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். இந்தியாவின் ஆன்மாவே நேரு குடும்பம்தான் என்று நாட்டின் பிரதமர் கூறுவது என்ன ஞாயம்?

இராசீவ் காந்தி இந்தியாவின் ஆன்மா எனில் தமிழினம் இந்தியாவின் சாத்தானா? அப்பாவித் தமிழர்களைத் தூக்கில் போட, வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க துடிப்பதேன்?

21.1.2014 அன்று தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பல மாநிலங்களைச் சேர்ந்த 15 பேரின் மரண தண்டனையை நீக்கியது. அவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க நீண்டகாலதாமதம் செய்து பின்னர் கருணை மனுக்களை ஏற்க மறுத்ததுதான் உச்சநீதிமன்றம் சாவுத்தண்டனையை நீக்கியதற்குக் கூறிய காரணம்.

அதே காரணத்தைக் கூறித்தான் 18.2.2014 அன்று அதே உச்ச நீதி மன்ற அமர்வு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் சாவுத் தண்டனையை நீக்கியது. திசைகாட்டும் வெளிச்சத்துடன் புதிய விளக்கங்கள் - வரையறுப்புகளுடம் 21.1.2014 தீர்ப்பு அமைந்தது. ஒருமித்த தீர்ப்பு அது. 18.2.2014 தீர்ப்பும் ஒரு மித்த தீர்ப்பே!

இராசீவ் வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் உள்ளோரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 இன் படி விடுவிக்க மாநில அரசு விரும்பினால் ஆய்வு செய்து அவ்வாறு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய உள்ளதாக சட்டப்பேரவையில் 19.2.2014 அன்று அறிவித்தார்.

இவ்வாறு விடுதலை செய்ய மாநில முதலமைச்சருக்கு அதிகாரமில்லை என்று கூறுவோர் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 உட்பிரிவு இரண்டைக் காரணம் காட்டுகிறார்கள்.

மேற்படி 435 (2) கூறுவது, இந்திய ஒன்றிய அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றிருந்தால் அத் தண்டனையை மாநில அரசு அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் பெற்ற தண்டனையோடு சேர்த்து ஒருவர் அனுபவித்துக் கொண்டிருந்தால் அவருக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறாமல், மாநில அரசு மட்டும் தண்டனைக் குறைப்பு செய்ய முடியாது என்பதாகும்.

இராசீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றோர், இந்திய அரசின் சட்டங்களான ஆயுதச் சட்டம், வெடிபொருள் சட்டம் ஆகிய வற்றின் கீழ் சில ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, மாநில அரசு சட்டங்களான 302, 120ஙி ஆகியவற்றின் தண்டனையோடு சேர்த்து சிறையில் இருந்து வருகின்றனர். மேற்படி ஆயுதச் சட்டம், வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின் வழங்கப்பட்ட தண்டனைகளை அனுபவித்து முடித்து விட்டனர். மேற்படி ஏழு பேரும்! இப்போது அவர்களுக்கு எஞ்சியிருப்பது மாநில அரசுச் சட்டமான கொலை (302) குற்றச் சதி (120 B) ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட வாழ்நாள் தண்டனையே!

1999 இல் இந்த வழக்கின் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் நடுவண் அரசுச் சட்டமான தடாச் சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்று கூறி அதை நீக்கி விட்டது. அப்போது கீழ்நீதிமன்றம் 26 பேருக்கு வழங்கிய மரணதண்டனையை 4 பேர்க்கு மட்டுமே உறுதி செய்தது. மூன்று பேர்க்கு வாழ்நாள் தண்டனை வழங்கியது. 14 பேர்க்கு 302, 120B ஆகியவை பொருந்தாது என்று கூறியது. அந்த 14 பேர்க்கும் நடுவண் அரசின் ஆயுதச் சட்டம், வெடி மருந்துச் சட்டம் ஆகியவற்றின் படி விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்து விட்டது என்று கூறி அவர்களை விடுதலை செய்தது. மற்ற ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் 14 பேர் விடுதலை பெற்ற காரணம்- அதாவது நடுவண் அரசுச் சட்டப்படியான குற்றங்களின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது என்ற காரணம் - இப்பொழுது சிறையில் உள்ள ஏழு பேர்க்கும் பொருந்தும் எனவே பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் கு.ந.ச. 432இன் கீழ் தமிழக அரசுக்கு வந்து விடுகிறது. தடாச் சட்டம் 1999 இல் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டுவிட்டது.

இவற்றையெல்லாம் ஆய்வு செய்துதான் நீதிபதி சதாசிவம் அமர்வு, மாநில அரசு 432 இன் கீழ் விடுதலை செய்வது பற்றி ஆய்வு செய்யலாம் என்று கூறியது. உச்சநீதிமன்ற வழிகாட்டல்படிதான் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்தார். வழக்கம் போல கலைஞர் கருணாநிதி அதை ஆதரித்தார்.

தமிழக முதல்வரின் செயல்பாட்டைச் சட்டவிரோதம் என்று கூறுவோர், சட்டவிவாதம் செய்வதுதான் சனநாயகம்! அதைவிடுத்து, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தியாவின் இறையாண்மையைச் சூறையாடி விட்டன என்று தமிழகக் காங்கிரசுத் தலைவர் ஞானதேசிகன் தொடை தட்டுவது காலித்தனம்!

இந்த ஏழு பேரும் அப்பாவிகள் என்றால் ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர் யார் என்று சொல்லுங்கள் என்று தமிழின உணர்வாளர்களைப் பார்த்துக் கேட்கிறார் ஞானதேசிகன். உண்மையான இராசீவ் கொலைக்காரர்கள் கொலைச் சதியில் ஈடுபட்டோர் ஆகியோரைக் கண்டறிய அமைக்கப்பட்ட ஜெயின் குழு இடைக்கால அறிக்கை தந்ததோடு சரி. அதற்கு மேல் அதனைச் செயல்பட அனுமதிக்கவில்லை காங்கிரசு ஆட்சி. அடுத்து இன்னும் விரிவாகவும் தீவரமாகவும் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய நீதிபதி வர்மா தலைமையில் பல் நோக்கு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அது செயல் பட அனுமதிக்கவே இல்லை.

பிரதமர் அலுவலகத்திலிருந்தே இராசீவ் கொலை வழக்குத் தொடர்பான கோப்புகள் காணமல் போயின. அது எப்படி நடந்தது என்று விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கையும் வெள்யில் வரவில்லை. அதுவும் காணமல் போயிற்றோ தெரியாது.

நடுவண் காங்கிரசு ஆட்சி இக் குழுக்கள் செயல்படாமல் தடுத்தது ஏன்? யார் யாரைக் காப்பாற்ற? ஞானதேசிகன்கள் விடை சொல்வார்களா?

இராசீவ் காந்தியோடு 17 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்; அவர்களுக்காக தமிழின உணர்வாளர்கள் கண்ணீர் சிந்தாதது ஏன் என்று ஞானதேசிகன் கேட்கிறார். திடீரென்று ஞானதேசிகனுக்குக் கூட தமிழினம் நினைவு வருகிறது. இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதைக் கூட நாம் ஆதரிக்கவில்லை. அப்படி இருக்கும் போது 17 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கவலைபடவே செய்கிறோம். ஆனால் ஒரு வினாவுக்கு ஞானதேசிகன் விடை கூற வேண்டும். முன்னாள் பிரதமர், கட்சியின் தலைவர், அவரை வைத்துதான் ஞானதேசிகன் போன்ற கீழ்நிலைக் காங்கிரசுத் தலைவர்களின் அரசியல் பிழைப்பு இருந்தது. அப்படிப்பட்ட இராசீவ்காந்தி வெடிகுண்டு வெடித்துச்சாகும் போது காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 அப்பாவிகள் செத்திருக்கிறார்கள், ஒரு காங்கிரசுக்காரர் கூட சாகாமல் தப்பித்துக் கொண்டார்களே அது எப்படி? மர்மம் என்ன?

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் நாதுராம் கோட்சேக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. அப்போது அன்றைய பிரதமர் பண்டித நேரு “நான் தூக்குத் தண்டனையை ஆதரிக்கவில்லை” என்றார். காந்தியடிகளின் பிள்ளைகள் கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கக் வேண்டாம்; அதனை காந்தியடிகள் விரும்பமாட்டார்கள் என்றார்கள்; நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே அதே வழக்கில் வாழ்நாள் தண்டனைப் பெற்று 15 ஆண்டில் விடுதலை ஆனார்.

காங்கிரசுக்காரர்களுக்கு உண்மையில் இராசீவ்காந்தியின் மீது பற்றுக் கிடையாது, காந்தி நேரு கொள்கைகள் மீதும் பற்றுக் கிடையாது. தங்கள் பதவி அதன் வழி அதிகாரம் பணம் ஆகியவற்றின் மீது மட்டுமே பற்று. பதவியைக் கொடுக்கும் குடும்பம் சோனியா - இராகுல் குடும்பம் அவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக அண்டிப் பிழைக்கும் அடிமன உளவியலின் கூச்சல்கள்தாம் காங்கிரசாரின் கூச்சல்கள்!

காங்கிரசு மட்டுமின்றி பா.ச.க., ஆம் ஆத்மி கட்சி ஆகியவையும் ஏழு தமிழர் விடுதலையை எதிர்க்கின்றன. பா.ச.க.வின் மாநிலங்களவைத் தலைவர் அருண் சேட்லி, ஆம் ஆத்மி தலைவர் கெஜிரிவால் ஆகியோர் 23 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் துன்புறும் ஏழு தமிழர்களை சட்ட விதிகளின் படி விடுதலை செய்வதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரசு, பா.ச.க. ஆம் ஆத்மி முதலியவை இந்திய ஏதாகதிபத்தியத்தின் - இந்திய ஆரியத்தின் வெவ்வேறு முகங்கள்தாம்!

சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனக்கும்பல் தமிழினத்தின் நிரந்தரப் பகைக் கும்பல்! அது தமிழினத்திற்கு மட்டுமின்றி மனித உரிமைக்களுக்கும் நிரந்தர எதிர்க்கும்பல்! பார்ப்பனக் கும்பலுக்கு அடிவருடி,, கங்காணி வேலை தமிழினத்தில் எப்போதும் உண்டு!

நம்மைப் பொறுத்தவரை, முதல் நிலையில் சாவுத் தண்டனை ஒழியவேண்டும்; வாழ்நாள் தண்டனை 14 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட வேண்டும்.

பேரறிவாளன், சாந்தன் முருகன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் அப்பாவிகள் உடனே விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. தடுக்கும் ஆற்றல்களை எதிர்த்துத் தமிழின உணர்வாளர்கள், மனித உரிமை ஆதரவாளர்கள் போராட வேண்டும்!

Pin It