இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் மனிதர் களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின் றன. யானைகள், சிறுத்தைகள் மனிதர்களைக் கொல்வது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, மனித உயிர்கள் இழப்பதும், வனவிலங்குகள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

வனப்பகுதிகளில் காணப்படும் வறட்சி நிலை காரணமாக, நீரின்றி வனவிலங்குகள் மனிதப் பகுதி களுக்கு வருகின்றன. இன்னொருபுறத்தில், வனப் பகுதிகள் மீது இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் வரலாறு காணாத மனித ஆக்கிரமிப்புகள் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

வனப்பகுதிகளை பாதுகாத்து வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களை ‘நாகரிகம்’ என்ற பெயரில் வெளி யேற்றிவிட்டு, அப்பகுதிகளை பன்னாட்டு- வடநாட்டு பெருநிறுவனங்களின் கனிம வளக் கொள்ளைகளுக்கு அளிப்பதும், ‘சுற்றுலா’ என்ற பெயரில் வனப்பகுதிகளில் அத்துமீறிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வனச்சூழல் கெடுக்கப்படுவதும், வனப்பகுதிகளில் புதிய வேளாண் விளைநிலங்கள் உருவாக்கப்படுவதும் அரசின் அனுமதியோடு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இது போன்ற காரணங்களால், வாழ்வாதார பாதிப்பை எதிர்கொள்ளும் வனவிலங்குகள் மனிதர் வாழும் பகுதிகளுக்கு தனித்தோ, கூட்டமாகவோ வருகின்றன. அதன்போது, மனிதர்களுக்கும் வனவிலங் குகளுக்கும் மோதல் ஏற்படுகின்றது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 400 பேர் இதன் காரணமாக பலியாகின்றனர்.

எனவே, இது போன்ற மோதல்களையும் உயிரிழப்பு களையும் தடுக்க, வனவிலங்குகள், வனத்திலேயே வாழ் வதற்கான ஏற்பாடுகளை முறையாகக் கண்காணிப்பது, வனப்பகுதி ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்று வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

ஆனால், இந்திய அரசோ, தற்போது, அந்தக் கடமையை மக்கள் மீது திணிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

கடந்த சனவரி 8 அன்று, தில்லியில் பேசிய, நடுவண் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், யானைகள் மனிதப் பகுதிகளுக்குள் வருவதைத் தடுக்க மிளகாய்ச் செடி வேலிகளும் வளர்ப்புத் தேனீ வேலிகளும் கொண்ட ஆப்ரிக்க முறையை உழவர்கள் கைக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

வனப்பகுதிகள் அடர்த்தியாக வுள்ள ஆப்ரிக்க கண்டத்தில், யானைகளிடமிருந்து விளை நிலங் களை பாதுகாக்க, அங்குள்ள மக்கள் வளர்ப்புத் தேனீக்களை வேலிகளாக வளர்க்கின்றனர். மேலும், மிளகாய்ச்செடி வேலிகளை யும் போடுகின்றனர். அங்குள்ள யானை களுக்கு இதன் நெடி பிடிக் காது என்பதால், அது அங்கு பயன் தரக் கூடிய முறையாக உள்ள தெனக் கூறப்படு கிறது.

ஆனால்,இந்தியாவில் நிலைமை வேறு என் கின்றனர் பல சூழலியல் ஆர்வலர்கள். இங்குள்ள தேனீக் களுக்கும், ஆப்ரிக்கத் தேனீக்களுக் கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இங்குள்ள சிறிய அளவிலான தேனீக்களைக் கண்டு யானைகள் பின்வாங்காது என்றும், மிளகாய்ச் செடிகளையும் யானை கள் எளிதாக எதிர் கொள்ளும் என்றும் அவர் கள் தெரிவிக்கின் றனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி, இச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள வனப்பகுதி களின் மீதான மனித ஆக்கிரமிப்பு களுக்கு முடிவு கட்டாமல், வெறும் வேலி அமைக்கும் திட்டங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் பணியில் இந்திய அரசு இறங்கி யிருப்பதுதான்.

வனப்பகுதிகள் மீதான மனித ஆக்கிரமிப்புகளை அகற்றும் நட வடிக்கை களில்தான் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுவே, மனிதர் - விலங்கு மோதல் களுக்கு முடிவுகட்டும். வனத்தை யும் - வனவிலங்குகளையும் பாதுகாக் கும்.

Pin It