தமிழ் மக்களைப் பீடித்துள்ள சமூகக் கேடுகள் அனைத்திற்கும் மூல ஊற்றாய் உள்ளவர்கள் பதவி அரசியல் பகட்டுக்காரர்களே!

இவர்கள் மன்னர்களை விடப் பெரிய எதேச்சாதிகாரிகள். சர்வாதிகாரிகளை விடப் பெரிய சனநாயக சர்வாதிகாரிகள்; முதலாளிகளை விடப் பெரிய சுரண்டல்காரர்கள்; சர்க்கஸ் காரர்களை விடப் பெரிய சாகசக்காரர்கள்; சனநாயகம் பெற்றெடுத்த சைத்தான்கள்!

‘விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது’ என்பது தாவர அறிவியல்; சனநாயக விதை போட்டால் சர்வாதிகாரத் தலைமை முளைக்கும் என்பது தமிழக அரசியல்!

தலைகீழாகத் தொங்குவதால் வவ்வாலுக்கு வலிப்பதில்லை; அது அவற்றின் வாழ்க்கை! எச்சிலைத் துப்பவது போல் இலட்சியங்களைத் துப்பிவிடும் போது, மனச்சான்று வலிப்பதில்லை பதவி அரசியல் பகட்டுக்காரர்களுக்கு; அது அவர்களின் பார் விளையாட்டு. இவர்களின் புதிய பரிணாமப் பாய்ச்சலாய் இலட்சியமே இல்லாமல் கட்சி தொடங்குவோர் தோன்றியுள்ளனர்.

முதலாளியோ ஒரு பொருளைக் கொடுத்து விட்டு சுரண்டுகிறான்; பதவி அரசியல் வாதியோ ஒரு பொய்யைக் கொடுத்து விட்டு சுரண்டுகிறான். நாட்டின் வறுமைக்கு முதலாளியச் சுரண்டலை விட அரசியல் சுரண்டலே அதிகக் காரணம்! முதலாளியச் சுரண்டலுக்கும் மூல பலம் அவர்கள் அல்லவா!

சாதிப்பேயைத் தலைவிரித்தாடச் செய்யும் பூசாரிகள் இவர்கள். சாதிப் பேயை விரட்டும் பூசாரிகளல்லர்; சாதிப் பேயோடு சரசமாடும் பூசாரிகள்!

தங்களைப் போல் மக்களும் பண்பு கெட்டுப் போனால்தான், தங்களால் அவர்களுக்குத் தலைமை தாங்க முடியும் என்ற தத்துவத்தைக் கண்டறிந்தவர்கள் இத் தலைவர்கள்!

ஆட்டு மந்தை, மாட்டு மந்தை போல் தங்களுக்கான ஓட்டு மந்தையை இவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.

தனது மந்தையைத் தனது உயிரினும் மேலான உறவு என்பர்; தனது குருதியின் குருதி என்பர்; இன்னும் என்னென்னவோ சொல்லி உறவு கொண்டாடுவர். ஆனால் தனது மந்தை சொந்தமாகச் சிந்தித்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பர். உயர்ந்தபட்ச எச்சரிக்கை இதில் காட்டுவர். தாங்கள் கட்சியின் உச்சித் தலைமையில் இருப்பது, சனநாயகம் தந்த வாய்ப்பு, மக்கள் வழங்கிய கொடை என்று இத்தலைவர்கள் எண்ணுவதில்லை. ஒவ்வொரு தலைவரும் தன்னை ஒரு பேரரசாகக் கருதிக் கொள்கின்றனர். இப்பேரரசுகளுக்கிடையே தீராத பகை! ஓயாத மோதல். இது இலட்சியங்களின் மோதல் அன்று; தன்னலங்களின் மோதல்! இந்த மோதல்கள்தான் இன்றையத் தமிழ்நாட்டின் உயிர்த்துடிப்பான அரசியல்!

கர்நாடகத்தில் எலியும் பூனையுமாய்ச் சண்டையிட்டுக் கொள்ளும் எல்லாக் கட்சிகளும் இன அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி விட்டன. தமிழகத்தில் 28 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரிப்பாசனத்தை நம்பி உள்ளது. இது பாலை நிலமாக மாறும் ஆபத்து உள்ளது. வரும் சூன் மாதம் தொடங்கும் சாகுபடிப் பருவத்திற்கும் கர்நாடகம் தமிழகத்தின் உரிமை நீரைத் திறந்து விடப்போவதில்லை.

கர்நாடகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி “ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தரமுடியாது” என்று ஒரு மனதாகத் தீர்மானித்தன. அப்போது தமிழகக் கட்சிகள் தனித் தனிப் பேரரசுகள் போல் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, தமிழ் மக்களை ஒன்று திரட்டிக் கொண்டு நடுவண் அரசை அசைத்து, சட்டப்படி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறத் தன் கட்சித் தலைமை ஏன் செயல்படவில்லை. என்று அ.இ.அ.தி.மு.க. கட்சியினரோ அல்லது தி.மு.க. கழகத்தினரோ மற்ற மற்ற கட்சியினரோ கேட்கவில்லை. எதிர்க்கட்சியைச் சாடுவதற்கும் தன் கட்சியைப் புகழ்வதற்கும் மட்டுமே அவர்கள் மனப்பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட முதலமைச்சர் செயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதன்மை எதிர்க்கட்சித்தலைவர் விசயகாந்த் ஆகிய மூவரும் ஒன்றாகக் கலந்து கொள்ள மாட்டார்கள். கருணாநிதி முதல்வராக இருந்தால் செயலலிதா கலந்து கொள்ள மாட்டார். செயலலிதா முதல்வராக இருந்தால் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார். இப்பொழுது விசயகாந்தும் அந்தச் சுழற்சியில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விவாதமா நடக்கிறது? அண்டிப்பிழைக்கும் அண்டங் காக்கைகளின் இரைச்சல் அல்லவா கேட்கிறது. முந்தைய ஆட்சியில். தி.மு.க. அண்டங் காக்கைகள். இன்றைய ஆட்சியில் அ.இ.தி.மு.க. அண்டங்காக்கைகள்.

கடப்பாறைப் பிடித்து உழைப்பவனின் கைகள் கூட அவ்வளவு காய்த்துப் போயிருக்காது; அம்மா பேசும் போதும், அம்மாவைப் பற்றிப் பேசும் போதும் மேசைகளைத் தட்டி தட்டி அமைச்சர்களின்- அ.தி.மு.க. உறுப்பினர்கள் கைகள் அவ்வளவு காய்த்துப்போயிருக்கிறது.

தமிழகத்தின் உரிமைகளைக் காக்க இங்கு ஒன்றுபட்ட போராட்டமும் கிடையாது, ஒருங்கிணைந்த குரலும் கிடையாது. கர்நாடக கேரள மாநிலங்களில் பதவிச் சண்டைகள் இருந்தாலும், தமிழகத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். ஒற்றுமை இல்லாததால் தமிழகம், காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு போன்றவற்றின் உரிமைகளை இழந்து நிற்கிறது. சொந்தப் பதவிச் சண்டைகள், பழிவாங்கிக் கொள்ளும் பகை அரசியல் ஆகிய தன்னல அரசியல் மேலோங்கி இருப்பதால் தமிழகம் இழந்துள்ள உரிமைகள் பலவாகும்.

இவ்வாறான சீரழிந்த குணங்களிலிருந்து விடுபட்டு, இப்பொழுதுள்ள முன்னணி அரசியல் தலைவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புவதற்கு இட மில்லை. இவர்கள் தனிநபர் பகை அரசியல் என்ற சீரழிவுப் பண்பாட்டையே தங்களின் அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கற்பித்துள்ளார்கள்.

ஒன்றரை இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட போது கூட தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவில்லை.

மற்ற மாநிலங்களில் கட்சித் தலைவர்கள் “தங்களைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார் களோ, இனத்துரோகி என்று வசைபாடி ஓரங்கட்டுவார்களோ” என்று அஞ்சுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மக்கள் தங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும், தங்கள் பேச்சைத் தலை மேல் வைத்துச் செயல் படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள். அந்தந்தக் கட்சிகளில் உள்ள மக்களும் தலைமைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். தலைவர்கள் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

தன்னலக் கட்சி அரசியல் தமிழ் மக்களை மிக மோசமாகப் பிளவுப்படுத்தி விட்டது. மக்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்ளும் அளவுக்குப் போட்டி, பொறாமை உணர்ச்சி களில் சிக்கி, ஒற்றுமையை இழந்து நிற்கிறார்கள்.

அடுத்து, சாதி அரசியல் மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொண்ட தனித் தனி முகாம்களாகப் பிளவு படுத்தி வருகிறது.

அனைவர்க்கும் பொதுவான அரசியல் கட்சிகள் என்று அறியப்பட்டவை, அந்தந்த வட்டாரத்தில் அடர்த்தியாயுள்ள குறிப்பிட்ட சாதியினரை முதன்மைப் படுத்தி, பதவி கொடுத்து அரசியல் நடத்தின. கொள்கைப் பிடிப்பு, மக்களுக்காகப் போராடும் ஆற்றல் போன்றவை தகுதி அல்ல, சாதியும் பணம்தான் தகுதி என்று ஆனது. இதனால் அரசியல் பிரமுகர்கள் சாதிப் பிரமுகர்கள் ஆனார்கள். இப்போக்கு, சாதிக்கொரு கட்சியைத் தோற்றுவித்தது. மேலும் தமிழ்சமூகம் பிளவுப்பட்டுக் கிடக்கிறது.

சாதிக் கட்சிகள் உருவாகி அரசியல் அரங்கில் வலம் வரத் தொடங்கிய பின், மதக் கட்சிகள் தோன்றி வளர்ந்தன.

ஒரு சாதிக்கு ஒரு கட்சி மட்டும் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன. ஒரு மதத்திற்கு ஒரு கட்சி மட்டுமில்லை பல கட்சிகள் இருக்கின்றன.

மேலும் மேலும் நுணுகி, நுணுகிப் பிளவுகள் உண்டாவதற்கான மூலகாரணம் அனைவர்க்குமான பொது அரசியல் கட்சிகளாய் இருந்தவற்றின் தன்னல அரசியல், சாதி அரசியல், மத அரசியல் ஆகியவையே. இக்கட்சிகளின் இத்தனை சீரழிவுகளுக்கும் மூலகாரணம் இவற்றிற்கு ஆகப் பெரிய இலட்சியமோ, அடைய வேண்டிய சமூக இலக்கோ இல்லாததுதான்.

இந்திய ஏகாதிப்பத்தியம் வழங்கியுள்ள கங்காணிப் பதவிகள் - அவற்றின் வழி கிடைக்கும் கங்காணி அதிகாரங்கள் - அவற்றின் மூலம் வரும் நேரடி வருமானங்கள், கொல்லைப்புறக் கொள்ளைகள் முதலியவற்றை சுருட்டிக் கொள்ளும் போட்டியில்தான் இக்கட்சிகள் ஒன்றையொன்று பகைத்துக் கொள்கின்றன. கொச்சையாகச் சொல்வதென்றால் குப்பைத் தொட்டியில் குரைத்துக் கொள்ளும் பிராணிகள் போல் சண்டையிட்டுக் கொள்கின்றன.

ஊராட்சிப் பதவியிலிருந்து முதலமைச்சர் பதவி வரை மேற்சொன்ன அதிகாரங்களும் வருமானங்களும் இருக்கின்றன. விதி விலக்காக சிலர் கொல்லைப்புறக் கொள்ளைகளில் ஈடுபடாமல் இருக்கலாம்.

என் கட்சி மக்கள் என் பேச்சை கேட்க வேண்டும், என் சாதி மக்கள் என் தலைமையை ஏற்க வேண்டும், என் மத மக்கள் என் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது இத்தலைவர்கள் வைக்கும் ஈர்ப்பான முழக்கம்

உயர்ந்த இலட்சியத்தை மக்கள் முன் வைத்து, அதை நோக்கி விரட்டப்படும் மக்கள் சமூகம்தான் முன்னேறும்; இலட்சியத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் தாங்கள் வாழும் சமூகத்தை அவ்வாறு இலக்கு நோக்கி விரட்ட வேண்டும் என்கிறார்கள் அறிஞர்கள். ஆனால் நமது தமிழ்ச் சமூகத்தை அரசியல் கட்சிகளும், சாதி மதக் கட்சி களும் அடுத்த தேர்தலை நோக்கியே விரட்டிக் கொண்டிருக்கின்றன. சமூகத்திற்குத் தேவையான உயர்ந்த கொள்கைகளைப் பற்றி சிந்திக்க விடாமல், பதவிப் போட்டித் தடகளத்தில் யாரோ வெல்வதற்காக மக்களை ஓட விடுகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அடைய வேண்டிய இலட்சியமாக எதைக் கொள்வது? எந்த இலக்கை நோக்கித் தமிழ்ச் சமூகம் விரட்டப்பட வேண்டும்?

அந்த இலட்சியத்தைத் தத்துவங்களில் தேடுவதா? புத்தகங்களில் தேடுவதா? இல்லை. நம்மைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகளிலிருந்து, தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளி லிருந்து தேட வேண்டும்.

தமிழ்ச் சமூகத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் - பாதிப்புகள் யாவை?

1. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் உரிமைப் பறிப்பு. அதனால் குடி நீர் இல்லாமை. பாசன நீர் இல்லாமை, வாழ்வுரிமைப் பறிப்பு! இந்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்ற மறுப்பது. நடுநிலை தவறி தமிழர்களுக்கு எதிராக இருப்பது.

2. கச்சத்தீவுப் பறிப்பு, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிப்பு. தமிழக மீனவர்கள் 600 பேர் சிங்களப் படையினரால் இனப்படுகொலை. சிங்களர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் ஊனமுற்று வாழ்தல். இந்திய அரசின் கடலோரக் காவல்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க மறுப்பது.

3.  வடநாட்டு மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைப் பெருமடுப்பில் தமிழ் நாட்டில் திணித்து, தமிழர்களின் தொழில் வளர்ச்சியை தடுப்பது.

4. இலட்சக் கணக்கில் அயல் இனத்தார் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து குடியேறி தமிழர்களின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு, கல்வி ஆகிய வற்றைப் பறிப்பது. தமிழர் தாயகமான தமிழ்நாடு கலப்புத் இனத் தாயகமாக மாற்றப்படுவது. தமிழர் தாயகத்தைப் பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாற்றுவது.

5. கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற பெருந்திரள் உயிர்க்கொல்லித் தொழில் நுட்பத் தொழிற்சாலைகளையும், நியூட்ரினோ போன்ற ஆய்வகங்களையும் மக்களை வெளியேற்றும் தொழில் திட்டங்களையும் தமிழ்நாட்டில் திணிப்பது.

6. அப்பாவித் தமிழர்களைத் தூக்கில் போடத் துடிப்பது.

7. இந்தியைத் திணித்தும் ஆங்கில ஆதிக்கத்தை வலுப்படுத்தியும் தமிழ் மொழியைப் பயன்படுத்தப்படாத மொழியாய் மாற்றுவது. இந்தப் போக்கில் தமிழ் மொழியைக் கீழ்மைப் படுத்தி மறையச் செய்வது. இதன் வழி தமிழர் அடையாளத்தை, தமிழர் வரலாற்றை அழிப்பது.

8. கல்வி, ஆற்று நீர், கடல் கரை, வேளாண்மை, காவல் துறை ஆகியவற்றில் தமிழக அரசுக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் பறித்து நடுவண் அரசிடம் குவித்துக் கொள்வது.

9. நம் இனத்தவரான ஈழத் தமிழர்களை அழித்த போரை சிங்கள அரசுடன் சேர்ந்து இந்திய அரசு நடத்தியது. எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களுக்குக் குடிமை உரிமை கிடைக்கச் செய்ய ஐ.நா. மன்றம் தலையிடாதபடி, இந்திய அரசு தடுத்து வருவது. இனப்படுகொலைக் குற்றவாளிகளான இராசபட்சே கும்பல் மீது பன்னாட்டுப் புலனாய்வு நடவடிக்கை வந்து விடாமல் இந்தியா தடுத்து வருவது.

10. உலகமயச் சீரழிவில் தமிழ்நாட்டை இணைத்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு களின் வேட்டைக் காடாக மாற்றியிருப்பது.

11. தமிழர்களிடையே சாதிச் சண்டைகள், தீண்டாமை வன்கொடுமைகள் நிலவுவது.

12. மதச் சண்டைகள், மத முனைப்பு வாதப் போக்குகள் இருப்பது.

13. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள்.

14. சுற்றுச் சூழல் மாசுபடுவது மக்கள் வாழத் தகுதியற்றதாக தமிழ்மண், தமிழகச் சூழல் மாற்றப்படுவது.

மேற்கண்டவை, நம்மைச் சூழந்துள்ள நெருக்கடிகளில், நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் முகாமையானவை. இவற்றில் பெரும்பாலானவை நேரடியாக இனச் சிக்கல் சார்ந்தவை. தமிழர்கள் என்பதால் நம் மீது பகை கொண்டு பிற இனங்கள் இந்திய அரசின் துணையோடு நமக்கு எதிராகச் செயல்படுவதால் உருவானவை. உலகமயம் சூழல் பாதிப்பு, தமிழக அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது, தமிழ்மொழியைக் கீழ்மைப் படுத்துவது போன்றவை தாயகத்தின் இறையாணமை தமிழக அரசிடம் இல்லாததால் ஏற்பட்டவை. இவையும் இனச்சிக்கலே!

சாதி மதச் சிக்கல் ஆகியவை தமிழர்களுக்குள் – தமிழின ஒருமைப்பட்டு அடிப்படையிலும் மனித உரிமை அடைப்படையிலும் தீர்க்கபட வேண்டியவை. அதே வேளை இவற்றிற்கான அனைத்திந்தியத் தாக்கமும் இந்துத்துவாத் தொடர்பும் இந்தியத் தன்மை வாய்ந்தவை. இதிலும் தமிழின அரசியல் தேவைப்படுகிறது. பெண்ணுரிமை தமிழர்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டியது.

சாரமாகப் பார்த்தால் இன உரிமை, மனித உரிமை அடிப்படையிலான இன ஒருமைப்பாடு, இன விழிப்புணர்ச்சி, இன எழுச்சி என்பவையே இப்பொழுது தமிழக் மக்களுக்குத் தேவை யான முதன்மை இலட்சியமாக இருக்கிறது. தமிழின எழுச்சியின் ஊடாகவே தமிழர் சமத்துவத்தையும் ஆண்- பெண் சமத்துவத்தையும் கட்டி எழுப்ப வேண்டும். இவ்வாறான தமிழின அரசியலுக்குரிய கருத்தியல் (சித்தாந்த) சொல்லே தமிழ்த் தேசியம்.

 மேலே பட்டியலிட்ட சிக்கல்களுக்குரிய தீர்வை இந்தியத் தேசியத்தின் மூலமும் அடைய முடியாது; திராவிடத் தேசியத்தின் வழியாகவும் அடையமுடியாது. இவ்விரண்டும் கற்பனைத் தேசியங்கள் என்பது ஒருபுறமிருக்க, இவ்விரு கருத்தியல்களும் தமிழர்கள் மீது அயல் இன ஆதிக்கத்தைத் திணிப்பவை. ஏற்கெனவே இது பற்றி விளக்கியுள்ளோம். இன்னொரு வாய்ப்பிலும் விளக்கலாம்.

நாம் முன் வைக்கும் தமிழ்த் தேசியம் என்பது என்ன?

எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசம் தமிழ்த் தேசம்
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு!

தமிழ்நாடு இந்தியாவின் காலனியாகத்தான் இருக்கிறது 1918 வாக்கில் பிரித்தானிய ஏகாதிபத்தியம், தன்னுடைய காலனி மக்கள்; தங்களைத் தாங்களே ஆண்டுகொள்கிறோம்” என்ற ஒரு மயக்க உணர்வைப் பெறும் வகையில் மண்டேகு செமஸ்போர்டு சீர்த்திருத் தைக் கொண்டு வந்தது. அதன்படி அமைக்கப்பட்டதே அன்றைய சட்டப்பேரவை. அதே சட்டப்பேரவை தான் சில மாற்றங்களுடன் இன்றும் நீடிக்கிறது. அது அன்று இலண்டனுக் குக் கட்டுப்பட்டது. இன்று தில்லிக்குக் கட்டுப்பட்டது. எனவே விடுதலை பெற்ற தமிழ்த் தேசக் குடியரசு நிறுவப்படவேண்டும்.

தமிழ்த் தேசியத்திற்கென்று அரசியல், பொருளியல் சமூகவியல் கொள்கைகள் இருக்கின்றன. அது தமிழர் அறம் என்ற அடித்தளத்தில் உருவானது. மனித சமத்துவம்; தமிழகச் சூழலுக்கேற்ப நிகரமைக் (சோசலிச) கொள்கை ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டும். தமிழ்த் தேசியத்திற்கேற்ற வகையில் மார்க்சியப் பொருளியல் கொள்கை, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகவியல் கொள்கைகள் ஆகியவற்றை உள் வாங்கிக்கொள்ளவேண்டும். இவ்வாறான புதிய வார்ப்புதான் தமிழ்த் தேசியம்!

தமிழர் அறம் என்பது மிக உயர்ந்த மானிட இலட்சியமாகும். “பிறப்புபொக்கும் எல்லா உயிரும்” என்பதும் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதும் தமிழர் அறத்தின் சாரமாகும்.

தமிழ்த் தேசியம் என்பது தேச விடுதலை இலட்சியம் மட்டுமல்ல, மனித விடுதலை, பெண் விடுதலை, சுற்றுச் சூழல் சமன்பாடு உள்ளிட்டவற்றைக் கொண்ட உயர்ந்த இலட்சியங் களின் கருத்தியல் திரட்சி ஆகும்.

இன்று அரசியல் கட்சிகளால், சாதிமத அமைப்புகளால் பிளவுப்படுத்தப்பட்டும், சீரழிக்கப் பட்டும் சின்னா பின்னமாகிக் கிடக்கும் தமிழ் மக்களை இணைத்துஉயர்ந்த இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரே முழக்கம் தமிழ்த் தேசியம்!

தமிழினப் பகை சக்திகளை எதிர்த்துப் போராடி தமிழின உரிமைகளை மீட்கும் ஆற்றல் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கே உண்டு. வேறு எதற்கும் கிடையாது. வெளிப்பகையை முறியடிக்கும் போராட்டம், உட்பகையாய் உள்ள சாதி வெறி, மதவெறி பெண்ணடிமைத் தனம் போன்றவற்றையும் முறியடிக்கும் என்பதே தமிழ்த் தேசியத்தின் தனிச் சிறப்பு!

 தமிழ்த் தேசியம் என்பது தேர்தல் முழக்க மல்ல, விடுதலை இலட்சியம்!

இருக்கின்ற இழிவுகளை, ஏற்பட்டிருகின்றன இழப்புகளை, அடைந்திருக்கின்ற ஏமாற்றங் களை, அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணிக் கலங்குவதை விடக் களங்கரை விளக்கம் போல் திசை வெளிச்சம் காட்டும் தமிழ்த் தேசியக் கருத்தியலை மனதில் ஏந்த வேண்டும்.

அவலங்களைத் தொகுப்பது எல்லாரும் செய்யக் கூடியது. அவலங்களை மாற்றுவது இலட்சியவாதிகள் செய்யக் கூடியது.

தக்க இலட்சியத்தை அடையாளம் கண்டு விட்டால் அதன் வெற்றிக்குப் பாடு படவேண்டும். இலட்சியத்தை ஆதரிப்பதல்ல, இலட்சியத்தைப் பரப்புவதே இன்றயைத் தேவை.

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் தம்மை ஓர் அமைப்பு எனக் கருதிக்கொண்டு என்னென்ன வடிவங்களில் செயல்பட முடியுமோ அத்தனை வடிவங்களில் செயல்படவேண்டும்.

எப்போது வெற்றி என்று கேட்கக்கூடாது. வெற்றிக்காகப் பாடுபடுகிறோம்; வெற்றிக்காகப் போராடுகிறோம் என்பதே இலட்சியப் பிடிப்பின் சாரம்!

ஈழத் தமிழர்களின் ஞாயங்களுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் தமிழகம் தழுவிய எழுச்சியைப் பெற்றதல்லவா! பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதல்லவா!

பகட்டுத் தலைவர்கள் பாதை காட்டிய பழைய தமிழக மல்ல இப்போதிருப்பது. தமிழின உணர்வும், தமிழ்த் தேசிய உணர்வும் வளர்ந்து வரும் தமிழகம் இது. சிறு சிறு இன உணர்வு அமைப்புகள் தமிழகத்தின் போராட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்லும் தமிழகம் இது!

நம்பிக்கையோடு தமிழ்த் தேசியச் சுடரை ஏந்தலாம்! ஒவ்வொரு உணர்வாளரும் தன்னைக் குண்டேந்தாத கொரில்லா போராளிபோல் கருதிக் கொண்டு களமிறங்கினால் அடைந்து விடும் தொலைவில் தான் இலட்சிய இலக்கு இருக்கிறது.

மக்கள் எழுச்சியே தமிழ்த் தேசியப் புரட்சியின் திசை வழி.

Pin It