சிறந்த நடுவணாதிக்க ஒழிப்புக் கருத்தியலாளரான திரு. பிரபாது ரஞ்சன் சர்க்கார் அவர்கள் தம் PROUT in a Nutshell என்ற நூலில், முதல்நெறி மாந்தனைப் பிச்சைக்காரனாக்கும்; கம்யூனிசம் கருத்துரிமையை மறுத்து அடக்குமுறையை கைகொண்டு உடம்பியல் தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு உளத்தியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் புறக்கணிப்பதால் மாந்தனை வெறிகொண்ட விலங்கு ஆக்கும் என்பார். (Capitalism makes man a beggar;
communism makes man a beast).

 ஆயினும், ‘பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சை வேட்டை’ என்ற கி.வெ.யின் கட்டுரையை படிக்கும் போது, பி.ஆர்.சர்க்காரின் முதல்நெறி குறித்த கூற்றை, மறுவரைவிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதாவது, முதல்நெறி நடுத்திற மக்களைப் பிச்சைக்காரர்களாக்கும், பழங்குடியர்- ஏழை எளியோரை ஏதிலிகளாக்கும், வரையறை கொண்ட உடம்பின் தேவைகளுக்கு மீறி வெறித்தனமாக பொருளும் செல்வமும் குவிப்போரை கொடிய வெறிகொண்ட விலங்காக்கும் என்பதே அது.

 நடுவணாதிக்க பொருளியல் மக்கள் குலத்திற்கும், மாந்த நாகரிகத்திற்கும் இழைத்த கேடுகள் மிகப்பல. அது இன்று காலூன்றி உள்ள தடையற்ற உலகளாவிய பொருளியலால் மாந்த நாகரிகத்தையே வேரொடு களைந்தெறியத் தலைப்பட்டுள்ளதன் விளைவே இன்று பழங்குடிகளையும் தாக்கத் தொடங்கி உள்ளது.

 ஆழ்ந்த அறிவற்றாரின் உருவாக்கமான இந்த நடுவணாதிக்கப் பொருளியல் இந்த நிலக்கோளத்திலிருந்து கொலைநோயை ஒழிப்பது போல விரைந்து ஒழிக்க எல்லா தரப்பு மக்களும் இணைந்து பாடுபட வேண்டும். எல்லா தரப்பு மக்களின் நலன்களை வளர்த்தெடுக்க வல்ல நடுவணாதிக்கம் ஒழிந்த பொருளியலை நடைமுறைப் படுத்த வேண்டும். அது ஒன்றே மாந்த நாகரிகத்தை அழிவிலிருந்து காக்கவல்லது. இப்பணி பழங்குடி களுக்கும் பொருந்தும்.

 அணிந்துள்ள ஆடையை நனையாமல் ஆழ் கடலுக்கும், விண்கோள்களுக்கும் பயணப்படுகின்ற வளர்ச்சியை அறிவியலின் துணை கொண்டு மாந்தர்கள் எய்தி உள்ள இக்காலச்சூழலில் பழங்குடியினர் தனித்து வாழ்வது அவர்களுக்கு கேடாகவே அமையும். கானகத்தே காய்கனிகளை சேகரித்தும், வில் அம்பு கொண்டு வேட்டையாடியும் வாழும் தொல் தொடக்ககால வாழ்க்கை முறையை விடுத்து இக்கால் அறிவியல்சார் வாழ்க்கையை ஏற்க வேண்டும். இது ஒன்றே அவர்கள் பிறமக்கள் பயணிக்கின்ற வேகத்திற்கு ஈடுகொடுத்து நிலைக்க உதவும்.

 பழமையை - எளிமையைக் காட்டி அதைப் புறக்கணித்தல் அது அவர்களின் அழிவிற்கே வழிகோளும். வரலாற்றில் இதற்கான எடுத்துகாட்டுகள் ஏராளமாய் உள்ளன.
 புத்துலகான அமெரிக்கக் கண்டங்களில் ஆரிய ஐரோப்பியரின் காலடிபடுவதற்கு முன்னீடாக அங்கு 1 கோடிக்கும் மேலதான அளவில் செவ்விந்தியர்கள் வாழ்ந்தனர். கட்டடக் கலையிலும், மாழைப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மாயர், இன்கா முதலிய நாகரிகங்களும் இதில் அடங்கும். இந்த மாயர் நாகரிகம் தென்னிந்தியத் தமிழர் நாகரிகத்தின் ஒருபுலம் பெயர்வு எனப்படுகிறது.

 கட்டிடக் கலை, வானியல், வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறியவரான இவர்களிடத்தில் வட்டக் கருத்து இல்லாமை ஒரு பெருங்குறையே. இக்குறையால் இவர்களால் சக்கரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. வெளியுலகத் தொடர்பும் இருந்ததில்லை. கண்கருவிழி வட்டமானது அதை உற்று நோக்கியாவது. இவர்கள் வட்டக்கருத்தை உருவாக்கி வளர்த்திருக்கலாம். அது நடந்தேறவில்லை. சிறுகுறைபாட்டின் காரணமாக நிகழ்ந்த இந்த வளர்ச்சி தேக்கத்தால் மாயர்கள் வளர்ச்சி வேகத்தில் பின்தங்கிப் போயினர். மறுபுறத்தில் தென்கைத் தமிழர்கள் உலகின் முதலாவது சக்கரத்தை உருவாக்கினார்கள். அதை பானை வனையப் பயன்படுத்தினார். பின்னீடு இணை சக்கரங்களை ஒன்றிணைத்து வண்டியையும் உருவாக்கி மாடுகளைப் பூட்டி தொலைவான இடங்களுக்கு மிக விரைந்து செல்லும் உத்தியை கற்றார்கள். சரக்குகளையும், பொதிகளையும் வண்டியில் ஏற்றி வணிகத்தை பெருக்கினார்கள். இதனால் கால வளர்ச்சி ஓட்டத்தில் தாக்குப் பிடித்து நின்று இன்றும் சிறப்புறவே வாழ்கிறார்கள்.

 மாயர்கள் கால வளர்ச்சி ஓட்டத்தில் பின்தங்கியதால் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்கத்தையும் பொருளையும் கொள்ளையடிக்கப் புறப்பட்ட சில நூறு சுபானிய விலாங்காண்டிகளிடம் தோற்று அந்த நூற்றாண்டின் முடிவிற்குள் தடயமின்றி அழித்தார்கள். இப்போது 10 இலக்கத்திற்கும் குறைவான செவ்வியந்தியர்கள் வாழ்கிறார்கள்.

 நடுவாசியாவிலிருந்து கங்கைச் சமவெளிவரை ஒரு பெரும் நிலப்பரப்பில் உயரிய நாகரிகம் எய்தி வாழ்ந்த சிந்துவெளித் தமிழர்கள் போர்த்திறம் அறியாமையால் நிலக்கொள்ளை ஆரியர் ஐரோப்பா விலிருந்து சிறு கூட்டமாக வந்தபோது அவர்களிடம் தோற்று தம் உடைமையையும், மதிப்பையும் இழந்தனர். எனினும் ஆரியரிடமிருந்து போர்க் கலையை கற்றறிந்து தென்னிந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் ஆரியரை வென்று தம் நாகரிகத்தை ஆரியத் தாக்கத்திலிருந்து காத்தனர். உண்மையில் இது முன்னேற்றமே. இதனால் நன்மையே நிகழ்ந்தது.

 மேற்சொன்ன இரு வரலாற்று நிகழ்வுகளும் கால ஓட்டத்தின் வேகத்திற்கு தக்க வளர்ச்சியின் தேவையை நமக்கு சொல்லுகின்றன.

 பெயருக்குத் தக்கபடி பழமையிலேயே வாழும் பழங்குடிகள் தனித்து வாழ்வதை விடுத்து கால ஓட்டத்தை கருத்தில் கொண்டு இக்கால் அறிவியல் வாழ்க்கையை ஏற்க வேண்டும். தம்மை அண்டிய பகுதியில் வாழும் பிற மக்களோடு நெருக்கமான தொடர்பை கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒரு இடர் நேரும் போது அதை தமதாகக் கருதி அவர் துயர் களைவதில் துணையாக இருக்க வேண்டும்.

 பழங்குடிகளிடம் காணப்படும் பெருங்குறை அவர்தாம் சார்ந்து வாழும், மலை - காட்டு பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் சிறு அளவான உழவுத் தொழிலையும், கைத்தொழிலையும் செய்தும், கான் பொருள்களை சேகரித்தும் மிக எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். தம் இனக்குழு நலன் மட்டுமே கொண்டுள்ளனர். பிற பகுதிகளில் என்ன நிகழ்கிறது என்ற உலக நலக்கருத்து இல்லாதாராய் உள்ளனர் அல்லது நமக்கு என்ன வந்தது நமக்கு தான் எந்த தொந்தரவும் இல்லையே வேண்டியது கிட்டுகிறது என்ற மனநிலையில் உள்ளனர். இதே மனநிலைதான் பழங்குடிகள் அல்லாத குக்கிராம மக்களிடத்தும் நிலவுகிறது. இது போன்ற மனநிலை கொண்ட மக்களுக்கெல்லாம் ஒப்போரை உரிமை தரப்பட்டுள்ளது.

 விளைவு குடிநாயகக் கடமை ஆற்ற ஒப்போலை இடும் போது இந்த மனநிலையே இவரிடம் மேலாட்சி செய்கிறது. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன எனும்படி - யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கென்ன ஏதோ ஒப்போலையிட்டால் போது பணம் கூட தருகிறார்களாம் என்று எண்ணத்தில் தவறான ஊழல் மிக்க வேட்பாளர்களுக்கு ஒப்போலை இட்டு அவர்களை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். இவ்வாறான பழங்குடிகள் குக்கிராம மக்கள் புதியவாகத் தோன்றிய குடிநாயக நாடுகளில் 50% மேலாக இருப்பதால் அந்நாடுகளில் குடிநாயகம் வெறும் சடங்காகி தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில் இரட்டை வாக்குரிமை எவ்வளவு பொருளற்றது என்பது விளங்கும்.

 அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் குடிநாயகம் ஒரளவிற்கு செழுமை பெற்றிருப்பதற்கு எழுத்தறிவும், நகர வாழ்வும் காரணமல்ல. பிறபகுதிகளில் நடந்தேறும் நிகழ்வுகளை தம் வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் பங்கெடுப்புத் தன்மையேயாகும். அதனாலேயே குடிநாயகம் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் பங்கெடுப்பது குடிநாயகம் சீரியமுறையில் நடைபோட இன்றியமை யாதது. இது பழங்குடிகளிடம் இல்லை.

 பழங்குடிகள் இனியும் பழையராய் இல்லாமல் தம்மை ஒரு தேசிய இனம் எனும்படியாக உயர்த்திக் கொள்ள வேண்டும். அறிவியல் வாழ்வை ஏற்க வேண்டும். பழங்குடி அல்லாதவரோடு கருத்தொருமித்த உறவைப் பேண வேண்டும். இதுவே அவர்களை கால ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நிலைக்கச் செய்யும். குடிநாயக நாட்டு குடிகளாகவும் ஆக்கும். தோதவரும், படுகரும் இதற்கு சான்று.

 தமிழ்த் தேசியர்களாகிய நாம் தமிழ்த் தேசியக் குடிகளை செய்தித் தொடர்புக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் திறந்த கதவுடையவராக கால ஓட்ட வேகத்திற்கு ஈடு கொடுப்பவராக, உலக நிகழ்வுகளுக்கு உடன் எதிர்வினை ஆற்றுவோராக ஆக்க வேண்டும் (கம்யூனிசம் இதில் மூடிய கதவுக் கொள்கை கொண்டது). அதே நேரம் பொருளியலில் தற்சார்புத் தன்னிறைவும் தரவல்ல, ஏற்றுமதி இறக்குமதிக்கு மூடிய கதவுடைய நடுவணாதிக்கம் ஒழிந்த பொருளியலை ஆதரிப்பவராக ஆக்க வேண்டும்(கம்யூனிசம் இதில் திறந்த கதவுக் கொள்கை உடையது). இதுவே தமிழினத்தை அழியாமல் நிலைக்கச் செய்யும்.

 - ஆதன்

Pin It