சென்னை- மறைமலை நகரில் 18.11.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி, “திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி தங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் “திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

“ஊக- வரலாறெழுதுதல்” என்ற அடிப்படையில் தவறான ஒரு சொல் தொல் குடியினரான தமிழர்களுக்குச் சூட்டப்பட்டு திரும்பத் திரும்ப நிலை நிறுத்தப்படுகிறது. “திராவிடர்” என்ற பெயர் தமிழினத்துக்கு வரலாற்றில் ஒரு போதும் வழங்கியதில்லை. ஆனால், தென்னிந்தியப் பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்”( தென்புலம் குடியேறியோர்) என சமஸ் கிருத இலக்கியங்கங்களில் குறித்தனர். ஆரியத்தின் தென்கிளையே திராவிடர் ஆவர்.

தமிழினம் தன்னை ஒரு போதும் “திராவிடர்” என்று அழைத்துக் கொண்டதில்லை. எந்தத் தமிழ் இலக்கியமும் தமிழர்களைத் “திராவிடர்” என்று குறித்ததில்லை. அதுமட்டுமன்றி, தென்னிந்திய மொழியினங்கள் எவையும் தங்களைத் “திராவிடர்” என்று எந்த இலக்கியத்திலும் குறித்ததில்லை; இன்றுவரைத் தங்களைத் “திராவிடர்” என்று கருதியதுமில்லை.

திராவிடர் என்ற பழைய சொல்லுக்கு, புதிய பொருளை வழங்கியவர் பிஷப் இராபர்ட் கால்டுவெல். 1856-ஆம் ஆண்டு இராபர்ட் கால்டுவெல்லின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” தென்னிந்திய மக்களுக்குத் “திராவிடர்” என்ற இனப் பெயரைச் சூட்டியது. “தமிழகம்” என்ற சொல்லின் திரிந்த வடிவமே “திராவிடம்” என்பது. தென்னிந்திய நிலப்பகுதியைக் குறிக்க நீண்டகாலமாகத் திராவிடம் என்ற சொல் ஆரியர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தென்னிந்திய மக்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டதில்லை.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராகக் கருதப்படும் குமாரில பட்டரின் “தந்திர வார்த்திக” என்னும் பூர்வமீமாம்ச சூத்திரத்திரத்தின் உரைக்கான் துணை உரை நூலில், பயன்படுத்தப்பட்டுள்ள “ஆந்திர-திராவிட பாஷா” என்னும் சொற்கோவையை கால்டுவெல் ஒரு சான்றாக எடுத்துக் கொண்டார். தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்த கால்டுவெல், அவை ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதைக் கூறினார். குமரிலப்பட்டர் குறிப்பிடும் “ஆந்திர” என்பது தெலுங்கையும் அதிலடங்கிய கன்னடத்தையும் குறிக்கும் என்றும், “திராவிட” என்பது தமிழையும் மலையாளத்தையும் சேர்த்துக் குறிக்கும் என்றும் கூறினார்.

திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்க, பிராமணர்களாலும், தமிழ்மேதாவிகளாலும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழைக் குறிக்கத் “தமிழ்” என்ற சொல்லையும், மொழிக் குடும்பத்தைக் குறிக்கத், “திராவிட” என்ற சொல்லின் அடைமொழிவடிவமான “Dravidian” என்பதையும்தான் தெரிவு செய்து கொள்வதாகக் கால்டுவெல் கூறினார். “நான் காணும் சிறந்த சொல் இதுவே என்றாலும் அதுவும் குழப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை” என்றும் குறிப்பிடுகிறார்.

தென்னிந்திய மொழிகள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது சரியானது. ஆனால் அதைக் குறிக்க “திரவிடியன்” என்று தன் விருப்பப்படி ஒரு சொல்லைத் தேர்வு செய்தது தவறானது. தமிழையும் தொடர்புடைய பிற மொழிகளையும் குறிப்பிட Tamulic மற்றும் Tamulian என்ற சொற்களையே ஐரோப்பியர் அதுவரை பயன்படுத்தி வந்தனர். ஆனால், கால்டுவெல் அவற்றைக் கைவிட்டு “திராவிடியன்” என்ற சொல்லை அம்மொழிகளுக்குச் சூட்டினார். திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பேசிய மக்கள் “திராவிடர்” என அடையாளப்படுத்தப்பட்டனர்.

தென்னிந்திய மக்களுக்கு இன அடையாளமாகத் “திராவிடர்” என்ற சொல்லைக் கால்டுவெல் சுமத்தினர். இந்தத் “திராவிடர்” என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணங்கள் மனுஸ்மிருதி, மகாபாரதம், பாகவத புராணம் போன்றவையே ஆகும். மனுஸ்மிருதி (X 43,44), “கீழ்க்காணும் சத்திரியக் குடிகள் புனித சடங்குகளை பின் பற்றாமையாலும், பிராமணர்களின் தொடர்பற்றுப் போனமையாலும் சாதியிறக்கம் பெற்று “விரிஷாலா” ஆயினர்’ என்று கூறி 12 குடியினரைக் குறிக்கிறது. “சத்திரியர்” என்று குறிப்பதன் மூலம் அவர்கள் ஆரிய வருணங்கள் நான்கில் இரண்டாவது பிரிவினர் என்பதை மனுஸ்மிருதி தெளிவுப்படுத்துகிறது. அந்த 12 குடியினரில் திராவிடரும் குறிப்பிடப்படுகின்றனர். சாதியிறக்கம் பெற்ற சத்திரியரான திராவிடர் மட்டுமே தென்னிந்தியப் பகுதியினர் என்று கால்டுவெல் கருதினார்.

இதில் சோழர், பாண்டியர் போன்ற ஆளும் குடியினரின் பெயர்கள் வட இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று என்றும், “திராவிடர்” என்பது அனைவரையும் சேர்த்து குறிக்கும் சொல் என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் சத்தியவிரதன் என்பவன் “திராவிட மன்னன்” என்று அந்தப் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். தென்னிந்திய மக்களின் இனம் “திராவிட இனம்” என்று காட்டுவதற்கு கால்டுவெல் காட்டும் சான்றுகள் இவைதாம். ஆரியச்சார்புடைய, பார்ப்பனிய சமஸ்கிருத இலக்கியங்களைத்தான் கால்டுவெல் சான்று காட்டுகிறார். உண்மையில் புராண இதிகாசங்கள் குறிப்பிடும் திராவிடர்கள் யார்?

யுதிஷ்ட்ரன் ராஜசூய யாகம் செய்ய முற்பட்ட போது, சகாதேவன் திக் விஜயம் மேற்கொண்டு, திராவிடர், சோழர், கேரளர், பண்டியர் ஆகியோரை வென்றான் என்றும், பட்ட மேற்பு விழாவிற்கு சோழர், திராவிடர், ஆந்திரர் போன்றோர் வருகை புரிந்தனர் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. திராவிடர் என்போர் சேர, சோழ, பாண்டியர் அல்லாதவர் என்பதையும், அப்படி ஒரு திராவிட தேசம் இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

யார் இந்த திராவிடர்கள்? எது திராவிட தேசம்? கி.பி.7 ஆம் நூற்றாண்டில் இந்தியா வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டைத் “திராவிட தேசம்” என்று குறிக்கிறார்.

பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் தங்களைப் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பரத்வாஜர் துரோணர், அஸ்வத்தாமன் வழிவந்தவர்கள் என்றும், தாங்கள் “சத்திரிய- பிராமணர்கள்”( சத்திரியத் தொழிலை மேற்கொண்ட பிராமணர்கள்) என்றும் விவரிக்கிறார்கள். இவர்கள்தம் திராவிட தேசத்தை ஆண்டு வந்தவர்கள்.

பல்லவர் ஆட்சி நிறுவப்பட்டவுடன்(கி.பி.400) பெருவாரியாக வட இந்திய ஆரியக் குடியினர் தென்னிந்தியாவுக்குள் புகுந்து பல்லவத் தலைநகரான காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பரவினர். இவ்வாறு தென்னிந்தியாவுக்கு வந்தேறிய ஆரியக் குடிகளை வட ஆரியர் “திராவிடர்” என்று அடையாளப்படுத்தினர். தென்னிந்தியா திராவிடம் என்று வடமொழியாளர்களால் குறிக்கப்பட்டது. பார்ப்பனியமும், சமஸ் கிருதமும், வேதக் கல்வியும் செழித்த பல்லவ திராவிட தேசத்திலிருந்து தென்னிந் தியா முழுவதும் திராவிடர் என்ற தென் ஆரியர் பரவினர்.

அவர்கள் கைக்கொண்ட புதியவகை கடுஞ்சடங்கு முறைக்கு “திராவிட சம்பிரதாயம்” என்று பெயர். இச்சம்பிரதாயத்தைக் கைக்கொண்ட பார்ப்பனர்கள் “திராவிடர்” என அறியப்பட்டனர். தமிழகம்( கேரளம் உள்ளிட்டு), ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கூர்ஜரம்(குஜராத்) ஆகிய ஐந்து பகுதிகளில் திராவிட சம்பிரதாயத்தைக் கைக் கொண்ட பிராமணர்கள் பரவினர். இவர்களே “பஞ்ச திராவிடர்” என அடையாளம் பெற்றனர்.

சமஸ்கிருதக் குடிவழி தொடர்பற்ற (Non – Sanskritic) மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் பார்ப்பனர்களும், சம்ஸ்கிருதத்தில் தோற்றம் பெற்ற (Sanskritic) மராத்தி, குஜராத்தி மொழிப் பார்ப்பனர்களும் “பஞ்ச திராவிடர்” என்ற ஒரு சமூக அடையாளத்தை இவ்வாறே பெற்றனர்.

திராவிடர்கள் என்ற சொல் நீண்டகாலமாக ஆரியர்களின் தென்கிளையைக் குறிக்கும் சொல்லாக விளங்கி வந்த நிலையில்தான், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அச் சொல்லை தென்னிந்திய மொழிகளைப் பேசும் மக்களுக்குச் சூட்டியது. இத் தவறான பயன்பாடு 1947-இல் சுட்டிக் காட்டப்பட்டது.

என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா தனது 15- வது பதிப்பில்(1947) ஒரு வரலாற்றுத் திருத்ததைப் பதிவு செய்கிறது:

“திராவிடர்” என்ற பெயர் இந்திய வழக்கில் பார்ப்பனர்களின் தென்னகப் பிரிவை மட்டுமே குறிக்கும் பெயர் ஆகும். ஆனால், “திராவிடர்” என்ற சொல், “துரதிர்ஷ்ட வசமாக” Unfontunately) இந்தியாவில் விந்திய மலைகளுக்குத் தெற்கேயும், இலங்கையின் வடக்குப் பாதிப் பகுதியிலும் வாழும் மண்ணின் மக்களுக்கு (Indigenous peoples) பயன்படுத்தப்படுகிறது. அது (திரவிடம் என்ற சொல்) இப்பகுதிகளின் மொழிகளைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்”

அதன் பிறகு, “திரவிடியன்” என்ற சொல் ஓர் இனத்தைக் குறிக்கப்பயன்படுத்தப் படுவதைக் கூறி, தென்னிந்திய மக்களின் உடற்கூறு, பண்பாடு ஆகியவற்றை விவரிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இச்சொல் சமூக உணர்வாளர்களைத் தொட்டது. “மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக்குச் சூத்திரப்பட்டம் கட்டி, ஆரியப் பார்ப்பனர்கள் அவர்களை இழிநிலைக்குத் தள்ளினர்” என்ற கால்டுவெல்லின் கருத்து சமூக உணர்வாளர்களைப் பற்றிக்கொண்டது. அயோத்திதாசப் பண்டிதர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றோர் “திராவிட” என்ற சொல்லைப் பயன் படுத்தினர்.

1901-அம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இனவகையில் பதிவு செய்தனர். 1901-இல் தென்னிந்திய மக்களுக்கு “திராவிடர்” என்று இனப்பெயராகப் பதிவு செய்து அருள்பாலித்தவர் அன்றைய கணக்கெடுப்பு ஆணையாளரான சர் ஹெர்பர்ட் ரிஸ்லி. இதன் பிறகு “திராவிடர்” என்ற சொல் அதிக அளவில் பயன்படத் தொடங்கியது.

மொழியியல், மாந்தவியல், தொல்லியல் ஆகிய துறைகள் 19 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றன. பல மொழியினங்கள் உள்ளன. தென்னிந்தியா பற்றி அய்வுகளுக்கு ஒரு “கூட்டுச் சொல்” ஆய்வாளர்களுக்குத் தேவைப்பட்டது. கால்டுவெல் வழங்கிய “திராவிடர்” என்ற சொல் ஆய்வாளர்களுக்கு வசதியாக(convenience) இருந்தது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என ஆய்வுகள் தொடங்கின. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை அச்சொல் அவர்கள் தேவையை நிறைவு செய்தது. உண்மையில் இவை “தமிழின மொழிகள்” “மரபு தமிழினம்”, “தமிழர் நாகரிகம்” என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

திராவிடர் என்பது தமிழர்களின் பூர்வீக இனம் என்று காட்டுவதற்குக் கலைஞர் காட்டும் சான்றுகள் கருதும் தகுதியற்றவை. “ஜன கன மன “ என்னும் பாடலில் தாகூர் தென்னிந்தியாவைத் “திராவிடம்” என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறார். ஆரியர்கள் அவ்வாறுதான் தென்னிந்தியவைக் குறிபிட்டனர். திராவிடர் ஓர் இனம் என்பதை இது எப்படி நிரூபிக்கும்?

மனோன்மணியம் சுந்தரனாரும் “திராவிட நல் திருநாடு” பற்றி பேசுகிறார். இதில் இனம் எங்கே குறிப்பிடப்படுகிறது?

உ.வே.சாமிநாதய்யரின் பட்டத்தைப் பார்த்தாலே அது முழுமையாகச் சமஸ்கிருதப் பட்டம் என்பது புரியும் “மகா மகோ பாத்யாய டாக்டர் திராவிட வித்யா பூஷண்” என்ற பட்டத்தில் தமிழைத் திராவிட என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டிலும் கூட ஆரியர்களும், பார்ப்பனர்களுக்கு இணையான சமூகத் தகுதி வேண்டிக் கிடந்த தமிழ்ப் புலவ மேதாவிகளும் தமிழைத் திராவிடம் என்றே குறித்தனர். இவற்றில் திராவிட இனம் பூர்விக இனம் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?

தமிழினத்திற்கோ, தென்னிந்திய பிற மொழியினங்களுக்களுக்கோ “திராவிடர்” என்ற பெயர் ஒரு போதும் இருந்ததில்லை. திராவிடர் என்ற தவறான அடையாளத்துடன் சமூக இயக்கம் எழுந்ததும், பின்னர் அரசியல் கட்சிகளாகி ஆட்சி அதிகாரம் செய்வதும் வேறு விடயம். ஆனால் “திராவிட இனம் நமது பூர்வீக இனம்” என்று இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது திராவிடக் கட்சிகளின் எதிர்கால அரசியலை உத்தரவாதப்படுத்தும் முயற்சியே ஆகும்.

தன்னை பகுத்தறிவாளர் என்று கூறிக்கொள்ளும் கலைஞர், “திராவிடம்” என்று ஓர் இனம் இருப்பதாக பரப்பும் மூட நம்பிக்கையைக் கைவிடட்டும்.

Comments

27 comments

27
viyasan
திராவிட‌ மாயையில் மூழ்கிக் கிட‌க்கும் ஒவ்வொரு த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌னும் (கீற்று ந‌ந்த‌ன் உட்ப‌ட‌) மீண்டும், மீண்டும் ப‌டிக்க‌ வேண்டிய‌ அருமையான‌ க‌ட்டுரை."தமிழினம் தன்னை ஒரு போதும் “திராவிடர்” என்று அழைத்துக் கொண்டதில்லை. எந்தத் தமிழ் இலக்கியமும் தமிழர்களைத் “திராவிடர்” என்று குறித்ததில்லை. அதுமட்டுமன்றி, தென்னிந்திய மொழியினங்கள் எவையும் தங்களைத் “திராவிடர்” என்று எந்த இலக்கியத்திலும் குறித்ததில்லை; இன்றுவரைத் தங்களைத் “திராவிடர்” என்று கருதியதுமில்லை.".இது தான் முற்றிலும் உண்மை. த‌மிழ்நாட்டில் திராவிட‌ம் பேசி, த‌மிழ்நாட்டை, அத‌ன் ஆட்சியை, பொருளாதார‌த்தை த‌மிழ‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளின் கைக‌ளிலேயே தொட‌ர்ந்து வைத்திருக்க‌ விரும்பும் ஏனைய‌ திராவிட‌க்க‌ல‌ப்புள்ள‌வ‌ர்க‌ள் தான் இந்த‌ திராவிட‌வாத‌ம் பேசுப‌வ‌ர்க‌ள். த‌மிழ‌ர்க‌ள் என்று த‌மிழ‌ர்க‌ளாக‌ ஒன்றுப‌ட்டால் ம‌ட்டும் தான் இந்த‌ த‌மிழின‌த்துக்கு உண்டு வாழ்வு. முள்ளிவாய்க்காலில் த‌மிழின‌த்தை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் வேரோடும், வேர‌டிம‌ண்ணோடும் அழித்தொழித்த‌ போது, தமிழ்நாட்டின் ஆட்சியும் அதிகார‌மும் உண்மையான‌ த‌மிழர்க‌ளின் கைக‌ளிலிருந்திருந்தால் அவ‌ர்க‌ளின் இர‌த்த‌ம் கொதித்திருக்கும், ஆனால் அப்பொழுது த‌மிழ்நாட்டின் ஆட்சி திராவிட‌ர்க‌ளின் கைக‌ளில் இருந்த‌து, திராவிட‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்குமுள்ள‌ வேறுபாட்டைக் காட்ட‌ அதைவிட‌ ந‌ல்ல‌ உதார‌ண‌ம் வேறெதுவும் கிடையாது.
kulothungan
அய்யா.. கலைஞரை விடுங்கள். தங்களின் அறிவார்ந்த அகழ்வாராய்ச்சி செய்து (?) எழுதப்பட்ட கட்டுரைக்கு திராவிடம் குறித்தும் திராவிடர் குறித்தும் திருவாரூரைச் சேர்ந்த திரு.கவி அவர்கள் ஒரு புத்தகமே போட்டு அதை மயிலாடுதுறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மேடையேறி அய்யா மணியரசன் அவர்களிடமே கொடுத்தார். தாங்கள் யாரும் இதுவரை அந்த கட்டுரைக்கு பதில் சொல்லவே இல்லையாமே.. மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்ற தமிழ்த்தொண்டாற்றிய தலைவர்கள் எல்லாம் தங்கள் அளவுக்கு வரலாறு தெரியாதவர்கள் போல.. தங்கள் கூற்றுப்படி திராவிடம் குறித்து சரியான பார்வை அவர்களுக்கும் இல்லை போல.. வாழ்க தமிழகம்...
viyasan
திரு.குலோத்துங்கன், "எந்தத் தமிழ் இலக்கியமும் தமிழர்களைத் “திராவிடர்” என்று குறித்ததில்லை. அதுமட்டுமன்றி, தென்னிந்திய மொழியினங்கள் எவையும் தங்களைத் “திராவிடர்” என்று எந்த இலக்கியத்திலும் குறித்ததில்லை; இன்றுவரைத் தங்களைத் “திராவிடர்” என்று கருதியதுமில்லை." இந்தக் க‌ட்டுரையாசிரிய‌ரின் மேற்குறிப்பிட்ட‌ க‌ருத்தை ம‌றுப்ப‌தற்கு உங்க‌ளிட‌ம் ஆதார‌முண்டா? இக்கால‌த்தில் கூட‌ திராவிட‌ர் என்ற‌ ப‌த‌ம் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் த‌மிழின‌த்தைக் குறிக்க‌வில்லை. க‌ன்ன‌ட‌ர்க‌ள், தெலுங்க‌ர்க‌ள் ம‌லையாளிக‌ள் எல்லோருட‌னும் சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளும் கும்ப‌லில் கோவிந்தா போட்டால் தான் நாங்க‌ளும் திராவிட‌ர்க‌ளாக‌லாம். த‌மிழ‌ன் என்ற‌ த‌னித்துவ‌மான‌ அடையாள‌த்தை விடுத்து, திராவிட‌ன் என்று கும்ப‌லில் கோவிந்தா போட‌, த‌மிழ‌ர்க‌ள் எல்லோரும் தயாராக‌ இல்லை. திரு.கவி எழுதிய‌ க‌ட்டுரையிலாவ‌து திராவிட‌ர் என்ற‌ ப‌த‌ம் த‌மிழின‌த்தை ம‌ட்டும் குறிக்கிற‌து என்ப‌த‌ற்கான‌ ஆதார‌மிருந்தால் அதை நீங்க‌ள் இங்கு ப‌திவு செய்ய‌லாமே? ம‌றைம‌லைய‌டிக‌ள், தேவ‌நேய‌ப்பாவாண‌ர் போன்ற‌ த‌மிழறிஞர்க‌ள் திராவிட‌ என்ற‌ ப‌த‌ம் த‌மிழின‌த்தை ம‌ட்டும் குறிப்பிடுவதாக‌க் கூறியிருக்கிறார்க‌ளா?
viyasan
த‌மிழில‌க்கிய‌ம் எதுவும் த‌மிழ‌ர்க‌ளைத் திராவிட‌ர்க‌ள் என‌க்குறிப்பிட்ட‌தில்லை. ஏற‌த்தாழ‌ 1300 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் வாழ்ந்த‌ வேளாள‌ர் குல‌த்த‌வ‌ராகிய‌ திருநாவுக்க‌ர‌ச‌ நாய‌னார் கூட‌ ஆரிய‌னுக்கு எதிர்ச்சொல் த‌மிழ‌ன் என்று தான், சிவ‌னைப் பார்த்து "ஆரிய‌ன் க‌ண்டாய், த‌மிழ‌ன் க‌ண்டாய் அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்" என்கிறாரே த‌விர‌ ஆரிய‌ன் க‌ண்டாய், திராவிட‌ன் க‌ண்டாய் என்று கூற‌வில்லை. ஆனால் பிராமண‌ராகிய‌ ஆதிச‌ங்க‌ர‌ரால் ச‌ம‌க்கிருத‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌ செள‌ந்த‌ர்ய‌ல‌க‌ரியில் "திராவிட‌சிசு" என்ற‌ சொல் பிராம‌ண‌ராகிய‌ ஞான‌ச‌ம்ப‌ந்த‌ரைக் குறிப்பிடுவ‌தாக‌ ஒரு சில‌ரும், இல்லை அது ஆதி ச‌ங்க‌ர‌ரையே குறிப்பிடுவ‌தாக‌ ஒரு சில‌ரும் கூறுகின்ற‌ன‌ர். ஆக‌வே திராவிட‌ என்ற‌ சொல் பிராம‌ண‌ர்க‌ளையே குறிப்பிடுவ‌தை நாம் செள‌ந்த‌ர்ய‌ல‌க‌ரியில் காண‌லாம். அதன் ப‌டி பார்த்தால், திராவிட‌ர் என்ற‌ ப‌த‌ம் தென்னிந்தியாவில் குடியேறிய‌ ஆரிய‌ர்க‌ளைத் தான் குறித்த‌து என்ற‌ இந்த‌க் கட்டுரையாசிரிய‌ரின் க‌ருத்துட‌ன் அமைகிற‌த‌ல்ல‌வா? செந்த‌ர்ய‌ல‌கரியின் ப‌டி பார்த்தால், பிராம‌ண‌ர்க‌ளையும் திராவிட‌ர்க‌ளாக‌ திராவிட‌வாதிக‌ளும், பெரியாரிஸ்டுக்க‌ளும் ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ நிலையேற்ப‌டுகிற‌து.
viyasan
Lyrics of SOUNDARYA LAHARI: Twa stanyam manye dharanidhara kanye hridhayatha Paya paraabhaara parivahathi saaraswathamiva Dhayavathya dhattham DRAVIDA SISU raaswadhya thava yat Kaveenam proudana majani kamaniya kavayitha Oh daughter of the king of mountains, I feel in my mind, That the milk that flows from your breast, Is really the goddess of learning, Sarswathi, In the form of a tidal wave of nectar. For , milk given by you ,who is full of mercy, Made the child of DRAVIDA*, The king among those great poets, Whose works stole one’s mind.
samy
சரி,தர்மபுரியில் அத்தனை குடிசைகள் எரிக்கப்பட்டபோது இன்று தமிழ் தேசியம் பேசும் நீஙகள் யாரும் ஒரு மறுப்பு அறிக்கையாவது விட்டீர்களா.தலித்துகள் தமிழர்கள் இல்லையா.எது எதற்கோ அறிக்கை விடுகின்ற சீமான் எங்கே சென்றார்.தமிழர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த ராமதாஸ் ஊர் ஊராய் கூட்டம் போடுகின்றாரே அதயாவது கன்டிக்கின்ற திராணி உங்களுக்கு உண்டா.
Raj
தமிழ் நாடு அரசில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இருக்கின்றதே ஏன்? . ஆதி திராவிடர்கள் யார்?
viyasan
///சரி,தர்மபுரியில் அத்தனை குடிசைகள் எரிக்கப்பட்டபோது இன்று தமிழ் தேசியம் பேசும் நீஙகள் யாரும் ஒரு மறுப்பு அறிக்கையாவது விட்டீர்களா./// திரு. தொல் திருமாவ‌ள‌வ‌ன் அவ‌ர்க‌ள் ந‌வ‌ம்ப‌ர் 2012 இல் உல‌க‌த்த‌மிழ‌ர் மாநாட்டில் இல‌ங்கைத்த‌மிழ‌ர்க‌ளுக்கு கொள்கை விள‌க்க‌ம‌ளித்து, அவ‌ர்க‌ளின் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ளுக்கும் கேள்விக‌ளுக்கும் விடைய‌ளித்தார். அதில் அவ‌ர் "சாதியொழிப்பையும் த‌மிழ்த்தேசிய‌த்தையும் இணைத்து க‌ள‌மாடி வ‌ருகின்ற‌ ஒரு இய‌க்க‌ம் விடுத‌லைச் சிறுத்தைக‌ள் இய‌க்க‌ம்" என‌க் குறிப்பிட்டார். ஆனால் கீற்றில் என்ன‌டாவென்றால் சில‌ த‌லித்துக‌ளும், அவ‌ர்க‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளும், தமிழ்தேசிய‌த்துக்கு எதிராக அல்ல‌து த‌மிழ்த்தேசிய‌ம் சாதியொழிப்புக்கு எதிரான‌து போன்று க‌ருத்துக்க‌ளை முன்வைக்கின்ற‌ன‌ர். எங்கு த‌மிழ்த்தேசிய‌ம் பேச‌ப்ப‌டுகிற‌தோ அங்கெல்லாம் எதிர்க்க‌ருத்துக்க‌ளைக் கூறுவ‌த‌ற்கு, த‌மிழ்த்தேசிய‌த்துக்கு எதிரான‌வ‌ர்க‌ளுட‌ன் ஒன்று சேர்கிறார்க‌ள். சில‌ த‌மிழ‌ர‌ல்லாதாரின் தூண்டுத‌லாலும், திராவிட‌ மாயையிலும் மூழ்கி, த‌மிழ்த்தேசிய‌த்துக்கு எதிராக‌ அணிதிர‌ண்டுள்ள‌ த‌மிழர‌ல்லாத‌ திராவிட‌ர்க‌ளின் கைக‌ளில கைப்பாவையாகி த‌லித்துகள் எல்லாம் த‌மிழ்த்தேசிய‌த்துக்கெதிரான‌ கோட‌ரிக்காம்புக‌ளாக‌ மாறி விடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌மும், ஆத‌ங்க‌மும் கீற்றில் த‌லித்துக்க‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளாக‌ காட்டிக் கொள்பவர்க‌ளின் எழுத்துக்க‌ளைப் ப‌டிக்கும் போது என்னைப் போன்ற‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டுவ‌து த‌விர்க்க‌முடியாத‌து. விடுதலைச் சிறுத்தைக‌ள் இய‌க்க‌ம் சாதியொழிப்பையும், த‌மிழ்த்தேசிய‌த்தையும் இணைத்துக் க‌ளமாடி வ‌ருகிற‌ இய‌க்க‌மாக‌ இருந்தால், சாதியொழிப்புக்காக‌ப் போராடுப‌வ‌ர்க‌ள், எத‌ற்காக‌ த‌மிழ்த்தேசிய‌த்தையும் ஆத‌ரித்துப் பேசுவ‌தில்லை. த‌மிழ்தேசிய‌த்தின் வ‌ழியாக‌த் தான் சாதியொழிக்க‌ப்ப‌ட‌லாமென்ப‌து, அண்ண‌ன் திருமாவ‌ள‌வ‌னுக்குத் தெரிகிற‌து,அது ஏன் அவ‌ர்க‌ள‌து தொண்ட‌ர்க‌ளுக்குப் புரிய‌வில்லை. உண்மையான‌ த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ள் அனைவ‌ரும் சாதியொழிப்பை வேண்டுப‌வ‌ர்க‌ளே. ல‌ண்ட‌னில் ந‌டைபெற்ற‌ கூட்ட‌த்தில் த‌ர்மபுரியில் குடிசைக‌ள் எரிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌த்தை திருமாவ‌ளவ‌ன் குறிப்பிட்ட‌தும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌மது எதிர்ப்பையும்,ந‌ம்ப‌முடியாத‌ அதிர்ச்சியையும், அவ‌ர்க‌ள‌து முழு ஆத‌ர‌வையும் அவ‌ருக்குத் தெரிவித்த‌ன‌ர். அங்கே "ஒடுக்கப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளை த‌மிழ்த்தேசிய‌க்க‌ள‌த்தில் அணிதிர‌ட்டிய‌ முத‌லாவ‌து இய‌க்க‌ம் விடுத‌லைச் சிறுத்தைக‌ள் தான்" என‌ப் பெருமைப் ப‌ட்டுக்கொண்டார் திரு. தொல். திருமாவ‌ள‌வ‌ன், அப்ப‌டியானால் அவ‌ர்க‌ள‌து தொண்ட‌ர்க‌ள் கீற்றில் த‌மிழ்த்தேசிய‌த்தை வ‌சைபாடுவ‌து க‌ட்சியின் அடிப்ப‌டைக் கொள்கைக‌ளுக்கே எதிரான‌தாக‌த் தோன்றுகிற‌தல்ல‌வா. இத‌ற்கு முத‌ல் கார‌ண‌ம் என்ன‌வென்றால், இங்குள்ள சில‌ திராவிட‌வாதிக‌ள் த‌ம‌து எழுத்துக்க‌ளின் மூல‌ம் சீமானை த‌மிழ்தேசிய‌த்தின் முற்று முழுதான குத்தகைதார‌ராக‌ மாற்றி விட்டார்க‌ள். அத‌னால் சீமானிலுள்ள‌ காழ்ப்புண‌ர்வை த‌மிழ்த்தேசிய‌த்தின் மீது ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் காட்டுகிறார்க‌ள் போல் தெரிகிற‌து.
ஷாலி
//சரி,தர்மபுரியில் அத்தனை குடிசைகள் எரிக்கப்பட்டபோது இன்று தமிழ் தேசியம் பேசும் நீஙகள் யாரும் ஒரு மறுப்பு அறிக்கையாவது விட்டீர்களா.தலித்துகள் தமிழர்கள் இல்லையா.// இதற்க்கு பதில் சொல்லும் லட்சணத்தைப்பார்த்திர்களா? என்னமோ லண்டனில் கழட்டினார்களாம் .கீற்று தளத்தில் இக்கொடுமையை எதிர்த்து ஒரு சிறு கருத்து எழுத மனமில்லாத அசைவன்,நீட்டி முழக்குகிறார்.இவர் யார்? “ அரு கந்தர் முன் கலங்க நட்ட முடை கெழுமுமால் இன்னம் புண் கலங்கல் வைகைப் புனல்.” கழுவேற்றப்பட்ட சமணர்களின் பிணங்கள் நிறைந்து வைகை நதி நாற்றமடித்துக் கலங்கி ஓடுகிறதாம் என்று பெருமை பேசிய நம்பியாண்டார் நம்பி வழித்தோன்றல்கள்.அன்பே சிவம் என்று அன்பு வழி பேசும் வியாசர்களுக்கு சமணரும் ஒன்றே,தலித்தும் ஒன்றே!சவுந்தரலஹரியை சவுரியமாக கையாளும் இவர். முப்பிரி நூல் அணியும் முன் ஒரு பிறப்பு,முப்புரி நூல் அணிந்தபின் இன்னொரு பிறப்பு என “ இருவழியும் தூயவந்த வேளாளர்.” நெஞ்சமெல்லாம் ஆதிக்க சாதித்தீ ..சைவத்தீ.எரியும் நாம் தமிழர்.
rengasamy
அய்யா,வியாசரே,மனிதனை மொழி,மதம்,இனம் கடந்து நேசிக்க வேண்டும். அம்பேத்கர்,மஹாராஸ்டிரத்தில் உள்ள தலித்துகளுக்கு மட்டும் போராடவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து தலித்துகள்க்காகவும்.போராடினார்.தமிழ் தேசியத்தின் மூலம் இங்குள்ள தலித்துகளுக்கு விடுதலை கிடைக்கும் என்று வைத்துக் கொண்டால் கூட மற்ற மாநிலத்தில் உள்ள தலித்துகளுக்காக இங்குள்ளவர்கள் போராடக்கூடாதா.தமிழ் தேசியம் பேசும் நீங்கள் உங்கள் பெயரை ஏன் வியாசர் என்று வைத்துள்ளீர்கள் என்று உங்களிடம் யாராவது கேட்டார்களா.இந்த மண்ணில் என்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்படுகின்றதோ அன்று தான் அணைத்தும் சரியாகும்.
viyasan
///தமிழ் தேசியத்தின் மூலம் இங்குள்ள தலித்துகளுக்கு விடுதலை கிடைக்கும் என்று வைத்துக் கொண்டால் கூட மற்ற மாநிலத்தில் உள்ள தலித்துகளுக்காக இங்குள்ளவர்கள் போராடக்கூடாதா.தமிழ் தேசியம் பேசும் நீங்கள் உங்கள் பெயரை ஏன் வியாசர் என்று வைத்துள்ளீர்கள் என்று உங்களிடம் யாராவது கேட்டார்களா./// அப்ப‌னே ரெங்க‌சாமி, "தான் போக வ‌ழி தெரியாத‌ மூஞ்சூறு விள‌க்குமாத்தையும் தூக்கிக் கொண்டு கிழ‌ம்பிச்சுதாம்". த‌மிழ‌ர்க‌ளிடையேயே சாதியொழிப்பு என்ப‌து இன்னும் சாத்திய‌ப்ப‌டவில்லை, ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ தமிழ‌ர்க‌ளை ஒட்டுவ‌ங்கிக‌ளாக‌ ம‌ட்டும் வைத்திருக்க‌வும், அவ‌ர்க‌ள் எல்லோரும் த‌மிழ்த்தேசிய‌த்தின் கீழ் ஒன்றிணைந்தால், த‌மிழ‌ர்க‌ள் ஒன்றுப‌ட்டால், த‌மிழ்நாட்டில் த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்துக்கு ஆப‌த்து வ‌ந்து விடுமென்ப‌தால் த‌மிழ‌ரல்லாத‌வ‌ர்க‌ள், ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளைத் த‌லித்துக‌ள் என்ற போர்வையில் பிரித்தாள‌ நினைக்கிறார்க‌ள். ம‌ற்ற‌ மாநில‌த்திலுள்ள த‌லித்துக்க‌ளுக்காக‌ போராட‌ வேண்டுமென்ப‌து உய‌ர்ந்த‌ நோக்க‌ம் தான், ஆனால் அப்ப‌டியான‌ த‌ன‌க்கில்லாத‌ போது தான‌ம் செய்யும், தேவைய‌ற்ற வர‌ட்டுப் பெருந்த‌ன்மை தான் த‌மிழ‌ர்க‌ளை இன்று த‌ம‌க்கென‌ சொந்த‌மாக‌ ஒரு நாட‌ற்ற‌, நாதிய‌ற்ற‌ இன‌மாக‌ மாற்றியிருக்கிற‌து. த‌மிழ்நாட்டுக்குப் பிழைக்க‌ வ‌ந்த‌ ந‌டிக‌ர்க‌ள் கூட‌ முய‌ன்றால் முத‌ல‌மைச்ச‌ராக‌லாம் என்ற நிலையிருக்கிற‌து. அதை விட‌, ஒரு அடிமை எப்ப‌டி இன்னொரு அடிமையின் விடுத‌லைக்காக‌ப் போராட‌ முடியும். த‌மிழ்த்தேசிய‌த்தின் மூல‌ம் த‌மிழ்நாட்டின் ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்கள் விடுத‌லை பெற்று, அவ‌ர்க‌ளின் வாழ்க்கைத்த‌ர‌ம் உய‌ர்ந்தால், அவ‌ர்க‌ளும் ச‌முதாய‌த்தில் ச‌மத்துவ‌த்தை அடைந்தால் ம‌ட்டுமே, அவ‌ர்க‌ளால் ம‌ற்ற மாநில‌த் த‌லித்துக‌ளுக்கு உத‌வ‌ முடியும். முத‌லில் அம்பேத்க‌ர் போராட்ட‌த்தை ஆர‌ம்பித்த‌து மகாராட்டிர‌ த‌லித்துக‌ளுக்காக‌த் தான், அவ‌ர‌து போராட்ட‌த்தால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு,அத‌னால் உந்த‌ப்ப‌ட்டு, ம‌ற்ற‌ மாநில‌த் த‌லித்துக‌ளும் அவ‌ரைப் பின்ப‌ற்றினார்க‌ள். அம்பேத்காரை அவ்வ‌ள‌வுக்கு நேசிக்கும், பின்ப‌ற்றும் உங்க‌ளின் பெயர் ர‌ங்க‌சாமி என்ப‌தைப் பார்க்க‌ குபேர‌ன் என்ற‌ பெய‌ரை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்ப‌து போலிருக்கிற‌து. வேத‌ வியாசர் ஒரு மீன‌வகுல‌த்தைச் சேர்ந்த‌ த‌மிழ‌ர், அவ‌ர் த‌மிழில‌க்க‌ண‌ வ‌ழியின் ப‌டியே வேத‌ங்களை வ‌கைப்ப‌டுத்தினார் என்ப‌ர். வேத‌ம் என்ப‌தின் த‌மிழ் வேர்ச்சொல் வேய்(த‌ல்), அதாவது ம‌றைத்த‌ல், அத‌னால் தான் வேத‌ங்க‌ளுக்கு ம‌றை என்றும் பெயருண்டு. ஆரிய‌ர்க‌ள் த‌மிழிலிருந்து தான் வேத‌ங்க‌ளை ச‌மக்கிருதத்தில் மொழிபெய‌ர்த்த‌ன‌ர் என்றும் கூறுவ‌ர்.எல்லாம் த‌மிழிலிருந்து இர‌வ‌ல் வாங்க‌ப்ப‌ட்ட‌வை தான். ஆனால் அதை விள‌க்கும‌ள‌வுக்கு என‌க்கு அந்த‌ விட‌ய‌த்தில் அவ்வ‌ள‌வு அறிவும், ப‌ரிச்ச‌ய‌மும் கிடையாது. ஆனால் வேத‌ வியாச‌ர் ஒரு தமிழ‌ன் என்ற‌ க‌ருத்து உண்மையோ, பொய்யோ என‌க்குப் பிடித்துக் கொண்ட‌து. நீங்க‌ள் ரெங்க‌சாமி என்ற‌ பெயரை வைத்துக் கொண்டு, அம்பேத்காரையும் துணைக்க‌ழைத்துக் கொண்டு த‌லித் விடுத‌லை ப‌ற்றிப் பேசும்போது, நான் வியாச‌ன் என்ற‌ பெய‌ருட‌ன் த‌மிழ்த்தேசிய‌ம் பேச‌க் கூடாதா? :-)
viyasan
சாதி என்ப‌து த‌மிழின‌த்தைப் பிடித்த‌ சாப‌க்கேடு என்ப‌தையும் எந்த‌ள‌வுக்கு சாதிப்பேயை நான் எதிர்க்கிறேன் என்ப‌தையும் ப‌ல‌முறை என்னுடைய‌ க‌ருத்துக்க‌ளின் மூல‌ம் கீற்றில் வெளிப்ப‌டுத்தியுள்ளேன். ல‌ண்ட‌னிலுள்ள‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ர்மபுரி சம்ப‌வ‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ விடுத‌லைச்சிறுத்தைக‌ளின் த‌லைவ‌ர் திருமாவ‌ள‌வ‌னிட‌ம் தெரிவித்த‌ க‌ருத்துக்க‌ளும், அவ‌ருக்க‌ளித்த‌ ஆத‌ர‌வும் ஒட்டுமொத்த‌ ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்ச்சிக‌ளைப் பிர‌திப‌லிப்ப‌தாக‌த் தான் நான் ந‌ம்புகிறேன். அதை விட‌ கீற்றில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ர், த‌ர்ம‌புரி ச‌ம்ப‌வ‌த்தைக் க‌ட‌த்திக் கொண்டுபோய், அதை ஆயுத‌மாக‌ப் பாவித்து, த‌மிழர்க‌ளைப் பிரித்தாழ‌, த‌மிழ்த்தேசிய‌த்தின் முதுகில் குத்த‌ முனைகிறார்க‌ள் என்ப‌து என்னுடைய‌ க‌ருத்து, அப்ப‌டியிருக்க‌ அவ‌ற்றுக்கெல்லாம் ஆத‌ர‌வ‌ளித்து,அவ‌ர்க‌ளின் திட்ட‌த்துக்குத் துணை போகும‌ள‌வுக்கு நான் ஒரு முட்டாள‌ல்ல‌. பெரும்பாலான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் சைவ‌மும் த‌மிழும் பிரிக்க‌ முடியாதவை என‌ நம்பும் த‌மிழ‌ர்க‌ள், அத‌ற்கு நான் ம‌ட்டும் விதி வில‌க்க‌ல்ல‌. இங்குள்ள‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ருக்கு எவ்வாறு பெரியாரின் கொள்கைக‌ளில் ப‌ற்றுள்ள‌தோ அதே போல் என‌க்குப் பெரியாரை விட‌, அவ‌ரின்க‌ட‌வுள் ம‌றுப்புக் கொள்கையை எதிர்த்த‌ ம‌றைம‌லைய‌டிக‌ளின் த‌மிழ்ப்ப‌ற்று மிக‌வும் பிடிக்கும். எத்த‌னையோ நூற்றாண்டுக‌ளுக்கு முன்னால் போய் ச‌ம‌ண‌ர்க‌ளைப் ப‌ற்றிப் பெரிதுப‌டுத்தும் ஷாலியைப் போன்ற‌வ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ப்ப‌டையெடுப்பில் ம‌த‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றியும் அல்ல‌து இன்றும் ம‌த‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌டுகின்ற த‌மிழ‌ர்க‌ளையும் ஏனோ, உதார‌ண‌த்துக்குக் கூட‌ அழைப்ப‌தில்லை. என‌க்கு ந‌ம்பியாண்டார் ந‌ம்பியின் தேவார‌த்தை விட‌, நாமார்க்கும் குடிய‌ல்லோம் என்ற‌ நாவுக்க‌ர‌ச‌ரின் "ஆவுரித்துத் தின்றுழ‌லும் புலைய‌ரேனும், க‌ங்கைவார் ச‌டைக்க‌ரந்தார்க்க‌ன்ப‌ராகில் அவ‌ர் க‌ண்டீர் நாம் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளாரே", அதாவ‌து மாட்டை உரித்து உண்ணும் புலைய‌ர்க‌ளாக‌ இருந்தாலும்கூட, அவர்கள் கங்கையை ச‌டையில் அணிந்த சிவ‌னை வ‌ழிப‌டுவ‌ர்க‌ளாக‌ இருந்தால் அவர்கள் தான் நாம் வணங்கும் கடவுள். என்ற‌ தேவார‌ வ‌ரிக‌ள் மிக‌வும் பிடிக்கும். அடுத்த‌ முறை ஷாலிஅவ‌ர்க‌ள் அதையே குறிப்பிட்டால் ந‌ல்ல‌து. ஷாலி அவ‌ர்க‌ளின் க‌ருத்திலுள்ள‌ பிழைகளைத் திருத்தியே நான் க‌ளைத்துப் போய் விட்டேன். இல‌ங்கையில் இருவழியும் தூய‌வ‌ந்த‌ வேளாள‌ர்க‌ள் எல்லாம் கிடையாது, அது இருமர‌பும் துய்ய‌ யாழ்ப்பாண‌ வேளாள‌ர்கள். :-)) LOL
kulothungan
அய்யா ஷாலி அவர்களுக்கு.. வியாசர் போன்ற தமிழ்(இந்துத்துவ) தேசியவாதிகளுக்கு விளக்கம் தர முயற்சிக்காதீர்கள். என்னுடைய கருத்து ஒன்றுக்கு அவரின் பதில் "பெரியார் என்றால் யார் என்றே ஈழத்தமிழர்களுக்குத் தெரியாதாம்." தந்தை செல்வநாயகம் ஈழத்துத் தந்தை. அவருக்குத் தெரிந்திருக்கிறது. தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், வைகோ,ஏ.ஜி.கே. உள்ளிட்ட பல பெரியாரியல் தோழர்கள் ஈழத்துக்கு ஆதரவான பல போராட்டக் களங்களை கண்டு அதற்காக கொடுத்த விலைகளும் தெரியும். ஆனால் அங்குள்ள தமிழர்களுக்குத் தெரியாதாம். 30 ஆண்டு கால போராட்ட வரலாற்றை படைத்து தமிழனுக்கென்று ஒரு அங்கீகரிக்கப்படாத ஒரு அரசை அமைத்த எம் தலைவன் பிரபாகரன், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டிற்காக தமிழனுக்காக ஓடி ஓடி உழைத்த அந்த வெண்தாடி கிழவனைப் பற்றிய வரலாற்றை தன் மக்களுக்கு சொல்லாமல் விட்டிருக்கமாட்டான் என்று நான் நம்புகிறேன். அய்யா மணியரசன் அவர்கள் தமிழ்த்தேசியம் பேசுபவராக இருந்தாலும் திராவிட கருத்தியலுக்கு எதிரானவராக இருந்தாலும் தமிழர்களுக்காக அவர் கண்ட களங்களும் அதற்கு அவர் கொடுத்த விலைகளும் எதிரெதிர் கருத்து மோதல்களுக்கிடையேயும் அவருடன் பெரியாரியல்வாதிகளை ஒரு புள்ளியில் இணைந்து செயலாற்ற வைக்கிறது. ஆனால் பிழைப்புவாதம் செய்யும் பலரும் இந்துத்துவத்தின் கொல்லைப்புற வழியாக தமிழ்த்தேசியத்தை வைத்துள்ளார்கள்.. அவர்களுக்கு சாதீயத்தின் கொடுமையை அனுபவித்தவர்களின் வலி புரியாது..
Salanan
திராவிட அரசியல் இல்லாத பிற தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகத்திலும் கேரளத்திலும், இன உணர்வும் மாநில உணர்வும் கொடி கட்டி பறக்கின்றன. மலையாளிகளின் இன உணர்வையும் மாநில வெறியையும் பற்றி சொல்லவே தேவையில்லை. கர்நாடகத்தில் ஊருக்கு ஊர் கன்னடக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு கால திராவிட இயக்க அரசியல் மற்றும் திராவிட கட்சிகளின் ஆட்சி ஆகியவற்றால் தமிழகத்தில் தமிழ் உணர்வு வளரவில்லை. மாறாக சாதி வெறியும் (குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம்) கலவரங்களும் தான் வளர்ந்துள்ளன. இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தமிழர் என்னும் வார்த்தை வேடிக்கையான ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மட்டும் அதுவும் ஏதோ ஒரு மூலையில் வெறும் இருநூறு முன்னூறு பேர்களோடு குசு விடுவது மாதிரி தான் தமிழ் அமைப்புக்கள் பொதுக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு மாநில உணர்வும் இன உணர்வும் அற்ற கழிசடை உயிர்களாக தமிழகத்து மக்கள் திராவிட அரசியலால் மாறிப்போய் விட்டார்கள். இந்த திராவிட அரசியல்வாதிகளால் ”பார்ப்பான், பார்ப்பான்” என தூற்றப்பட்ட தமிழக பார்ப்பனர்கள் அழிந்தா போய்விட்டார்கள்? உலகளவில் நோபெல் பரிசு வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கும் பல கணிப்பொறி நிறுவனங்கள் தமிழக பார்ப்பனர்களால் நடத்தப்படுபவை. இந்த நிறுவனங்களின் மூலம் இவர்கள் மாளாத பொருள் குவித்து செல்வாக்குடன் மிக உன்னதமான இடத்தில் உள்ளார்கள். சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பறக்கும் விமானங்களில் பார்ப்பனர்கள் தான் அதிகம் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மாநில அரசுகளை ஒப்பிடும் போது மத்திய அரசு சர்வ வல்லமையும் அதிகாரங்களையும் கொண்டது. மத்திய அரசு நிறுவனங்களில், அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரக்கண்ணிகளில், நிறைய தமிழக பார்ப்பனர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆகையால் தான் இவர்கள் நினைப்பது இந்த நாட்டில் நடக்கிறது. தமிழகத்திலே கூட தனியார் நிறுவனங்களில் குறிப்பாக பண்ணாட்டு நிறுவனங்களில், முக்கியமான அதிகாரம் மிகுந்த பொறுப்புகளில், பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் நாடு வெளியுலகில் இருப்பவர்களால் அடையாளம் காணப்படும் போது புகழ் பெற்ற தமிழக பார்ப்பனர்களை கொண்டே அடையாளம் காணப்படுகிறது. திராவிடம் என்னும் போலி அரசியலால் தமிழக அரசியல் மற்றும் சமுதாய வாழ்விலிருந்து (மட்டும்) பார்ப்பனர்கள் ஓரம் கட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் தமிழகத்தில் அறிவுஜீவி வர்க்கம் என்றால் அவர்கள் தான். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமானால் கூட பார்ப்பன அறிஞர்களை தான் பெரும்பாலும் அணுகுகிறார்கள். திராவிட இயக்கத்தால் தமிழகத்தின் அறிவுஜீவி தளத்தில் இருந்து பார்ப்பனர்களை அகற்றவே முடியவில்லை. திராவிட இயக்கத்தால் தமிழர்கள் வளர்ந்தார்களா அல்லது பார்ப்பனர்கள் தேய்ந்தார்களா என்பது மிகப்பெரிய விவாதத்துக்குரிய விடயம். இப்போது தமிழகத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் பெரும்பாலும் பார்ப்பன அல்லது கம்யூனிச பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில அறிவுஜீவிகள் மலையாள பின்புலம் கொண்டவர்கள். தமிழ் பின்புலம் கொண்ட அறிவுஜீவிகள் தமிழ் நாட்டிலேயே மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழகம் கல்வித்துறையில் தேங்கிய குட்டையாக இருப்பது தான். இங்கு இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் திராவிட அரசியல்வாதிகளின் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான் நிறைந்திருக்கிறார்கள். அதனால் தான் இங்கு கல்வி சூழ்நிலை (பள்ளிக்கல்வி ஆனாலும் உயர்கல்வி ஆனாலும்) தரமற்றதாகவே இருக்கிறது. இந்த தரமற்ற கல்வி சூழ்நிலையின் காரணமாக இந்திய அளவிலும் உலகளவிலும் போட்டி போடக்கூடிய மாணவர்களும் அறிஞர்களும் தமிழகத்தில் உருவாகவே இல்லை. தேசிய அளவிலான IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மிகவும் சொற்பம். IAS அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே லட்சணம் தான். இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்களாம். மருத்துவ மற்றும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் வேண்டுமானால் வதவதவென்று கறிக்கோழிகளை போல் உருவாக்கப்பட்டு வெளியே வருகிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் காரணமாக துறை சார்ந்த நுண்ணறிவு, அந்த துறையில் வேலை செய்ய தேவைப்படும் தகுதி ஆகியன பின் தள்ளப்பட்டு ””என் சாதியினர் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். அதனால் இத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்”” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது. உலக அளவில் பேர் சொல்லும்படியான ஒரு புத்திஜீவி கூட இந்த இடஒதுக்கீட்டு அரசியலால் உருவாகவில்லை. திராவிட இயக்கத்தில் எல்லாம் பாமரத்தனம் (மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் தெரியாமல் கதை வசனம் எழுதியது மட்டுமல்லாமல் இன்றளவும் அதை நினைத்து புளகாங்கிதம் வேறு). வீதிக்கு நான்கு பிராந்திக்கடை. கூட்டத்துக்கு ஆள்சேர்க்க குவார்ட்டரும் பிரியாணியும். அனைத்தும் இலவச மயம். ஈ.வே. ராமசாமி தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு அதன் பின்னால் போன தமிழ் மக்கள் மிகவும் மோசம் போயிருக்கிறார்கள். காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை தகராறு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர்கள் நாள் தோறும் தாக்கப்பட்டு சொத்துக்களுக்கும் உயிருக்கும் சேதம் உண்டாக்கப்படுவது, ஈழத்தமிழரின் பேரழிவு ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பார்ப்பனர்கள் செய்த தீமைகளை விட அதிக தீமைகளை இந்த திராவிடம் அறுபது ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு செய்திருக்கிறது. இலங்கை அரசின் அரசிதழ் (Gazette) வழங்கும் தகவலின் படி 2008-ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சத்து இருபத்தொன்பதாயிரத்து ஐம்பத்தொன்பது. 2009-ல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்றி என்பது மட்டுமே. ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் தமிழர்கள் வெறும் நான்கு மாதம் பதினெட்டு நாட்களில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் மக்களில் ஒரு லட்சம் பேர் சாதாரண பொது மக்கள். இத்தனை அநியாயம் நடந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் எழுச்சி இல்லை. பல ஆயிரம் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மாண்டு கிடந்த போதிலும் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் ஓட்டு போட்டார்கள். அந்த நேரத்தில் திராவிடம் தில்லியில் தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசிக்கொண்டு இருந்தது. இப்போது இத்தனை லட்சம் பேர் செத்தது கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்பட்டால் தான் அந்த மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது அரசியல் உரிமையை பெற்று கொடுக்க வழி ஏற்படும். ஆனால் இங்கே அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. டெசோ மாநாடு மாதிரியான பித்தலாட்டம் தான் நடந்து வருகிறது. தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். இந்த மாநிலத்தில் பாயக்கூடிய பெரும்பாலான ஆறுகளின் தோற்றுவாய் சுற்றியுள்ள மாநிலங்களில் அமைந்து இருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு வரவேண்டிய பல பகுதிகள் திராவிட கட்சிகளின் பாராமுகம் காரணமாக கைவிட்டு போனதால் தான் இந்த நிலை. இதை சாக்காக வைத்து அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கின்றன. சுற்றியுள்ள மாநிலங்களின் அடாவடித்தனத்தால் தமிழகம் நீர் முற்றுகைக்குள் சிக்கி தவிக்கிறது. அண்டை மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அவ்வப்போது தாக்கவும் படுகிறார்கள். இது இப்படி இருக்கையில் தமிழகத்தில் இருக்கும் குறைந்தபட்ச நீராதாரங்கள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பது இன்னொரு கேள்வி. கர்நாடகம் நீர் மிகை மாநிலம் என்றாலும் அங்கிருக்கும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியன அம்மாநில பொதுப்பணித்துறையால் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கே எல்லாம் ஊழல் மயம். தாமிரபரணி ஆறு தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே ஓடக்கூடிய ஆறு. இன்று அதன் கதியை பார்ப்பவர்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். இருக்கக்கூடிய நீர்நிலைகளில் சாயப்பட்டறை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் குற்றவுணர்வே இல்லாமல் கலக்கப்பட்டு விளைநிலங்கள் மலடாக்கப்படுகின்றன. திராவிட அரசியல்வாதிகளின் புண்ணியத்தாலும் அரசு இயந்திரத்தின் அலட்சியத்தாலும் நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு ரியல் எஸ்டேட்கள் முளைக்கின்றன. கேரளாவிலும் ஓரளவுக்கு கர்நாடகத்திலும் ஆற்று மணலை அள்ளுவதற்கு தடை உண்டு. ஆனால் தமிழ்நாட்டின் ஆறுகளில் இருந்து கடுமையான முறையில் சுரண்டப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கே இருக்கும் கல், மண் எல்லாவற்றுக்கும் இதே கதி தான். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகான தமிழகத்தின் நிலையையும் தமிழர்களின் கதியையும் நினைத்தால் குலை நடுக்கம் தான் ஏற்படும். செம்மொழி தமிழ் மாநாடு என்னும் கூத்தின் போது நடந்த அராஜகத்தையும் மோசடியையும் கண்டு வெம்பிய ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என சொன்னார். அகில இந்தியாவிலேயே, உலக அளவில் மதிக்கப்படும் படித்தவர்களையும் அறிவுஜீவிகளையும் அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்காளமும் கேரளாவும். வறுமையும் பிற்போக்குத்தனமும் மலிந்த இந்தி பேசும் மக்களும் அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதில் பின் தங்கியவர்கள் அல்லர். தத்தம் மாநிலங்களின் மீதும் மக்களின் மீதும் பற்றும் பாசமும் வைத்துள்ள இந்த புத்திஜீவிகள் வெளியிடும் கருத்து உலகளவில் எடுபடுவதில் வியப்பில்லை. இந்த முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். இந்த விவகாரம் வெடித்த போது இந்திய மற்றும் சர்வதேசிய ஊடகங்களில் கேரளத்துக்கு ஆதரவான செய்திகளும் விமர்சனங்களுமே வெளிவந்தன. சென்னையில் இருந்து வெளியாகும் “த ஹிண்டு” மற்றும் “டைம்ஸ் ஆஃப் இண்டியா” ஆகிய நாளேடுகளில் கூட இதே நிலைமை தான். தமிழகத்தின் பக்கம் நியாயமும் தர்மமும் இருந்தாலும் அதன் தலைநகரத்தில் செயல்படும் ஆங்கில ஊடகங்களே அவற்றை கண்டு கொள்ளாததற்கு என்ன காரணம்?. அது மிக எளிமையானது. சென்னையில் செயல்படும் ஆங்கில ஊடகங்களில் கூட மலையாளிகள் தான் (பார்ப்பனர்களுக்கு அப்புறம்) செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்ல. சென்னையில் “ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்” என்னும் இதழியல் கல்லூரி சசிகுமார் என்னும் கேரளத்தவரால் தொடங்கப்பட்டு “த ஹிண்டு” வகையாறாக்களால் பராமரிக்கபடுகிறது. சர்வதேச தரம் வாய்ந்த இந்த கல்லூரியில் மலையாளிகளும் பார்ப்பனர்களுமே படிக்கிறார்கள். (தமிழர்கள் ஏன் இந்த கல்லூரியில் படிக்கவில்லை என கேட்காதீர்கள், அது இன்னொரு திராவிட இயக்க சாதனை). இந்த கல்லூரியில் படித்து வெளிவருபவர்கள் உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை பணிக்கு சேர்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் இடஒதுக்கீட்டு அரசியல் தேசிய மற்றும் சர்வதேசிய அரங்குகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவும் வாதாடவும் தகுந்த புத்திஜீவிகளை உருவாக்கவேயில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி ஜப்பானிய மொழி அல்லது சீன மொழி பத்திரிக்கைகளில் கூட கட்டுரை எழுதி ஆதரவு தேட கேரளத்தில் ஆட்கள் உண்டு. இங்கே தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள்?. தமிழர்கள் எப்போதுமே “Labour Class People” ஆகவே இருகிறார்கள் (கூலிக்கார பசங்க!). அந்தக்காலத்தில் இங்கிருந்து இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கூலி வேலை செய்ய அடிமைகளாக போனார்கள். இப்போது தகவல் தொழில்நுட்ப துறை கூலிகளாக உள்ளார்கள். நிறைய பேர் படித்துள்ளார்கள். எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். பலர் கார் வைத்திருக்கிறார்கள். சிலர் நேர்த்தியான வீடுகளை கட்டியுள்ளார்கள். அவ்வளவு தான். மும்பை தாராவி சேரியில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். மலேசியாவில் கோலாலம்பூர் விமானநிலையத்தில் பெரும்பாலான கக்கூசுகளை நடத்தி பராமரிப்பவர்கள் தமிழர்கள். இலங்கையில் தோட்ட வேலை செய்வது படிப்பறிவு இல்லாத மொடாக்குடி தமிழர்கள். தில்லியில் வீட்டு வேலை செய்வது தமிழ்ப்பெண்கள். எல்லாம் “Unskilled Labour”. கேரளத்தில் ரயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், எஸ்டேட்களில் கூலி வேலை செய்பவர்கள், வீடு வீடாக போய் கக்கூசு கழுகுபவர்கள், அங்கு பொது இடங்களில் மலஜலம் கழிப்பவர்கள் யாவரும் தமிழர்களே. அதிகாரத்திலோ அதிகாரத்துக்கு நெருக்கமாகவோ தமிழர்கள் எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் அப்படியே. “திராவிடம்” , “திராவிடர்”, “சமூக நீதி”, “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் சூழ்ச்சி”, “ஆரியர் ஆதிக்கம்”” ஆகிய வார்த்தை ஜாலங்களை வைத்து கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்து அவர்களின் வாழ்வு, வளம் ஆகியவற்றை ஒரு கும்பல் சூறையாடி வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்களின் தலையில் இந்த கும்பல் மிளகாய் அரைக்குமோ தெரியவில்லை.
ஷாலி
//மாட்டை உரித்து உண்ணும புலையர்களாக இருந்தாலும் கூட.....// அது என்ன இருந்தாலும் கூட.. மாட்டிறைச்சி சாப்பிடும் தலித், நாவுக்கரசர் பார்வையில் தாழ்ந்த மக்கள். வெண்பன்றி,மாட்டிறைச்சி சாப்பிடும் புலம்பெயர் சைவர்கள் வியாசன் உள்பட உயர்ந்த சைவநெறி சான்றோர்கள்.என்ன கொடுமையான அளவுகோல்.சாப்பிடும் பொருளைவைத்து மனிதர்களுக்கு உயர்வு தாழ்வு கற்ப்பிக்ககூடாது என்றால்,தேவார நாவுக்கரசரையும் திரு.வியாசர் தூக்கித்திரியக்கூடாது.திருவாளர்.வியாசருக்கு மறைமலை அடிகள் தமிழ்ப்பற்று பிடிக்கும் இதுபோல் யாழ்ப்பாண ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பற்று கூடுதலாக இனிக்கும்.ஏனெனில் இவரிடம் தமிழ் பற்றும சைவப்பித்தும் (பித்தா பிறைசூடி) ஒன்றாக இருப்பதால். நன்றி! திரு.வியாசன் அவர்களே,உங்களைப்பற்றி நீங்கள் தெளிவு படித்திய பிறகு நான் மீண்டும் மீண்டும் உங்களுடன் கருத்துப்பிழையுடன்? கதைப்பது சரியல்ல.உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்.குலோத்துங்கன் அய்யா அவர்களுக்கு....தங்கள் எழுத்தும்,கருத்தும் அட்சர லட்சம். நன்றி! அய்யா!
kulothungan
தமிழர் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ.. அய்யா பெரியசாமி அய்யர் சலனன் என்று மாற்றம் அடைந்துவிட்டார்.. அட.. நல்லா குடுக்குறாங்கய்யா டீட்டயிலு...
ayyan
தலித் இசம் பேசும் பறயர்கள் தம்மைவிட கீழெ இருக்கும் குரவர், நரிகுரவர்,அதிவாசிகள் இவர்களின் விடுதலைக்கு சேர்து போரடி போரடியதுன்டா? இல்லை, காரணம் இவர்கள் பேசும் தலிதியம்,சாதி ஒழிப்பென்பது பறயர் சாதி மேல் நிலையாக்கம் என்ற சாதியவாதமே, மெலும் இது பறயரில் படித்த-பாதவி பாதுகப்பு பெற்றவர்களின் - அரசியல்-பணம் பெட்ற பிரிவினரின் அடுத்தகட்ட இவர்கள் போன்று இல்லாத பிரசாதியினர் மேல் தொடுக்கும் மேலாதிக்க வன்முறை.பசி ஏப்பம் அல்ல இவர்கள் புலிச்ச ஏப்பகரர்கள்.
ayyan
பறயர்கள் தலித்யிசம் பேசுவதற்கு இவர்களின் கீழ்சாதி புற்க்கனிப்பு தடையாக இல்லாத போது,கவிரி - பெரியார் நீர் உரிமை , ஈழதமிழ் நாட்டுரிமை கேட்பதற்க்கூ தர்மபுரி கலவரம் மட்டும் தடயாய் இருக்க முடியும்.தமிழ்தேசியம் பேசுவது தவறக கூரமுடியும். மற்ற எதையும் விட எங்களை மட்டுமே... எங்களின் மெலும் மென்மேலும் உயர்வை மட்டுமே ஜபித்துக்கொண்டிருன்கள் என்பது எத்து வேலை.
ayyan
கர்னடகாவிலிருந்தும், மும்பையிலிருந்தும், கேரளாவிலிருந்தும், இலங்கை மலையகதிலிருந்தும் அகதிகளாக அடித்து துரதப்பட்டவர்களில் 90% பேர் தலித்துக்கள்தான், அடித்து துரத்தியவர்கள் இவர்களை தலித்தாக பார்க்கவில்லை தமிழர்களகதான் பார்தர்கள். ஆனல் தலித் இசம் பேசுபவர்கள் தமிழ்தேசியத்தை பகைசக்த்தியக பார்ப்பது முரன்னகை. தமிழ் தேசியத்திற்கு தலமை கொடுக்க வக்கட்ர பிழைப்புவதிகள் பேசுவதுதான் தலித்தியம். இவர்கள் நக்கிப்பிழைக்க இதுதான் ஆயுதம்.
viyasan
திரு.குலோத்துங்க‌ன், உங்களால் முடிந்தால் ச‌ல‌ன‌ன் அவ‌ர்க‌ளின் ஒரு சில‌ க‌ருத்துக்க‌ளையாவ‌து ம‌றுத்து நீங்க‌ளும் 'டீட்ட‌யிலா' விடைய‌ளிக்க‌லாமே. திராவிட‌க்கொள்கை த‌மிழின‌த்துக்கு செய்த, செய்து கொண்டிருக்கிற‌ அநியாய‌ங்க‌ளை எடுத்துச் சொல்பவ‌ர்களுக்கு ஆதிக்க‌சாதி, ஐய‌ர், பார்ப்பான், ச‌னிய‌ன், ச‌ங்ப‌ரிவார் என்றெல்லாம் பெய‌ர் சூட்டுவ‌து எதிர்த்துப் ப‌தில‌ளிக்க‌த் தெரியாத‌ ஆத்தாத‌வ‌ர்க‌ள் செய்யும் செய‌ல். 'கூத்தாடுவ‌தும் குண்டி நெளிப்ப‌தும் ஆத்தாத‌வ‌ன் செய‌லே' என்று சும்மாவா சொன்னார்க‌ள்.
viyasan
தும்பை விட்டு வாலைப்பிடிப்ப‌தில் ஷாலியை வெல்ல யாராலும் முடியாது. நாவுக்க‌ர‌சர் கால‌த்தில் புலைய‌ர்க‌ள் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மாட்டை உரித்து உண்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளும் சிவ‌னுடைய‌ வ‌ழிப‌ட்டால், அவ‌ர்க‌ள் தான் நான்வ‌ண‌ங்கும் க‌ட‌வுள் என்றார் நாவுக்க‌ர‌ச‌ர். வெண்ப‌ன்றியையும், மாட்டையும் உண்ணும் புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ள் கூட‌ சிவ‌னை வ‌ழிப‌ட்டால், திருநாவுக்க‌ர‌ச‌ர் இன்றிருந்தால், அவ‌ர்களையும் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்கியிருப்பார். இங்கு மாட்டையுண்ப‌தைத் தான் நாவுக்க‌ர‌ச‌ர் ம‌றுக்கிறாரே த‌விர‌ புலைய‌ர்க‌ளைய‌ல்ல‌. அதே தேவார‌த்தை "ஆவுரித்து தின்றுழ‌லும் ஷாலியேனும், க‌ங்கைவார் ச‌டைக்க‌ர‌ந்தார்க்க‌ன்ப‌ராகில் அவ‌ர் க‌ண்டீர் நாம் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளாரே" என்று மாற்றினாலும் கூட‌ நாவுக்க‌ர‌ச‌ர் சொல்ல வ‌ந்த‌ க‌ருத்தில் பெரிதாக‌ மாற்ற‌மேதும் ஏற்ப‌டாது. புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழர்க‌ளிட‌ம் புத்த‌க‌ம் விற்க‌வும், நிதி திரட்ட‌வும், ப‌ட‌ங்களை ஓட‌ச்செய்ய‌வும், அடிக்க‌டி வெளிநாடுக‌ளுக்குப் ப‌ய‌ண‌ம் செய்வத‌ற்காக‌வும் ஈழ‌த்த‌மிழ‌ர் ஆத‌ர‌வு வேட‌ம் போட்ட‌ த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளுமுண்டு, அதேபோல் இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் பிர‌ப‌ல‌மடைவ‌த‌ற்காக‌வும், திராவிட‌வாதிக‌ளின‌தும், திராவிட‌க்க‌ட்சிக‌ளின‌தும் ஆத‌ர‌வைப் பெறுவ‌த‌ற்காக‌வும் பெரியாரைத் தூக்கிப்பிடித்து பெரியாரிஸ்டுக்களாக‌, முஸ்லீம் ஆத‌ர‌வாள‌ர்க‌ளாக‌, ஏன் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌க் கூட‌ ந‌டித்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுமுண்டு. சில‌ர் த‌ம‌து வ‌லைப்ப‌திவுக‌ளில் அசைக்க‌ முடியாத‌, க‌ட‌வுள் ம‌றுப்பு பெரியாரிஸ்டுக்க‌ள், விடிந்த‌தும் புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலுள்ள‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் கோயில்க‌ளில் வெறும் மேலுட‌ன் சைவ‌ப்ப‌ழ‌ங்க‌ளாக‌ தேரிழுக்க‌ முன்னுக்கு நிற்ப‌வ‌ர்கள். அப்ப‌டியெல்லாம் வேட‌ம் போட என‌க்குத் தெரியாது. அத‌னால் தான், என்னைப் பொறுத்த‌வ‌ரையில் சைவ‌மும் த‌மிழும் பிரிக்க‌ முடியாத‌வை ம‌ட்டும‌ல்ல‌, பிரிய‌க் கூடாத‌வை, என்ப‌தைக் கூறுவத‌ற்கு நான் ஒருபோதும் த‌ய‌ங்கிய‌தில்லை.
kulothungan
ナஅய்யா வியாசரே.. எங்கே போகிறது நாம் தமிழர் இயக்கம் என்ற கட்டுரைக்கு இப்போது சலனனாக கருத்து தெரிவித்த அய்யா பெரியசாமியின் இதே கருத்துக்கு மூன்று பக்கத்துக்கு என் போன்ற பாமரனால் இயன்ற அளவுக்கு பதில் அளித்தேன். அவர் எதை நெளித்தாரோ தெரியவில்லை. மறு கருத்தியலை காணோம்.. அதற்க்கு மேல் கூத்தாடுவதென்றால் அம்மணமாகத்தான் ஆடவேண்டும்.. பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை கொண்ட எனக்கு அது சாத்தியமல்ல.. மேசையின் மேல் செளந்தர்ய லகரி உள்ளிட்ட பல புத்தகங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு அது அதிலிருந்து 2 வரிகளை உருவிப்போட்டு பதிலளிக்க நான் அறிவுஜீவி இல்லை. பெரிய கல்வியாளனும் இல்லை. நீங்கள் ஈழ்த்தமிழர்.. இரத்தப்பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர். உங்களின் மூன்று தலைமுறைக்கு முன் பிறந்தவர்கள் கூட இனக்கலப்பில்லாத சைவத்தமிழர்கள். உங்களுக்குத்தான் அந்த தகுதியும் திறமையும் உண்டு.. வளர்க உம் திருப்பணி..
muthamizhan
சலானன்(salanan) கருத்து முற்றிலும் உண்மை.
viyasan
ஐயா குலோத்துங்க‌ சோழ‌ரே, மூன்று த‌லைமுறையாக‌ ம‌ட்டும‌ல்ல‌ முப்பது த‌லைமுறைக்கும் மேலாக‌ நாங்க‌ள் இன‌க்க‌ல‌ப்பில்லாத‌ சைவத்த‌மிழ‌ர்க‌ள் தான். :-)
இறைக்கற்பனைஇலான்
அய்யா சைவரே, கொஞ்சம் மாறும். சைவம் சாதீயம் பேசியே ஈழத்தில் படொகளத்திற்கு வழிவகுத்தீர்கள்.தமிழகம் தாங்காதையா... திராவிட சொல்லாராய்ச்சிக்கு செலவிட்டக்காலத்தை வீட்டில் இரண்டு மரம் வளர்க்கப் பயன்படுத்தியிருந்தால் ஏதும் ந்ன்றாக இருந்திருக்கும். தமிழன் என்ற சொல் சிலருக்கு நல்ல வணிகத்துக்குப் பயன்படுகிறது.காசி ஆனந்தன், அவரது குழுக்கள் இந்த வார்த்தையை பிடித்துக்கொண்டு காலம் தல்லுகிறார்கள். நெடுமாறன், செயராமன் போண்றோர் பரிதாபத்திற்குரியவர்கல். ஒருவழியாக குழப்பத்தை உண்டாக்கி இந்திய பார்ப்பன உளவுத்துறைக்கு கேளா உதவிகளைச் செய்து வருகிறார்கல். பார்ப்பனரும் தமிழரே என்ற நிலை வர மிகநீண்டகாலமாக இந்தியபார்ப்பனர் முயல்கிறார்கள். ஜெயவர்த்தனா 60க்கு மேற்பட்ட பார்ப்பன புரோகிதர்கலைக் கொண்டுபோய் இலங்கையில் அமர்த்தினார். அதன் வெற்றி இன்றும் புலிகளிலும், புலிஎதிர்ப்பிலும் ஊடாடமிடிகிறது. திராவிட எதிப்பு போதையில் ஈழ புலம்பெயர் தமிழரின் பொருளாதாரம் கசிவதில் நனையும் அறியாதோர்கள் தமிழினத்திற்கு துரோகம் செய்கின்றனர்.
viyasan
//பார்ப்பனரும் தமிழரே என்ற நிலை வர மிகநீண்டகாலமாக இந்தியபார்ப்பனர் முயல்கிறார்கள்.// ஐயா அர‌புக்கொழுந்தே, இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் பொறுத்த‌ வ‌ரையில் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌ ஆனால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே. த‌மிழைப் பேசினாலும் தாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல‌ என்கிறார்க‌ள் முஸ்லீம்க‌ள் ஆனால் உல‌க‌த்தில் எந்த‌ மூலையில் வாழ்ந்தாலும் தமிழைப் பேசி, த‌ங்க‌ளைத் த‌மிழ‌ர்க‌ளாக‌ பெருமையுட‌ன் அடையாள‌ப்ப‌டுத்துகிறார்க‌ள் பார்ப்ப‌ன‌ர்கள். இல‌ங்கையில் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்து ஈழ‌விடுத‌லைப் போராட்டத்தின் முதுகில் குத்தி, த‌மிழ‌ர்க‌ளுக்குக் கூட‌ இருந்தே குழிப‌றிக்காம‌லிருந்தால் இன்று இல‌ங்கையில் தமிழ‌ர்க‌ளுக்கென்றொரு நாடு பிற‌ந்திருக்கும், த‌மிழீழ‌த்தில் வாழும், த‌மிழ‌ர்க‌ள்- முஸ்லீம்க‌ள், அனைவ‌ர‌தும் ஒற்றுமையின் முன்னால் ம‌லையாளிக‌ளின‌தும், திராவிட‌த்தால் சீண்ட‌ப்ப‌ட்டு, ப‌ழிவாங்க‌த் த‌ருண‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ இந்தியப் பார்ப்ப‌ன‌ர்க‌ளினதும் ச‌தியெல்லாம் வெற்றி பெற்றிருக்காது. அரேபியாவில் விசுவாச‌ம் கொண்டு, அரேபிய‌க் க‌லாச்சார‌ ந‌டையுடை பாவ‌னைக‌ளைக் கைக்கொண்டு, அரபுப்பெய‌ர்க‌ளுட‌ன், அர‌பும‌ய‌மாக்க‌ப்ப‌ட்டு, ப‌ல‌த்தீனிய‌க் குழ‌ந்தைக்குப் ப‌ல்விழுந்தால் கூட‌ வீதிக‌ளைத் த‌டுத்து ஆர்ப்பாட்ட‌ம் செய்து கொண்டும், ஈழ‌த்தில் த‌மிழ்க்குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப்ப‌டும் போது, புலிக‌ள் அழிக்கப்ப‌டுவ‌தாக உள்ளூர‌ ம‌கிழ்ந்து கொண்டுமிருந்த‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளை விட‌, ஈழ‌விடுத‌லைப் போரில் த‌ன‌தின்னுயிரை நீத்த‌ மாவைக்கும‌ர‌ன் போன்ற மாவீரர்க‌ளைத் த‌ந்த‌ பார்ப்பன‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் தான் என்ப‌தை எந்த‌ உண்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌னும் ம‌றுக்க‌ மாட்டான்.
சுரேஷ்குமார்
என் கேள்வி என்னவென்றால் ஆதி திராவிடர்கள் என்ற பட்டியல் எதற்கு அதில் ஆதி ஆந்திரர், ஆதி திராவிடர், ஆதி கர்நாடகர் இதற்கு என்ன அர்த்தம் இதில் ஆதி திராவிடர் என்ற இனம் தவறாக குறிப்பிடப்பட்டூள்ளதா.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.