தமிழர் கண்ணோட்டம் மார்ச்சு இதழ் படித்தேன் மிக்க மகிழ்ச்சி. உளமார்ந்த நன்றி. ஆசிரியர் குழுவுக்கு என் தோழமை நல்வாழ்த்துக்கள் முற்றிலும் படிக்கவில்லை எனினும் சில கருத்துகள். ‘விலை உயர்வும் காலனியச்சுரண்டலும்’ எனும் தலையங்கம் நன்று

‘இந்த விலையேற்றம் பொதுவான மக்கள் பிரச்சனை என்பதோடு, அடிப்படையில் இது ஒரு தமிழ் தேசியப் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தமிழர்கள் போராட வேண்டும்’ எனும் இறுதி வரிகள் மிக முக்கியமானவை. வாசகர்களுக்கு வழிகாட்டவல்லவை. தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு போராடவேண்டும். ‘சமத்துவபுரங்களில் சமத்துவம் இருக்கிறதா?’ எனும் பேராசிரியர் அறிவரசன் கட்டுரை இந்த இதழின் சிறப்புகளில் ஒன்று. இன்றைய ஆட்சியாளர்கள் பெரியார் கனவை நிறைவேற்றும் திட்டம் இது என தப்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றிவருகிறார்கள் என்பதைக் கட்டுரை பெரியாரியக் கொள்கை வழியில் தெளிவாக எடுத்துரைக்கிறது. அறிவரசன் கட்டுரைகளில் அறிவுநாணயம் பளிச்சிடுகிறது. பாராட்டுக்கள்.

‘பி.ட்டி கத்தரிக்குத் தடை, தொடரவேண்டிய விழிப்புணர்வு’ எனும் கி.வெங்கட்ராமன் கட்டுரை இவ்விதழின் முக்கியக் கட்டுரைகளில் ஒன்று. கட்டுரையின் கடைசி மூன்று பத்திகள் தமிழக உழவர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கடமையை நன்கு வலியுறுத்துகின்றன.

‘ஜோதிபாசுவின் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ எனும் பெ.மணியரசன் கட்டுரை என்னை மிகவும் ஈர்த்தது பல்வேறுவழிகளில் வரலாற்று ரீதியாகச் இந்திய அரசியலிலும், பொதுவுடைமை இயக்கத்திலும், ஜோதிபாசுவின் ஆளுமை மற்றும் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மார்க்சிஸ்ட்டு எனும் முறையில் அவரது சொல்லும் செயலும் இன்றைய உலகமய தாராளமயச் சூழலில் இந்திய பொதுவுடைமை இயக்கமும், இடதுசாரிக் கட்சிகளும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆட்சியாளரும் பொது மக்களும், மைய அரசும் இயங்கும் நிலவரம், கடந்த 70 ஆண்டுகளின் வரலாற்றில் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் பல்வேறு போக்குகள், இவை குறித்தெல்லாம் கடந்த பல வாரங்களாக நான் மிக நிதானமாக விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து சிந்தித்து வருகிறேன்.

1944--1945 முதல் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு மற்றும் போக்குகளை ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு எனும் அடிப்படைக் கொள்கையில் உறுதியாக நின்று மக்களை திரட்டிய ஒரு சிறந்த மார்க்சிஸ்ட்டுத் தலைவர் ஜோதிபாசு என்றே நான் கருதுகிறேன். வங்க தேசத்தில் தோய்ந்த அதில் பெருமையும் பெருமிதமும் கொண்டவர் சுதந்திரம், சனநாயகம், சோசலிசம், உலக அமைதி இவற்றில் மாறாத பற்றுக்கொண்டவர் தோழர் சோதிபாசு.

பார்ப்பனியம் குறித்த ஒரு பகிர்வு - சேசாத்திரி (எ) ஆதன், கொளத்தூர்.

கம்யூனிஸ்டு என்பதற்காக கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் நடுநிலையோடு திரு பெ.மணியரசன் அவர்கள் ஜோதிபாசுவின் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற கட்டுரையை வரைந்து அவருடைய கட்சியின் செயல்முறையை தக்கபடி திறனாய்வு செய்துள்ளார்.

பத்ரலோக் எனப்படும் வங்கப் பார்ப்பனர், காயஸ்தர், வைசியர் ஆகிய இம்மூன்று சாதிகளின் ஆதிக்கம் காரணமாக வங்கத்தில் குமுக நீதி மறுக்கப்படுவதை கட்டுரையாசிரியர் எடுத்துக்காட்டிய பாங்கு அருமை. காயஸ்தர்களுக்கும், பார்ப்பனர் களுக்கும் உள்ள உறவு நெருக்கமானது என்பதை வங்க வரலாற்றை கூர்ந்து நோக்க அறியலாகும்.

கி.மு. 534இல் விஜயன் இந்த காயஸ்தர்படையின் துணை கொண்டே இலங்கையையும், சேர நாட்டின் ஒரு பகுதியான இற்றைக் கேரளத்தையும் கைப்பற்றியதாக வங்க வரலாறு கூறுகின்றது. இவ்வாறு குடியேறிய காயஸ்தர்களும், பார்ப்பனர்களும் இலங்கைத் தீவில் பவுத்தம் பரவிய போது அம்மதத்தைத் தழுவிவிட்டனர். இந்த காயஸ்தர்கள் இன்றும் இலங்கையில் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் யார் என்றால் இன்றும் உள்ள நாயக்க மரபினர் தான் (சேன நாயக, பண்டார நாயக்க உள்ளிட்டோர்). எனினும் கேரளத்தில் குடியேறியப் பார்ப்பன காயஸ்தர்கள் ஆகியோர் மதம் மாறவில்லை. அவர்கள் தான் இன்று நம்பூதிரிகளாகவும், நாயர்களாகவும் அறியப்படுபவர்கள். நம்பூதிரிகளின் வீட்டுப் பேச்சுமொழியை நாட்டுமொழி ஆக்கியவர் நாயர்கள்.

நாயர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும் உள்ள உறவை கேரள வரலாறு நன்கு புலப்படுத்துகிறது.

இப்படியாகத் தான் இந்தத் துணைக் கண்டம் முழுமையிலும் பார்ப்பனர்கள் மண்ணின் மைந்தர்களது ஆட்சியைக் கவிழ்த்து தம் மேலாண்மையை ஏற்று தம்மோடு ஒட்டி உறவாடுகிறவர்களை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினார்கள். பார்ப்பனர்கள் நேரடியாக ஆட்சி புரியாவிட்டாலும் அரச குருவாகவும், அமைச்சர்களாகவும் இருந்து பின்னால் இருந்தபடி நாட்டை ஆண்டனர்.

அதே நேரம் அரசுப் பொறுப்பு ஏற்றிருந்த பார்ப்பனரல்லாதார் தந்நலங்கருதி பார்ப்பனர் செய்யும் அட்டூழியங்களுக்கு துணை போயினர். பார்ப்பனியம் உச்சி முதல் அடி ஆழம் வரை பரவிட பார்ப்பனர் சார்பாக ஆய்தம் ஏந்தி எதிர்ப்போர்களை ஒடுக்கினர். எனவே பார்ப்பனியத்தை பரப்பியக் குற்றம் இவர்களையும் சாரும். இவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிராக செயல்படாமைக்கு மற்றொரு காரணம் இவர்கள் பலரும் மண்ணின் மக்களல்லாத அயலவர்கள்.

இதற்கு இரண்டு சான்றுகளை தரலாம்.

1. பாரசிக மன்னர் தாரியஸ் மி தொடங்கி, கிரேக்கர்கள், குசானர்கள், ஊனர்கள் எனப்பல வெளிநாட்டவர்கள் இந்தியாவின் மேற்கு பகுதிகளை கைப்பற்றி ஆண்டு வந்தனர். ஆட்சி அதிகாரம் இவர்கள் கைகளில் இருந்ததால் பார்ப்பனர் தம் செல்வாக்கை நிலைநிறுத்த 1,500 ஆண்டுகளுக்கு முன்னம் ராசஸ்தான் அபுமலையில் வேள்வி நடாத்தி தூய்மிப்பு சடங்கு செய்து இவர்களை இந்துக்களாக மதம் மாற்றி ராசபுத்திரர்களாக- இரண்டாம் சாதிக் காரர்களாக அறிவித்தனர். இந்த ராசபுத்திரர்களே இந்து மதத்திறன் காவலர்களாக ஆகி பார்ப்பனியத்தை ஓங்கச் செய்த வினையை ராசஸ்தான், வடநாட்டு வரலாறுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

2. விஜய நகர ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்ட போது அதை அயல் ஆட்சி என்று பார்ப்பனர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அதை வரவேற்றனர். தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அதற்கு கன்னட நாயக்கரும், தெலுங்கு ரெட்டிகளும் நாயுடுகளுமே பெரும்பாலும் பாளையக்காரர்களாக அமர்த்தப் பட்டார்கள். இந்த அயலவர்கள் தான் தமிழ்நாட்டில் பார்ப்பனியம் கட்டுக்கு அடங்காமல் பரவிட ஆதரவு தந்தவர்கள்.

தமிழருள் முதலியார், நாயக்கர், தேவர் போன்ற செல்வாக்குள்ள - வீரத்திற்கு பெயர் பெற்ற இவர்களும் பார்ப்பனியத்தின் காவலர்கள் தான்.

பார்ப்பனியம் பார்ப்பனர்களால் மட்டுமே பரவியதன்று. அவர்கள் அதில் முதல் நிலைபெற்றிருந்தாலும் அதனை ஆதரித்து முன்னம் அதற்காக தந்நலம் கருதி வாளும், வேளும் ஏந்திய மக்களும் கூட அதன் பரவலுக்கு பொறுப்பானவர்களே. உண்மையில் பார்ப்பனியம் வேரறுக்கப்பட வேண்டுமானால் அதற்கு ஆதரவு நல்கும் பார்ப்பனரல்லாதோர் அதனைக் கைவிட வேண்டும்.

ஏதோ நான் அறிந்த சில வரலாற்றுச் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் இதை எழுதலாயினேன்.

திராவிட தேசியம் திறனாய்வு தேவையற்றது - பேராசிரியர் அறிவரசன்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச்சு இதழ் கிடைத்தது. கட்டுரை, கவிதைகள் அனைத்தையும் படித்தேன். நெடுங்காலமாகத் தமிழர் கண்ணோட்டம் இதழைத் தொடர்ந்து, விரும்பிப் படித்து வருகிறேன்.

மார்ச்சு இதழில் இடம்பெற்றுள்ள ‘விலைவாசி உயர்வு’ குறித்து, ஆசிரியவுரை சிறப்பாக அமைந்துள்ளது. ‘முல்லைப் பெரியாறு’, ‘உயர்கல்வி’ குறித்த கட்டுரைகள் கருத்துக் கருவூலங்களாக உள்ளன.

‘அத்துமீறும் அயலார்’ கட்டுரை, தமிழ்த்திரை உலகில் உள்ள அயலாரை அடையாளம் காட்டுகிறது; அயலாரின் ஆளுகையும் அடாவடிகளும் எந்த அளவுக்கு உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது; அவர்களது செயற்பாடுகள் தமிழினத்திற்கு எதிராக உள்ளன என்பதை உணர்த்துகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களும் தமிழ்த்திரை உலகில் உள்ள தமிழ் உணர்வாளர்களும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அரிய கருத்துகளைக் கொண்டதாக அந்தக் கட்டுரை அமைந்துள்ளது.

இத்துணைச் சிறப்புகளுடன் வருகின்ற ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழில், தேவையில்லாத ஒரு கட்டுரைத் தொடரும் இடம் பெறுவது என்போன்றோர்க்கு வருத்தம் தருவதாக உள்ளது. அரிய பல செய்திகளுடன் அறிவார்ந்த பல கட்டுரைகளை எழுதிய தோழர் ம.செந்தமிழன் அவர்கள் ‘தமிழர் மரபும் திராவிட அவதூறுகளும்’ எனத் தலைப்பிட்டு எழுதுகின்ற கட்டுரைத் தொடர் தேவையில்லாதது.

நான் இங்குக் குறிப்பிடுவது, அந்தக் கட்டுரையில் சொல்லப்படும் கருத்துகளைப் பற்றிய திறனாய்வு அன்று. திராவிடத் தேசியம் தேவையில்லாதது; ஏற்கத்தகாதது எனச் சொல்ல வேண்டிய தேவையில்லாத இக்காலத்தில் அக்கட்டுரை தேவையில்லாதது.

திராவிட நாடு, திராவிடத் தேசியம் குறித்து இன்று எவரும் பேசுவதில்லை. அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு என்று பேசி இளைஞர்களை ஏமாற்றியவர்கள் 1962-ஆம் ஆண்டு திராவிடநாட்டுக் கோரிக்கையைச் சாகடித்துச் சுடுகாட்டில் சுட்டுப் பொசுக்கிவிட்டார்கள். பதவிச் சுகத்தில் பற்று வைத்த அவர்கள், இல்லாத இந்தியத் தேசியத்துடன் இணைந்துவிட்டனர். ஆயினும் கட்சிப் பெயரில் உள்ள திராவிடர் என்ற சொல்லை மட்டும் பிடித்துத் தொங்கிக் கிடக்கிறார்கள்.

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள், பார்ப்பன வல்லாண்மை இன்றும் குறையாத நிலையில், பார்ப்பனர் அல்லாதாரை அடையாளப் படுத்துவதற்காக மட்டுமே திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் திராவிட நாடு - திராவிடத் தேசியம் குறித்து இன்று பேசுவதில்லை.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கொள்கையை முன்னெடுத்துக் செல்கின்ற நாம், திராவிடர் என்னும் சொல்குடித்து ஆராய்வதும் அந்தச் சொல்லாட்சி தமிழ்த் தேசியத்திற்கு ஆகாதது என எடுத்துரைப்பதும் தேவையா என எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

பெரியார் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தோழர் கா.கருமலையப்பன் எழுதிப் பெரியார் திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ள ‘திராவிடம் - தமிழ்த்தேசியம்’ - ஒரு விளக்கம் என்னும் நூலையும் படித்தேன். அந்த விளக்கமும் ஒரு வேண்டாத விளக்கம் என்றே கருதுகிறேன்.

பெரியார் திராவிடர் கழகமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து பல போராட்டங்களை நடத்தியதுண்டு. தொடர்ந்து, இணைந்து செயற்படுவதற்குத் தோழர் ம.செந்தமிழன் எழுதும் கட்டுரையும் தோழர் கருமலையப்பனின் விளக்கமும் தடைக் கற்களாகிவிடுமோ என்று கவலைப்படுகிறேன்.

ஐயா பழ.நெடுமாறன், தோழர் மணியரசன், தோழர் மணி, தோழர் தியாகு, தோழர் சீமான் ஆகியோர் தலைமையேற்று நடாத்துகின்ற அமைப்புகள் ஒரு பொதுக் கொள்கையடிப்படையில், ஒரு கூட்டமைப்பாக செயற்பட வேண்டுமென்று தமிழ் உணர்வாளர்கள் விரும்புகின்றனர். அப்படி ஒரு கூட்டமைப்பு உருவாகிவிடக் கூடாது எனத் தமிழினத்தின் பின்னடைவுக்கும் பேரவலங்களுக்கும் காரணமாகி நின்ற கலைஞர், செயலலிதா போன்றோர் விரும்புகின்றனர்.

2008 - 2009ஆம் ஆண்டுகளில், ஈழத்தமிழர்க்கு எதிராக இந்திய அரசு, சிங்கள அரசுக்குப் பல உதவிகளைச் செய்தது. தமிழ்நாட்டின் குரலைத் தில்லி மதிக்கவில்லை ஏன்?

தேர்தல் அரசியல் கட்சிகள் இங்குள்ள தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே ஈழத்தார்க்கு ஆதரவாக இருப்பது போல் நடிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டிருந்ததால், தில்லி அந்தக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்தது.

தேர்தல் அரசியலில் ஈடுபடாத, தமிழ் உணர்வாளர்கள் தலைமையில் இயங்கும் அமைப்புகள் தமக்குள் ஒற்றுமையில்லாமல் தனித்தனியே நின்று செயற்பட்டதால், அவற்றின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று தில்லி கருதியது. அதனால்தான் தயக்கமின்றியும் வெளிப்படையாகவும் தமிழின அழிப்புக்குத் தில்லி துணைபோயிற்று என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

இனிமேலும் நாம் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டும் தூற்றிக் கொண்டும் விலகி வேறுபட்டுத் தனித்தனியே நின்றால், இன அழிப்புக்குத் துணைபோன இந்திய அரசுக்கும் இன உணர்வை மறந்து விட்ட தமிழக ஆட்சித் தலைமைக்கும் நாம் மறைமுகமாகத் துணைபோகிறோம் என்னும் வரலாற்றுப் பழி நமக்கு வந்து சேரும்.

இந்தக் காலகட்டத்தில் உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் நின்று தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதையே நம் தலையாய கடமையாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய அமைப்புகள் கூட்டாகச் செயற்பட்டுத் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனால், தமிழ்நாடு அரசு, தில்லிக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வலுவான அழுத்தம் காரணமாகத் தில்லி அரசை நம் வழிக்குத் திருப்ப வேண்டும்.

தமிழர்க்கான உரிமைகளை மறுப்பதில் ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர் ஒன்றுபட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு எதிராகவும் தமிழக - தில்லி அரசுகளுக்கு எதிராகவும் நாம் ஒன்றுபட்டுப் போராடினால் தான் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும்.

கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், ‘ஈழவிடுதலைக்குத் துணை நிற்பது; இந்தியத் தமிழர்களை விடுவிப்பது’ என்னும் பொதுக் கொள்கையை ஏற்றுக் கூட்டாகச் செயற்படுவோம்.

மூதறிஞர் தி.க.சி., பேராசிரியர் தொ.ப. முதலிய தமிழ் உணர்வாளர்களும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். கூட்டுச் செயற்பாட்டையே அவர்களும் விரும்புகிறார்கள்.

உண்மையான தமிழ் உணர்வு அல்லாமல் வேறு எந்தச் செல்வாக்குமில்லாத எளியேனாகிய என் வேண்டுகோளை - விருப்பத்தை எண்ணிப் பார்த்து நல்ல முடிவெடுக்க வேண்டுகிறேன்.

Pin It