”இலங்கையின் மனித உரிமைச் சிக்கல் குறித்த கேள்விகள் தவிர வேறு ஏதாவது வினா இருக்கிறதா?’’

கொழும்புவில் நடைபெற்ற மூன்று நாள் காமன் வெல்த் உச்சி மாநாட்டின் முடிவில் பன்னாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த காமன்வெல்த் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் உக்கு (Rishard uku) உதிர்த்த எச்சரிக்கை வினா இது. 2013 நவம்பர் 15 தொடங்கி 17 வரை நடந்து முடிந்த பொது நலவாய கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் முடிவாக நிறைவேற்றப்பட்ட கூட்டறிக்கையை ஊடக வியலாளர்களிடம் அளித்து விளக்கியப்பின் ஊடக வியலாளர்களின் வினா நேரம் வந்தபோது ரிச்சர்ட் உக்கு முன் எச்சரிக்கையாக இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அந்த அளவுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கிற மனித உரிமைமீறல்கள் குறித்த வினாக்களே காமன்வெல்த் உச்சிமாநாடு நடைபெற்ற மூன்று நாள்களும் எதிரொலித்தன.

இனக்கொலையாளி என்ற தனது அடையாளத்தை மாற்றியமைத்து பன்னாட்டு அரங்கில் தனது ”பெருமையை’’ உயர்த்திக்கொள்ள கொழும்பு காமன் வெல்த் மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இராசபட்சேயின் கனவு தகர்ந்தது.

அதே நேரம் காமன்வெல்த் கூட்டமைப்பின் வரும் இரண்டாண்டுகால அவைத் தலைவர் என்ற பதவியின் மூலம் உலக சட்டங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு விரும்பிய இராசபட்சேயின் விருப்பமும் இதற்கான இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டமும் வெற்றி பெற்றிருக்கிறது.

உச்சி மாநாட்டின் முடிவில் நவம்பர் 17 மாலை வெளியிடப் பட்ட 21 பக்க காமன் வெல்த் கூட்டறிக்கையில் பொதுப்படையான சொற்களில் சுற்றிவளைத் தாவது இலங்கையில் நடைபெற்ற பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இக்கூட்டறிக்கையில் கௌதமாலா, சைப்ரஸ், பிஜி ஆகிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து எடுத்துக் காட்டப் பட்டதுபோல், இலங்கையின் பெயர் குறிப்பிட்டு இக்கூட்டறிக்கையில் எதுவும் சொல்லப் படவில்லை தான் என்ற போதிலும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, ஒரு குறிப்பிட்ட மதம், மொழியினம் ஆகியவற்றின் ஆதிக்கமின்மை, மனித உரிமைக் குறித்த பன்னாட்டு சட்டங்களை உறுதியாக கடை பிடிக்க வேண்டிய கடப்பாடு என்ற வகையில் சிங்களப் - பௌத்த சிறீ லங்கா குறித்துதான் சொல்லப் படுகிறது என்று புரிந்து கொள்ளும் படியான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

பதவிக்காலம் நிறைவடையும் காமன்வெல்த் அவைத்தலைவர் ஆஸ்த்திரேலியப் பிரதமர், டோனி டாப்லாட் (Tony Tablott) தனது நிறைவுரையில் “இலங்கை எங்களது மதிப்பு மிக்க நட்பு நாடு. எனினும் மனித உரிமை சிக்கலில் செய்ய வேண்டியவை நிறையவே உள்ளன’’ எனக் குறிப்பிட்டார்.

2015 இல் அடுத்த மாநாட்டை நடத்த வேண்டிய மொரிஷியஸ் நாட்டுப் பிரதமர் நவின் சந்திரா ராம்கூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைமீறலைக் காரணம் காட்டி இம் மாநாட்டில் பங்கேற்க மறுத்து விட்டார். இம் மாநாட்டில் பங்கேற்காத தனது நாடு காமன் வெல்த் கூட்டமைப்பின் மரபிற்கிணங்க 2015இல் நடைபெற உள்ள மாநாட்டை நடத்த விரும்பவில்லை என்றும் அறிவித்தார். இதன் காரணமாக 2015 இல் நடைபெற உள்ள அடுத்த காமன்வெல்த் உச்சி மாநாடு மால்ட்டாவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் செயல்பாடு இராசபட்சேக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.

15.11.2013 அன்று பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மரபுப்படியான மாநாட்டு தொடக்கவுரை ஆற்றி அமர்ந்ததுமே கேமரூன் கொழும் புவிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்றார். அவரோடு முதன்மையான பன்னாட்டு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் நூற்றுக்கணக்கில் அணி வகுத்தனர்.

போரின் போது அனைத்து நாட்டு ஊடகங்களை வன்னிப் பெருநிலத்திலிருந்து வெளியேற்றி விட்டு இராசபட்சே கும்பல் நடத்தி முடித்த தமிழினப் படுகொலையின் ஆறாதரணங்களை இந்த ஊடகங்களின் வழியாக மேற்குலகமும் பல நாடுகளில் உள்ள மனித உரிமையாளர்களும் புரிந்து கொள்ள பெருவாய்ப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாண பொது நூலகக் கட்டிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும், வடக்கு மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்து விட்டு டேவிட் கேமரூன் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் தமிழர்களைச் சந்திப்பதற்கு சென்றபோது, காவல்துறையின் கெடுபிடிகளை உடைத்துக் கொண்டு பெண்களும் முதியவர்களும் கேமரூனின் வாகனத்தை வழிமறித்து தங்கள் குடும்பங்களில் காணாமல் போனவர்களின் புகைப் படங்களை ஏந்தியபடி கண்ணீரோடு கதறியதை உலகத்திற்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

முகாம்களில் கேமரூன் சந்தித்த மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை விளக்கியபோது ஊடகங்கள் வாயிலாக அதைப் பார்த்த பலரும் அதிர்ந்துபோனார்கள்.

யாழ்ப்பாணம் சென்று திரும்பிய கேமரூன் இராசபட்சேயை அருகில் வைத்துக் கொண்டே “நடந்துள்ள போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விரைவாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது இன்னும் மூன்று மாதக் காலத்துக்குள் நடைபெற்று முடிய வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 2014 மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்பதை பிரிட்டன் வலியுறுத்தும்’’ என வெளிப்படையாக எச்சரித்தார்.

அதிர்ச்சி அடைந்த இராசபட்சே “எங்களுக்கு யாரும் கெடு விதிக்கக் கூடாது’’ என்று கொக்கரித்தார்.

உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியிலேயே இராசபட்சேவுக்கு சிக்கல் தொடங்கியது. இலண்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்பும், கொழும்புவில் இறங்கியப் பிறகும் “இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும் இம் மாநாட்டில் நான் பேசுவேன்” என்று டேவிட் கேமரூன் அறிவித்தார்.

தொடக்க நிகழ்ச்சிகளுக்கு முன்பாக செய்தியாளர்கள் கூட்டத்தை இராசபட்சே நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அச்செய்தியாளர் கூட்டத்தை இராசபட்சே இரத்து செய்தார். சேனல் 4 தொலைக்காட்சியின் கெல்லம் மேக்ரே அச்செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிந்ததும் அவரை சந்திக்க அஞ்சிய இராசபட்சே இவ்வாறு முடிவு செய்தார் என ஊடகங்களில் செய்திபரவியது.

மாநாட்டின் வரவேற்புரையிலேயே இராசபட்சே “ விசாரணை நடத்தி தண்டனை அறிவிக்கும் மன்றமாக காமன்வெல்த் உச்சி மநாட்டை மாற்றிவிடக்கூடாது’’ என்று பின்வாங்கிப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தாங்கள் நினைத்ததற்கு மாறாக நிகழ்ச்சிப் போக்குகள் அமைந்து விட்டதை எண்ணி சிங்களப் பேரின வாதிகள் குமைந்தார்கள்.

இலங்கை காமன் வெல்த் மாநாட்டு நிகழ்ச்சிகள் இராசபட்சேவுக்கு ‘ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட’ கதையாக முடிந்தது.

காமன்வெல்த் மாநாட்டின் இந்நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் தமிழின உணர்வாளர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இது எப்படி நிகழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்வதும், இச்சிக்கலில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்து தெளிவாக தீர்மானித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

நடந்து முடிந்த மாநாட்டை கனடா புறக்கணித்ததோ, மொரீஷியஸ் புறக்கணித்ததோ, இந்தியப் பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்ததோ, பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை அரசுக்கு எதிராக பேசியதோ தாமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அல்ல. இவர்களது முடிவுக்கு முதன்மைக் காரணம் மனித உரிமை மீதான இவர்களது அக்கறை அல்ல.

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பல இலட்சம் பேர் உள்ளனர். அங்கு வாக்காளர்களாக பதிவு செந்து கொண்டவர்களே ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் உள்ளனர். கனடாவின் பல நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் ஆற்றலாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பெண்மணி ஒருவரே கூட கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்கிறார். இந்த ஈழத்தமிழர்கள் தமிழினப் படுகொலைக் குறித்து விளக்கி அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். இவற்றின் விளைவாகவே கனடா நாடு இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை எடுத்தது.

மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் கடைசி வரையிலும் புறக்கணிப்பு முடிவு எடுக்கவில்லை. ஆயினும் கடந்த நவம்பர் 8.9.10 ஆகிய நாட்களில் மொரிஷியஸில் நடைபெற்ற புலம்பெயர் தமிழர்களின் மாநாடு அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகே நவம்பர் 13 ஆம் தேதி இராம் கூலம் தனது புறக்கணிப்பு முடிவை அறிவித்தார்.

இந் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெறுவதற்கு முதன்மை உந்து சக்தியாக தமிழ்நாடு விளங்கியிருப்பதை உணர முடியும். இதற்கும் ஒரு முன் தொடர்ச்சி உண்டு.

தமிழீழச் சிக்கலில் இந்தியா சிங்களத்தின் கூட்டாளியாக இருந்து வருவதை மிக நீண்ட காலமாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சொல்லி வருகிறது. குறிப்பாக 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டு நார்வே பேச்சுவார்த்தை நடை பெற்றுக்கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் ஒரு ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தக் காலத்திலேயே த.தே.பொ.க. இதனை உரத்துக் கூறியது. ஒருபக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு பல நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு இந்தியாவின் முயற்சி முதன்மையான காரணம் என்றுக் கூறிய த.தே.பொ.க. இது எதிர்காலத்தில் மிகக்கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்து வந்தது.

குறிப்பாக 2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பிறகு அமெரிக்க உள்ளிட்ட வல்லாதிக்கவாதிகளுக்கு “பயங்கரவாத எதிர்ப்பு’’ என்ற முழக்கம் பயன்பட்டது. இச்சூழலைப் பயன்படுத்தி புலிகள் அமைப்பை பயங்காரவாத அமைப்பாக இந்தியா சித்தரித்தது. பல நாடுகளையும் தடைசெய்ய வைத்தது. இந்தியாவின் இந்தத் தமிழினப்பகையை த.தே.பொ.க. தொடர்ந்து எடுத்துக் கூறியது.

இந்தியாவின் தமிழினப் பகைப் போக்கை புரிந்துகொள்வதும், அதற்கு ஏற்ப அரசியல் செயல்பாட்டை அமைத்துக்கொள்வதும் மிகத் தேவையான ஒன்று என்பதை த.தே.பொ.க. வலியுறுத்தியது.

ஆனையிறவு வெற்றியைத் தொடர்ந்து நார்வே தலையீட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடை பெற்று அமைதிப் பேசுவார்த்தை தொடங்கியதும் தமிழீழச் சிக்கல் சர்வதேச மயமானது.

அப்போது ஒரு மாவீரர் நாளையொட்டி வெளியிட்ட அறிக்கையில் மதியுரைஞர் பாலசிங்கம் “தமிழீழ சிக்கல் சர்வதேசமயமாகி இருப்பது ஒரு புதிய முன்னேற்றகரமான கட்டத்தைக் குறிக்கிறது. அதே நேரம் பன்னாட்டுக் காய்நகர்த் தல்களை எதிர்கொள்ள வேண்டிய புதிய சவாலும் நம் முன்னே எழுந்துள்ளது’’ என்று குறிப்பிட்டார். அந்த சவாலில் முதன்மையானது இந்தியாதான் என்பதை த.தே.பொ.க. அப்போதே சுட்டிக் காட்டி ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழில் எழுதியது.

பின் நாளில் பல தமிழின உணர்வாளர்களும் இந்த உண்மையை உணரத் தொடங்கினர். குறிப்பாக 2008-2009 பேரழிவு இந்த உண்மையை பெருந்திரளான தமிழர்களுக்கு உணர்த்தியது.

காங்கிரசு எதிர்ப்பு என்ற வலையத்திற்குள் உழன்றபோதிலும் இந்தியாவின் இனப்பகையை உணர்ந்து கொள்ளும் முதல்படியாக அது அமைந்தது.

குறிப்பாக தமிழ்நாட்டு இளையோர் இந்தக் களத்திற்கு வந்ததற்குப் பிறகு இது மிகப் பெரும் பாய்ச்சலைக் கண்டது. தமிழ் மக்களின் அழுத்தத்திற்கு தமிழ் நாட்டின் முதன்மைக் கட்சிகள் பணிய வேண்டியநிலைமை வந்தது. இந்திய அரசுக்கும் இது அழுத்தத்தைதரத் தொடங்கியது. போரின் அழிவிற்குப் பிறகு சோர்விலும், பிளவு பட்டும் இருந்த கணிசமான புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு திசை குறிப்பதாகவும் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் விளங்கின. உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழர்களிடையே பெரும் உரையாடலை ஏற்படுத்தின.

இந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தை யொட்டி தமிழ்நாட்டு மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி புலம்பெயர் தமிழர்களுக்கு, நம்பிக்கையையும் தெளிவையும் ஏற்படுத்தத் தொடங்கியது என்றால் மிகை அல்ல. அது இலங்கை காமன்வெல்த் மாநாட்டையொட்டி செயல் வடிவம் பெற்றது.

தமிழீழத்தில் தொடரும் பேரவலங்களைக் எடுத்துக் காட்டி பிரித்தானியத் தமிழர்கள் நடத்திய இடை விடாத போராட்டங்களும் பரப்புரைகளும் பிரித்தானிய அரசுக் குவலுவான அழுத்தத்தை தந்தன. இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதோ, இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் பிரிட்டன் பங்கேற்கக்கூடாது என்பதோ நிறை வேறவில்லை என்ற போதிலும் இம் மாநாட்டில் பங்குபெற்ற டேவிட் கேமரூனின் செயல் பாட்டை வடிவமைப்பதில் பிரித்தானிய தமிழர்களின் முயற்சி முழு முதல் பங்கு வகித்தது.

இன அழிப்புப் போர் நடந்த போது மௌனமாக சிங்களவனுக்கு துணைநின்ற பிரிட்டனின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் வெளிப்படும் களமாக இலங்கைக் காமன் வெல்த் மாநாடு மாறியது.

இனக் கொலையாளி இராசபட் சேவுக்கு காமன்வெல்த் மாநாட்டில் ஏற்பட்ட நெருக்குதல் இந்தியாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டிருந்தால் கேமரூன் செய்த செயலை மன்மோகன் சிங்கும் செய்திருப்பார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பசப்புகிறார். இது உண்மை அல்ல.

ஈழத்தமிழர் சிக்கலில் நீதியின் பக்கம் ஒரு சிறிதளவாவது இந்தியா இருந்திருக்கு மேயானால் இம் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையே எழுந்திருக்க வாய்ப்பில்லை.

இலங்கை காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிராக ஏற்பட்ட தொடர் போராட்டங்கள் தான் செயலலிதாவையும் நிர்பந்தித்து 2013 அக்டோபரில் சட்டமன்ற தீர்மானம் போடவைத்தது. இப் போது இரண்டாவது முறையாக 12.11.2013இல் அதே தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து போது பேசிய செயலலிதா இந்த உண்மையை ஒத்துக் கொண்டார். தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டங்களின் காரணமாகவே அவர்களின் மனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் இத்தீர்மானத்தை முன் மொழிவதாக சட்டமன்றத்தில் செயலலிதா பேசினார்.

இந்த அழுத்தங்களின் காரணமாகவே வரும் 2014ல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய இக்கட்டில் உள்ள காங்கிரசுக் கட்சி பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்றாவது முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சல்மான் குர்சஷித் இக் காமன் வெல்த் மாநாட்டிலோ அதை யொட்டி இராசபட்சேயோடு நடந்த சந்திப்பிலோ, இச்சிக்கல் பற்றி பேசவே இல்லை.

உண்மையில் இந்திய அரசு ஈழத்தமிழர்கள் மீதும் மனித உரிமைகள் மீதும் அக்கறைப் பட்டிருந்தால் சல்மான்குர்ஷித்தை இச் சிக்கல் குறித்து மாநாட்டில் பேச வைத்திருக்க முடியும். அப்படி ஒரு கருத்தே இந்திய அரசுக்கு இல்லை. ஏனெனில், நடந்து முடிந்த இனக் கொலைப் போரையும், நடந்து கொண்டிருக்கும் இன துடைப்பு நடவடிக்கையையும் வழி நடத்தும் கூட்டுக் குற்றவாளி இந்தியா!.

எனவே, கொழும்பு காமன் வெல்த் மாநாடு இந்தியாவுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு தனது முழுவலுவையும் பயன் படுத்தி பன்னாட்டு அரங்கில் காய் நகர்த்தல்களில் இந்தியா இனி ஈடுபடும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இச்சிக்கலை காங்கிரசுக்கு எதிரான தேர்தல் அணிவகுப்பிற்குள் முடக்கி வைத்து பதவி அரசியலுக்குள் இந்த இனச் சிக்கலை மூழ்கடிக்கும் முயற்சிகள் நடைபெறக்கூடும்.

காங்கிரசைப் போலவே, பா.ஜ.க.வும் பிற வடநாட்டுக் கட்சிகளும் தமிழினப் பகைக்கொள்கை உள்ள வைதான் என்றத் தெளிவு இன்றிய மையாத ஒன்றாகும்.

காங்கிரசின் அனைத்திந்திய தலைமை மட்டுமின்றி பா.ஜ.க.வின் அனைத்திந்தியத் தலைமையும் இலங்கைக் காமன் வெல்த் மாநாடு குறித்த கருத்தில் ஒரே முடிவில் இருந்ததை நாடு கண்டது.

வடநாட்டில் உள்ள பெரியக்கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடிக் கட்சித்தலைவர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து எதுவும் பேசவில்லை என்பது மட்டுமின்றி, நாடாளு மன்றத்தில் இனியாரும் ஆங்கிலத்தில் பேசக்கூடாது , இந்தியில்தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதிலிருந்தே அவரது கட்சியின் கொள்கைத் திசை புரியும்.

அதே போல், குறைகள் இருந்தாலும் கருணாநிதியை விட செயலலிதா பரவாயில்லை என்றக் கருத்து நிலையும் தமிழர்களை குடை சாய்த்து விடும். பழையத் தீர்மானத்தையே நவம்பர் 12 ஆம் நாள் மீண்டும் இயற்றி விட்டு அடுத்த நாள் விடிந்தும் விடியாததுமாக தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துச் சேதப்படுத்தியதிலிருந்தே செயலலிதாவின் தமிழினப் பகையைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே, அடிப்படையான இந்த இனப் பிரச்சினையை ஏதோ ஒரு கட்சியின் கொள்கையாக மட்டுமே புரிந்துகொண்டு பதவி அரசியல் சண்டைக்குள் நமக்குச் சாதகமாக காய் நகர்த்துவது என்று இறங்கினால், தமிழினப் போராட்டம் தடம் புரண்டு போகும்.

கட்சி கடந்து இந்திய அரசு தமிழினத்திற்கு பகை அரசு என்ற உண்மையைப் புரிந்து கொள்வதும் கருணாநிதியும் செயலலிதாவும் இந்த இந்தியத்தின் கங்காணிகள் என்று தெளிவு பெறுவதும் தமிழினப் போராட்டத்தில் இன்றியமையாதது.

இனமீட்சிக்கான களம் தேர்தல் அரசியலுக்கு வெளியில்தான் உள்ளது. இது கடினமானதாகத் தோன்றினாலும் அது தான் ஒரே வழி!.

Pin It