இடிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டுமன்று, தமிழகத் தமிழர்களின் மானம், மதிப்பு, குடியுரிமை அனைத்தும்தான்!

தகர்க்கப்பட்டது தஞ்சை முள்ளிவாய்க்கால் பூங்கா மட்டுமன்று, தமிழகத்தில் தமிழர்கள் உரிமையோடு வாழ்கிறோம், தமிழீழத் தமிழர்கள் மட்டுமே இன ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற தவறான புரிதலும் தான்!

தமிழகத் தமிழர்களின் இன்றைய முதற்பெரும் கடமை ஈழவிடுதலைக்குப் போராடுவது தான்; தமிழ்நாட்டுச் சிக்கல்கள், உரிமைகள் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியமும் போலி மனநிறைவும் இப்பொழுது இடிக்கப் பட்டுள்ளன.

கருணாநிதியின் இனத்துரோகத்தை செயலலிதாவைக் கொண்டு முறியடிக்கலாம் என்ற கற்பனைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது; கருணாநிதியின் இனத்துரோகத்தை செயலலிதாவின் தமிழினக் காழ்ப்புணர்ச்சியால் தகர்க்க முடியாது.

தமிழீழத்தில் இனப்படுகொலையில் பலியான தமிழர்களுக்கும் விடுதலைப்போர் வீரர்களுக்கும் இருந்த நினைவுச் சின்னங்களை இராசபட்சே அழித்தான். இந்திய அரசின் தூண்டுதலோடும் தமக்கே உரிய தமிழினக் காழ்ப்புணர்ச்சியோடும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒரு பகுதியை இடித்துத் தகர்த்துள்ளார் செயலலிதா! முள்ளிவாய்க்கால் முற்றம் முழுவதையும் மூடிமுத்திரை (சீல்) வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தை நாடினார் செயலலிதா! அங்கு அவர்க்கு உடனடிப்பலன் கிடைக்கவில்லை.

எனவே, 13.11.2013 அன்று விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காவல்துறையினரை ஏவி, முள்ளிவாய்க் கால் சுற்றுச்சுவர்களையும், 25 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் இருந்த பூங்காவையும், அழகாகக் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றையும், மின் விளக்குக் கோபுரத்தையும் மிகப்பெரிய பெயர்ப்பலகையையும் இடித்துத் தகர்த்து, நாசப்படுத்திவிட்டது செயலலிதா அரசு.

இந்த அழிவு வேலைக்கு அரசு அதிகாரிகள் சொன்ன காரணம், மேற்கண்ட கட்டு மானங்கள் அனைத்தும் தமிழக அரசின் நெடுஞ்சாலைப் புறம்போக்கில் உள்ளது; அதனால் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்பதாகும்.

சாலையோர புறம்போக்கு நிலத்தை பூங்கா வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்து வதற்காக தனியாரிடம் ஒப்படைக்கும் விதிமுறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ளது. அதன்படி திரு பழ.நெடுமாறன் அவர்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அனுமதி பின்னர் இரத்து செய்யப்பட்டதாக இப்பொழுது அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனால் மூன்றாண்டுகளாக அந்தவட்டாரத்தில் உளியின் ஓசை கேட்டுக் கொண்டுள்ளது, கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளன. பூங்கா அமைத்து வளர்க்கிறார்கள். சுற்றுச்சுவர் எழுப்புகிறார்கள். இவையனைத்தும் கமுக்கமாக - நள்ளிரவில் நடந்த வேலைகள் அல்ல.

அந்த 25 ஆயிரம் சதுர அடியில் நடந்த இந்த வேலைகளை நேரடியாக வந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்திருக்கலாம். வெளியேறும் படி அறிவித்திருக்கலாம். அந்த அதிகாரிகளின் அறிவுறுத்தலைக் கேட்கவில்லை என்றால் காவல்துறையின் உதவியை நாடியிருக்கலாம். இந்த நடைமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளது செயலலிதா அரசு.
 
திறப்பு விழாவிற்கான அனுமதிகோரி அக்டோபர் மாதம் 19ஆம் நாள் தஞ்சை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரிடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, அனுமதி கோரி தஞ்சை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பம் கொடுக்கப் பட்டது.
 
ஆனால், தஞ்சை மாவட்டக் காவல்துறை - முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கவுமில்லை; அனுமதி மறுப்புக் கடிதம் வழங்கவுமில்லை. நீதிமன்ற நிவாரணம் தேட வழியில்லாதபடி, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துக் கழுத்தறுக்கக் காவல்துறை காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர் உ.த.பே. நிர்வாகிகள். அதனால், அனுமதி வழங்கும் ஆணை கோரி 04.11.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வழக்குத் தொடுத்தார். 05.11.2013 அன்று அரசு வழக்குரைஞர் எதிர்ப்பைப் புறந்தள்ளி, திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கி உரிய பாதுகாப்பு தருமாறு காவல்துறைக்கு நீதிபதி திரு. ராஜா கட்டளையிட்டார்.
 
அத்தீர்ப்பை எதிர்த்து, 05.11.2013 அன்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுப் போட்டது. அன்று மாலையே, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விழா நடத்தத் தடை ஆணை தர முடியாது என்று மறுத்து, விழாவிற்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பளிக்குமாறு காவல்துறைக்கு ஆணையிட்டது.
 
உச்சநீதிமன்றத்திற்குப் போய் அல்லது வேறு வழிகளில் திறப்பு விழாவிற்குத் தமிழக அரசு தடை போடலாம் என்று ஊகித்தறிந்த உ.த.பே. நிர்வாகிகள், 06.11.2013 அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை திரு. ம.நடராசன் தலைமையில், திரு.பழ.நெடுமாறன் அவர்கள் முறைப்படி திறந்து வைத்தனர்.

முற்றம் திறக்கப்பட்டபின் ஏற்கெனவே திட்டமிட்டபடி மூன்று நாள் விழா 08.11.2013 அன்று தொடங்கி, 10.11.2013 அன்று வரை எழுச்சியுடன் நடந்து நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து கலந்து கொண்டனர். ஆட்சியாளர்களோ அல்லது பெரிய அரசியல் கட்சியினரோ இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தமிழகம் - தனது இலட்சிய அரசியல் நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது என்பதை அங்கு குவிந்திருந்த மக்கள் கூட்டம் உணர்த்தியது. தமிழ் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் கணிசமாக வந்திருந்தனர்.
 
இவ்வாறு தமிழர்களின் உவகையும் உணர்வும் கலந்த எழுச்சியோடு மூன்று நாள் விழா நடந்து முடிந்த மூன்றாம் நாள் விடியற்காலை, ஆட்சியாளர்கள் பொக்லைன் கொண்டு முற்றத்தின் ஒரு பகுதியை இடித்தனர்.

‘ஆக்கிரமிப்பை’ அகற்றுகிறோம் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறியது போலிக் காரணம். இரண்டு ஆண்டுகளாக ஏன் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவில்லை? எந்த உடனடிப் பயன்பாட்டுக்காக ‘அந்த ஆக்கிரமிப்புப்‘ பூங்கா அகற்றப்பட்டது? அந்த உடனடித் தேவை குறித்து அதிகாரிகள் கூறாதது ஏன்? செயலலிதாவை ஆக்கிரமித்துள்ள தமிழின வெறுப்புதான் உண்மையான காரணம்!

ம.நடராசன் பங்களிப்போடு எழுப்பப்பட்டதாலும், அதில் அவர்க்கு முகாமைப்பாத்திரம் இருப்பதாலும் முதலமைச்சர் எரிச்சலுற்று முற்றத்தை இடிக்கத் துணிந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.

செல்வி செயலலிதாவுக்கும் திரு. ம.நடராசனுக்கும் இடையே உறவு இருக்கிறதா, பகை இருக்கிறதா என்பது யாரும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்! அது ஒருபக்கம் இருக்க, நாம் இன்னொரு வினாவை எழுப்புகிறோம். ம.நடராசன் குடியுரிமை பறிக்கப் பட்டவரா? அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் அவருக்குக் கிடையாதா? ஒரு குடிமகனின் குடிஉரிமையைப் பறிக்கும் அதிகாரம் ஒரு மாநில முதலமைச்சர்க்கு இருக்கிறதா?

நடராசன் முன்னின்று செய்கிறார் என்பதற்காக, சட்டப்படியான ஒரு செயலைத் தடுத்துவிடும் அதிகாரம் செயலலிதாவுக்கு இருக்கிறதா? இவ்வினாக்கள் அனைத்திற்கும் “இல்லை, இல்லை” என்பது மட்டுமே விடை!

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்புவதை செயலலிதா எதிர்க்கிறார் என்பதுதான் உண்மையான காரணம்.
இந்திய அரசு நெருக்குதல் செய்ததால்தான், முற்றத்தின் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் அனுமதி மறுத்தார்; திறந்தபின் அதை இடிக்க முனைந்தார் என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள்.
 
இந்திய அரசு தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்திருந்தால், அதை எழுத்து வடிவில் தருமாறு முதலமைச்சர் கோரியிருக்க வேண்டும். இந்திய அரசின் நெருக்குதலை தமிழக மக்களிடம் தெரிவித்திருக்க வேண்டும்; அவ்வாறு தெரிவிப்பதில் அவர்க்கென்ன தடை? அது ஒன்றும் இராணுவக் கமுக்கம் இல்லையே! ஒரு கொள்கை முடிவுதானே! “இச்சிக்கலில் இந்திய அரசின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அறிவித்திருக்கலாமே!
 
இந்திய அரசின் நெருக்குதலால் தான் முதலமைச்சர் செயலலிதா முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிராகச் செயல்பட்டார் எனில் அவர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்போடு தமது எதிர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டிருக்கலாம். பொறுப்பை நீதித்துறையின் மீது போட்டுவிட்டு ஒதுங்கியிருக்கலாம்.

அவ்வாறு ஒதுங்கிக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தை அணுகி நிரந்தரத் தடை கோருகிறார்; திறந்த முற்றத்தை மூடி முத்திரை வைக்க உச்சநீதி மன்றத்தின் அனுமதி கோருகிறார்; இம்முயற்சிகளில் தோற்றபின், முரட்டுத்தனமாக இடிக்கச் செய்கிறார்.
 
இவ்வாறு இடிப்பது சட்டவிரோதச் செயல் மட்டுமன்று, நீதிமன்ற அவமதிப்புக் குற்றமும் ஆகும். அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டிய முதலமைச்சர் தமது விருப்பு வெறுப்புப்படி ஆட்சி நடத்துகிறார்.
 
“விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, காய்தல் உவத்தல் அகற்றி சட்டப்படி ஆட்சி நடத்துவேன்” என்று கடவுள் பெயரால் பதவி உறுதிமொழி ஏற்றுவிட்டு அதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறார் செயலலிதா. இவருடைய வெறுப்பிற்கு அதிகமாகப் பலியாவது தமிழர் அடையாளச் சின்னங்கள் - தமிழ்மொழி, தமிழ் இனம் ஆகியவையே!

2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றபின் கடற்கரையில் நின்ற கண்ணகி சிலையை இரவோடு இரவாக பெயர்த்து அப்புறப்படுத்தினார் செயலலிதா. (பின்னர் வந்த தி.மு.க. ஆட்சியில் அச்சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது).

உலகின் சிறப்புமிக்க நூலகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூட ஆணையிட்டார். உயர்நீதிமன்றத் தடையால்தான் இன்றும் அந்நூலகம் உயிர் வாழ்கிறது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூலகத்தைக் காலி செய்தார். அந் நூல்களுக்கு மாற்று நூலகம் உருவாக்கப்பட வில்லை.

மக்கள் வரிப்பணத்தில் 840 கோடி ரூபாய் செலவு செய்து சேப்பாக்கத்தில் கட்டப்பட்ட புத்தம் புதிய தலைமைச் செய லகம், சட்டப்பேரவை ஆகியவற்றிற்கான கட்டடங்களை, அப்படியே கைவிட்டு, பாழடைந்த மண்டபங்களாக்கி விட்டார் செயலலிதா.

கருணாநிதி கட்டியவற்றை அனுமதிக்கமாட்டேன் என்று தடை போட என்ன ஞாயம் இருக்கிறது? செயலலிதாவுக்கு அவர் குடும்பத்தார் கொடுத்த சீதனமா தமிழக அரசு? இல்லை! தமிழக மக்கள் ஒப்படைத்த பொறுப்பு!

கருணாநிதி மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டுமன்று, தமிழினத்தின் மீது, தமிழர் வரலாற்றுப் பெருமிதங்கள் மீது, தமிழ்மொழி மீது அவர்க்கு இருந்து வரும் காழ்ப்புணர்ச்சிகளே அவரது மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படைக் காரணங்கள்!

தமிழன்னைக்கு நூறுகோடி ரூபாய்ச் செலவில் மதுரையில் சிலை எழுப்புகிறேன் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில், அதே சட்டப்பேரவையில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை, தமிழ்ப் பயிற்று மொழியாக இல்லாத - ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட வகுப்புப் பிரிவுகள் தமிழகமெங்கும் தொடங்கப் படும் என்று அவரின் கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பதற்கு முதல் நாள் (12.11.2013) மாலை சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தி, நடுவண் அரசுக்கு எதிராகக் காரசாரமான வசனம் பேசி, “இந்திய அரசு சார்பில் யாரும் இலங்கையில் நடை பெறும் பொது நல மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றினார். அந்த இரவு முழுவதுமாக விடிவதற்குள் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்தார். மறுநாள் முற்றம் இடிக்கப்படும்போது, அது தமிழின விரோதச் செயல் என்று தமிழ்மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கான தந்திரமே முதல் நாள் மாலை நிகழ்ந்த சட்டப் பேரவை சவுடால்கள். இதற்குப் பெயர்தான் இட்லர் உத்தி!

1933 ஆம் ஆண்டு மே முதல் நாள் மேநாள் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்தினார் இட்லர். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். இன்றிலிருந்து செர்மனியின் முழக்கம் “உழைப்பை மதிப்போம்; உழைப்பாளியைப் போற்றுவோம்” என்பதுதான் என்று ஆவேசமாகப் பேசினார். விடிந்தவுடன் வந்த நாளேடுகளில் “தொழிற்சங்கங்களுக் குத் தடை; தொழிற்சங்கத் தலைவர்கள் கைது” என்ற செய்தி இருந்தது.

தமிழர்கள் உலக வரலாற்றிலிருந்தும் தமிழக நடப்புகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சட்டி ஓட்டை யாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் போதும்” என்ற பழமொழியைப் புறந்தள்ள வேண்டும். சட்டி ஓட்டை யில்லாமல் இருந்தால்தான் கொழுக்கட்டை வேகும்; ஓட்டையாய் இருந்தால் கொழுக்கட்டை அரை வேக்காடு ஆகி விடும்; அரை வேக்காடு எதற்கும் பயன்படாது.

செல்வி செயலலிதா 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் முறையாக முதல்வர் பதவிக்கு வந்த போது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2011 மே 16-31 இதழில் “தமிழகத் தேர்தல்: ஏமாற்றியவர் ஏமாந்தார்” என்ற கட்டுரையில் பின் வருமாறு எழுதினோம்; அதையே மீண்டும் கூறுகிறோம்.

“. உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி, தமிழினத்திற்கெதிரான காழ்ப் புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், அடக்குமுறை, தொழிற்சங்கஉரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வருமென்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது. தி.மு.க.வையும், அ.இ.அ.தி.மு.கவையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டிக் கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவைக் கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வளவே!”

Pin It