உலகநீதி என்று நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் ஆறுதல் மொழி தான். அப்படி ஒரு நீதி உலகத்தில் இருந்தால் அமெரிக்க வல்லரசு ஈராக்கை அழித்திருக்க முடியுமா? ஆப்கனிஸ்தானை அது குதறியிருக்க முடியுமா? ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சே கும்பல் சுதந்திரமாகத் திரிய முடியுமா? அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகள் இன்றும் சிங்கள இனவெறி அரசைத் தாங்கிப் பாதுகாக்க முடியுமா?

தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத இனம் உலகநீதி பற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும். இது தான் தமிழர்களுக்கு வரலாறு கற்றுத் தந்த பாடம்! தன்கொரு தேச அரசு இல்லாத இனம், உலக அனாதை தான்!

பொதுநலநாடுகள் மன்றத்தில் (காமன்வெல்த்) தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு 1961-இல் தென்னாப்பிரிக்கா விண்ணப்பம் போட்டது. அவ்விண்ணப்பத்தைப் பொதுநல நாடுகள் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இனவெறி, நிறவெறி கொண்ட வெள்ளை ஆக்கிரமிப்பாளர்கள், மண்ணின் மக்களாகிய கறுப்பினத்தவர்க்கு சமஉரிமை வழங்க மறுத்தார்கள். கறுப்பின மக்கள் தங்கள் உரிமைக்குப் போராடினார்கள். தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களின் போராட்டத்தை மட்டும் கணக்கில் கொண்டு, பொ.நா.மன்றம் தென்னாப்பிரிக்காவை சேர்த்துக் கொள்ள மறுக்கவில்லை. அதே கறுப்பின மக்கள், ஆப்ரிக்கக் கண்டத்தில் பல நாடுகளில் சொந்த அரசு நடத்துகிறார்கள். அந்நாடுகள் கொடுத்த நெருக்கடி - அவற்றுடன் உறவு கொண்டு, வணிகம் செய்தல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் போன்ற தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கக் கறுப்பின் மக்களின கோரிக்கைக்கு அக்காலத்தில் செவி சாய்த்தது பொ.நா.மன்றம்.

1961 - சிங்கப்பூர் பிரகடனமும், 1991 ஹராரே பிரகடனமும் பொ.நா. மன்ற உறுப்பு நாடுகள் இனப்பாகுபாடு, நிறப்பாகுபாடு, பால்வேறுபாடு, மனித உரிமைப் பறிப்பு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கின்றன.

ஜிம்பாப்வே நாட்டில் இராபர்ட் முகாபே அரசு, வெள்ளை இனத்தவரின் பெரும் பெரும் பண்ணைகளை அரசுடைமையாக்கியது. எதிர்த்த வெள்ளையர்களை சுட்டுத் தள்ளியது. இதை வைத்து 2002-இல் ஜிம்பாப்வே நாட்டை, பொ.நா. மன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்தார்கள். காரணம், பொ.நா.மன்றத்தில் பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற வெள்ளை இன நாடுகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

இராசபட்சே கும்பல் நடத்திய இனப்படுகொலை மீது நடவடிக்கை எடுக்குமாறு உலக அரங்கிலும், பொ.நா.மன்றத்திலும் நெருக்கடிகள் கொடுக்கவும், நிபந்தனைகள் போடவும் தமிழினத்திற்கென்று சொந்த அரசு எதுவுமில்லை. எட்டுக் கோடி தமிழர்களை அடிமை கொண்டுள்ள இந்தியா, தமிழின எதிர்ப்புக் கொள்கையைத் தனது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக வைத்துள்ளது. கொழும்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் அண்மையில் கொழும்பிலிருந்த போது மகிச்சியோடு அறிவித்தார்.

இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகள் - மனித உரிமைப் பறிப்புகள் - எஞ்சிய தமிழ் மக்களைப் பணயக் கைதிகள் போல் இராணுவ முற்றுகைக்கள் வைத்திருப்பது - போன்றவற்றின் மீது பன்னாட்டுப் புலனாய்வு வந்துவிடாமல் தடுக்கும் பேரரணாக இந்தியா உலக அரங்கில் செயல்படுகிறது. இலங்கையில் பொ.நா.மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டாமென்று கனடா கூறிய போது, அக்கருத்தைப் புறந்தள்ளச் செய்தது இந்தியா. தமிழினத்தை அழித்த இராசபட்சேக்குப் பன்னாட்டு அரங்கில் மகுடம் சூட்டி மகிழ வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொ.நா.மன்றத்தின் செயல் தலைவராக இராசபட்சே விளங்க வேண்டுமென்பது அதன் ஆசை.

பிரித்தானியப் பிரதமர் கேமரூன், இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் முன்னேற்றம் வேண்டும் என்று சொன்னதோடு சரி. மற்றபடி கொழும்பில் பொ.நா.மாநாட்டை நடத்துவதில் தீவிரம் காட்டுகிறார். மனித உரிமை ஆதரவு நாடகமாடுகிறார் கேமரூன்!

ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சி இலங்கையை பொ.நா.மன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால், அந்நாட்டு அரசு உறுதியாக இராசபட்சே கும்பலை ஆதரிக்கிறது. கொழும்பில் மாநாட்டை நடத்த எல்லா வகையிலும் துணை நிற்கிறது.

சனநாயகம், மனித உரிமைகள் ஆகியவை பற்றி வாய்கிழியப் பேசும் நியூசிலாந்து அரசு, இராசபட்சே கும்பலைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறது.

கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஆர்ப்பர், கொழும்பில் நடக்கும் பொ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்துவிட்டார். அவர் கூறும் காரணம், “உள்நாட்டுப் போருக்குப் பின், போர்க்காலத்தில் நடந்த மனித உயிர்ப் பறிப்புகள் - உரிமைப் பறிப்புகள், எவ்வளவு பேர் காணாமல் போனார்கள் - அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் யார் யார் என்பன போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுத்து, புதிய நல்லிணக்கத்தை உண்டாக்க இராசபட்சே அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்பது தான்.

இந்தக் குறைந்த அளவு ஞாயத்தைக் கூட இந்தியா வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்று, இதனை வலியுறுத்துவோரையும் தடுக்கிறது. பொ.நா.மன்றத்தில் உறுப்பு வகிக்காவிட்டாலும் அதன்மீது செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் வட அமெரிக்காவிற்கு இருக்கிறது. கனடா பிரதமர் எழுப்பும் குறைந்த அளவு மனித நேய - சனநாயகக் கோரிக்கையைக் கூட ஒபாமா ஆட்சி ஏற்கவில்லை.

நடுநிலையாளன் போல் நாடகமாடி, சமரச முயற்சியில் ஈடுபட்ட நார்வே, இராசபட்சேயைப் பாதுகாக்க எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

பொ.நா.மன்றத்தின் சட்ட வல்லுநர் சங்கம் தனது 18ஆவது மாநாட்டை கடந்த ஏப்ரல் 14-18 நாட்களில் தென்னாப் பிரிக்காவின் கேப்டவுனில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட 27 நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் தனியே கூடி பொ.நா. மன்றத்திலிருந்து இலங்கையை இடை நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானம் போட்டார்கள்; கொழும்பில் அம்மாநாட்டை நடத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினர். தலைமை நீதிபதிகளின் இக்கோரிக்கையை கனடா தவிர்த்த பொ.நா.மன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் சட்டை செய்யவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த கமலேசு சர்மா என்பவர் பொ.நா.மன்றத்தின் தலைமைச் செயலாளராக உள்ளார். இவர் இந்திய ஆட்சியாளர்களின் கைக்கருவியாகச் செயல்படுகிறார். ஆரியத்தின் தமிழின வெறுப்பை நெஞ்சில் சுமந்துள்ளார்.

2008-2009 ஆண்டுகளில் இலங்கை அரசு நடத்திய போரில், கூட்டம் கூட்டமாக அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதையும், செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள் போன்ற துயர் துடைப்பு அமைப்புகள் ஈழத்தமிழர் பகுதிகளில் செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டதையும், மனித உரிமைப் பறிப்புகளையும் பொ.நா.மன்றத்தில் உறுப்பு வகிக்கும் நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுவர, பொ.நா. மன்றத்தின் அதிகாரிகள் ஓர் உள்ளக அறிக்கை அணியம் செய்தனர். அதனை 2009இல் சர்மாவிடம் அளித்தனர்.

ஆனால் அந்த அறிக்கையை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பக் கூடாது, வெளியிடவும் கூடாது என்று தடுத்து விட்டார் சர்மா. அதற்கு அவர் கூறிய காரணம், ”இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுச்சிக்கல்; அதில் நாம் தலையிடக் கூடாது” என்பதாகும். கமலேசு சர்மாவின் இந்தக் குரூரத்தை ,வன்மத்தை இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் ஏடு வெளியிட்டு அம்பலப்படுத்திவிட்டது. 2010ஆம் ஆண்டு மேற்படி உள்ளக அறிக்கையை அவ்வேடு வெளியிட்டது.

இலங்கையின் ஒவ்வொரு குற்றத்தையும் மறைக்கும் கூலியாக இந்தியாவைச் சேர்ந்த கமலேசு சர்மா செயல்படுகிறார் என்று கனடாவின் பொ.நா. மன்ற சிறப்புத் தூதர் அக் செகல் கார்டியன் இதழ் நேர்காணலில் (09.10.2013) கூறினார்.

பொ.நா.மன்றத்தின் நிரந்தரத் தலைவர் பிரித்தானியப் பேரரசி எலிசபெத் - 2 ஆவார். அவ்வகையில் பிரித்தானியா அவ்வமைப்பின் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அதைத் தடுக்க அந்நாடு முன்வரவில்லை. இப்போது அக்குற்றம் பற்றி விசாரணை நடத்தவிடாமல் தடுக்கின்ற இராசபட்சே கும்பலுக்குப் பிரித்தானியா துணை போவது ஏன்? தமிழினத்தையும் ஆக்கிரமித்துத்தானே அவர்கள் 200 ஆண்டுகாலம் ஆண்டார்கள். அதற்கான நன்றிக் கடனா இது?

இரண்டு கோடி சிங்களர் பக்கம் நின்று - அதன் அட்டூழியங்களை ஆதரிக்கின்றன பிரித்தானியாவும் பிற நாடுகளும்; பாதிக்கப்பட்டுள்ள பத்துக்கோடி தமிழர்களுக்கு வழங்க வேண்டிய நீதியை வழங்க உலகம் மறுக்கிறது. தமிழ் இனத்திற்கென்று தனியே ஒரு நாடு இல்லை என்பது தான் இதற்குக் காரணம்!

தனி நாடு அமைக்க ஈழத்தமிழர்கள் பக்கம் கைகாட்டித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒதுங்கிக் கூடாது. இந்தியாவில் வாழும் எட்டுக்கோடித் தமிழர்கள் தமிழ்த்தேசம் அமைக்க உறுதி பூண வேண்டும்!

Pin It