நூறாண்டைத் தொடும் திரைப்படத் துறை வரலாற்றில், தமிழ்த் திரைப்படத் துறைக்கு போதாதக் காலமிது. பள்ளிச் சீருடையில் கதா நாயகிகள் காதல் வயப்படுவதும், விதவித மான சட்டவிரோத காரியங் களில் கதா நாயகர்கள் ஈடுபட்டு, “காசு பணம் துட்டு Money money” என ஆடிப் பாடுவதும் வழக்கமாகி விட்டது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மதுக்கடைகள் தமிழ்த் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரம் ஆக்கப்பட்டிருக்கிறது. மது அருந்தாதவன் மனிதனே அல்ல என சித்தரிக்கப்படுகிறது.

இந்தக் கேடு கெட்டநிலையில் தான், தமிழ்த் திரைத் துறையை கரையேற்றி இருக்கிறது, ‘தங்க மீன்கள்’! உலகமயமாக்கலின் தாக்கத்தை ‘கற்றது தமிழ்’ படம் மூலம் முகத்தில் அறைந்தாற்போல் சொன்ன இயக்குநர் ராம், ‘தங்க மீன்கள்’ மூலம் தனியார் பள்ளிகளின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்டி யிருக்கிறார். பரப்புரை தொனி வந்துவிடாமல் தமிழ்த் திரைத் திறமைசாலிகள் ஒட்டுமொத்த மாகத் திரும்பிப் பார்க்கும் வகையில், திரை மொழியை இந்தப் படத்தில் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார், இயக்குநர் ராம்.

‘தங்க மீன்கள்’ திரைப்படத்தின் கதை இதுதான்: கல்யாணி என்கிற கல்யாண சுந்தரம் என்பவரின் மகள் செல்லம்மா மூன்றாம் வகுப்பு படிக்கும் வயதில் (தனியார் பள்ளியில்) இரண்டாம் வகுப்புப் படிக் கிறாள். அவளிடம் கற்றலில் குறை பாடு உள்ளது. ஆங்கில எழுத்தான W க்கும் Mக்குமான வித்தியாசம் தெரியாமல் திணறுகிறாள். அதைக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியை, அந்தக் குறையைக் குத்திக் காட்டும் விதமாக செல்லம்மாவுக்கு கீ எனப் பெயரிட்டு சக மாணவர் களை அழைக்கச் சொல்லி அவமானப் படுத்துகிறார். ஆட்டமும் கொண்டாட்ட முமாக திரியும் செல்லம்மாவுக்கு ‘ஐ ஏம் பார்பி கேர்ள்’ என்கிற ஆங்கிலப் பாடலுக்கு நடனமாடத் தெரிய வில்லை என ஆசிரியையால் வீட்டுக்கு விரட்டி அடிக்கப்படு கிறாள்.

உள்ளூரில் சில்வர் பாத்திரங்களுக்கு பாலீஷ் போடும் வேலை செய்யும் கல்யாணி வேலை நேரம் போக மீதி நேரங்களில் தன் மகளுடனே சுற்றித்திரிகிறான். தந்தையின் செல்லம் அவளைக் கெடுப்பதாக கல்யாணியின் அப்பா (ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்) கருதுகிறார். செல்லம்மாவின் நிலைமைக்கு அவளது அம்மாவின் குணமே காரணம் என்று கல்யாணியின் அம்மா மருமகள் மீது வசைபாடுகிறாள். அந்தச் சூழ்நிலையில் நாள் தோறும் தான் படிக்கும் தனியார் பள்ளியின் புறக்கணிப்புக்கு ஆளாகிறாள் செல்லம்மா.

போதிய வருமானம் இல்லாத காரணத் தாலும் காரில் வலம் வரும் நல்லாசிரியர் விருது பெற்ற தன் தந்தையிடம் கையேந்த விரும்பாமலும் செல்லம்மாவுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்யாணி தவிக்கிறான்.

மகளைப் புறக்கணித்து அவமானப் படுத்தும் பள்ளி ஆசிரியையிடம் விளக்கம் கேட்கும் கல்யாணி, பள்ளி முதல் வரால் மிரட்டப்படு கிறான். பள்ளிக் கட்டணம் செலுத் தத் தவறினால் செல்லம்மா பள்ளியை விட்டு நீக்கப்படுவாள் என்கிற அச்சத்தில் கேரளாவுக்கு செக்யூ ரிட்டி வேலைக்குச் சென்று பணம் ஈட்டி வருகிறான் கல்யாணி.

இதற்கிடையே நடக்கும் நிகழ்வுகளால் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை காயப்படுத்தாத, பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடாத அரசுப் பள்ளிகளே மேம்பட்டது என்கிற மனமாற்றம் கல்யாணிக்கு ஏற்படு கிறது. இதுதான் தங்கமீன்களின் கதை.

பாத்திரங்களுக்கு பாலீஷ் போடும் தொழில் நகரயமாக்கல் இயந்திரமயமாக்கலால் நலிவடை வது கல்யாணியின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய வற்றை போகிற போக்கில் பதிவு செய்கிறார், இயக்குநர்.

அத்துடன் செல்லம்மாவுக்குப் பிடித்த ஆசிரியை எவிட்டாவின் கணவர் சந்தேகப் புத்தி கொண் டவர். செல்லம்மா எவிட்டாவின் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, அவரது கணவருக்கு ஏற்படுகிற மன மாற்றத்தையும் திரைமொழி யில் அற்புதமாகப் பதிவு செய்திருக் கிறார், இயக்குநர் ராம்.

அதிலும் வெறும் இரண்டே காட்சிகளில் வரும் அந்தக் கணவர் கதாப்பாத்திரத்தைக் கொண்டு ஒரு அழகான சிறுகதையை திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இரண்டாவது காட்சியில் அந்தக் கணவர் கதாப்பாத்திரத்தின் முகத் தைக் கூட காட்டாமலே அவரது மனமாற்றத்தைப் பதிவு செய்த விதம் தமிழ்த் திரைக்கு மிக, மிகப் புதிது.

ஆசிரியை எவிட்டா மூலமே, தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் எத்தனையோ விதத்தில் உயர்ந்தவை என்பதை கல்யாணி கண்டுணர்கிறான்.

உயர்க்கல்வி முடித்து ஆஸ்தி ரேலியாவில் வாழ்க்கைப் பட்ட கல் யாணியின் தங்கை கதாப் பாத்திரம் தன் மகனிடம் சாக்லெட் கேட்டு அடம்பிடிப்பதன் மூலமும், செல் லம்மாவின் புகைப்படத்தை சுவற் றில் தொங்க விடுவதன் மூலமும் தமிழ்த் திரைப்படங்களின் கிளிசே ஃபார்முலாவை (ஒரே மாதிரி படங்கள்) மூட்டை கட்டி வீசி எறிந்திருக்கிறார் இயக்கு நர்.

கேரளாவில் வேலை செய்யும் தன் தந்தையிடம் செல்லம்மா வெளிநாட்டு உயர்ரக நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வரச் சொல்கிறாள். அதற்காகவெளிநாடுகளுக்கு கலைப் பொருட்களைவிற்கும் நிறுவனத் திடம் மிகவும் அரிதான மலைவாழ் மக்களின் இசைக் கருவியை கல்யாணி விற்று விடுகிறான். உலகம யமாகலில் நம் முடைய பாரம்பரி யங்கள் எப்படி அழித்தொழிக்கப் படுகிறது என்பதை இதைவிட எளிமையாக யாரும் காட்சிப்படுத்தி விட முடியுமா?

தனியார் பள்ளி ஆசிரியை களுக்கு, “சம்பளம் கம்மி, வேலைப் பளு அதிகம்” என்று அவர்களின் சிக்கலையும் சுட்டிக்காட்டத் தவற வில்லை இயக்குநர். டிவிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து நம் குழந்தைகள் தகுதிக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொள்கி றார்கள் என்பதையும் சொல்லியி ருக்கிறார். இதனால் பெற்றோர் படும் பாட்டையும் காட்சிப்படுத்தி யிருக்கிறார்.

செல்லம்மாவின் தோழியாக வரும் சிறு பிள்ளை அம்மா சுட்டுத் தரும் பூரிக்காக தன் சோகங்களை மறைத்துக் கொள்வது, குழந்தை களின் உலகிற்கே பார்வையாளர் களை இட்டுச் செல்கிறது.

“அரசுப் பள்ளியில் வேலை செஞ்சுதானே நல்லாசிரியர் விருது வாங்கினீங்க? அரசுப் பள்ளியில படிச்சுத்தானே வெளிநாட்ல போயி வேலை பாக்கற” என்பது போன்ற உரையாடல்கள் இந்தப் படத்திற் குப் பலம் சேர்ந்துள்ளன.

தங்க மீன்கள் கதாப்பாத்திரங்கள் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். யாரும் யாருக்கும் சோடை போகவில்லை. கல்யாணியாக பிரதானக் கதாப்பாத்திரம் ஏற்றிருக்கும் இயக்குநர் ராமின் நடிப்பு மிகை இல்லாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. செல்லம்மா நம் வீடு களில் சுற்றித் திரியும் குழந்தை யாகவே வந்து போகிறாள்.

“ஆசிரியைகள் குளக்கரையில் அமர்ந்து அல்ல.. குளத்துக்குள் நீந்திச் சென்று தங்கமீன்களை பிள்ளைகளுக்குக் காட்ட வேண் டும்” என்கிற கருத்தை மிகவும் அழ காகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கும் இந்தத் ‘தங்க மீன்’களை தமிழ்த் திரைப்படத்துறையினரும், தமிழ் ஆர்வலர்களும், சமூக செயல் பாட்டாளர்களும் இருகரம் நீட்டி வரவேற்கலாம்.

Pin It