நேர்காணல் : நா. இராசா ரகுநாதன் 

முப்பத்திரெண்டு மாத சிறைவாசம், பத்தாண்டு கால நீதி மன்ற அலைச்சல், ஆய்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடா வண்ணம் ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சல் இவற்றிலிருந்து விடுபட்டு கடந்த 30.5.2013 அன்று கர்நாடக அரசு போட்ட பொய் வழக்கிலிருந்து நீதி மன்றத்தின் மூலம் விடுதலைப் பெற்றார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்.

புலம் பெயர் தேசத்தில் வாழும் ஒருவன் விடுதலைப் பெற்ற தன் தாயகத்திற்கு திரும்பினால் எவ்வளவு மன நிறைவுடன் இருப்பானோ அது போன்றதொரு மன நிறைவில் இருந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தம் சிறை அனுபவங்கள், வழக்கு விசாரணை, எதிர்காலத் திட்டம் இவைகள் பற்றி தமிழ்த் தேசியத் தமிழர்கண்ணோட்டம் இதழுக்கு வழங்கிய செவ்வி.

உங்கள் மீது போடப்பட்ட வழக்கினைப்பற்றி?

காவிரி சிக்கலுக்காக அப்போதைய முதல்வர் சில நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுது பெங்களூரில் ஒரு பதட்டம் ஏற்பட்டது. தமிழ்த் தொலைக் காட்சிகளெல்லாம் நிறுத்தப்பட்டன. வன்முறைகள் அரங்கேறுமோ என்ற அச்சம் பரவிய நிலையில் கர்நாடக காவல்துறை இப்படி ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. பெங்களூர் ஃபிரேசர்பவுன் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சோடிக்கப்பட்ட இவ்வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் இருவர் தலைமறைவாகி விட்டதாக அறிவிக்கப்பட்டனர். 13 பேரில் சிறையிலேயே ஒருவர் இறந்து விட்டார். பிணையில் வெளிவந்து இருவர் இறந்துவிட்டனர்.

32 மாதம் நான் சிறையில் இருந்தேன். பிணை கூட மறுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு பிறகே மற்றவர்களுக்கும் சிறைகதவுகள் திறந்தன.

2004இல் வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. பிணைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு பொய்யான காரணம் காட்டி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி தள்ளுபடி செய்தாலும் இந்த வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கப் பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. மேலும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்கு கட்டுகளை அந்த சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

அதன்படி நீதியரசர் அரளிநாகரசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கு கட்டுகள் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படவில்லை. நீதியரசரின் வற்புறுத்தலுக்குப் பிறகு கால தாமதமாக கட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

ஆனால் வழக்கை விரைந்து நடத்த போதுமான ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் நீதியசரே உயர் நீதிமன்ற ஆணையை சுட்டிக்காட்டி “வழக்கை விரைந்து நடத்தியிருந்தால் பாதிக்கப்பட்டோர் விடுதலையாகி இருப்பார்களே’’ என்று தம் ஆதங்கத்தை வெளியிட்டார். பின்னர் வேறொரு நீதிபதி நியமிக்கப்பட்டார். இப்படியாக 18 நீதிபதிகள் விசாரித்த இவ்வழக்கில் 18ஆவதாக நியமிக்கப்பட்ட நீதியரசர் திரு. எம்.எஸ்.பாலகிருஷ்ணா அவர்களே இந்த நல்ல தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள்.

வழக்கு எண் மற்றும் விடுதலைப் பெற்றவர்கள் பற்றி?

SC NO: 471/2003 , Crime No: 472/2. விடுதலைப் பெற்றவர்கள்: அறிஞர் குணா, சீனிவாசன் என்கிற சிவக்குமார், ஜான் செல்வராஜ், டி.குமார், இரா.சீனிவாசன், போதேந்தர் ரவி, சத்தியராஜ், முருகன் என்ற முருகானந்தம், அல்சூர் ரவி, பேராசிரியர் க.நெடுஞ்செழியன்.

உங்கள் கைது பற்றி?

04.07.2003 அன்று காலை நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது சிலர் என்னை பின் தொடர்ந்து வீட்டிற்கு வந்தனர். பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் பி.காம்., சேர இடம் வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்த அக்கர்நாடக காவல் துறையினர், என்னை கைது செய்து பெங்களூர் அழைத்துச் சென்றனர். 32 மாத சிறைவாசத்திற்கு பின் உச்ச நீதிமன்றத்தில் பிணை பெற்று 16.02.2006இல் வெளிவந்தேன்.

சிறை வாழ்க்கைப் பற்றி?

கைது செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக என் துணைவியார் படித்து கொண்டிருந்த அம்பேத்கர் நூலிருந்து ஒரு செய்தியைப் படித்துக் காட்டினார். இலண்டனிலிருந்த அம்பேத்கரிடம் செய்தியாளர்கள் “இந்தியாவிலிருந்து வரக்கூடிய தலைவர்களெல்லாம் எங்கள் நாட்டு உணவை குறை கூறுகிறார்கள். ஒத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். அம்பேத்கர் “ஏழைகளுக்கு எல்லா நாட்டு உணவுகளும் சொந்த நாட்டு உணவுதான்’’ என்றார். இதை அவர் படித்துக் காட்டியபொழுது இது போன்றதொரு கேள்வியை ஒரு சில நாட்களுக்குள்ளாகவே நான் எதிர் கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. சிறைக்குப் போன சில நாட்களிலேயே ஒரு தோழர் சிறை உணவு எப்படி? என்று கேட்டார். நான் சிரித்துக் கொண்டே சொன்ன பதில் இலண்டனில் அம்பேத்கர் சொன்ன பதில்தான். சிறை உணவு பற்றி நான் எழுதிய “எத்தனை நாளைக்கு இன்னும் எத்தனை நாளைக்கு’’ எனும் கவிதை தென் செய்தி இதழில் வெளிவந்தது. சிறைச்சூழலில் மனதையும், உடலையும், பேண உறுதி எடுத்துக் கொண்டேன். அதன் பொருட்டு காலை 8.00 மணிமுதல் 10.30 வரை யோகப் பயிற்சி தொடர்ந்து செய்வேன். அதனால் உடலும், மனமும் வசமாயின.

முதல் நாள் கொடுத்த களி உருண்டை காய்ந்த ஆரஞ்சுப்பழம் போல இருக்கும். களி உருண்டையின் மேல் பகுதியை பழத்தின் தோலை உரிப்பது போல் உரித்து எடுத்து விட்டு முதல் இரவிலேயே ஊறப்போட்டிருப்பேன். யோகாசனப் பயிற்சி முடித்துவிட்டு 10.30 மணிக்கு அதை கறைத்துக் குடிப்பேன். காலை உணவு அதுதான். நீர்த்தக் குழம்பும், கொட்டை கொட்டையான கஞ்சிப் பசையற்ற அரிசிச் சோறும் பிற்பகல் உணவு. இச்சூழலில் உடல் நலத்தைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? யோகாசானம் செய்ததன் விளைவாக குறைவான உணவிலேயே உடலுக்கு தேவையான ஆற்றலைப் பெற முடிந்தது.

சிறை வாழ்க்கையின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வு?

நான் சிறையிலிருந்த காலத்தில் எங்களின் விடுதலைக்காக தமிழகத்தில் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாக கர்நாடக அரசே “பேராசிரியர் நெடுஞ்செழியன் சிறையில் பத்திரமாக உள்ளார். என்று அறிக்கை விடக்கூடிய சூழல் ஏற்பட்டது. இந்நிலை உருவாக பங்களித்த தமிழக உறவுகள் அனைவரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

வழக்கு விசாரணை பற்றி?

வழக்கறிஞர் சு.க.மணி அவர்கள் வழக்காடிய விதம் மிகப்பெரிய வியப்புக்குரியதாகும். அவரின் வாதம் ஒரு நாள் 2 மணி நேரம் நீடித்தது. சட்ட நுணுக்கங்கள் பற்றி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி அவர் எடுத்துகாட்டி வாதிட்ட முறையானது தலைசிறந்த பேராசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல இருந்தது. வழக்கின் பொய்மைகளை அம்பலப்படுத்திக் கொண்டே வந்த வழக்கறிஞர் “இந்த வழக்கு ஒரு செத்த குதிரை. அதன் நாற்றம் சகிக்கவில்லை’’ என்று சொன்ன போது நீதிமன்றமே சிரிப்பில் மூழ்கியது.

சிறை வாழ்க்கை காலத்தில் தங்களின் எழுத்துப் பணி எவ்வாறு இருந்தது?

நன்றாகவே இருந்தது. அந்த வகையில் “தமிழர் கண்ணோட்டத்தின்’’ பங்கு மகத்தானதாகும். நான் எழுதிய கட்டுரைகளை அவ்வப்பொழுது வெளியிட்டு என் இருப்பை உலகிற்கு உணர்த்தியது. ஆய்வுப் பணி ஒரு புறமும், கவிதைப் பணி மறு புறமுமாய் என் நேரம் பயனுள்ளதாகவே கழிந்தது. அந்த வகையில் தமிழர் கண்ணோட்டம், தென் செய்தி, ஆகிய இதழ்கள் என் நன்றிக்கு உரியன. இக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளே பின்னர் “சங்கால தமிழர் சமயம், தமிழரின் அடையாளங்கள், சித்தன்ன வாயில் எனும் மூன்று நூல்களாக வெளி வந்தன. இதில் தமிழரின் அடையாளங்கள் “தமிழக அரசின் முதல் பரிசையும், “சித்தண்ண வாயில்’’ கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதினையும் பெற்றன.

சிறைக்காலக் கவிதை பற்றி?

“மண்டி இட மாட்டேன்’’ எனும் தலைப்பில் “தமிழர் கண்ணோட்டம்’’ இதழில் வெளிவந்த என் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

“பொய் வழக்குப் போட்டு- என்

புகழையெல்லாம் தீய்த்து

கைவிலங்கு மாட்டியெனை

கடுஞ்சிறையில் பூட்டி

வெங்கொடுமைச் செய்தாலும்

நான் வீழ்ந்துவிட மாட்டேன்

பங்கமெலாம் கண்டு

நான் பயந்து விடமாட்டேன்

வஞ்சகத்தின் முன்னே

நான் மண்டியிட மாட்டேன்” என தொடங்கும் அந்தக் கவிதை என்னையே எனக்கு அடையாளம் காட்டியது.

தங்களின் எதிர்காலத் திட்டம்?

பசுமாட்டை கைபிடித்து மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் வீட்டிற்கு திரும்ப நினைக்கிற பொழுதுதான் மாடு அவசர அவசரமாக மேயும். அத்தகைய ஒரு அவசரத்தில்தான் நான் இருக்கிறேன். நிறையப் பணிகள். ஆய்வுலகில் வெளிப்படுத்த வேண்டிய பல்வேறு வரலாற்று உண்மைகள். இவையெல்லாம் கன்னி நிலங்களாய் காத்துக் கிடக்கின்றன. உலகிற்கு தமிழ் வழங்கிய கொடைகள் பல. அந்தக் கொடைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவற்றையெல்லாம் அடையாளம் கண்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பு கண்முன்னே விரிந்தபடி கிடக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.

Pin It