(மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், கேரளத் தமிழர் கூட்டமைப்பின் சட்ட ஆலோசனைக்குழ்வின் தலைவருமான மூத்த வழக்கறிஞர் தோழர் த.பானுமதி அவர்களிடம் கலந்துரையாடியதன் உள்ளடக்கம்)

கனன்று கொண்டிருக்கும் நெருப்புத் துண்டுகளின் மீது நீர்த்துளிப்பட்டால் எழும் வெண்சாம்பால் நிறப்புகை போல மூணாறு மலைச்சரிவுகளின் தேயிலைக் காடுகளின் பசுமை வேர்களில் வார்க்கப்படும் தமிழர்களின் கண்ணீரே பனிப்படலமாய் படர்ந்து கிடக்கிறது. தேயிலைத் தோட்ட நிறுவனங்களுக்குக் கொழுத்த இலாபத்தையும் சுற்றுலா மூலம் கேரள அரசிற்கும் அள்ளித் தரும் செல்வமும் எள்முனையளவு கூட அவ்வருவாய்க்கு காரணமான மூணாறுத் தமிழர்களின் அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

அறிவியல்யுகம், கணினிக்காலம் என உலகம் விரைந்தோடிக் கொண்டிருக்கையில் கல்விச்சாலைகள், மருத்துவவசதிகள், சொந்தமாக கையளவு மண் என எதுவுமில்லாத மக்கள்; இன்னும் சொல்லப்போனால் சாதிச்சான்றிதழ் கூட மறுக்கப்படும் அடிமைகளாக தமிழர்கள் மூணாறு தேயிலைக்காடுகளில் சிறைப்பட்டு கிடக்கின்றனர்.

கடும் குளிர், கொட்டும் மழை, இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், இவற்றோடு போரிட்டு விரல் மழுங்க கொழுந்து பறிக்கும் தமிழர்களுக்கு நாள் கூலி வெறும் ரூ.185/- மட்டும்தான்.

தொழிற்சங்கங்கள்:

மூணாறு மலைச் சரிவுகளை மூன்று பெரும் தேயிலை நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளன. தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் அது சி.பி.எம்.இன் சி.ஐ.டி.யு, ஆயினும் சி.பி.ஐ.இன் ஏ.ஐ.டி.யு.சி. ஆயினும் காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி. ஆயினும் டாடாவின் தொழிற்தரகரர்களாக; பண்ணை அடியாட்களாகவே செயற்படுகின்றன.

குறிப்பாக கூட்டுறவுக்கடன் சங்கங்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிக வட்டி வசூல் செய்து அந்தப் பணத்தை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுரண்டிக் கொழுக்கின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரிய எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றுவதில்லை. கடன் பெறுவதற்கே கூட இடைத்தரகர்கள் இன்றி பெற முடியாது. உழைக்கும் மக்களை உய்விக்கத் தோன்றியதாக மார்த்தட்டிக் கொள்ளும் பொதுவுடைமை இயக்கங்கள் மூன்றாந்தர அரசியல் இயக்கங்களினும் கீழாகச் செயல்படுகின்றன. டாடா பங்களாக்களில் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் தொழிற் சங்க பிரதிநிதிகள் நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்துக் களைத்தத் தமிழர்களுக்கு கையலக நிலம் பெற்றுத் தரக் கூட முன் வரவில்லை.

அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி வெறும் மருத்துவமனைக் கட்டடங்கள் மட்டுமே உள்ளன. காய்ச்சல், தலைவலிக்குக் கூட தேனிக்கும், கோட்டயத்துக்கும், செல்ல வேண்டிய சூழல், வெறும் ரூ 184/- மட்டுமே கூலி. கூலித்தொழிலில் நூறு வீதம் தமிழர்களே. மலையாளிகள் கீழ்நிலை வேலை செய்யத் தயாரில்லை. கந்து வட்டிக்கொடுமை மூணாறு மலையெங்கும் பரவிக் கிடக்கிறது.

கல்வி:

போதிய கல்விச் சாலைகள் இல்லை. குறைந்த கூலிவருமானத்தில் தொலைதூரம் சென்று தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமல் தலைமுறை தலைமுறைகளாய் தேயிலை நிறுவனங்களுக்கு கூலிகளை பெற்றுத்தரும் இயந்திர வாழ்க்கையே தமிழர்களுக்கு வாய்த்துள்ளது.

இதனையும் மீறி தமிழர்கள் படித்தாலும் வேலைவாய்ப்பு இல்லை. மலையாளம் படித்திருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்கின்றனர்.மொழிச் சிறுபான்மையினருக்கு உரிய எந்த உரிமைகளும் மூணாறுத் தமிழர்களுக்கு இல்லை.

அரசியல் உரிமை:

மூணாறில் உள்ளத் தமிழர்கள் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. மீறி அனுமதி தந்தாலும் “அரசியல் பேசக் கூடாது, கேரள அரசை, மக்களை விமர்சிக்கக் கூடாது என்ற நிபந்தனைகளின் பேரிலேயே அனுமதி தரப்படும்.

அண்மையில் மூணாறில் ஒரு தேவாலயக் கட்டிடத்தில் நடந்த காது குத்து நிகழ்ச்சிக்கே கூட மேற்கண்ட நிபந்தனைகளை கேரள காவல்துறையினர் விதித்துள்ளனர். குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை மீட்புப் போராட்டம் தமிழகத்தில் எழுச்சி பெற்றதற்குப் பின்னால் மூணாறில் தமிழர்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர். இதன் விளைவாக எப்போதும் அச்சத்தோடே தமிழர்கள் வாழ்கின்றனர்.

கேரளா சட்டமன்றம் வெளி மாநிலத்தவரைக் கணக்கெடுக்கும் தீர்மானத்தை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. இது இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழர் களைக்குறிவைத்தே நடத்தப்படுகிறது. தலை முறையாக அம்மண்ணில் வாழும் தமிழ் மக்களை மொழிச்சிறுபான்மையினராகவும் இன்றி கேரளத் தமிழர்களாகவும் இன்றி அரசியல் அச்ச உணர்வில் அவர்களை வைத்திருக்க கேரளஅரசு திட்டமிடுகிறது. மேலும் கேரள அரசோடு தில்லி நடுவண அரசு கூட்டு சேர்ந்து இடுக்கி மாவட்டத்தில் தேசிய வன உயிரியல் பூங்காக்கள் அமைப்பதாகச் சொல்லி தமிழர்களை வெளியேற்றத் துடிக்கிறது.

சாதிச் சான்றிதழ்:

மூணாறில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்களில் 90% தமிழர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பினரே. இவர்கள் கல்வி உரிமைப் பெற்று முன்னேறி விடக்கூடாது என்ற வஞ்சகத்தால் கேரள நிர்வாகம் இவர்களுக்கு சாதி சான்றிதழ் தர மறுக்கிறது. சாதி சான்றிதழ் வேண்டு மெனில் 1951 லிருந்து இடுக்கி மாவட்டத்தில் அவர்கள் வாழ்வதற்கான சான்றுகளை சமர்பிக்க வேண்டும். குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் பணியிட அடையாள அட்டையும் வைத்துள்ள தமிழர்கள் சாதி சான்றிதழுக்கு மட்டும் 1951 லிருந்து இடுக்கி மாவட்டத்தில் வசிப்பதற்கான குடியுரிமை ஆதாரங்களை கொடுக்க வேண்டுமாம். இது என்ன நீதி?

ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு அரசியல் சட்ட அடிப்படையில் உரிமைகளை மறுப்பதற்கே கேரள இனவெறி அரசு இத்தகைய முட்டுக்கட்டையைப் போடுகின்றது.

கேரளத் தமிழர் கூட்டமைப்பு:

ஒரு தமிழ் தொழிலாளியின் மூலம் நாளொன்றுக்கு ரூ. 1700/- இலாபம் சம்பாதிக்கும் தேயிலை நிறுவனங்கள் வெறும் ரூ 184/- மட்டுமே கூலியாக கொடுப்பதும், தொழிற்சங்கங்கள் இடைத் தரகர்களாகவும் அடியாட்களாகவும் செயல்படுகையில், இனவெறிப்போக்கோடு தமிழர்களுக்கு எதிராகக் கல்வி மறுப்பு, வேலை வாய்ப்பு மறுப்பு, சாதி சான்றிதழ் பெறத்தடை, வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சி, அரசியல் உரிமை மறுப்பு என கேரள அரசாங்கத்தின் செயல்பாடுகள். இந்தச் சூழலில்தான் தங்களைத் தற்காத்துக் கொள்ள சுரண்டலிலிருந்து விடுபட மூணாறுத் தமிழர்கள் விழிப்புப் பெற்று கேரளத் தமிழர் கூட்டமைப்பை ஏற்படுத்தி யுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 14,- 2013 அன்று அம்பேத்கர் பிறந்த நாளை கேரளத் தமிழர் கூட்டமைப்பும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் விரிவாகக் கொண்டாடினர். காலை 10.30. தொடங்கி மாலை 4.00 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் குரலை மூனாறு மலைச் சரிவுகளில் எதிரொலித்து கேரள அரசாங்கத்தின் திறவாக் கதவுகளைத் தட்டிய இந்நிகழ்வு மூணாறு தமிழர்களுக்கு புது நம்பிக்கையை, வெளிச்சத்தை காட்டியது.

மூத்த வழக்கறிஞர் தோழர் பானுமதி அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கேரள அரசு டாடா, நிர்வாகம், சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு,சி. ஆகிய தொழிற் சங்கங்களின் ஒடுக்குமுறை, சுரண்டல்களை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

கேரளத் தமிழர் கூட்டமைப்பின் தலைவராக திரு.மன்னர் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக தோழர் திரு.ஜெயபால் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இக்கூட்டமைப்பிற்கு வழி காட்டவும் சட்ட உதவிகள் செய்யவும் வக்கறிஞர் தோழர் த.பானுமதி அவர்கள் தலைமையில் திரு அருணாச்சலம், திரு கதிர்வேல் திரு சிவசாமித்தமிழன் ஆகியோரை உள்ளடக்கிய சட்ட ஆலோசனைக் குழுவும் ஏற்படுத்தப்பட்டது.

மூணாறுத் தமிழர்களின் எழுச்சி கேரளத் தமிழர்களின் வாழ்வில் படர்ந்துள்ள துயரப்பனியை விரட்டி புது விடியலைத் தரும். அதற்குத் தாய்த் தமிழகம் துணைநிற்க வேண்டி யது வரலாற்றுக் கடமை.

எழுத்து – நா. இராசா ரகுநாதன்

Pin It