அகமுடை நம்பியின் நூலை முன்வைத்து... 

"நமக்குத் தொழில் கவிதை 

நாட்டிற்கு உழைத்தல் 

இமைப்பொழுதும் சோராதிருந்தல்" 

- என்று இதைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட மகாகவி பாரதியைப் பற்றி க.சி.அகமுடை நம்பி எழுதிய "பாரதிப் பாவலன் (குணம் நாடிக் குற்றம் நாடி...)" என்கிற திறனாய்வு நூல் வெளிவந்துள்ளது. 

'குணம் நாடி- குற்றம் நாடி - அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்' என மூன்று தலைப்புகளில் மூன்று பகுதிகளாகப் பிரித்து பாரதியைப் பற்றிய தமது ஆய்வை மேற்கொண்டுள்ளார் அகமுடை நம்பி. இம்மூன்று பகுதிகளில் 'குற்றம்நாடி' பகுதி "மகாகவி பாரதியின் மறுபக்கம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மானுடம் போற்றிய பாரதி, எளியோர்க்கு இரங்கும் அருளாளன், சாதி வேறுபாடுகளுக்கு எதிரானவன், பெண்மையைப் போற்றிய பாவலன், அறிவார்ந்த சமுதாயம் காண பெருவிருப்பம் கொண்டவன் பாரதி, பாரதியின் ஆளுமை, பாரதி ஓர் இயற்கைக் கவிஞன், உலகுக்காகப் பாரதி வேண்டுகிறான்- ஆகிய தலைப்புகளின் கீழ் "குணம்நாடி" பகுதியில் பாரதியின் பலவித மேன்மைகள் பற்றி புகழ்ந்துரைக்கிறார் நூலாசிரியர். ஆனால், நூலின் "குற்றம்நாடி" பகுதியில் - இந்துத்துவ வாதிகளுக்கு பாரதி துணை போகிறான், வைதிகத்திலிருந்து பாரதி விடுபடவில்லை, பிராமணரல்லாதார் இயக்கங்களை பாரதி வெறுத்தான், பாரதி புதுச்சேரிக்குச் சென்றது ஒரு தப்பிக்கும் செயல்பாடு - இந்து மதப்பற்று, நாலுவர்ணப்பாகுபாடுகள், ஆரியம் ஆகிய தலைப்புகளின் கீழ் குற்றச்சாட்டுத் தொனியில் பாரதியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

"உரை நடையில் எழுதும் போதெல்லாம் பார்ப்பனீய உணர்வு அவனிடம் மேலோங்கிவிடுகிறது. தமிழ் உணர்வு அப்போது அவனிடமிருந்து விலகிக் கொள்கிறது" - என்கிறார் குற்றம் நாடி பகுதியில் அகமுடைநம்பி. பாவேந்தர் பாரதிதாசன் சொற்களில் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் என்றும், செந்தமிழ்த் தேனீ என்றும் போற்றப்படுகிற பாரதியின் உரை நடை பார்ப்பனீய உணர்வு மேலோங்கியதாகக் கூறுவது சரியா? உரைநடைத் தமிழை வளர்த்தவன் என்றல்லவா பாரதியை அறிவுலகம் போற்றுகிறது? மிகை நாடி மிக்க கொளல் பகுதியில்கூட, "தாய்த் தமிழ் மீது பற்றுமிக்கவன் பாரதி" என்கிற தலைப்பின் கீழ், "பாரதியின் தாய்மொழியாகிய தமிழ் மீது பாரதிக்கு அளவற்ற பற்று இருந்தது. இதனை வெளிப்படுத்துகின்ற நிகழ்வுகள் பாரதியின் வாழ்வில் பலவற்றைக் காணலாம்" என்கிறார் நூலாசிரியர். 

இவ்வாறு கூறுகிறபோதே, குற்றம் நாடியில், "பாரதியின் உரைநடை எழுத்துக்களெல்லாம் பிராமணத் தமிழில்" இருப்பதாகவும் விமர்சிக்கிறார். அதாவது, பாரதியின் உரைநடைத் தமிழில் சாதியைப் பார்க்கிறார். "பாரதியின் உரைநடை எழுத்துகளெல்லாம் மணிப்பிரவாள நடையில்இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" எனவும் ஒரு விமர்சனமாகக் கூறுகிறார். 

பாரதியின் உரைநடை மட்டுமென்ன, நூறாண்டுகளுக்கு முந்தைய அவர் காலத்துத் தமிழ் உரைநடையே சமஸ்கிருதச் சொற்கள் கலந்த மணிப் பிரவாளம் தானே? தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், படித்த மக்கள் எல்லாரும் மணிப்பிரவாள தமிழில்தானே எழுதினர்? ஏதேனும் ஒரு சாதியில் பிறந்துவிட்ட படித்த எல்லாரும் இப்படித்தான் எழுதினர். உதாரணத்திற்கு பாரதி காலத்தில் "ஒரு பைசா தமிழன்" வார இதழின் (19.6.1907) உரைநடை இது: 

"உலகின் பல கலை யோதியுணர்த்தும் உத்தம, மத்திம, அதமமென்னும் ஊழுணரா நிலை குலையு மக்கட்கு நீதியும், நெறியும் வாய்மையும் புகட்டி வளமோங்கச் செய்வான் வேண்டி தத்துவ சாஸ்திரங்களிற் சிலரும் கதை சாஸ்திரங்களிற் சிலரும் வித்தியா சாஸ்திரங்களிற் சிலரும் ஒன்றுகூடியிப் பத்திரிகையை ஒரு பைசா தமிழனென வெளியிட்டிருக்கிறோம்." 

இன்னும் பார்ப்போம். இது பாரதியாரின் தோழரும், தொழிலாளர் தலைவருமான வி.சர்க்கரை செட்டியாரின் உரைநடை:  "பாரதியார் இதர நண்பர்கள் சிலர் சேர்ந்த ஸ்வதேசி வஸ்து பிரச்சார சபை என்று ஒரு சபையைத் தோற்றுவித்தோம். தேசிய அரங்கில் காந்திஜியின் தலைமை ஏற்படாத கட்டம். ஸ்வதேசியைப் பரப்ப இந்த ஸ்தாபனம் அரும்பணி செய்தது. பாரதியார் இதன் ஜீவநாடி" 

(1955 செப்டம்பர் 11ம்தேதிய "ஜனசக்தி" இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து) 

அந்தக் காலத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் உரைநடை மட்டுமல்ல, பத்திரிகைகளின் பெயர்கள் கூட தேசபக்தன், சர்வஜன மித்ரன், சுயராஜ்யா.. என்றவாறுதான் இருந்தன. 1935இல் பாவேந்தர் பாரதிதாசன் துவக்கிய ஏட்டின் பெயர் கூட "ஸ்ரீசுப்பிரமணிய கவிதா மண்டலம்"தான். (1940-ல் துவக்கியது "குயில்") 

சிறுவர் இதழ்கள் கூட "பாலதூதன்" (1905), "பாலிய சஞ்சாரி" (1912), "பாலவிநோதினி" (1918) என்றவாறுதான் இருந்தன. சென்னையில் 1878இல் துவக்கப்பட்ட நாத்திக இதழின் பெயர்கூட "தத்துவ விசாரணி இது 1882 ஜூலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயர் "தத்துவ விவேசினி" 

"இங்கிலாந்து மஹாராஜாத்தியவர்கள் ஸ்கொத்லாந்தில் உள்ள மாளிகையில் வசிக்கிறார்கள். அவர் சேஷ்டபுத்திரர் பத்தினியும், ஸ்டாங்கம் என்னும் அரண்மனையில் வாசமாயிருக்கிறார்கள். ப்ரின்ஸ் அவ்வேல்ஸ் சில நாள் டூப்லிஸர் - ராஜா விஷயத்தில் தங்கும்படி போயிருந்தார்."- இது பாரதிக்கு முந்தைய காலத்தில் வெளிவந்த "நற்போதம்" என்ற (1874 ஜனவரி) பத்திரிகையின் உரைநடை. இது 19ம் நூற்றாண்டு பிற்பகுதியின் உரைநடைக்கு ஓர் உதாரணம். இத்தகைய கடின நடையிலிருந்து பாரதி காலத்திய தமிழ் உரைநடைமேம்பட்டதுதான் என்பது சொல்லாமலே விளங்கும். 

மணிப்பிரவாள நடையில் எழுதினாரென்றால் அது அவர் காலத்து உரைநடைத் தமிழ். ஒருபத்திரிகையாளனாகவும் இருந்தபாரதி அதை எளிமைப்படுத்தி வளர்க்கவும் செய்தார். பாரதியை அவரது காலத்தோடும் சூழலோடும் இணைத்துப் பார்க்க வேண்டும். அவர் அந்தக் காலத்தின், சூழலின் மனிதர். அவற்றிலிருந்து முன்னோக்கி பயணிக்கவும் செய்தவர். 

அவரது உரைநடை எல்லாமும் முழுக்க மணிப் பிரவாளம் அல்ல. அவரது உரைநடைக் கவிதையில்தெளிந்த தமிழ் நடையைக் காணலாம். பாரதியின் ஆத்திச்சூடியில் உள்ள "ரௌத்ரம் பழகு" என்பதில் ரௌத்ரம் எனும் வடமொழிச் சொல் இருப்பதால் அந்தச் சொற்றொடர் பார்ப்பனீய உணர்ச்சி கொண்டதாகவும், "அச்சம் தவிர்" என்பதில் வடமொழிச் சொல் இல்லாததால் அந்தச் சொற்றொடர் தமிழ் உணர்ச்சி கொண்டதாகவும் இனபேதம் கற்பித்தால் சரியாக இருக்குமா? 

"ஏழை யென்றும் அடிமை யென்றும் 

எவனும் இல்லை ஜாதியில் 

இழிவு கொண்ட மனித ரென்பது 

இந்தியாவில் இல்லையே" 

- என்று சுதந்திர இந்தியாவின் உயர்நிலையைக் கனவு கண்ட பாரதியின் கவி வரிகளை நூலாசிரியர் தமது முன்னுரையில் புகழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்க, "இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பது எதற்காக? வேதாந்தம் இந்தியாவில் முழுமையாக ஆளுமை செய்ய வேண்டும் என்பதற்காக. இதுதான் பாரதியின் உயிர் மூச்சாக இருந்தது" என்று குற்றம் நாடி பகுதியில் கூறியிருப்பது முரணாகத் தெரிகிறதே!. 

"முப்பது  கோடிவாய் முழங்கவும்" 

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்" 

"முப்பது கோடி முகமுடையாள்" 

"முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் 

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்" 

என்று, பாரதி தனது காலத்து இந்தியாவின் முப்பது கோடி மக்கள் முழுமையையும் தனது பாடங்களிலும் வசனங்களிலும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறிருக்க, நூலாசிரியர் "... இருபது கோடி இந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை" - என்று பாரதி சொன்னதைக் குறிப்பிட்டு, "இருபது கோடி இந்துக்களை மட்டுமே ஒரே குடும்பம் என்று பிரித்துப்பார்ப்ப"தாகவும் பாரதியிடம் குற்றம் சாணுகிறார். அவர் பிற மதங்களைச் சார்ந்த மக்களைப் புறக்கணித்துவிட்டு சொன்ன வாசனம் அல்ல இது. அப்படிப் புறக்கணித்தும் அவர் கூறவில்லை. "வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் முப்பதுகோடி" என்றாரே, இதுபோல பல சந்தர்ப்பங்களிலும் "முப்பது கோடி" என்று அனைத்து மதங்கள் சார்ந்த மக்களையும் ஒருங்கிணைத்துச் சொல்லியிருக்கறாரே, இவையெல்லாம் பொருளற்றனவா? 

"பாரதி போன்ற மகாகவிகளிடம் முரண்பாடுகளும் காணப்படும். சிக்கலான மனோபாவம் கொண்டவன் பாரதி. பார்ப்பனீயம் என்ற லேபிளை அத்துணை இலகுவில் அவனுக்கு ஒட்டி விட முடியாது" என்று இந்நூலில் உள்ள தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பியின் சரியான கருத்தானது, பாரதியை இந்துத்துவவாதியாகவும், இந்துத்துவவாதிகளுக்குத் துணைபோகிறவனாகவும் குற்றம் நாடியில் கூறுகிற கடும் விமர்சனத்திற்கும் பொருந்தும். 

"ஒரு முதலாளிய நிலைபாட்டில் வாழ்ந்து சென்ற பாரதியை, இந்துத்துவவாதிகள் போற்றிப் பாராட்டுகிற கவிஞனை மார்க்சியவாதிகள் எந்தக் காரணத்துக்காகத் தம்முள் ஒருவனாகக் கருதுகிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது" என்றும், "ருஷ்யப் புரட்சியைக் கூட அவன் மாகாளி கடைக்கண் வைத்ததின் பேறு என்றுதான் சொன்னான். தொழிலாளிகளின் வெற்றி என்பதை அவன் கண்டு கொள்ளவேயில்லை" என்றும் குற்றம் நாடி கூறுகிறது. 

சர்வதேசக் கண்ணோட்டம் கொண்ட பாரதி, ரஷ்யாவில் கொடுங்கோலன் ஜார் ஆட்சிக்கு எதிராக போல்ஷ்விக்குகள் (கம்யூனிஸ்ட்டுகள்) நடத்திய புரட்சி நிகழ்வுகளை அக்கறையுடன் தொடர்ந்து கவனித்து வந்தான். அதை போல்ஷ்விக்குகளின் புரட்சியென்றே அன்று பத்திரிகைகளில் எழுதினான். போல்ஷ்விக்குகளின் வெற்றி தொழிலாளிகளின் வெற்றி என்றுதான் அர்த்தம். 

"பாரதி புதிய ருஷ்யாவையும், லெனினையும் சோசலிசத்தையும் பற்றி எழுதிய சுமார் 20 கட்டுரைகளும், சில கவிதைகளும் உள்ளன" என்றும், "இவற்றில் பலவும் 1906ஆம் ஆண்டில் பாரதியின் "இந்தியா" பத்திரிகையிலும், 1918 - 1921ம் ஆண்டுகளில் சுதேசமித்திரன் பத்திரிகையிலும் பாரதிஎழுதி வெளியிட்டவையாகும்" என்றும் கூறுகிறார் அன்றைய சோவியத் அறிஞர் தமிழ்ப்பித்தன் என்று புனைபெயர் வைத்துக் கொண்ட டாக்டர் வித்தாலி பி.பூர்னிக்கா. 

1905 - 07 காலத்தில் நிகழ்ந்த முதலாவது ரஷ்யப் புரட்சியை வாழ்த்தி 1.9.1906 தேதிய "இந்தியா" பத்திரிகையில் பாரதி இவ்வாறு எழுதினார்: 

"சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக!" 

அன்று ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகள் "போல்ஷ்விக்குகள்" என்று அழைக்கப்பட்டனர். பாரதியும் அவர்களை போல்ஷ்விஸ்ட் என்றும் தோழர்கள் என்றும், ஸமத்துவக் கக்ஷியார் என்றும், சோலிஷ்ட் கக்ஷியார் என்றும், அபேதவாதிகள் என்றும் பலபெயர்களில் குறிப்பிட்டார். 

"ருஷ்யாவில் ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்துவக் கக்ஷியார் அல்லது போல்ஷ்விஸ்ட் கட்சியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும், ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷ்விஸ்ட் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால், கெரன்ஸ்கியின் ஆட்சி நீடித்து நடக்கவில்லை" (பாரதியார் கட்டுரைகள் என்ற நூலிலிருந்து) 

இங்கே, போல்ஷ்விக்குகள் - அதாவது கம்யூனிஸ்ட்டுகள் மூலமே ரஷ்யப் புரட்சி நடைபெற்றது என்பதைச் சரியாக - தெளிவாக - ஐயத்திற்கு இடமின்றிச் சொல்லியிருக்கிறார் பாரதி. "மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் - ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி"என்பதை காளி பக்தனாகிய ஒரு கவிஞனது உணர்ச்சியெழுச்சியின் உருவகமாகவே பார்க்க வேண்டும். "மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்" என்பதில் உள்ள வார்த்தைகளை வெறும் வார்த்தைகள் அளவிலேயே பார்த்தால், ரஷ்யப்புரட்சியை இந்நூலில் உள்ளது போல் "தொழிலாளிகளின் வெற்றி என்பதை அவன் கண்டு கொள்ளவே இல்லை" என்றுதான் சொல்லத் தோன்றும்! 

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை" என்கிற பாரதியின் பாடல் வரியை குறிப்பிட்டு, இதில் "பொதுவுடைமை என்று இருப்பது கம்யூனிசத்தைத்தான் குறிக்கும் என்று கருதுவது சரியாகாது" என்கிறது குற்றம் நாடிப்பகுதி. 

பாரதியின் காலத்தில் இந்தியாவில் அமைப்புரீதியாக கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஒரு கம்யூனிஸ்ட் அல்லாத கவிபாரதி, ரஷ்யாவில் லெனின் தலைமையிலான பாட்டாளிகளின் புரட்சியினால் விளைந்த நல்ல மாற்றங்களை மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பது மெய்தானே? 

"ஏற்னெவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின், ஸ்ரீமான் த்ரோத்ஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும், பிறசெல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடைமையாகிவிட்டது". 

"ஐரோப்பாவில் சோஷலிஸ்ட்டு கட்சியார் சொல்வது போல நிலத்தைச் சகலருக்கும் பொது என்று விதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்" (ஐரோப்பாவில் என்று குறிப்பிட்டிருப்பது ரஷ்ய தேசத்தை). 

பாரதி, லெனினைப் பற்றி மட்டுமல்ல, கார்ல் மார்க்ஸைப் பற்றியும் கூட ஒரு சிறிய அறிமுகம் போல தெரிந்திருந்தார். "ஜன அபிவிருத்தியும், பொருள் நிலைமையும்" என்ற தமது கட்டுரையில் பாரதி, "ஐரோப்பாவில் ஸோஷலிஸ்ட் மார்க்கத்தாருக்கு மூல குருவாகிய கார்ல்மார்க்ஸ் என்பவர் பின்வருமாறு சொல்கிறார்:" - என்று குறிப்பிட்டுள்ளார். 

கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சி கண்டு மிரண்டு நடுங்கிய உலக முதலாளித்துவப் பிற்போக்காளர்கள், 'ரஷ்யாவில் பெண்களையும், பொதுவுடைமையாக்குகிறார்கள் என்று அவதூறு செய்து கொண்டிருந்த போதுதான் மகாகவி பாரதி அந்த அவதூறை மறுத்துப் பதிலளித்ததும், ரஷ்யாவின் பொதுவுடைமைப் பொருளாதாரத்தின் மேன்மையை வசனத்திலும் வரவேற்றான்; கவிதையிலும் வரவேற்றான். அதனால்தான் பாரதி, தான் கனவுகண்ட சுதந்திர இந்தியாவில் "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை" என்றான். "பொதுவுடைமை" என்பது பாரதியின் புதிய சொல்லாக்கம். இதுசரியான புரிதலில் வார்க்கப்பட்டது. பாரதியின் தோழராகிய பாவேந்தர் பாரதிதாசனும், பாரதி வழியில் ரஷ்யப் புரட்சியின் புதிய சிந்தனையில் ஈர்க்கப்பட்டு தமது குருநாதர் பாரதியாரின் பொது உடைமை எனும் சொல்லெடுத்து எழுதிய "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற கவிதையில் "பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் - புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்" என்றார். 

"பாரதியின் கனவு மாளிகையாகிய கிருதயுகம் மார்க்சியவாதிகளுக்குப் பொதுவுடைமைப்பூத்துக் குலுங்கும் பொற்காலமாகக் காட்சியளிக்கிறது போலும்!" என்று நையாண்டியும் செய்கிறது குற்றம் நாடிப்பகுதி. 

"உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை என்கிற நிலைமை இல்லாத - இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்றில்லாத-யாருமிப்போது அடிமையில்லாத - குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வும் குடிமை நீதியும் நிலவுகிற- ஒருநற் காலத்தின் உதயத்தைத்தான் பாரதி தனது "புதிய ருஷ்யா" கவிதையிலே "கிருதயுகம்" என்று வர்ணித்தான். அவ்வாறான புதிய சமுதாய மலர்ச்சி மார்க்சியவாதிகளுக்குப் பொதுவுடைமைப் பூத்துக் குலுங்கும் பொற்காலமாகக் காட்சியளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மார்க்சியவாதிகள் பாரதியைத் தம்முள் ஒருவனாகத் கருதுவதில் என்ன பிழை காண முடியும்? 

குற்றம் நாடி பகுதியில் பாரதியை நிறுத்தி, "இந்திய ஒருமைப்பாட்டைவிட இந்துக்களின் கூட்டமைப்பே பாரதிக்கு முக்கியமானதாகப்படுகிறது" என்றும், இன்னும் பலவுமான கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் அவன்மீது சாட்டப்படுகின்றன. இவை பலவற்றுக்கும் மறுப்புப் பதில் கூறுவது சாத்தியமல்ல. உதாரணத்திற்கு சில கடும் விமர்சனங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. 229 பக்கங்கள் கொண்ட இந்நூலில் குற்றம் நாடி பகுதியின் ஐம்பது பக்கங்கள் முழுவதும் பாரதியின் கருத்துக்கள், சிந்தனைகள் மீதான கடுமையான எதிர்மறை விமர்சனங்கள்தான். 

ஒரு நூலில், நாடு போற்றும் மாமனிதருக்கு "மறுபக்கம்" காட்டி கடுமையாய் எழுதுகையில் அவரைப் பற்றிய சிறந்த பக்கங்கள் மதிப்பு குறைந்து காணப்படும். 

பாரதி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லதான். ஆனால், அவர் மீதான விமர்சனங்களின் அணுகுமுறையானது அவரது மேன்மையான சிந்தனைகளைச் சோதிப்பதாக அமைந்துவிடக் கூடாது. 

பாரதியின் தேச பக்தி கருத்துகளும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி - மத - தீண்டாமை எதிர்ப்பும் 'பெண் விடுதலையும்' தேசம் தழுவிய மனித நேயமும், தமிழ்ப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிற போது- இன்றும் மகாகவியாய், மக்கள் கவியாய், தேசத்தின் கவியாய் உயர்ந்து நிற்கிற போது, நூலுக்குள் ஒரு "மறுபக்கம்" வைத்து பாரதியின் மீது கடும்விமர்சனங்களை எய்வது அவசியமா? 

இந்நூலை மீனாட்சி புத்தக நிலையம் (மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001) ரூபாய் 100 விலையில் வெளியிட்டுள்ளது. 

- தி.வரதராசன்

Pin It