17.2.2009ல் டெல்லி மாநகரத்தில் ரவீந்திர நாத் தாகூர் பவனில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வியட்நாமியப் பெண் எழுத்தாளர் சிறப்பு விருந்தினர். முதுபெரும் குஜராத் எழுத்தாளர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அரைவட்டமாக மேடையில் உட்கார்ந்திருந்த விருதாளர்களில் நான் தனித்து காணப்பட்டேன். வித்தியாசமாகக் கவனித்தார்கள். காரணம், எனது அறிவுஜீவித்தனமில்லாத - எண்ணெய் வழிகிற கிராமத்து முகமும், வெள்ளைவேட்டி சட்டையும்.

மேடையிலும் அரங்கிலுமாக நிரம்பியிருந்த ரெண்டாயிரம் பேருக்கும் மேலான எண்ணிக்கையிலான அனைவரும் கோட்டும், சூட்டும், உல்லன் பனியன்களுமாக அணிந்திருந்தனர். ஒரு சிலர் தாம் குர்தாவும், நீள் ஜிப்பாவும் அணிந்திருந்தனர். வேட்டி-சட்டையில் நான் ஒருவன் மட்டுமே. என்னைப் பற்றிய அறிமுகத்தை ஆங்கிலத்தில் சொன்னார்கள். 'ஐந்தாம் வகுப்பு மட்டுமே கல்வி' என்ற வாக்கியமும். ஒரு சிறிய கைதட்டல் சலசலப்பினால் கவனிக்கப்பட்டது.

விருதைப் பெற எழுந்தேன். குஜராத் எழுத்தாள முதியவர் பக்கம் நின்றேன். சாகித்ய அகாடமி விருதுக்கான கேடயம் சற்றே கனம். அவர் சிரமப்பட்டு தாங்கிப்பிடித்து என்னிடம் வழங்கினார். அவரும் எனது வேட்டி-சட்டையையே கவனித்திருந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தார்.

"கே.காமராஜ்?" என்று ஒற்றைவார்த்தையை உச்சரித்தார். வேட்டி, சட்டை என்பது தமிழனின் அடையாளமாக இருக்கிறது. தமிழனின் அடையாளமாக காமராஜை அவர் நினைக்கிறார்.

"கே.காமராஜ்?" என்றவுடன்....

"எஸ்.எஸ்.. ஐயாம்......  ஹிஸ் டிஸ்ட்ரிக்ட்" என்று எனக்குத் தெரிந்த 'தத்துப்பித்து' இங்கிலீஷை அவிழ்த்து விட்டேன்.

"ஓ.....! ஐஸீ...." என்று மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தெரிவித்தார். கேடயம் தந்தார்; சால்வை தந்தார். காசோலை உள்ள கவர் தந்தார். ஒரு சந்தனமாலை தந்தார். செம்மலர் எனும் தாய் அதைப் பார்த்துப் பூரித்திருப்பாள். தன் வயிற்றில் பிறந்த ஒரு கிராமத்துப் பாமர மகன், டெல்லி மாநகரில் ஓர் உயரிய மத்திய அரசின் விருதைப் பெறுவதை நினைத்து நெக்குருகிப் போயிருப்பாள். நெகிழ்ந்து, பரவசப்பட்டு கண்ணீர் உகுத்திருப்பாள்.

ஆம்... எனது கருவறை செம்மலர்தான்! சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் மேலாண்மறைநாடு கிராமத்தில் வந்து இறங்கிய ஊடகங்கள். நேர்காணல்கள். பேட்டிக்கான எல்லாக் கேள்விகளிலும் ஏதேனும் ஒரு கேள்விக்கு எப்படியேனும் இப்பதிலை சொல்லியிருப்பேன்."எனது முதற்சிறுகதை, 'பரிசு' செம்மலரில் தான் பிரசுரமாயிற்று. செம்மலரில் பிறந்த இலக்கியமகன் நான்".

சகலவானொலி நிலையங்களின் நேர்காணல்கள், நாளிதழ்களின் நேர்காணல்கள், வார இதழ்களின் நேர்காணல்கள், உலகளாவிய இணையதள வாசகர்களுக்கான நக்கீரனின் வீடியோ நேர்காணல் எல்லாவற்றிலும் இந்தச் செய்தி தவறாமல் இடம்பெற்றது. "எனது முதல் சிறுகதை செம்மலர் இதழில் பிரசுரமாயிற்று".

நாலு பேரறிந்த எழுத்தாளனாக அறியப்பட்டிருக்கிறேன் என்றால், நான் வளர்ந்த செம்மலர் எனும் கருவறையே காரணம். பொன்னுச்சாமி என்ற மனிதனைப் பெற்றெடுத்த தாய், அன்னபாக்கியம். 'மேலாண்மை' பொன்னுச்சாமி என்ற எழுத்தாளனைப் பெற்றெடுத்த தாய் நிச்சயமாக செம்மலர்தான்.

1970ல் செம்மலர் உதயமாகிறது. செம்மலரின் ஆர்வமிக்க வாசகனாகவும் விற்பனையாளனாகவும் இருக்கிறேன். 1972ல் நான் தஞ்சாவூருக்குப் பஞ்சத்தின் வெக்கை தாளாமல் பிழைப்புக்காகப் போகிறேன். அப்போதுதான் சோவியத் நாவல்களையும், ஜெயகாந்தன். சிறுகதைகளையும் தேடித் தேடி வாசிக்கிறேன். பேரார்வத்துடன் வாசிக்கிறேன். தஞ்சாவூரில் எனது உருவத்தை விடவும் உயரமாக இருக்கிற சைக்கிளில் மரப்பெட்டி கட்டி அதில் கடலைமிட்டாய், கடலை உருண்டை, வர்க்கி, பிரைஸ் அட்டைகளை ஏற்றி வைத்து, ஊர் ஊராகச் சுற்றி, கடைகடையாக நின்று, சரக்குப் போட்டு, வியாபாரம் செய்கிறேன். தஞ்சையிலிருந்து கருந்தட்டாக்குடி, அம்மாபேட்டை, கண்டியூர் வழியாக திருவையாறு சென்று..... அங்கிருந்து இடதுபுறமாக திருக்காட்டுப் பள்ளிவரையும், மறுநாள் வலதுபுறமாக பாபநாசம் வரைக்கும் போய்வருவேன்.

அந்த வியாபார அலைச்சலின்போது எனக்கு ஓர் அனுபவம் கிடைத்தது. வித்தியாசமான அனுபவம். அதை என்னமாவது செய்ய வேண்டும் என்றொரு சுய உந்துதல். அப்போது சிறுகதைகளாகத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ.... அந்த அனுபவம் இயல்பாகவே சிறுகதை என்ற வடிவத்தில் வெளிப்பட்டது. எழுதியிருப்பது சிறுகதை என்று அப்போது எனக்குத் தெளிவில்லை. தொடர்ந்து சிறுகதை எழுத்தாளனாக உயர வேண்டும் என்கிற இலக்குமில்லை.

நான் எழுதி முடித்த காகிதக் கற்றையை அப்படியே எனக்குத் தெரிந்த செம்மலர் முகவரிக்கு அனுப்பிவிட்டு.. அதையும் மறந்துவிட்டேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்துதல் எதுவுமில்லை. எனக்கு எழுதத்தெரியும் என்பதுவும் எனக்குத் தெரியவில்லை. மறுமாதம். செம்மலர் அப்போது தஞ்சை ரயில் நிலையத்தில் பத்தாம் தேதிக்குப் பின்னர் தான் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை. லைனுக்குப் போய்விட்டு வந்து, சைக்கிளை நிறுத்திவிட்டு, அறையைத் திறந்தால், செம்மலர் பிரதி அஞ்சலில் வந்து கிடக்கிறது. புதிரும், திகைப்பும் என்னை சுழற்றியடிக்க ஆவலாக செம்மலரை உடைத்து, நேர்படுத்தி... விரிக்கிறேன். ஏறக்குறைய அதன் பிற்பகுதியில் 'பரிசு' என்ற எனது சிறுகதை அச்சாகியிருக்கிறது. செ.பொன்னுச்சாமி என்ற என் பெயரை முதன் முதலாக அச்செழுத்தாகப் பார்க்கிறேன். பரவசமாக இருக்கிறது.

செம்மலரை வாசிக்கிறேன். எனது மையெழுத்து, மனஎழுத்து, உணர்வெழுத்து, அனுபவ எழுத்து  எல்லாமே அச்செழுத்தாகியிருக்கிற அபூர்வமான அதிசயம். மனசு கிடந்து றெக்கையடிக்கிறது. தஞ்சை கோபுர உச்சியில் ஏறி நின்று கொண்டு, உலகமே கேட்கிற மாதிரி கூவிக்கத்த வேண்டும் என்று வெறிகொள்கிற வேட்கை மனசு. அந்த மனசோடு செம்மலரில் கதை அச்சான கதையைச் சொல்லிச் சொல்லி, எல்லோரிடம் பகிர்வதற்கு முனைந்து, காயம்பட்டது தனிக்கதை.

மறுநாள் சனிக்கிழமை. ராஜா ரெஸ்ட் ஹவுஸிற்கு, எட்டாம் நம்பர் ரூமுக்கு தோழர் என்.வெங்கடாசலம் 'ராயமுண்டாம்பட்டியிலிருந்து வருவார். அவரைச் சந்திக்க தோழர்கள் ஜி.வீரய்யன், பாரதிமோகன் போன்ற தோழர்களும் வருவார்கள். நான் போய் நிற்பேன். என்னை அறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். "நான் பார்ட்டி மெம்பர்தாம்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆனால் என்னிடம் கார்டு இல்லை" உங்கதாலுகா செக்ரட்டரி எஸ்.ஏ.பி. கிட்டே தபால் வாங்கிட்டு வாங்க" என்று கட்டன்ரேட்டாகச் சொல்லி விட்டார்கள்.

அவர்கள் அனுமதிக்காவிட்டாலும் நான் போய் வாசலோரம் தரையில் உட்கார்ந்திருப்பேன். "தாங்க முடியாத நச்சரிப்பாக என்னை எரிச்சலும் கடுப்புமாகப் பார்ப்பார்கள். தோழர் வெங்கடாசலம் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருப்பார். ஸ்ரீரங்கநாதர் போல. ஜி.வி.யும், பாரதி மோகனும் பக்கத்தில் உட்கார்ந்து கட்சி சம்பந்தப்பட்ட, இயக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை உரையாடுவார்கள்.

தோழர் என்.வி.கேட்டார். "ஏன் காம்ரேட்...... நம்ம டிஸ்ட்ரிக்ட்லே ஒரு புது எழுத்தாளர் வந்துருக்காரு. யாருன்னு தெரியுமா?"

"தெரியலியே..."

"செம்மலர்லே ஒரு கதை வந்துருக்கு. நம்ம ஈச்சங்குடியைப் பத்தியெல்லாம் எழுதியிருக்காரு",

"நமக்குத் தெரியாம இங்க எழுத்தாளர் யாருமில்லே. ஒருவேளை நம்ம டிஸ்ட்ரிக்ட்லே பெறந்து வளர்ந்த பையன் வேற மாவட்டத்துலே, உத்தியோகம் பாக்கலாம். கதை எழுதியிருக்கலாம்;

"நம்ம ஏரியாவுலே யாருமில்லியா?"

"அப்படி யாரும் தெரியலே....."

தரையில் வாசலோரம் உட்கார்ந்திருந்த நான் மெல்ல எழுந்து, மெல்லிய குரலில், "தோழர்..." என்கிறேன்.

"என்னய்யா....?" என்று எரிச்சலுடன் கேட்கின்றனர்.

"இல்லே...... செம்மலர்லே..... அந்தக் கதை......"

"ஆமா... இப்ப என்னய்யா? செம்மலர்லே கதை எழுதுனது யாருன்னுதான் பேசிக்கிட்டிருக்கோம். அதுக்கென்னய்யா?"

"இல்லே.. தோழர்.... அந்தக்கதை எழுதுன பொன்னுச்சாமி, நாந்தான்....."

"ஈசசாங்குடியைப் பத்தி... பரிசுன்னு கதை. அதுவா?"

"ஆமா..... தோழர். நாந்தான்"

"நீங்களா......? நெஜந்தானா? கதை எழுதத் தெரியுமா?"

"இல்லே தோழர். தெரியாது. செம்மலர்லே வந்துருக்குற இதுதான் என்னோட முதல் கதை"

"சேர்ல்லே உக்காருங்க.... நீங்கதான் செம்மலர் எழுத்தாளரா?" ஆச்சரியமும் வியப்புமாக நாற்காலியில் உட்காரச் சொன்னார் தோழர் என்.வெங்கடாசலம்.

அந்த நாற்காலி, எனக்கு சாகித்ய அகாடமி விருதுவை விடவும் உன்னதமான அங்கீகாரச் சிம்மாசனம். அந்த அரியாசனத்தைப் பெற்றுத் தந்தது, செம்மலர். நான் அனுப்பிய காகிதக்கற்றை.... குப்பையை போலிருந்தது. ஒரு ஒழுக்கமான கவரில் திருத்தமாக மடிக்கப்பட்டு அனுப்பப்பட்டதல்ல. அதைப் பார்த்தயாருக்கும் முதற்பார்வையிலேயே எரிச்சலும் அலட்சியமும்தான் ஏற்படும். பருவட்டான பார்வையில் ஓரங்கட்டத் தோன்றும்.

ஆனால் செம்மலர்த் தோழர் தி.வரதராசன்தான் அந்தக் கவரைப் பார்த்தார். பிரித்தார். குப்பைக் கோழிக் கிளறலாக இருந்த எழுத்துகளைச் சிரமப்பட்டு வாசித்தார். அச்சுக்குத் தேர்வு செய்தார்.அந்தக் கணத்தில்... தி.வரதராசன் மட்டும் அந்தக்காகிதக் கற்றையை ஓரங்கட்டியிருந்தால், இன்றைய நான் உருவாகியிருக்கவே முடியாது. செம்மலரில் பிரசுரமான சிறுகதையும், அதுவாங்கித் தந்த அங்கீகாரமும்தான் எனக்கு என்னை அறிமுகப்படுத்திற்று. "உன்னால் எழுத முடியும். சிறுகதை எழுதலாம்" என்று உணர்த்திற்று.

எழுத்துக் கருவறையில் சுமந்து என்னை இலக்கியவாதியாய்ப் பெற்றதாய் செம்மலர். என்னை எனக்கும் உலகுக்கும் அறிமுகம் செய்தது செம்மலர். என்னைப் படைப்பாளியாகப் படைத்தது செம்மலர்.

Pin It