சுதந்திரப் பெரு வெளிச்சம்
தேகம் தொடாததால்
வாழ்ந்திட வழிகேட்டு
கோடி சனங்களில் ஒரு
கோடியில் நின்று
கூடி குரல் கொடுத்தோம்

ஆண்டுகள் அறுபதை
தீண்டிடும் தருணம்
ஆள்வோர் ஆளனுப்பி
ஆய்வு செய்தார்கள்

உடைந்த மண் சுவரும்
ஓலைக் குடிசையும்
ஒட்டிய வயிறுமாய்
உழல்வதை உறுதி செய்து
ஏதுமற்ற தகுதி எமக்கு
ஏராளம் உள்ளதென்றார்

தேசத்தின் கோடுகளில்
வறுமையெனும் கோட்டிற்கு
மறுபுறம் உள்ளதால்
எதிர்வரும் காலம்
எங்களுக்கே என்றனர்

தூரம் நோக்கி
மெழுகாய் உருகிப் போனோம்
உழைத்துப் பிழைக்க
அழைத்து உதவிட
அரசரவம் ஏதுமில்லை

கனவில் நடப்பதாய்
கலர் டிவி, கேஸ் அடுப்பு
காங்கிரீட் வீடென
கேளாமல் வந்தடைந்தது
பயன்படுத்திப் பராமரிக்க
பெரும்பாடானது

பின்னொரு நாளில்
அரசு தூதர்கள்
அவசரமாய் வந்து
அவதானித்து
வறுமைக்கோடு தாண்டி
வளமை பெற்றதாய்
வகைப்படுத்தினார்கள்

எலும்பும் தோலுமாய்
இப்போது நான்
எப்படி இந்த அதிசயம்..!
பசி மயக்கம் எனக்கு
பதில் தெரியுமா உனக்கு?

- மங்களக்குடி நா.கலையரசன்

More articles by மங்களக்குடி நா.கலையரசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.