தீவிர இந்து மதப்பற்றாளராக இருந்து கொண்டு, 'பிற மதங்களை துவேஷிக்காதே' என்ற அவரது குரல், அனைத்து இந்துக்களிடமும் அப்படியே முழக்கமாயிற்று. இதைத்தான் இந்துத்துவாவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தீவிரமான இந்துமத ராமர் பற்றாளரை, இந்துமத வெறிக் கும்பலின் துப்பாக்கியாக கோட்சே சுட்டான்.

அன்று காந்தியைக் கொன்ற கும்பலுக்கு ஆத்திரம் குறையவில்லை. வன்மத் தீ அணையவில்லை. பிற மதங்களின் மீது பகை மூட்டி வெறுப்பூட்ட நினைக்கிற இந்துத்துவா சக்திகள் இன்னும் காந்தியை கொல்கிறது. வசைபாடுகிறது. திட்டுகிறது. கறைப்படுத்திக் கூத்தாடுகிறது.

அப்படித்தான்... 'கோட்சே நல்லவர்' என்று, அவர் பக்கத்துக் கோணத்திலிருந்து இந்துத்துவா சக்திகளால் ஒரு நாடகம் போடப்பட்டது. ஹரிலாலின் கதையை நாடகமாக்கி, 'தேசத்தந்தை என்று போற்றப்படுகிற காந்தி, ஒரு பொறுப்பற்ற தந்தை' என்ற கருத்தை முன் வைத்தது. 'பெற்ற பிள்ளைகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக நின்ற மோசமான வில்லன்தான் காந்தி' என்ற கருத்தை பிரச்சாரம் செய்வதற்காக இந்துத்துவா சக்திகளால் நாடகங்கள் போடப்பட்டன. ஊடகங்களால் பெரிதும் பேசப்பட்ட நாடகங்கள்.

மதநல்லிணக்கத்தில் நெருப்பு வைக்க ஆசைப்படுகிற மதவெறியர்கள், காந்தியை இன்றைக்கும் நாடகங்கள் மூலமாக கொன்றுகொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கொலை முயற்சியிலிருந்து காந்தியின் புகழையும், பாசத்தையும் நம்பிக்கை மிகுந்த வலிமையோடு காப்பாற்றுகிறது, இந்த 'ஒளியின் நிழல்' என்ற நாவல்.

இந்துத்துவா சக்திக்கெதிரான சக்திமிக்க போர்க் கவசமாகத் திகழ்கிற இந்த கலைத்தன்மை மிக்க சிறந்த நாவலை ஆக்கியவர், தின்கர்ஜோஷி. அதைத் தமிழில் மொழி பெயர்த்து, தமிழ் நாவலாகவே ஆக்கியவர், ராஜலட்சுமி சீனிவாசன்.

எடுத்தால்.... வைக்க முடியாத வசீகர மொழி பெயர்ப்பு. தொட்டுத் தொடர்ந்து உயிருக்குள் ஒட்டிக் கொள்கிற சுவாரஸ்யமான மொழிநடை.

அவதூறு களைந்து, பொய்மை கழித்து, திசைமாற்றத்தை தடுத்து, காந்தியின் மூத்தமகன் ஹரிலாலின் உண்மைக் கதையை - அவர்களது வாழ்க்கை உறவின் உண்மையை - துல்லியமான நேர்மையுடன் சித்தரிக்கிறது நாவல்.

தாக்குவதற்காக பொய்மை நாடகமாடிய மதவெறியர்களைப் போல, இந்த தின்கர்ஜோஸி காந்தியை வக்காலத்து வாங்குவதற்கு எந்தப் புனைவும், பாவனையும், பொய்யும் துளி கூட சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே சத்தியமான யதார்த்தத்தை எழுதியிருக்கிறார். காந்தியை காப்பாற்றுவதற்காக ஹரிலாலை கொச்சைப்படுத்துகிற எந்த யத்தனிப்பையும் நாவல் செய்யவில்லை.

மாறாக, நாவல்முடிகிறபோது ஹரிலால் மீது உயர்ந்த மரியாதையையும், ஆழ்ந்த பரிவையும் ஏற்படுத்துகிறது இந்த நாவல்.

ஹரிலால் பாத்திரம் மிகுந்த உண்மையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகனுக்குமிடையில் நிலவுகிற பாசமும், மரியாதையுமான உறவுமிகுந்த நேர்மையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல முரண்கள் வளர்கிற நிகழ்வுகளையும் புனைவில்லாமல், அதே நேரத்தில் படைப்பிலக்கியத்துக்குரிய கலை உண்மையுடன் சித்தரிக்கிறார் தின்கர்ஜோஷி.

காந்தியுடன் ஆசிரமத்தில் பணியாற்றுகிறபோதும், ஆங்கிலேயருக்கு எதிரான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடுகிறபோதும் உயர்ந்த மானுடராக - தேச பக்தராக - அப்பாவின் அங்கீகாரத்தை விரும்புகிற மகனாக - இருக்கிற ஹரிலால், காந்திக்கு எதிரான மனநிலையில் முரண்பட்டு, திருகல்முறுகலாக நடக்கிறபோதும் குணாம்ச ரீதியாக உயர்ந்தே காணப்படுகிறார்.

பாரிஸ்டர் படிப்பு படிக்க விரும்புகிற ஹரிலாலின் விருப்பமும் கொச்சைப்படுத்தப்படாமல், தனி மனிதனின் பொதுச்சேவை மனோபாவத்திலிருந்து எழுவதாகச் சித்தரிக்கப்படுகிறது. அதை மறுக்கிற காந்தியின் உறுதியிலும் பொது வாழ்வில் தனிமனித ஒழுக்க அக்கறை உள்ள தேசபக்த நியாயம்தான் உயர்ந்து தோற்றமளிக்கிறது.

ஹரிலாலின் விருப்பங்களும், காந்தியின் மறுப்புகளும் இப்படியே கொள்கை சார்ந்த நியாயமிக்கவையாகவும், உறவு சார்ந்த பகையாகவும் வெறுப்பாகவும் மூர்க்கம் கொள்கின்றன.

திசை நழுவிய பயணத்தில் ஹரிலால் அடித்துச் செல்லப்படுகிற போதெல்லாம் ஹரிலாலின் ஆன்மா குற்றமற்றதாகவும், அப்பாவின் மீது மரியாதைமிக்கதாகவும் திகழ்கிறது.

அதேபோல காந்தியின் மனவலிகள் நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. ஒரு தந்தையின் வேதனைகளையும், ஓர் இயக்கத்தின் தலைவன் என்ற முறையிலான ஒழுக்க நியதிகளையும் ஒருசேர அனுபவிக்கிறார்.

இந்த நாவல், காந்தியையும் மதநல்லிணக்கத்தையும் கொச்சைப்படுத்த முயல்கிற இந்துத்துவா சக்திகளிடமிருந்து தேசத்தைக் காப்பாற்றுகிறது. இந்த நாவலை இந்துமத நம்பிக்கை உணர்வுள்ள அனைவரும் வாசிப்பது, தேசத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் நல்லது.

படிக்கிறபோது, மனசை கலங்கடிக்கிற பல நிகழ்வுகள் இருக்கின்றன. காதலும் விளையாட்டுகளும், கலகலப்புகளும் இருக்கின்றன. ஒரு சமுதாய அக்கறையுள்ள, வசீகரமுள்ள யதார்த்தவாத நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளன.

கஸ்தூரிபாயின் தாய்மைத் தவிப்பும், ஹரிலால் மனைவியின் மனத்தவிப்பும் வாசிக்கும் நெஞ்சை அறைந்து தாக்குகின்றன.

இந்த நாவலை அச்சுப்பிழையில்லாமல், அழகான நேர்த்தியுடன் வெளியிட்டுள்ள என்.சி.பி.எச்., இந்துத்துவா சக்திக்கெதிரான சத்தியாயுதத்தை தமிழுக்கு வழங்கியிருக்கிறது.

வெளியீடு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்

4-க்ஷ,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 98,

விலை : ரூ.200/-

 

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் மதமும் சமூகமும்

டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, அறிவார்ந்த தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகமான பெயர். மதங்கள் குறித்த மார்க்ஸீய நோக்கிலான சுயமான பார்வையை முன் வைக்கிற மதிப்புக்குரிய பேராசிரியர். இயக்க இயல் வரலாற்றுப் பொருள் முதவாத நோக்கில் மதங்களையும் கடவுளர்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இவற்றையெல்லாம் விளைவித்த சமுதாயக் கட்டங்களையும் துல்லியமாக உணர்த்துகிற விஞ்ஞான ரீதியிலான சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்.

1986ஆம்ஆண்டு, ஜூலை மாதம் கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பில் கொல்கத்தா தேசிய நூலகத்தில் டாக்டர் தேவி பிரசாத் சட்டோ பாத்தியாயா ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு "மதமும் சமூகமும்".

அந்தப் பேரூரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம் இந்த நூல். இரா.சிசுபாலன் தமிழில் பெயர்த்திருக்கிறார் என்.சி.பி.எச். மிகுந்த நேர்த்தியுடன் வெளியிட்டிருக்கிறது.

எட்டு உப தலைப்புகள் கொண்ட விரிவான நூல்.

கடவுள்களும், மதங்களும், ஆலயங்களும், பீடங்களும், தோன்றுவதற்கு முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான். மனிதன் சமூகமாக.... குழுக்குழுவாக... இணைந்தும் வாழ்ந்திருக்கிறான். வேட்டையாடப்போகிற போது வனத்துக்குள் நிகழ்ந்த விபரீதங்கள் அவனைக்குழப்பியிருக்கின்றன. அச்சுறுத்தியிருக்கின்றன. குழுவின் ஒரு முதியவர் அவர்களுக்கு தைர்யம் வழங்குகிறார். மாயவித்தைகள் செய்து, மந்திரங்கள் செய்து திடம் சொல்கிறார். எதைக்கண்டு பயந்தானோ அதையே வணங்கச் சொல்கிறார். அப்படித்தான் மரங்களும், மிருகங்களும் வணங்கத்தக்கதாக தோன்றி, அப்புறம் தனித்தனியாகத் தோற்றுவிக்கப்பட்ட கடவுளர்களின் வாகனங்களாக மாற்றப்பட்டன.

ஹரப்பாவும், ஆரியர் பிரச்சனையும் என்ற துணைத் தலைப்பிலான கட்டுரையில் விவாதிக்கப்பட்டு, விளக்கப்படுகிற விஷயங்கள் மிகவும் புதியவையாக இருக்கின்றன. இதுவரையிலுமான புரிதல் வட்டத்தை உடைத்து, விஸ்தரித்து, வெளிச்சம் தருகின்றன.

'வேதமதம் - மாயையும் எதார்த்தமும்' என்ற தலைப்பிலான கட்டுரையும், 'வேதக் கடவுள்களும், வேதகுருமார்களும்' எ ன்ற தலைப்பிலான கட்டுரையும் வேதமதங்களின் சடங்காச்சாரங்களும், வேள்விகளும், தத்துவ மாற்றங்களைத் தோற்றுவிக்கிற சமுதாய வளர்ச்சி மாறுதல்களும் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கின்றன.

மதங்கள், பண்பாட்டுப் பேராதிக்கத்தை நிறுவுகின்றன. வர்க்கமாக பிளவுண்ட சமூகத்தின் ஆதிக்கவர்க்கத்தின் தூதுவனாக நின்று, பெரும்பான்மை மக்களை ஆன்மார்த்தமாக ஒடுக்கிப் பணியவைக்கின்றன. வர்க்கப் போராட்டங்கள் வாழ்க்கை நெடுகிலும் வெவ்வேறு தன்மைகளில் நடந்து கொண்டிருப்பதன் அடையாளமாக மதங்களுக்குள்ளும் முரண்பாடுகளும், மதங்களை எதிர்க்கிற தத்துவமுரண்களும் உலகம் பூராவிலும் நிகழ்கின்றன.

கடவுளும், பிற்கால மீமாம்சகர்களும் என்ற தலைப்பின் கட்டுரை, இவற்றையே விவாதிக்கிறது.

வரலாற்று மாணவர்களுக்கும் தத்துவ இயல் மாணவர்களுக்கும் ஞானவெளிச்சமாகிற இந்த நூல், கம்யூனிஸ இயக்கத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் - இளைஞர்கள், ஊழியர்கள் கைகளில் கட்டாயம் இருக்கிற வேண்டிய புத்தகமாகும்.

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,

41-க்ஷ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

விலை : ரூ.100-

 

ஜே.மாதவராஜின் குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது

இதழியல் வரலாறு எழுதுகிற எவரும் 'கண்ணதாசன்' என்ற இதழை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது. அச்சுநேர்த்தி, வடிவப் புதுமை, கச்சிதமான கட்டமைப்பு என்று அழகிய புதுமையாக வந்தது. அந்தமாத இதழ், பல எழுத்தாளப் பிரபலங்களை முளைக்க வைக்கிற நாற்றாங்காலாயிருந்தது. பல இலக்கிய வடிவப் புதுமைகளுக்கும் இடம் தந்தது. மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்ற எல்லா வடிவங்களுக்கான களமாக இருந்தது. அப்படித்தான் அமரராகிவிட்ட எழுத்தாளர் என்.ஆர்.தாசன், "சொற்கோலம்' என்ற வடிவத்தில் அதில் எழுதினார். கவித்துவக் கூறுகளும் ததும்பும்; இன்ன வடிவம் என்று வகைப்படுத்த இயலாது. சுருக்கமாக இருந்தாலும், அணுவைப் போல அடர்த்தியாக இருக்கும்.

சிகரம் இதழிலும் அதே என்.ஆர்.தாசன் சொற்கோலம் எழுதினார். படித்த மனசில் கருத்தை, பசுமரத்தாணியாக இறக்கிவிடும். அழுத்தமான தழும்பாக நினைவில் நிற்கும்.அப்படிப்பட்டதொரு புதுமைமிகு செறிவான வடிவத்தில் எழுத்தாளர் ஜே.மாதவராஜ் 'சொற்சித்திரங்கள்' படைத்திருக்கிறார். வலைப்பூவில் எழுதியவற்றை தொகுத்து, 'குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது' என்று நீளமான தலைப்புடன் சிறிய நூலாக தந்திருக்கிறார்.

கவித்துவக் கூறுகள் நிரம்பிய கச்சிதமான மொழி நடையில் அத்தனையும் எழுதப்பட்டுள்ளன. ஹைக்கூ போல ஒவ்வொன்றும், ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு ஹைக்கூச் சிறுகதை உட்கார்ந்திருக்கிறது. குறுஞ்சிறுகதை என்றும் சொல்லிவிட முடியாது. உரைநடைக் கவிதை என்றும் சொல்லிவிட முடியாது. வேண்டுமானால், "உடைநடை ஹைக்கூ" என்று வடிவ வகைப்படுத்தலாம்.

ஒவ்வொன்றும் ஜென் தத்துவக் கவிதைகள் போலிருக்கிறது. வாசித்த கணத்தில் வசீகரித்துக் கொள்கிறது. ரொம்பநேரம் யோசிக்க வைக்கிறது. யோசிக்க யோசிக்க உள்மடிப்புகள் விரிந்து ஆழ்மனம் நோக்கி அகன்று படர்ந்து விரிந்து வியாபிக்கிறது.

தாய்க்கோழிக்கு பயந்தோடிய மாவீரன், கெட்டவார்த்தை சொன்ன ரெண்டாம் வகுப்பு மாணவனின் காய்ச்சல், பத்து ஐநூறு ரூபாய்த்தாளுக்குள் வாழ்வின் - மனசின் - அத்தனை சிறுமைகளும் எட்டிப்பார்க்கிற மன உளைச்சல்கள், மனஅலைபாய்வுகள்... அபார்ஷன் செய்த தாய்வலி, வரிசைகளில் நிற்கிற வாக்காளர்கள் ஜெயிக்கமாட்டார்களா என்று கேட்கிற சிறுவன். மூன்றாம் வகுப்புக்குள் ஊடக இலக்கியச் சிறுமைகள் அத்துபடியாகிற அநியாயம், மருதாணிப் பெண்கள் என்று நூலுக்குள் நிறைய வாழ்வின் வலித்தெறிப்புகள். சமூகத்தின் கொடூரமும், ராட்சஸத்தனமும், சமூகத்தின் காலடியில் நசுக்குண்டு மூச்சுத்திணறுகிற மனிதசுபாவங்களும், மனஉலகமும், பண்பாட்டு வீழ்ச்சியின் பயங்கரமும் நெஞ்சுக்குள் ஏறிகொள்கின்றன.

இந்த உரைநடை ஹைக்கூ தமிழுக்கே புதுமையான வடிவம். ஜே.மாதவராஜின் சிறுகதை மனமும், மார்க்ஸீய அறிவும் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

அச்சுநேர்த்தி, வடிவமைப்புக் கச்சிதம் ஆகியவற்றுக்காக வம்சியைப் பாராட்டலாம்.

வெளியீடு

வம்சி புக்ஸ்

19,டி.எம்.சாரோன்,

திருவண்ணாமலை - 606 601

94432 22997

விலை : ரூ.50

- மேலாண்மைப் பொன்னுச்சாமி

Pin It