அவள் ஓலைக் கூந்தல் கொண்ட ஒய்யாரப்பேரழகி
குருத்தோலை முளைத்த நாள் குழந்தைப் பருவம் அவள்.
வாலைக் குமரியாக வலம் வருவாள் பசுமையாக
கால இளமையே அதன் கருமை
கோலை ஊன்றிடுங்கால் கூடிவரும் வெண்நரையே
கோலமழிந்த பழுத்த ஓலை.
அற்றது பற்றென இற்று விழுவதோ முதுமை

மங்கையாம் பனை அவளை மரமேறும் மணவாளன்
சாண் நார் கால் அணிந்தே தழுவிடுவான் அவள்மேனி
மேனி தழுவலிலே மிக்கூறும் பதநீரும்
குலைகுலையாய் தொங்குவதோ அவள் குலப்பெருமை கூறும்
நகைப்பாசத்தின் நன்கொடையே பாளைசிந்தும் பதனீர்
தாய்ப்பாலின் நலமனைத்தும் தலைப்பாலில் கொண்டவள்
ஓங்கி வளர்ந்ததுவோ உள்ளத்தின் உயர்வு காட்டும்
வைரமுள்ள கட்டைகளோ வைராக்கியம் கொண்ட கற்பு
பன்னாடை அதன் நீரைப் பரிசுத்தம் ஆக்கிவிடும்
பல்லுலக நலங்காக்கும் பதநீருக்கீடும் உண்டோ?
ஈயாடக் கருப்பட்டி இருமலுக்கோ கற்கண்டு
நார் ஓலை துணையாலே நல்ல பல பொருள் தருவாள்
ஏழைக்குக் கூரையும் ஆவாள்.
ஈருருளை வண்டியாகி இளசுகளை மகிழ்விப்பாள்
அவள் தங்கநிற ஓலைகள்தான் சங்கத்தமிழ் ஏடுகள்
அவள் கூந்தல் காற்றின் சுழற்சிக்கேற்ப பண்ணிசைக்கும்
கருப்புக் கோட்டுப்போட்டு பச்சை முண்டாசு கட்டிய
பாட்டரசன் பாரதி பனை என்றான்
சங்கப் புலவனோ பனைபடுகிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய் என்று
உவமை கூறிப் புகழ்ந்தான் பனையை!
மன்னவனை மதிமயங்கச் செய்த கதையுண்டு
பழத்தின் மணத்திற்கு

(பெரிய வயல் நாவலில்)

- எம்.எஸ்.சண்முகம்

Pin It