மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலற்குழு உறுப்பினர். தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர். செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர். உலைக்களம், விளைநிலம் போன்ற நாவல்களைப் படைத்தளித்த, நாவலாசிரியர். செவ்வானம், ஏரோட்டி மகள், இணைந்த கைகள் போன்ற நாடகங்களைப் படைத்து வழங்கிய நாடகாசிரியர். குறளின் குரல் கம்ப இராமாயணத்தில் உண்மையும் புரட்டும், சிலப்பதிகாரத்தில் உண்மையும் புரட்டும், தமிழ் இலக்கியம் கூறும் வர்க்க சமுதாயம் ஆகிய ஆய்வுக்கட்டுரை நூல்களை சிருஷ்டித்த இலக்கிய ஆய்வாளர். தமுஎச எனும் மக்கள் கலை இலக்கிய அமைப்பை நிறுவியவர். அதன் பொதுச் செயலாளராக நீடித்தவர். தமுஎச-வை மிகப் பெரிய அமைப்பாக வளர்ப்பதற்காக ஓடிஓடி உழைத்தவர்.

இப்படிப் பன்முகப் போராற்றல்மிக்க மகத்தான ஆராய்ச்சி அறிஞர். களப்பணிப் போராளி.

என் போன்ற பட்டிக்காட்டு இரும்புத்தடிகளையெல்லாம் கதுமைமிச்ச வீச்சரிவாளாக்கியவர். படைப்புகளைப் படைப்பதுடன் படைப்பாளிகளையும் படைத்தளித்த பேரறிஞர்.

கே.முத்தையா எனும் மகத்தான மனிதநேய மாமனிதரிடம் கண்டிப்பு நிறைந்த தலைமைப் பண்பும், கனிவும் குழைவுமான குழந்தைமை போன்ற தோழமைப் பண்பும் சேர்ந்திருக்கும்.

1989 தமுஎச இராமநாதபுரம் மாவட்ட மாநாடு அருப்புக்கோட்டையில் நடக்கிறது. பாரதி கிருஷ்ணகுமார், நான், பேரா.ச.மாடசாமி போன்றோர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் வெளிச்ச வழிகாட்டுதலில் நடத்தமுனைகிறோம்.

கலைஇலக்கிய இரவு எனும் மிகப்பெரிய மக்கள் கலைப்பண்பாட்டு வடிவம் அறிமுகமாகாத காலம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார், திரைப்பட இயக்குநர் கோமல் சுவாமிநாதன் இருவரும் கலந்து சிறப்பிப்பதாக துண்டுப்பிரசுரம் அச்சாக்கி, பிரம்மாண்டமான அளவில் வசூலைத் துவக்குகிறோம்.

" இது உங்க குடும்பவிழா.... நீங்களும் வாங்க" என்று மக்கள் மொழியில் பிரசுரம் தயாரிப்பது அதுதான் முதல் முயற்சி. இரண்டுநாள் மாநாடு. விழாவை மிகப்பிரம்மாண்டப்படுத்தவும், புதுமைப்படுத்தவும் ஓடிஓடி உழைக்கிறார் பாரதிகிருஷ்ணகுமார் என்கிற பி.கே..

ஒரு பொது மைதானத்தில் விழா ஏற்பாடு. கலைஇலக்கிய இரவுக்கு இப்போது போடுகிற மாதிரியான அகலமான மிகப்பெரிய மேடை. அதன்மேல் பச்சைக் கம்பள விரிப்பு.

மேடையின் முன்பக்கம் கீழிருந்து மின்விளக்கின் வெளிச்சத்தில் மேடைஜொலிக்கிறது.

நாள் நெருங்கிவிட்டது. அடிகளார் வர இயலாத நிலைமை. கோமல் சுவாமிநாதனும் வரஇயலாத நெருக்கடி. சொல்லி வசூல் செய்துவிட்டோம். நகர மக்களை ஏமாற்றிய மோசடிபோல தோற்றமளிக்கும்.

இந்த இரு மிகப்பெரிய ஆளுமைகள் வரமுடியாமல் போன வெற்றிடத்தை நிரப்புகிற மாதிரியான மாற்றுப் பிரமுகரை உடனடியாகத் தேடியாக வேண்டிய அவசர நிர்ப்பந்தம். நானும் பி.கே.யும் கூடிப்பேசி யோசிக்கிறோம். அப்போதுதான், முதன்முறையாக அமெரிக்கா சென்று, ஒரு மாதம் முழுக்க தமிழ் முழங்கிவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். தமிழறிஞர் சாலமன் பாப்பையா. அவருக்கு வரவேற்பும் பாராட்டியும் சிறப்பு செய்வது என்று யோசிக்கிறோம். கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.பி.யும் அனுமதித்து எங்களை முடுக்குகிறார்.

 நானும், பி.கே.யும், பேரா. சாலமன் பாப்பையாவின் 'செல்லங்'கள். எங்கள் வேண்டுகோளை இன்முகத்துடன் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை.

இரவோடு இரவாகப் பயணப்பட்டு, பேரா.ஐயா வீட்டு முன்பாக காலை மூன்றுமணிக்கொல்லாம் போய்ச்சேர்ந்துவிட்டோம். அகாலநேரத்தில் கதவைத் தட்டுவது நாகரிகமில்லை என்று தெருவில் கொசுக்கடியில் காத்திருக்கிறோம்.

இரவெல்லாம் தூக்கம் தொலைத்த பயணக்களைப்பு. கண்விழித்த ரத்தச்சிவப்பு. எங்கள் முகமே ஏதோ பயங்கரமாக இருக்கிறது. விகாரத்தோற்றம்.

பேரா. சாலமன் பாப்பையா எங்களைப் பார்த்தவுடன் திடுக்கிடுகிறார், எங்கள் தேக-முக-இருப்பைப் பார்த்து கலங்குகிறார். "என்ன புள்ளைகளா... இப்புடி இருக்கீக...?" என்று வாயாறுகிறார்.

எங்கள் நிலைமையையும் நெருக்கடியையும் மனம் திறந்து அவரிடம் கொட்டுகிறோம். அவரது தேதியை கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பு. எங்கள் மீது கொண்ட பேரன்பு காரணமாக குதிரைக்கொம்பு கிடைத்துவிட்டது.

மேடையில் இவருக்கு சால்வையணிவிக்கவும், நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டி நாலு வார்த்தை பேசவும் தோழர் கே.முத்தையா சம்மதிக்கவேண்டும். சம்மதிப்பாரா? மலையாக மறித்துநிற்கிற கேள்வி.

"சம்மதிக்க வைக்கிறது உங்கபொறுப்பு மேலாண்மை" என்று உத்தரவிட்டுவிட்ட கிருஷ்ணகுமார்.

எனக்குள் ஒரு நம்பிக்கை. திருச்சி பேராசிரியர் மணிமாறன். தமுஎசவில் உறுப்பினரானதைக் குதூகலப் பெருமிதத்துடன் என்னுடன் பேசியிருக்கிறார்.

ஆகவே, இவரது வருகையையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார் என்றொரு நம்பிக்கை.

மாநிலப் பொதுச்செயலாளரின் மாநாட்டு நிறைவுரையாற்றினார். மாலையே மாநாடு நிறைவுற்றதால் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

நான் மெல்லப்பேச்சைத் துவக்கினேன். தவத்திரு அடிகளாரில் ஆரம்பித்து... பேரா.ஐயா சம்மதம் பெறப்பட்ட சங்கடங்கள் வரை விலாவாரியாக விளக்கினேன்.

"நீங்க சிறப்புரையாற்றுவதற்கு முன்னாடி, அவரைப் பத்தி நாலு வார்த்தை நீங்க பாராட்டணும். ஒரு சால்வையைப்போட்டு, நினைவுப்பரிசு தரணும்"

"மேடையிலே பாப்போம். அவரு எப்புடிப் பேசுறாருன்று பாக்கணும்லே? அமெரிக்க ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தைப் பாராட்டுற மாதிரி பேசுனா... நான் பதில் சொல்லணும்லே? நம்ம மேடையில்லே?"

எனக்குள் அடிவயிறு கலங்குகிறது. அவரது தலைமைப் பண்பின் கண்டிப்பும், கொள்கை வைராக்கியமும் இப்போதைய தனித்துவ நிலையில் தர்மசங்கடமாகத் தோன்றுகிறது. நான் கெஞ்சி மன்றாடி மருகுகிறேன்.

"மதுரை வளவன்னு நம்ம மேடையிலே பேசுனவரு"

"நம்மளைவுட்டுட்டுப் போய்ட்டார்லே?"

"ஆமா... அதுக்குவேற காரணம்..."

" அமெரிக்கன் காலேஜ்லே புரபஸர்"

"ஆமா"

மேடையைப் புதிய முறையில் பிரம்மாண்டப் பேரழகுடன் வடிவமைத்திருந்தார், கிருஷ்ணகுமார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், உரைவீச்சுகள், கவிதைவாசிப்பெல்ல்hம் வரிசையில் காத்திருக்கின்றன.

சமுத்திரஅகலமான பெரிய பரந்தமேடை. பச்சைக் கம்பளவிரிப்பு. லைட் தெரியாத மின் வெளிச்சம். அத்தனை பெரிய மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள். ஒரே ஒரு மைக்.

கூட்டம் பெருங்குட்டம். மூன்று நாட்களாக ஆட்டோ பிரச்சாரம் தெருத்தெருவாக வட்டமடித்து, சாலமன் பாப்பையாவின் வருகையை விளம்பரப்படுத்தியிருந்ததால், ஆறாயிரம் பேருக்கும் மேல் மக்கள்திரள். பார்க்குமிடமெல்லாம் மனிதத் தலைகள். ஆவலில் தவிக்கும் முகங்கள். இத்தனை பெரிய மக்கள் சமுத்திரத்தை முதன்முதலாக பார்க்கிற இயக்கத் தோழர்களின் உற்சாகப்பெருமிதம்.

தரையில் இருந்துகொண்டே தமது கம்பீரமாமன குரலில், கவித்துவ வார்த்தைகளால் வர்ணித்து நீளமான அறிமுகம் செய்கிற பி.கே.யின் குரல் நிறைவுடன் மேடையேறுகிற கே.முத்தையா. அதேபோல நான். அப்புறம் பேரா. சாலமன் பாப்பையா.

மூவரும் கூட்டத்தைப் பார்த்து கைகுவித்து வணங்க. உற்சாகக் கூச்சலிடுகிற மக்கள். சமுத்திர மகிழ்ச்சிப்பேரலை.

கே.முத்தையாவையும், பேரா. சாலமன் பாப்பையாவையும் மிரட்சியும் பிரமிப்புமாக நான் பார்க்கிறேன். கே.எம்-ஐ. மரியாதையுடன் கைகுவித்து வணங்கி வெள்ளிச் சிரிப்பாக இன்முகம் காட்டுகிற ஐயா. அவருக்குக் கும்பிடுபோட்டு உட்காரும்படி கைகாட்டுகிற கே.எம்.

நான் மாநாடு, தீர்மானங்கள், பற்றிப் பேசிவிட்டு கே.எம்.பற்றி பிரமிப்பும், ஐயா பற்றிய பரவசமுமாக பாராட்டுச் சொற்களுடன் பேசிவிட்டு உட்கார்ந்தவுடன்.... கீழிருந்து கம்பீரமாக என்னைப் பாராட்டி நன்றி சொல்கிற பி.கே.ஐயாவைப் பற்றிய நீள்பாராட்டுடன் அறிமுகம் செய்ய, மைக் முன் வருகிறார் ஐயா.

'அமெரிக்கா போய்வந்தது. பாராட்டுக்குரிய பெரிய விஷயமல்ல' என்ற தன்னடக்கத்தைக்கூட, விசா வாங்காமல், பாஸ்போர்ட் வாங்காமல், யார் அனுமதியும் பெறாமல் பருவத்துக்கேற்ப அமெரிக்காவிலிருந்து வந்துபோகிற பறவைகள் பற்றி நகைச்சுவையுடன் விளக்கிவிட்டு, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "இந்தத் திண்ணைப்பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாஇருக்கணும் அண்ணாச்சி" என்ற பாடலை வரிவரியாக விளக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமான ஒரு சமுதாயக் காட்சியை - வாழ்க்கை நிகழ்வை - மனிதமனச் செயல்பாட்டை விவரித்து, விரித்து, சித்தரித்துச் சித்தரித்துப் பேசப்பேச.... கூட்டம் பூராவும் மனம்விட்டுச் சிரிக்கிறது. சிரிப்போடு சிந்தனையும் கலந்தபேச்சு.

ஒன்றேகால் மணிநேரம் அவரது சிரிப்பு மழைக்குள் சிந்தனைக் கள்மழைத்தெறிப்புகள்.

ஒட்டுமொத்த மக்கள் சமுத்திரமும் ஒரு மனச்சலவைக்கும், ஒரு மூளைச் சலவைக்கும் ஆளான மனத்திளைப்பு.

அடுத்து கே.முத்தையா அவர்களை மீண்டும் பாராட்டி நீளமாக அறிமுகம் செய்துவைத்து, உரையாற்ற அழைக்கிற பி.கே.. கே.எம். முகத்தில் பெருமிதம். பல் தெரியாத உதட்டு விரிப்பில் முகமே அகலம் பெறுகிறது. மக்கள் சமுத்திரத்தை மகிழ்வுடன் பார்க்கிறார். 'த.மு.எ.ச. மாவட்ட மாநாட்டுக்கு இத்தனை பெரிய மக்கள்திரளா! என்ற வியப்பும் மகிழ்ச்சியுமாக அவரது மனநிலை. அவர் அனுதினமும் உச்சரிக்கிற ஒரு தஞ்சை மண் கவிஞனின் பாடலுக்கு இப்படியொரு சமுதாயச் சித்தரிப்பா என்ற மகிழ்ச்சியும், பிரமிப்புமான புன்னகையுடன் அவரது அகலமான கை ஐயா கை பற்றி குலுக்குகிறது. பரவசப் பாராட்டில் குலுக்குகிறது. உள்ளங்கையின் உணர்வு மொழியில் ஓராயிரம் பாராட்டுக்கள்.

அவரது சிறப்புரையில் பேரா.சாலமன் பாப்பையாவை மனத் தாராளமாக பாராட்டுகிற கே.முத்தையா, "இவரைப்போன்ற முற்போக்குச் சமுதாயப் பார்வையுள்ள தமிழறிஞர்களும், பேச்சாளர்களும் த.மு.எ.ச. மேடைக்கு அடிக்கடி வரவேண்டும்" என்ற வேண்டுகோளையும், அறைகூவலையும் விடுக்கிறார்.

கே.முத்தையா அவர்களின் உரை முப்பெரும் கவிஞர்களின் பேருலகமாக விரிந்து பரந்து, த.மு.எ.ச. கொள்கை முழக்கங்களை விளக்கிப் படர்கிறது.

அவரது உரையை ஆர்வமுடம் நோக்கிக் கேட்கிற ஐயா. அப்படியே அலைமோதிக் கிடக்கிற மக்கள் சமுத்திரம்.

என்னாகுமோ, ஏதாகுமோ என்று அரண்டு மிரண்டு கிடந்த எனக்குள் ஆசுவாசம். 'அப்பாடா' என்றிருக்கிற மனசின் ஆறுதல் பெருமூச்சு.

அடுத்த நிகழ்வுக்கு இடம்விட்டு நாங்கள் மூவரும் கீழிறங்கியவுடன் பி.கே., ஐயாவை அழைத்துச்செல்ல, என்னுடன் வருகிற கே.எம்.

"ஒங்களுக்கு இவரை முன்னாடியே தெரியுமா?"

"தெரியும்"

"அப்புறம் ஏன் காம்ரேட், நம்ம கூட்டங்களுக்கு இப்படிப்பட்ட முற்போக்கான தமிழறிஞர்களை கூட்டிட்டு வரலே?"

உரிமையுடன் அவர் கண்டிப்பு காட்டிப் பேசுகிறார். 'இயக்க வளர்ச்சிக்கு உதவுகிற உரைவீச்சாளர்களை ஏன் அழைக்காமல் விட்டு வைத்தீர்கள்' என்கிற அக்கறையில் கேட்கிறார்.

ஏதாகுமோ.... என்ன நிகழுமோ என்று கதிகலங்கிப் போயிருந்த எனது பழைய மனநிலைக்குரிய காரணத்தை நினைத்துப்பார்க்காத குழந்தைமையில் அவரது முகக்கனிவு. மன விசாலத்தை உணர்த்துகிற கண்ணொளி.

மிகப்பெரிய அறிஞர்கள், மிகப்பெரிய நேர்மையாளர்கள், மிகப்பெரிய மனிதநேயர்கள்தாம் இப்படிப்பட்ட குழந்தைமையுடன் கள்ளங்கபட நிழலற்று ஒளிரமுடியுமோ!

Pin It