திரைப்படம் என்பது எட்டிப்பிடிக்க இயலாத ஆகாயப் பிரம்மாண்டம். தியேட்டர் போய்ப் பார்ப்பது கூட சிகர உயரமாக சிரமம் தருகிறது. விலை உயர்ந்த சந்தோஷமாக இருக்கிறது.

மாநகர்கள், நகரங்களிலெல்லாம் தியேட்டர் போய் திரைப்படம் பார்ப்பது ஆகப் பெரிய செலவு. ஆயாசப்படுத்துகிற கனத்த செலவு.

இருப்பதில் குறைந்த டிக்கட்டே நூறுதான். ஒரு குடும்பம் என்றால் நாலுபேர். நாலு டிக்கட். நானூறு ரூபாய். தியேட்டருக்குள் நுழையும்போது, குடியரசுத் தலைவர் இல்லத்து இரும்புக் கேட்டில் நுழைவதைப் போல முழுமையான மின்னணுச் சோதனை. வெளியிலிருந்து பெப்பர்மிட்டாய் கூட வாய்க்குள் ஒதுக்கி கொண்டு போக முடியாது. தியேட்டர் சொர்க்க லோகம் போல மாயம் காட்டி மலைக்க வைக்கிறது. ஏகப்பட்ட காம்ப்ளெக்ஸ். வணிக வளாகங்கள், ஒரே இடத்தில் ஏழெட்டு தியேட்டர்கள். ஒரே பெயரில் நாலைந்து. ஒவ்வொன்றிலும் ஒரு படம். நம்ம டிக்கட்டுக்குரிய படம் ஓடுகிற தியேட்டரைப் பார்த்து இனம் கண்டுபிடித்துப்போய்ச் சேருவது, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி மந்திரக்குகை போய்ச் சேர்வது மாதிரி. விசாரித்து விசாரித்து, ஓடியாடிப் போய் உட்கார்கிறபோது, தாகம் தவிக்கிறது. தண்ணீர் அரைலிட்டர் பதினாறு ரூபாய். நாலு பேருக்கு நாலுபாட்டில். அறுபத்தி நாலு ரூபாய். மக்காச்சோளப் பொறி (பாப்கார்ன்) எழுபது ரூபாய். கேக் வாங்கப் போனால் தங்கவிலை. சாக்லேட் கேட்டால் வைரவிலை. போய் வர ஆட்டோச் செலவு இருநூறு ரூபாய். ஒரு குடும்பம் தியேட்டர் போய் படம் பார்த்து திரும்புவதற்குள் ஆயிரம் ரூபாய் நோட்டு மாயமாகி விடுகிறது.

தியேட்டர் போய் படம் பார்ப்பது இம்புட்டுப் பெரிய செலவு என்றால், தியேட்டருக்கு ஒரு படத்தைத் தயாரித்து கொண்டு வந்து சேர்ப்பதுவும் 'எம்புட்டோ' பெரிய செலவு. இருபது கோடி என்பது குறைந்த செலவு. ஒரு திரைப்படம் தயாரிப்பது என்பது ஆகாயப் பிரம்மாண்டம்.

அப்படியென்றால் பரந்துபட்ட மக்கள் திரளிடம் போய்ச் சேர வேண்டிய திரைப்படம் எனும் கலைச்சாதனம் கோடீஸ்வரர்களின் கைச் சரக்காகி விடுகிறது. ஆளும் வர்க்கத்தின் கைப்பொருள், எளிய மக்களுக்கான கருத்தைச் சொல்லுமா?

எளிய மக்களுக்கான-படித்த படிக்காத பொது மக்களுக்கான-கலைச் சாதனமான திரைப்படம் எப்போது வரும்? நல்ல கருத்தை சுமந்து கொண்டு எப்படி வரும்? கோடீஸ்வரர்கள் தயவும், தியேட்டர் கூரையும் தேவைப்படாத வகையில், கலைச்சாதனத்துடன் பரந்துபட்ட மக்களை சங்கமிக்க வைக்க முடியுமா? என்ன வழி,

குறும்படம் தான் மாற்று ஊடகம். குறைந்த செலவிலான கதைப்படம். டி.வி.டி. பிளேயரும், டி.வி.யும் இருந்தால் போதும். பார்த்துவிடலாம்.

குறும்படம் என்பது சிறுபடமல்ல. மாற்றுப் பாதை. மக்களுக்கான மாற்றுப்பாதை. புதிய சிந்தனைகளை எளிய செலவில் வடிவப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வதற்கானது.

ஒரு குறுந்தகடு வந்திருக்கிறது. மூன்று குறும் படங்கள் இருக்கின்றன. வேலூரைச்சேர்ந்த கல்லூரியில் பணியாற்றுகிற பேராசிரியை பெ.அமுதா எண்ணமும் இயக்கமுமாய் தயாரித்திருக்கிற கதைப்படங்கள்.

'திருகாணி', 'தொலைந்து போனவர்கள்', 'இப்படிக்கு பேய்' என்ற மூன்று குறும்படங்கள்.

திருகாணி தொலைந்து போனதால், கம்மலை அணிய முடியாமல் தவிக்கிற இளம் இல்லத்தலைவி. பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்தவள். மேற்படிப்புகள் படித்து, விஞ்ஞhனியாக கனவு கண்டவள். பிஎஸ்சி யில் முதல் மாணவியாக முன்னேறி, தங்கமெடல் பெற்றவள்.

அப்பா கனிவாகச் சொல்கிறார். 'நல்ல இடம் வருது. கல்யாணம் பண்ணிக்க. அப்புறம் படிக்கலாம்' நம்புகிறாள். கழுத்தை நீட்டுகிறாள். அன்பான கணவனுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகள். முன்னேற்ற துரிதம். இளம் விஞ்ஞானி. கனவு திருகாணியாக காணாமற் போக... அணிய முடியாத கம்மலாக மேற்படிப்பின் கானல் நீர்.

நல்ல சிந்தனை. மனசைப் பிசைகிற ஒடுக்கு முறையின் வேதனை. வலியை உணர வைக்கிற நல்லகதை. நதியாவின் நல்ல நடிப்பு. ஆய்வுக்கூடத்தில் ரசாயனக் கொதிகலத்துடன் ஆய்வு செய்ய வேண்டியவள், அடுப்பங்கரையில் குக்கருடனும், கரண்டியுடனும் மல்லாடுகிற சோகம். கல்விக் கனவை கருக்கி விடுகிற கல்யாணக் கடமை.

பின்னணிக் குரலில் விடாமல் தொடர்கிற வார்த்தை வர்ணனையில் பயணப்படுகிறது, கதை. காட்சிப் படுத்தலில் அவிழ்ந்து பரவ வேண்டிய வாசனை உணர்வு, வார்த்தைப் படுத்தலிலேயே விவரிக்கப்படுகிறது. காட்சி ஊடகம், செவி ஊடகமாகிப்போன ஒரு தொழில் நுணுக்குப்பிழை. அதைத் தாண்டியும் மனசில் காயமாக வலிக்கிற கதைச் சோகம்.

'தொலைந்த போனவர்கள்' மிகச் சிறந்த குறுந்திரைப்படம். வடிவரீதியான நேர்த்தியும், உள்ளடக்க ரீதியான கூர்மையும் சங்கமித்திருக்கிறது.

சந்தோஷுக்குப் போன்பண்ணிகிறாள். சுவிட்ச் ஆப் என்றே வருகிறது. அவனில்லாமல் வாழமுடியாது என்கிற காதல் அவஸ்தையில் துடிக்கிற அவள். விரக்தி வசப்படுகிறாள். 'செத்துரலாமா' என்று துடிக்கிறாள்.

இறுதி முயற்சியாக ஒரு கடிதம் எழுதுகிறாள். கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட இருச்சக்கரவண்டியில் போகிறாள். போகிற வழியில் வண்டி பழுதாக, தெருவில் காத்திருக்கும் போது, கடிதம் நழுவி, தரையில் விழுகிறது. அதைக் கவனிக்க விடாத அளவுக்கு ரோட்டோர மரத்தடியில் கந்தல் துணியாக படுத்துக் கிடக்கிற இளம் வயதுப் பெண். மனச் சிதைவுற்ற வாய் பேசச் சக்தியற்ற அனாதை. அவளைப் பார்த்துக் கவலைப்படுகிறாள்.

'காதல் தோல்விக்காளானதானும் இவளை மாதிரி மனம் பேதலித்து விடுவேனோ' என்ற நினைவுக்கீற்று. அவளுக்கு மறுநாள் போர்வை கொண்டு வந்து போர்த்துகிறாள். இவளது பிறந்தநாள் இனிப்பை கொண்டுவந்து தருகிறாள், அவள் மீது பரிவும் கருணையும் உதவியும் வழங்குவதில் ஓர் ஆறுதல். தினமும் வந்துவந்து பார்க்கிறாள்.

அவள் கிழிபட்டுக்கிடக்கிறாள், ஒருநாள். அவள் பக்கத்தில் வெற்றுப்பாட்டில்களில் மதுநெடி. அவளை ரெண்டு மூன்று மிருகங்கள் சீரழிக்கின்றன. இவள் அதிர்ச்சியுறுகிறாள். 'இப்படியொரு ஜீவனை வெறும் பெண்ணுடலாகவும் நினைக்க முடிகிறதா' என்ற துயரமான ஆச்சரியம். மறுநாள் அவளைக் காண வருகிறபோது அவளைக் காணோம். அவள் கிடந்த இடத்தில் இவள் தவறவிட்ட கடிதம். கிழித்தெறிகிறாள். அந்த அனாதையைத் தேடித்தேடி அலைகிறாள். அவள் மீது கொண்ட அன்பு, வாழ்வுக்கு புதிய அர்த்தம் தருகிறது.

வீடு போகிறாள். சந்தோஷ் போன் பண்ணுகிறான். 'ராங் நம்பர்' என்று கட் பண்ணுகிறாள்.

தொலைந்து போனவள் ஒரு நம்பிக்கையை தந்துவிட்டுப் போயிருக்கிறாள். ஒரு வெளிச்சம் விட்டுப்போயிருக்கிறாள்.

காட்சிப் படுத்தல்களில்... கள மாற்றத்தில்.... வார்த்தைகள் குறைந்த உணர்வு வெளிப்பாட்டில்.... பெண்மனப் பரிணாமம் பற்றிய புதிய உள்ளடக்கத்தை ரசிக மனசில் ஏற்றுவதில் ஒரு வெற்றிகரமான கலைச்சித்திரமாகியிருக்கிறது.

காதல் மட்டுமல்ல வாழ்க்கை என்ற புதிய தெளிவைத் தருகிறது. கலைமணத்துடனும், கலைமனதுடனும் படம் நமக்குள் பரவிப்படர்கிறது.

பத்துவயதில் ஆண்முரடனால் சிதைக்கப்படுகிற பயங்கரம். முரட்டுப்புருஷனால் வதைக்கப்படுகிற மூர்க்கம். அவள் பெற்ற மகள் பறிக்கப்படுகிற கொடூரம், எல்லாத் துயரங்களின் மூர்க்கத்தாக்குதலால் மனப்பிரமைக்குள்ளாகிறவளை பேய்பிடித்துவிட்டதாகக் கருதி..... உடுக்கடித்து, சவுக்கால் அடித்து நாசப்படுத்துகிற சோகச்சித்திரம்.

நல்லகதை. ஆனால் தெளிவான காட்சிப்படுத்தல் இல்லை. குழப்பமான திரைக்கதை. மனசில் தைக்காமல் விலகிவிடுகிற கதைமுள்.

'இப்படிக்கு பேய்' வடிவரீதியிலான நேர்த்தியும் எளிமையும், தெளிவும் இல்லாததால் .. ஒரு நல்லகதை. உரியவிளைவு நிகழ்த்தாமல் போய்விடுகிறது.

பலநூறு கோடிகளில் தயாரிக்கப்படுகிற திரைப்படங்களில் பெரும்பான்மையானவை குப்பையாகிப் போகிற யதார்த்தத்துடன் ஒப்பிட்டால்... இந்த எளிய குறுந்தகடு மிகப்பெரிய கலையனுபவத்தையும், மனத்தெளிவையும் தருகிறது.

நடித்த நதியாவையும், இயக்கிய பேரா.பெ.அமுதாவையும் பாராட்டலாம்.

இம்மாதிரியான முயற்சிகள் தமிழ்நாடெங்கும் தொடரட்டும், படரட்டும்..

Pin It