நூல் மதிப்புரை

ச.செந்தில்நாதன் எழுதிய "அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை"

 

“மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” எனும் முழக்கத்தை ஓங்கிச் சொன்ன வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடிய ஜீவ காருண்யர்; ஆன்மீகச்சித்தர்.

‘’சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே’’

 

- என்று சாதி-மத கோத்திர குல பேதம் வளர்ப் போருக் கெதிராக வீரமுழக்கமிட்ட புரட்சித் துறவி

சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வணங்கச் சொன்னவர்.பசித்தோருக்கெல்லாம் அன்னம் இட வேண்டுமென அணையா அடுப்பென்னும் அட்சய பாத்திரத்தை நிறுவியவர்.

வைதீக சமயத்தார்களாலும், வைதீக சைவ-மதத்தினர்களாலும் மருட்பா என்று சாடப்பட்டது,  அவரது அருட்பா எனும் அமுதம்.

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை - ஒரு மறுவாசிப்பு என்றொரு நூலை வழங்கியிருக்கிறார். எழுத்தாளர் ச. செந்தில்நாதன்.

ஒரு வித்தியாசமான வரலாற்று ஆய்வு நூல். தமிழுக்காக போராடுகிற, இயங்குகிற அமைப்பு களுக்கும், இயக்கங்களுக்கும், சிந்தனைப்போக்குகளுக் கும் மூலவிதை எது என்று முந்தைய வரலாறு முழுமை யையும் ஆய்வு செய்து, தெட்டத்தெளிவாக ஒரு முடிவை முன் வைக்கிறார்.

‘சிகரம்’ எனும் முற்போக்கு இலக்கிய இதழ் நடத்தி, மக்கள் எழுத்தாளர் சங்கம் அமைத்து,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் சங்கமித்து நெடும் பயணம் நடத்திய செந்தில்நாதனின் அனுபவத் திரட்சியும், தத்துவத் தேர்ச்சியும் இந்த நூலில் முழுமையாகத் திரண்டு வெளிப்படுகிறது.

இஸ்லாமிய சுல்தான்களின் தென்னகப் படை யெடுப்புகள், ஆட்சிகள், நாயக்கர் காலத்து சாம்ராஜ்யங் கள்,அதற்கும் முந்தைய சோழர்காலத்துப் பேரரசுகள் இவற்றுடன் நிகழ்ந்த மதப்படையெடுப்புகள், வடமொழிப் பேராதிக்கம்,வைணவப்பாய்ச்சல்,பிராமணியப் பேராளுமை எல்லாம் சேர்ந்து தமிழ்க்கடவுகளான முருகனையும், தமிழ்மண்ணுக்குரிய சமயத் தத்துவ மரபையும், தமிழ்மொழி வழிபாட்டு முறைமையையும், திருவாசகப் படிப்புகளையும் சிதைத்து சின்னா பின்னப் படுத்தி சேதாரப்படுத்தி ஓரங்கட்டி வைத்திருக் கின்றன என்ற நெடும் வரலாற்றைச் சுருக்கமாக தெளிவாக விளக்குகிறார்.

சைவத் தத்துவ மரபும்,வீர சைவ மடங்களும், அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரையிலான,சைவமத ஆதீனங்களும் திருவாசகம், அருட்பா,தேவாரம் போன்ற தமிழ் இலக்கியச் செல்வங்களையும்,தமிழ் முருகனையும், வைணவ மனு தர்ம வர்ணாசிரமத்துக்கெதிரான சாதிய சமத்துவத்தையும் எப்படி மீட்டெடுத்து, இருபதாம் நூற்றாண்டு தமிழ் இயக்கங்களுக்கு விதையாக விளங் கிற்று என்பது நூலாசிரியரின் ஆய்வு முடிவாக இருக்கிறது,

இருபதாம் நூற்றாண்டு சமூகநீதிப் போராட்டங் களுக்கு வெளிச்சம் தந்த அருட்பெருஞ்ஜோதியென சைவ இயக்கங்களின் பங்களிப்புகளையும் முன் வைக்கிறார்.

சோழர்காலத்து மாமன்னர்கள் பிராமணியப் பேராதிக்கத்துக்கு சிம்மாசனம் போட்டுத் தந்ததால் தமிழ்மொழியும், தமிழ்ச் சைவ தத்துவ மரபும், தமிழ் வழிபாடும் எவ்வாறு பெரும் பாதிப்புக்குள்ளாயிற்று என்பதை சான்றுகளுடம் நிருபிக்கிறார்.

குன்றக்குடி ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்களும், மடங்களும் தமிழைக் காக்கப் போராடி வருவதை முன் வைக்கிறார். சில ஆதீனங்கள் விஸ்வ இந்து பரிஷத்துடன் தொடர்பு கொண்டிருக்கிற அபாயத் தையும் நேர்மையுடன் சுட்டிக்காட்டுகிறார்.

நம்முடன் பேசுவது போன்ற மனசுக்கு நெருக்க மான மொழி நடையைக் கையாண்டிருப்பது, வாசிப் போட்டத்துக்கு வழி சமைத்துத் தருகிறது.

தமிழர் தத்துவ மரபு, தமிழர் வழிபாட்டு மரபு, தமிழர் தெய்வ மரபு,  தமிழ் மொழியின் மரபு போன்றவற்றை மீட்டெடுத்துப் போராடுவதற்குரிய மன பலத்தை இந்நூல் தருகிறது.

வரலாற்றையும், அதன் தொடர்புள்ள பலவற்றை யும் மார்க்ஸிய நோக்கில் ஆய்வு செய்திருப்பது, நூலுக்கு கூடுதல் ஒளி தருகிறது,

வெளியீடு:

புதுமைப்பித்தன் பதிப்பகம்,

ப.எண். 57, 53 - வது தெரு,

9-வது அவென்யூ, அசோக் நகர்,

சென்னை-83.    

விலை:ரூ 80.

Pin It