உயர்கல்வி படிப்படியாக தனியார் துறைக்கு போகிறது இதனால் உயர்கல்வி படிக்க ஆகும் செலவிற்காக வங்கியிலிருந்து கடன் பெறுவதைத் தவிர மாணவர்களுக்கு வேறுவழியில்லை. தாமதமாக விண்ணப்பித்தார் என்ற காரணத்திற்காக ஒருவருக்கு கல்விக் கடன் மறுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பேயோட்டை சேர்ந்த சுகிதா, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வெள்ளிச்சந்தையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிக்கிறேன். என் தந்தை விவசாய கூலித் தொழிலாளி. பி.இ. படிக்க நான்கு ஆண்டுக்கும் சேர்த்து ரூ. 3,10,400 கல்விக் கடன் கேட்டு பேயோடு ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளைக்கு 2009 டிசம்பர் 14ல் விண்ணப்பித்தேன். கல்விக் கடன் விண்ணப்பமே கஷ்டப்பட்டு தான் வாங்க முடிந்தது. நான் காலம் கடந்து விண்ணப்பித்ததாக கூறி எனக்கு கடன் வழங்க வங்கி மறுத்துவிட்டது. கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் சுகிதா கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி டி.எஸ். சிவஞானம் விசாரித்தார். வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், மனுதாரருக்கு வங்கிக் கடன் மறுக்கவில்லை. கல்வி ஆண்டின் இறுதியில் விண்ணப்பித்தால், 2ஆம் ஆண்டிலிருந்து தான் கடன் வழங்க முடிவு செய்யப்படும். அதற்கு மனுதாரர் முதல் ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது. கல்விக்கான அரசு மானியம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், உயர் கல்விக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. உயர்கல்வி படிப்படியாக தனியார் துறைக்கு போகிறது. இதனால் உயர்கல்வி படிக்க ஆகும் செலவிற்காக வங்கியிலிருந்து கடன் பெறுவதை தவிர மாணவர்களுக்கு வேறுவழியில்லை. தாமதமாக விண்ணப்பித்தார் என்ற காரணத்திற்காக ஒருவருக்கு கல்விக் கடன் மறுக்கக்கூடாது. மனுதாரருக்கு 3 வாரத்தில் கல்விக் கடன் வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

கார்மேளா, நகைக்கடன்மேளா, வீட்டுக்கடன் மேளா போல இப்போது மிகப்பிரபலம் கல்விக்கடன் மேளாதான். மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஊர் ஊராக சென்று மேளா நடத்தி 20 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கியதாக கூறியுள்ளார்.

நடைமுறையில் வங்கியில் எந்த கடன் வாங்க வேண்டுமானாலும் அது வங்கி மேலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்னும் நிலையுள்ளது. கல்விக்கடன் கேட்க வங்கிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு விண்ணப்பம் இல்லை. அதிகாரிகள் இல்லை சொத்துக்கள் இல்லை போன்ற பல அற்ப காரணங்களை கூறி நிராகரிக்கும் நிலையே தற்போது உள்ளது. இதனால் கல்விக்கடன் கிடைக்காமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையும், வீடு நிலங்களை விற்று படிக்கும் நிலையுமே உள்ளது.

ஆனால் அரசு உத்தரவுகளும், வங்கி விதிகளும் தகுதியுள்ள அனைவருக்கும் வங்கிக்கடன் என அறிவிக்கின்றன. ஆனால், இவ்விபரங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. அரசும், வங்கிகளும் வகுத்துள்ள கல்விக்கடன் பெறுவதற்கான சில வழி முறைகள்.

தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் கல்விக்கடன் கிடைக்கும். கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள வங்கிஅணுகவேண்டும் கடன் விண்ணப்பங்கள் அனைத்து வங்கிகளிலும், வங்கியின் வெப்சைட்டிலும் கிடைக்கின்றது. எனவே ஆன்லைனிலும் விண்ணப்பித்து பின்னர் நேரில் செல்லலாம்..பட்டம், பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ, கணிப்பொறி போன்ற படிப்புகளுக்கும் மத்திய அல்லது மாநில அரசின் அனுமதி பெற்ற படிப்புகளுக்கும் மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை, சட்டம், மேலாண்மை மற்றும் ICWA, CA, CFA போன்றவற்றிக்கும் IIM, IISC, XLR, NIFL மேலும் ஏரோ நாட்டிகள், பைலட் ட்ரைனிங், கப்பல் துறை சார்ந்த படிப்புகளுக்கும் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் படிப்பதற்கும் கல்விக்கடன் கிடைக்கிறது. 

கல்விக் கடனுக்கான வட்டியை பொருத்த வரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை மண்டல பொது மேலாளர், தேனப்பன் அவர்கள் மாணவர்கள் செலுத்த வேண்டிய வட்டியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும். ஆனால் இதுபற்றிய தகவல் எதுவும் இதுவரை எங்களுக்கு வரவில்லை என்கிறார். மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் 2009+-10 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. வாங்கிய கடனுக்கு வங்கிக்கடன் வட்டி கேட்டால் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.

 பலர் பல கோணங்களில் மாணவர்களையும், பெற்றோரையும் குழப்பினாலும் ஒவ்வொறு வங்கியும் வட்டியை வாங்குவதில் கறாராக உள்ளனர். ரூ. 4 லட்சம் வரை எந்த பிணையும் இல்லாமலும் 7.5 லட்சம் வரை தனிநபர் கியாரண்டி இல்லாமலும் அதற்கு மேலான தொகைக்கு தகுந்த ஆவணங்கiள் பெற்றும் வழங்கப்படுகின்றது. உள்நாட்டுக் கடன் 10 லட்சம் வரை பெற 5 சதவீதம் வங்கியிருப்பும் வெளிநாட்டுக்கடன் 20 லட்சம் வரை பெற 15 சதவிதம் மார்ஜின் கட்ட வேண்டும் எனவும் கூறுகிறது. வட்டியை படிக்கும் போதே கட்டலாம். கடனை படிப்பு முடிந்த 5 அல்லது 7 வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படவேண்டம் வட்டி விகிதத்தில் பெண்களுக்கு 0.50 சதவிதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் 11.75 சதவிதம், HSBC வங்கி மற்றும் தமிழ்நாடு கோ-ஆப்ரேட்டிவ் வங்கி 12 சதவிதம் வட்டியும், பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, மெர்கன்டைல் வங்கி, ஆந்திரா வங்கி 12.50 சதம் வட்டியும், அலகாபாத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 12.75 சதம் வட்டியும், யூனியன் பேங்க், தேனாவங்கி பேங்க் ஆப் பரோடா, பாரத ஸ்டேட் பாங்க, கரூர் வைஸ்யா பேங்க, 13.50 சதவிதம் வட்டியும், ஐசிஐசிஐ 13.75 சதமும், ழளுகுஊ பேங்க் 14 சதவித வட்டியும் வசூலிக்கிறது. பல வங்கிகள் வாங்கும் கல்விக்கடனுக்கு காப்பீடு செய்யவும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கிறது.கல்லூரி. விடுதிக்கான கட்டணமும், தேர்வு, நூலகம், ஆய்வகத்திற்கும், புத்தகம், சீருடை. உபகரணங்கள், வெளி நாடுகளில் பயில பயணத்திற்கான கட்டணத்திற்கும் டூ -வீலர் வாங்க 50,000 வரையும் கடன் வழங்கப்படுகின்றது. 

கல்விக்கடன் பெற முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது பாஸ்போர்ட், மின்சாரம் அல்லது தொலைபேசி கட்டண ரசீது, ஏதாவது ஒன்றின் நகல் தரவேண்டும்.சென்ற கல்வி ஆண்டின் மதிப்பெண் நகல். இந்தாண்டு பயில்வதற்கான கல்லூரியின் புரோ விஷினல் சான்று பிறந்த தேதி மற்றும் சாதி அறிய பத்தாம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழும், சாதிச் சான்றிதழ் நகல்களும், இணைக்கப்பட வேண்டும். குடும்ப வருமானத்திற்கான சான்றும், பயிலும் கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்றும் அளிக்கப்பட வேண்டும். 

கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்கான தகவல் கல்லூரியில் இருந்து பெறப்பட்டு தரவேண்டும். வேறு வங்கிகளில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கல்விக்கடன் வாங்கியிருந்தால் அதற்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தாமதமாக விண்ணப்பிப்பது அல்லது வேறு பல அற்ப காரணங்களைக் காட்டி கல்விக் கடன் தர மறுத்தால் சம்மந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கும் செல்லலாம்.

Pin It