கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வரும் சிறப்பான ஆட்டமே தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்க உதவியது. ஆனால், இதன் ஆரம்பம் சவுரவ் கங்குலி தலைமையில் 2001 ஆம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உலக சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் நமது அணி 1998 _ 99ல் ஆஸ்திரேலியா சென்று அங்கு விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. பிறகு நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் மிக மோசமான தோல்வியுடன் நாடு திரும்பியது. தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைமைப் பொறுப்பை உதறினார் சச்சின்.

அந்த சமயம், தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் விளையாட வந்திருந்ததால் அதுவரைக்கும் சச்சினை தலைமைப் பொறுப்பில் இருக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் பணித்தது. ஆனால், அந்தத் தொடரின் ஐந்து போட்டிகளிலும் மிக மோசமான தோல்வியையே சந்தித்தது இந்தியா.

இந்த சூழ்நிலையில்தான் கொல்கத்தாவின் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மேற்கு இந்தியத் தீவுகள் சென்ற போது இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி பெற்றது. அது வரைக்கும் தோல்விகளையே அதிகம் சந்தித்து வந்த இந்திய அணியை வெற்றிப் பயணத்திற்கு அழைத்து சென்று தலைநிமிரச் செய்தார் கங்குலி.

2002ம் ஆண்டில் கங்குலி எடுத்த முக்கிய முடிவு இந்திய அணிக்கு மேலும் திருப்பு முனையாக அமைந்தது. அணிக்குள் புதிதாக இளைஞர்களை அதிகம் சேர்த்ததோடு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சேவாக்கை துவக்க வீரராக களம் இறக்கினார். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி 96 பந்துகளில் 84 ரன்களை விலாசித் தள்ளிய சேவாக், அடுத்த போட்டியில் சதம் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் தொடர்களிலும் தொடர் வெற்றிகள் மூலம் சாதனைத் தலைவனாக ஓய்வு பெற்றார் கங்குலி. இது பழைய வரலாறு!

கங்குலியை தலைமைப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிய கிரிக்கெட் வாரியம், அடுத்த தலைவராக திராவிடை நியமனம் செய்தது. மீண்டும் அணி சரிவை சந்திக்க நேர்ந்தது.

பின்னர், தோனி ஒருநாள் தொடருக்கும், அனில்கும்ளே டெஸ்ட் அணிக்கும் தலைவரானார்கள். ஆஸ்திரேலியாவுடன் ஆடியபோது கையில் ஏற்பட்ட காயத்தால்அந்தத் தொடரோடு கும்ளேவும் விடை பெற்றார்.

அவரைத் தொடர்ந்து, மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கப்பட்டார். நியூஸிலாந்தை சொந்த மண்ணிலேயே வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து தொடரிலும் வெற்றி பெற்றது.

இந்த பின்னணியில், இலங்கை அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள், 20 ஓவர் இரண்டு போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வந்தது. ஐசிசி தயாரிக்கும் எதிர்கால பயணவிபரத்தில் இந்த தொடர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது இல்லை. இது திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தபோது அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலையைக் காரணம் காட்டி இந்திய அணி இலங்கையில் விளையாடக்கூடாது என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையிலும் விளையாடிய இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று நாடு திரும்பியது.

இப்போதும் இலங்கை அணி இந்தியா வந்துள்ள போதும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப் பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில் துவங்கிய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. இந்திய அணி.

அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் எந்தத் தரப்பும் வெற்றி பெறாமல் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும், அந்தப் போட்டியில் இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனா 275 குவித்ததோடு பிரசன்னாவோடு இணைந்து 351 ரன் களைக் குவித்து சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்த ரசிகர்களுக்கு இரண்டு இன்னிங்சிலும் துவக்க வீரர் காம்பீரின் சதமும், சச்சின் அடித்த சாதனை சதமும் தோல்வியைத் தவிர்த்து நிம்மதியைத் தந்தது.

அதே சமயம், கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய அணி, ஐசிசி தரவரிசைப் பட்டியலை முதல் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணியோடு பகிர்ந்துகொண்டது. டெஸ்ட் அரங்கில் 100வது வெற்றியைப் பெற்ற இந்திய அணிஅடுத்த சில தினங்களிலேயே மும்பைப் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது. 77 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் 3 முறை 300 ரன்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை 7 ரன்களில் சேவாக் தவறவிட்டது துரதிர்ஷ்டவச மானது. அதே சமயம், கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி 30 ஆயிரம் ரன்களை குவித்த ஒரே வீரர் என்ற சச்சினின் உலக சாதனையும், தோனி தலைமையில் 10 போட்டிகளில் விளையாடி அதில் 7இல் வெற்றி பெற்ற இந்திய அணியின் சாதனையும்

இந்திய மண்ணில் இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து இன்னிங்ஸ் தோல்வியை தழுவியதும் உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்திருந்தது என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், இந்தத் தொடருக்காக அமைக்கப்பட்ட மூன்று மைதானங்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனத்தையும் ஒதுக்கிடவிடமுடியாது. அகமதாபாத் மைதானம் ரன் குவிப்புக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. ஐந்து நாட்களில் 1,598 ரன்கள் குவிக்கப்பட்டன. ஆனால் 21 விக்கெட் மட்டுமே விழுந்துள்ளது. கட்டாந்தரையிலும் பந்தை திரும்பச் செய்வதில் கில்லாடியான முத்தையா முரளிதரனால் இந்த மைதானத்தில் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை என்றால் அந்த ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

கான்பூர் மைதானத்தில் போட்டி துவங்கிய முதல் நாளே 417 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்தது இந்திய அணி . இந்த மைதானமும் அகமதாபாத் போன்றே தயாரிக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஐந்து நாட்களும் விளையாட வேண்டிய டெஸ்ட் போட்டிகளை மூன்று நாட்களிலேயே முடித்துக் கொள்ளும் நிலைக்கு மிக மோசமாக அமைக்கப்படும் ஆடுகளங்களை பார்க்கும் போது டெஸ்ட் போட்டிகளே இனி வேண்டாம் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வரவேண்டும் என்பதற்காக திட்மிட்டு நடத்தப்படும் சதியா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 4வது ஒரு நாள் போட்டிக்கு, பொதுமக்களுக்கு டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படாததாலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மைதானம் குறித்த சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும், நாக்பூர், மொகாலியில் நடைபெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளைப் போன்று ராஜ்கோட், நாக்பூர், கட்டாக், கொல்கத்தா, டில்லி ஒரு நாள் போட்டிகளும் ரசிகர்களுக்கு விறு விறுப்பாக அமைந்திருந்தது. 20க்கு 20 தொடர் 11 என்ற புள்ளிக் கணக்கில் சம நிலையில் முடிந்தாலும், ஒரு நாள் தொடர் இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருந்தது. முதல் போட்டியில் இந்தியா 414 ரன்கள் குவித்தது.இலக்கை சளைக்காமல் விரட்டிச் சென்று 3 ரன்னில் வெற்றியை பறிகொடுத்த இலங்கை அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்று பழியை தீர்த்துக்கொண்டது.கடைசி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இந்திய அணியினர் நாங்களும் சளைக்கவில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

- ஸ்ரீராமுலு

Pin It