சுதந்திரப் போராட்ட வீரர் எ.அப்துல் வகாப்பின் நினைவலைகள்...

கப்பற்படையினர் எழுச்சி, அகில இந்திய ரீதியில் நடைபெற்ற பேரியக்கங்கள், நேதாஜி சுபாஸ் தலைமையிலான வீரர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற அகில இந்திய போராட்டம் ஆகியவற்றில் எல்லாம் எனது ஈடுபாடும், பங்கெடுப்பும் இருந்தது.

1947ல் நாடு விடுதலை பெற்றதோடு, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, இந்து-, முஸ்லீம் படுகொலைகள், காந்தியின் நவகாளி பாதயாத்திரை எல்லாம் நினைவில் வருகின்றன. வட இந்தியாவில் இந்து பானி (இந்துவின் குடிநீர்), முஸ்லீம் பானி (முஸ்லீம் குடிநீர்) என்ற பேதங்கள் எல்லாம் புரையோடிப் போய் இருந்த நேரம் இதன் விளைவாக இந்து வகுப்பு வாதம், முஸ்லீம் பழமை வாதம் மோதலாக எழுந்த காலம் இவற்றையெல்லாம் சமாளிக்க ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி கள் கண்முன் நிதர்சனமாக வருகின்றன. சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம், வி.வி. சுப்பிரமணிய அய்யர் மழிக்காத தாடியும், வளர்ந்த தலை முடியுமாக சீக்கியர் தலைப்பாகை அணிந்த கோலத்தோடு பிரிட்டனிலிருந்து வெளியேறுகிறார். அவரது பெட்டியில் விவிஎஸ் என்று எழுத்துக்கள் உள்ளன. சுப்ரமணிய ஐயரைத் தேடி வந்த போலீஸ் ஒரு சீக்கியர் தோற்றத்தில் இருப்பதைக் கண்டு திகைக்கிறார்கள். பெட்டியில் உள்ள எழுத்துக்கள் சந்தேகத்தை கொடுக்கின்றன. இதைக் கண்ட அந்த வேடதாரி ஐயர் தன் பெயரை வீர் விக்ரம்சிங் என உரக்கக் கூறுகிறார். போலீஸ் உடனே அவரை விட்டுச் செல்கிறது. விவிஎஸ் நம் நாட்டுக்கு திரும்பினார்.

இப்படி மனம் கவர்ந்த கதாநாயகர்கள் பலர் இருந்தாலும் கப்பலோட்டிய தமிழன் என்ற இந்தியன் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஹைதர் அலிகானும் என்னை மிகவும் கவர்ந்த தலைவர்கள்.

சுதந்திரத்திற்கு முன் சுதேசி, சுதேசமூலதனம், சுதேச தொழில் வளர்ச்சி என்று கூறிவந்தது. டாட்டா, பிர்லா போன்றோர் சுதேசத் தொழில்களை வளர்ப்பதில் முன் நின்றனர். மத்திய அரசும் அவ்விருவருக்கும் 5 கோடி ரூபாய் வீதம் வட்டியில்லா கடனும் கொடுத்து உதவியது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சேபனைகளுக்கு பின் அவற்றை வாபஸ் பெற்றது. மத்திய அரசு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் முதலாளித்துவ அமைப்புகளுக்கு வரிச்சலுகைகள் நிறுவன ரீதியாக கார்ப்பரேட் சலுகைகள் கொடுத்து அவர்களை ஏகபோக முதலாளிகளை பன்னாட்டு முதலாளிகளாக ஆக்குவதற்கு முனைந்துள்ளது.

நம் இளைஞர் சமுதாயம் நாட்டின் எதிர்காலம். இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களை ஒன்றுப்படுத்தி அவர்களின் நல உரிமைகளைப் பாதுகாக்கப் போராட வேண்டும். வகுப்புவாதத்தை எதிர்த்து, பழமை வாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்து ஜனநாயக கோட்பாடுகளை காக்க போராட வேண்டும்.

Pin It