கொலையில் உதித்த தெய்வங்கள் - 7

கடந்த இரு இதழ்களில் சாதி மீறிய காதலுக்காகக் கொலை செய்யப்பட்ட சாத்தன் சாம்பன் வரலாற்றைக் கண்டோம். இது போன்று சாதி மீறிய காதலுக்காகக் கொலை செய்யப்பட்டு தெய்வமாக்கப்பட்ட பட்டபிரான் -புச்சியம்மன் வரலாற்றை இவ்விதழில் காண்போம்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்ற கிராமத்தில் பட்டபிரான் என்ற மறவர் சாதி இளைஞன் மாடு வியாபாரம் செய்து வந்தான். வியாபாரத்தின் நிமித்தம் திருநெல்வேலியின் மேற்குப் பகுதியிலுள்ள மேலப்பாவூர் என்னும் கிராமத்தின் வழியாகச் செல்லும் போது பொயிலாம் புச்சி என்ற பள்ளர் சாதிப் பெண்ணைக் கண்டு அவள் அழகில் மயங்கினான்.

அவளை அடைய வேண்டும் என்ற விருப்பத்தினால் அவளுடைய பெற்றோருடன் பழகினான். ஒரு நாள் யாரும் அறியாமல் பொயிலாம்புச்சியை அழைத்துக் கொண்டு உடன் போக்காகக் கிளம்பினான். அவர்களுடன் புச்சி நாய் என்ற நாயும் வந்தது. இறுதியில் இருவரும் வல்லநாடு கிராமத்திற்கு வடகிழக்கிலுள்ள உழக்குடி என்னும் கிராமத்தின் வடக்கே, உடை மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தங்கினர். உணவுக்கு வேறு வழியேதுமில்லாததால் அப்பகுதியில் மேயும் ஆடுகளில் ஒன்றைத் திருடி வந்து அதனைச் சமைத்துண்பதை வழக்கமாகக் கொண்டார்கள்.

பொயிலாம் புச்சியைத் தேடி அவளது ஏழு அண்ணன்களும் மேலப்பாவூரிலிருந்து புறப்பட்டு உழக்குடியை வந்தடைந்தனர். அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயர்களை நோக்கி வேற்றாள் இருவர் வரக் கண்டீர்களா? என்று வினவினர். எட்டு நாளைக்கு ஒரு முறை கிடாவொன்று காணாமல் போவதாகவும், நண்பகலில் உடை மரக் காட்டுக்குள்ளிருந்து நூலினைப் போல் புகை வருவதாகவும், மற்றப்படி வேறு விசேடமில்லையென்றும் அவர்கள் விடை கூறினர்.

இதைக் கேட்ட சகோதரர்கள் எழுவரும் அருகிலிருந்த குன்றின் மேலே ஏறி, உடை மரக் காட்டை நோக்கியபோது புகை வருவது தெரிந்தது. புகை வருமிடம் நோக்கி எழுவரும் சென்றனர். அங்கு சென்றதும் பொயிலாம் புச்சியின் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த பட்டபிரானை ஈட்டியால் குத்திக் கொன்றனர். புச்சி நாயினையும் வெட்டிக் கொன்ற பின் ஊருக்கு வரும்படி தங்கையை அழைத்தனர். அவள் வர மறுத்ததுடன் தன்னையும் வெட்டிக்கொன்றுவிடும்படிக் கூறினாள். ஏழு அண்ணன்களில் இளையவன் தங்கையின் மீது இரக்கம் கொண்டு அவளை வெட்ட வேண்டாமென்று மற்ற சகோதரர்களிடம் வேண்டினான். ஆனால் தங்களுடன் வரமறுத்த தங்கையின் மீது ஆத்திரமுற்ற ஆறு சகோதரர்களும் அவள் கழுத்தை வெட்டிக் கொன்றனர். இறுதியில் பட்டபிரான், பொயிலாம் புச்சியின் உடல்களுடன் புச்சி நாயின் உடலையும் சேர்த்து சிதையில் அடுக்கி எரிமூட்டினர். எரிந்த உடல்களின் சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் ஆற்றில் கரைத்து விட்டு மேலப்பாவூருக்குத் திரும்பினர்.

திரும்பும் வழியில் தங்கையை வெட்ட வேண்டாமென்று தடுத்த இளைய சகோதரனைத் தவிர ஏனைய அறுவரும் ஒவ்வொருவராக வழியில் மாண்டனர். ஏழாவது சகோதரன் மட்டும் ஊர்போய்ச் சேர்ந்து தங்கைக்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

காதலர் இருவரும் இருக்குமிடத்தை ஏழு சகோதரர்களும் அறிந்து கொள்ளும் முறையில் செய்திகளைக் கூறிய ஆயர்களின் ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்து போகலாயின. இதற்குப் பரிகாரம் தேடியபோது தங்கள் பகுதியில் அடைக்கலமாக வந்தவர்களின் கொலைக்குக் காரணமானதால் கொலையுண்டோரின் சீற்றத்திற்குத் தாம் ஆளாகியுள்ளதை அறிந்தனர். எனவே, அதற்குப் பரிகாரமாக கொலையுண்ட மூவருக்கும் சிலை வடித்து தெய்வமாக்கி வழிபடலாயினர். இதன் பின்னர் அவர்களின் ஆடுகள் அழிவிலிருந்து தப்பின.

இதுவே பொயிலாம் புச்சியென்ற இளம் பெண் - புச்சியம்மன் என்ற தெய்வமாகவும் பட்டபிரான் என்ற இளைஞன் பட்டவராயன் என்ற தெய்வமாகவும் மாறிய கதையாகும்.

மேலும் உதிக்கும்...

Pin It