ஒடியன் தமிழில் வந்துள்ள ஒரு மாறுபட்ட அற்புதமான கவிதைத் தொகுப்பு. இக்கவிதைகள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தாலும், தமிழ் எழுத்துகளில் அமைந்திருந்தாலும் இவை தமிழ்க் கவிதைகள் அல்ல! மேற்குத் தொடர்ச்சி மலைகளில், நீலகிரி மலைச் சரிவுகளில் வாழும் பழங்குடி மக்களான இருளர்களின் மொழியில் இக்கவிதைகளை லட்சுமணன் எழுதியுள்ளார். இவை தமிழ் எழுத்துகளை (லிபியை) பயன்படுத்தி எழுதப்பட்ட இருளர் மொழிக் கவிதைகள்.

இந்தியாவில் எழுத்து வடிவம் இல்லாத பல நூறு பழங்குடி மொழிகள் உள்ளன. இவை இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற வளர்ச்சியடைந்த மொழிகளின் தாக்கத்தால் தினம்தினம் சிதைந்து பெருமொழிகளோடு கலந்து, கரைந்து வருகின்றன.அப்படிப்பட்ட ஒரு மொழிதான் இருளர்களின் மொழி.

ஆறுவழிப் பாதைகளும் ஆலைகளும் உருவாகி வரும், டைடல் பார்க்கும், நட்சத்திர ஓட்டல்களும், ஷாப்பிங் மால்களும் நிறைந்திருக்கும் கோவையின் கிழக்குப்புறம்தான் எல்லோருக்கும் தெரியும்.

அதற்கும் மேற்கே கஞ்சாக் கடத்தல்காரர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நாடு கடத்தப்பட்ட ஆசிரியர்களும் மட்டும் புழங்கும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொட்டை மலைகள் பரந்து விரிந்திருக்கும் ஆனைக்கட்டி, அட்டப்பாடி பள்ளத்தாக்கைப் பற்றி பலருக்குத் தெரியாது. இங்கேதான் இருளர்கள் வசிக்கிறார்கள். இங்கும் பாலக்காட்டுக் கணவாயைக் கடந்து ஆனைமலைகளிலும் இருளர்கள் வசிக்கிறார்கள்.

லாப வெறி கொண்ட சமவெளி குடியேற்றக்காரர்களுக்கும், புல், பூண்டிலிருந்து மலைகளுக்கு மேலே தெரியும் வானம் வரை தனக்குத்தான் சொந்தம் என்று கருதும் வனத்துறைக்கும் வாழ்விடங்களை இழந்து அனாதைகளாக அலையும் யானைகளுக்கு நடுவே இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் வாழ்வையும், பண்பாட்டையும், நிலங்களையும் பாதுகாக்க ஒரு ஜீவ - மரணப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மக்களைப் பற்றித்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன.

கூப்பு ரோட்லே

கையில கெடாய்த்தூம்

இருளனெ வெலாக்கி

தூக்கி பெணாங்கி மெதிச்சான்

எச்சாவோ நிந்த

காண்ரீட்டுக்காரனே

ராஜா

காடு வெட்ட வனத்துறை போட்ட சாலையின் அருகில் நின்ற இருளனை விலக்கிவிட்டு, எங்கேயோ நின்ற மரத்தை வெட்டும் கான்ட்ராக்ட் எடுத்தவனை சபித்து மிதித்தது யானை என்று உக்கிரத்துடன் தொடங்குகிறது கவிதைத் தொகுப்பு. பின்பு தமிழகம் முன் கண்டிராத தளங்களில் விரிகின்றன கவிதைகள்.

மலைப்பகுதிகளில் கணவனோடு கைகோர்த்து நடைபோடும் தன்னை விழிபிதுங்க உற்றுப் பார்க்கும் கொங்கர்களை வெறுத்து ஒதுக்கும் இருளச்சி...

எங்கள் மலைகளைப் புதைத்து அனைகட்டி விட்டு எங்களுக்கு மின்சாரம் மறுக்கிறாயா என்று சீறும் மூப்பன்...

இது எங்கள் காடு. இங்கே எங்களை அதிகாரம் செய்யாதே என்று  எச்சரிக்கும் மலைமகள்...

தொண்டு நிறுவனங்கள் 

நட்டு வைத்த மலைகளுக்குப் பொருந்தாத கருவேல மரங்களை துவம்சம் செய்துவிட்டு நீரைத் தேடி காடுகளில் அலையும் யானை...

என்று தமிழ் கவிதை உலகம் கண்டும் கேட்டும் இராத பாத்திரங்கள் ஒடியனில் சர்வ சுதந்திரமாக உலவுகின்றன. நகரமயமாக்கலின் உச்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக வாசகர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரம்மிப்பூட்டும் அனுபவமாக இருக்கும். தொகுப்பு முழுவதும் மலைமக்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக, ஆழமாக, வன்மையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், லட்சுமணன் மூலமாக. அவர்களிடம் இறைஞ்சுதலோ, இரக்கத்தைப் பிச்சை  கேட்கும் தன்மையோ இல்லை.

சற்றே மரபு மீறலாக இருந்தாலும் என்று சொல்லியே, கவிதைகளுக்குக் கீழே புரிந்து கொள்வதற்கு வசதியாக சில குறிப்புகளை கவிஞர் கொடுத்திருக்கிறார். இவை பழங்குடி மக்களின் மொழியைவிட சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொள்ளத்தான் உதவுகின்றன. மொழிதான் புரிகிறதே! ஒரு பழங்குடி மொழி தமிழின் கலப்பால் நீர்த்துப் போய் தமிழர்களுக்கு இயல்பாய் புரிகிறது என்பது வேதனையானது அல்லவா?

தொன்மங்களாகவும், மறைபொருளாகவும், இன்னும் எத்தனையோ அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் உள்ள அந்த மொழியின் அடிநாதத்தைப் புரிந்து கொள்ளவே இந்த அடிக்குறிப்புகள் உதவுகின்றன.

இதற்கு சரியான எடுத்துக்காட்டு "பு குத்தி மாரி" என்ற கவிதை

... முனியே

தலக் கட்டிக்கும்

முண்டக் கட்டிக்கும்

நீவிற் ஆரு

நின்னே தேடித்தா

அலேஞ்சு கொண்டிருக்கினா

எத்து பூட்டேன்

தலே பெத்த புழு

இருளர்களிடையே நிலவும் ஒரு பழங்கதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தக் கவிதை. பழங்குடி மக்களைப் பொருத்தவரை "முனி" அந்நியன். தேனெடுக்கச் சென்ற இருளனின் தலையைக் கொய்து வீசிவிட்டு தேனைக் கைப்பற்றிக் கொள்கிறது, கீழ் நாட்டிலிருந்து வந்த முனி. இன்றும் ஏராளமான முனிகள் கீழ்நாட்டிலிருந்து வந்து இருளர்களின் உழைப்பைக் கொள்ளையடிக்கிறார்கள். வெட்டப்பட்ட இருளனின் அழுகிய தலையிலிருந்து வந்த புழு அவர்களைப் பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கிறது என்கிறாள் ஓர் இருளப் பெண்.

இதுபோன்ற ஒரு சில கவிதைகளை அடிக்குறிப்புகள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது.  பழங்குடி மக்களின் தொன்மங்களை, பண்பாட்டை, வலிகளை நமது அரசும் சமூகமும் திரை போட்டு அல்லவா மறைத்து வைத்துள்ளன. அந்த வகையில் லட்சுமணன் தந்துள்ள குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது, இவற்றைப் போன்ற வீரியமான கவிதைகளை நேரடியாக தமிழில் எழுதியிருக்கச் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. தமிழுக்கு முழுவதும் அந்நியமான பழங்குடி மக்களுக்கே உரிய ஒரு சிந்தனையோட்டம் இக்கவிதைகளில் ஊடுருவி நிற்கிறது. அதைத் தமிழில் எழுதியிருந்தால் அது மொழிபெயர்ப்பாகத்தான் இருந்திருக்கும். மொழிபெயர்ப்பு ஒரு நாளும் மூலத்துக்கு ஈடாகாதே!

இதைப் படிக்கும்போது இன்னொரு சந்தேகமும் வரலாம். இது ஒரு வேளை ஏற்கெனவே இருளர் மக்களிடையே புழங்கி வந்த கவிதைகளை தொகுத்த முயற்சியோ என்று. இந்த சந்தேகம்தான் லட்சுமணன் ஒரு கவிஞராக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதற்கான சாட்சி.

கவிஞன் தான் தமிழன் என்ற அடையாளத்தை, சாதி - மத அடையாளத்தை, இரண்டாயிரம் ஆண்டு மொழிச் செழுமையை உதறிவிட்டு, தன்னை ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடி போல ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இருளர் மொழிப் பாடல்கள் எல்லாம் பாடுவதற்கும் ஆடுவதற்கும் ஏற்ற வகையில் சந்தம் கொண்டதாக அமைந்திருக்கும். லட்சுமணன் தமிழின் புதுக்கவிதை பாணியைக் கையாண்டிருக்கிறார். மொழி ஒத்துப் போவதால் இதுவும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதைகள் பழங்குடி மக்களின் அரசியலைப் பேசுகின்றன. வெற்று ஆரவாரம் எதுவும் இல்லாமல் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரத்துடன் முன்வைக்கின்றன இந்தக் கவிதைகள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காடுகள் இன்றைய திருப்பூர் வரை பரந்திருந்தன. இச் சமவெளிக் காடுகளில் சக மனிதனைச் சுரண்டிக் கொள்ளைய டிப்பதையும், ஆணாதிக்கத்தையும் அறிந்திராத பல பழங்குடியினங்கள் வாழ்ந்து வந்தன. இன்றைய கோயமுத்தூர் அன்று ஒரு சின்னஞ்சிறிய இருளர் பதி. அதன் தலைவன் கோவன் மூப்பன். கோனையக்கா அப்பதியின் தாய்த் தெய்வம்.

இந்தப் பழங்குடி மக்களின் நிலங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், மக்களை அடிமை கொள்ளவும் சமவெளி அரசுகள் இருளர் பதிகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தின. வெல்லப்பட்ட அல்லது முழுவதும் வெல்லப்பட முடியாத பழங்குடி மக்களை நாகரீக மக்களாக ஆக்கி, அதாவது சாதீய சமூகத்துக்குள் கொண்டுவர மதங்கள், இப்படைகளுக்கு உதவின.

இந்தப் பணியில் முதலில் ஈடுபட்டது சமணம். சமணர்கள் கோனையக்காவின் கோவிலைக் கைப்பற்றி அதை தாராதேவி ஆலயமாக மாற்றினர். அங்கு வாழ்ந்த இருளர்கள் ஒடுக்கப் பட்ட மக்களாக மாற்றப்பட்டிருக்கலாம். பின்பு சமணர்களை விரட்டிவிட்டு ஆதிக்கத்துக்கு வந்த சைவம், தாராதேவியை கோனியம்மனாக மாற்றியது.

இன்றும் நியான், சோடியம் ஆவி விளக்குகள் ஒளிரும் நகரின் மையத்தில் கோனியம்மனாக பெயர் சூட்டப்பட்ட கோனையக்காவின் கோவில் இருக்கிறது. ஆனால் அன்பும் எளிமையும் கொண்ட அவள் குடிகள் எங்கோ காற்றில் கரைந்து மறைந்து போய்விட்டார்கள். தொலைவில் மங்கலாகத் தெரியும் நீலமலைகளுக்குள் விரட்டப்பட்டு விட்டார்கள் அவர்கள்.

"இப்போது என் பேர் கோனியம்மன். எனக்குத் தங்கத்தில் பாவாடையும் நெய்விளக்கும் உண்டு. ஆனால் என் குடிகள் எங்கே? தேடிக் கண்டுபிடித்துக் கொடு" என்று சுள்ளாம்பூக்கே என்ற பறவையைக் கேட்கிறது கோனையக்ஃகா தெய்வம், கோனையக்ஃகா என்ற கவிதையில்.

உலகம் அழிந்தபோது கடவுள் யாராவது மனிதர்கள் பிழைத்திருக்கிறார்களா என்று கண்டறிய சுள்ளாம்பூக்கையை அனுப்பியதாக ஒரு தொன்மம் உள்ளது என்று கவிஞர் அடிக்குறிப்பில் கூறுகிறார்.

ஆமாம், பழங்குடிகளின் உலகம் அழிந்துதான் போய்விட்டது. இன்று இரவுகளில் வானத்தை செந்நிறமாக ஒளிரச் செய்யும் இந்தக் கோவை நகரத்துக்குச் சொந்தக்காரர்கள் இருளர்கள்தான் என்பதை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன?

சமணமும், பௌத்தமும், சைவமும், வைணவமும் பழங்குடி மக்களுக்கு அழிவைத்தான் கொண்டு வந்தன. அவை உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்தான். பின்பு வந்த ஆங்கிலேயர்கள் காடுகளை வேறுவிதமாகப் பார்த்தனர். இவர்கள் தங்கள் நாடுகளில் பழங்குடிகளையும் காடுகளையும் அழித்தவர்கள்தான் இவர்கள். இவர்கள் வனத்தை ஏகாதிபத்திய நுகர்வுக்கான பொருளாக மட்டுமே பார்த்தனர். (இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்வது முக்கியமானது. 1832இல் ஜெர்மனியில் மரத்திருட்டுச் சட்டங்கள் கொண்டுவரப் பட்டன. காடுகளில் கிடக்கும் காய்ந்த மரத் துண்டுகளைச் சேகரிக்க எளிய மக்களுக்கு உள்ள உரிமை தடை செய்யப்பட்டது. காடுகளின் மீதான தனிச் சொத்துரிமை முழுமைப்படுத்தப்பட்டது. இச்சட்டம் குறித்த ஆய்வுதான் காரல் மார்க்ஸை தனிச் சொத்துரிமை, பொதுவுடைமை குறித்த ஆய்வுகளை நோக்கித் தள்ளியது).

இந்த அனுபவங்களோடு இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் காடுகளையும், அவற்றில் கிடைக்கும் செல்வங்களையும் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் துடித்தனர். இதற்காகத்தான் காடுகளின் மீதான உரிமையும், உளப்பூர்வமான பிணைப்பும் கொண்டிருந்த பழங் குடிகளை அந்நியப்படுத்த வனச் சட்டத்தையும் வனத்துறையையும் உருவாக்கினர்.

பழங்குடி மக்களின் விவசாயம் பெருமளவு தடை செய்யப்பட்டது. வேட்டை தடை செய்யப்பட்டது. காப்பு காடுகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த பழங்குடிகள் எப்போதும் தங்களை வெளியேற்றத் துடிக்கும் வனத்துறையின் தயவிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. வனத்துறை தன் விருப்பம் போல பழங்குடி மக்களை காடுகளில் இருந்து வெளியேற்றியது. வெளியேற்றி வருகிறது. மீதியுள்ளவர்களை துண்டு நிலங்களுக்குள் முடக்கும் பணியும் செவ்வனே நடைபெற்று வருகிறது.

எனவே, இக்கவிதைத் தொகுப்பில் இயல்பாகவே வனத்துறை அடிக்கடி இடம்பெறுகிறது. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மூர்க்கமாகக் கட்டுப்படுத்தும் சர்வவல்லமை வாய்ந்த வனத்துறையின் மீது பழங்குடி மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் கொதிப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன இக்கவிதைகள்.

சகுனாக் குருவி கத்தூ

தாட்டியுடு கேளே மூப்பா... - சகுனாக் குருவி

சகுனாக குருவி கத்தினால் கொலை விழும் என்பது நம்பிக்கை. கொலை விழாமல் தடுக்க வேண்டுமென்றால், தன்னை அதிகாரம் செய்யும் இவனை அனுப்பிவிடு என்கிறாள் ஒரு மலைமகள். இதை அறிவுரையாகவும், ஆலோசனையாகவும் ஏன் உத்திரவாகவும்கூட எடுத்துக் கொள்ளலாம். இதைப் புறக்கணித்ததன் விளைவைத்தான் மத்திய இந்தியாவில் அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. வனத் துறையின் பாதுகாப்பில் விடுதலை பெற்று 60 ஆண்டுகளில் 30 சதவீதமாக இருந்த காடுகள் 11 சதவீதமாகக் குறைந்துவிட்டன. ஆனால் பழங்குடி மக்கள் இருப்பதால்தான் காடுகள் அழிகின்றன. காடுகளைக் காப்பாற்ற மக்களை வெளியேற்ற வேண்டும் என்கிறது வனத்துறை. இதை வழிமொழிகின்றன பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இவர்கள் நடத்தும் கண்காட்சிகளில் ஒரு போதும் காடுகளைச் சூறையாடி உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களும், அணைகளும் இடம் பெறுவதே இல்லை. இந்த நிறுவனங்களும் அவற்றின் பாரபட்சமான பார்வையும்கூட நூலில் விமர்சிக்கப்படுகிறது. (ஒரு சூழலியல் கண்காட்சியின் பார்வையளர் குறிப்பு)

எல்லாவற்றுக்கும் மேலாக பழங்குடி மக்களின் மொழி, பண்பாட்டின் மீது அரசும், மதபீடங்களும், சமவெளி குடியேற்றக் காரர்களும் நிகழ்த்தும் தாக்குதல்களைப் பதிவு செய்யும்போது கவித்துவத்தின் உச்சத்தைத் தொடுகிறார் கவிஞர்.

பள்ளிக்கூடம் என்ற ஒரு கவிதை...

வீடு

...

தான் தூங்குவமே

ஓ கூரே

தாய்

ம் அஃகா

தந்தை

அமைமே

தவளை

ம்கூம்

கப்பே

சொன்னதைத் திருப்பிச் சொல்லு

பிரம்பு பிஞ்சிடும்

...

வகுப்புக்கு வெளியே

முட்டி போட்டு நின்னு கொண்டிருக்கேம்

நானும் எத்து மொழியும்.

தமிழில் வெளிவந்துள்ள மிக அற்புதமான கவிதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இருளர் குழந்தைகளுக்குத் தமிழ்தான் தாய்மொழி என்று சொல்லித் தரப்படுகிறது. பழங்குடி மக்களின் மொழி ஒரு மொழியாகவே மதிக்கப்படுவதில்லை. அவற்றைக் காப்பாற்ற, அவற்றின் தனித்துவத்தைப் பேண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பழங்குடி மொழிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக பழங்குடி மக்கள் மீது இறுதித் தாக்குதல் தொடுக்கிறது மதம். சைவம், வைணவம் அனைத்தையும் இணைத்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் மதம். இது ஆதிவாசிகளை இந்துக்களாக வளர்க்கும் வேலையை மேற்கொள்கிறது.நாகரீகப்படுத்த ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அபாரிஜீனிக் குழந்தைகள் போல, மலையின் மடியில் கட்டப்பட்டுள்ள ஒரு ஆசிரமத்தில் பழங்குடிக் குழந்தைகள் தங்கவைக்கப்படுகிறார்கள். தினமும் தாங்கள் அறியாத தெய்வங்களுக்குப் பூசை, புரியாத மொழியில் சுலோகங்கள்... பட்டை, கொட்டை. இலை தழைகளைச் சமைத்து சைவ உணவு... குழந்தைகளை வேரோடு பிடுங்கி மூளைச் சலவை செய்து வேறுவிதமாக வளர்க்க விரும்புகிறது மதம். மலைகளில் ஒரு வேளை சதிமாதாக்களையும், கண்ணப்ப நாயனார்களையும் உருவாக்க அது விரும்பலாம்.

அபாரிஜீனிக் குழந்தைகளின் வேதனை நெஞ்சைப் பிளக்கக் கூடியது. ஆனால் ஆனைக்கட்டி சகோதரர்களின் நிலை அவ்வளவு மோசமில்லை. ஆசிரமத்தில் பயின்று எரிச்சலடைந்த ஒரு சிறுவன் "எங்கடா போன குறிச்சியா" என்கிறான். குறிச்சியர் என்னும் பழங்குடிகள் பார்ப்பனர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதுபவர்கள் (பிக்ஷா).

பழங்குடி மக்களின் நிலங்களைப் பறித்துக் கொண்ட குடியேறிகளும் தங்கள் பங்குக்கு பழங்குடிகளை நாகரீகப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆணுக்குப் பின் பெண் போக வேண்டும் என்கின்றனர். கணவனை இழந்த பெண் விதவைக் கோலம் பூண வேண்டும் என்கின்றனர். தனித்துத் தின்னும் கலையை, சொத்து, சாதீயத்தின் மேன்மையை, ஆண் குழந்தையின் அருமையை சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பழங்குடி மக்களின் வாழ்க்கையை, போராட்டத்தை கண்முன் நிறுத்தும் ஒரு அற்புதமான பதிவு இக்கவிதைத் தொகுப்பு. மத்திய இந்தியாவில் பழங்குடி மொழிகளுக்கு எழுத்து வடிவம் தர மாவோயிஸ்டுகள் முயற்சித்து வருவதாகக் கேள்விப்படுகிறோம்.

தமிழகத்தைப் பொருத்த வரை இது முதல் முயற்சி, அற்புதமான முயற்சி

Pin It