"கேசவ், நாளையிலிருந்து ஒரு சின்ன மாற்றம்டா..."

"என்னம்மா? ஆபீஸ்ல உனக்கு ஏதாவது புது பிராஜெக்ட் ஆரம்பிச்சிருச்சா? நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன். நீ கவலைப் படாதம்மா"

"வீட்டு வேலையில் என்னோட பங்கை கொஞ்சம் கூடுதலாக்குங்க, நான்..."

"அதில்லடா செல்லம், அம்மா பிளாஸ்டிக் சாமான்களை வீட்டில் கம்மியாத்தான் பயன்படுத்துவேன்னு உனக்குத் தெரியும். இந்த மாசத்துலேர்ந்து வீட்டில் இருக்கற பிளாஸ்டிக்கை எல்லாம் முழுமையா ஒழிச்சு கட்டிடலாம்னு நெனைக்கிறேன்"

"செய்யுங்கம்மா, வேண்டாததையெல்லாம் பெரிய பையில போட்டு வெச்சிட்டா, சன் பிளாசா பிளாக் கீழே இருக்குற ரீசைக்ளின் பெட்டில போட்டுட்டு வந்திடுவேன். நீங்க அவ்வளவு கனத்தைத் தூக்க வேண்டாம்மா"

"அது சரிடா, ரொம்ப தேங்க்ஸ். நீ பள்ளிக்கூடத்துக்கு சாப்பாடு கொண்டு போறேல்ல ... பயோ லாக் அண்ட் லாக் பெட்டி, அதுக்கு பதிலா எவர்சில்வர் டிபன் பாக்ஸ் ரெண்டு, மூணு உள்ள இருந்ததை எடுத்து வச்சிருக்கேன். நீயே பார்த்து உனக்கு எது சரியா வரும்னு ஒண்ணை எடுத்துக்கறியா?"

"இல்லம்மா, சாரி, அது சரியா வராது. இதிலயாவது கொண்டு போறேனேன்னு நெனைச்சுக்கங்க. ஏற்கனவே பாசிர் குடோங் உயர்நிலைப் பள்ளியில் டிபன் பாக்ஸ் கொண்டு வர்றது ரெண்டே பேர்தான். ஒண்ணு நான், இன்னொன்னு அபினவ். அவனும் இப்போ டிஸ்போசபிள் பாக்ஸ் கொண்டு வர ஆரம்பிச்சுட்டான், நாந்தான் உங்களை சங்கடப்படுத்த வேண்டாமேன்னு அதை கேக்கல. வேற ஏதாவது சொல்லுங்க, நான் செய்யறேன், பைம்மா..." பறந்துவிட்டான்.

சரி, இது போன்ற வேகத்தடைகள் தொடக்கத்தில் வரத்தான் செய்யும், பரவாயில்லை. முதலில் நான் பயன்படுத்தும் பொருட்கள், வீட்டுச்சாமான்கள் இவற்றில் பிளாஸ்டிக்கை கண்டெடுத்து ஒழித்துக் கட்டலாம் என்று முடிவு செய்தேன்.

திருமணம் ஆகி குடித்தனம் போனது முதல் சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்த பதினைந்து வருடங்களில் பிளாஸ்டிக் பொருள்கள், சமையலறை டப்பர்வேர் பொருட்கள் மேல் தனிப்பட்ட காதல் ஏதும் இல்லாத என்னை, சென்ற மாதம் ஓர் அறிவியல் இதழில் படித்த கட்டுரை ஒன்றின் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்த தரவுகள் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தன. இணையதளத்தில் அந்த இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக்கே. பெருநகரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் ஒரு நாளில் டன் (ஆயிரம் கிலோ) கணக்குக்கு மேல் இருக்கின்றன. காகிதம் மட்க 2-5 நாட்கள், வாழைப் பழத்தோல் மட்க 2-10 நாட்கள் என்று மற்ற பொருட்கள் மட்குவதற்கு ஆகும் காலத்தைச் சொல்லிவிட்டு, இறுதியில் பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் மக்க 100-1000 ஆண்டுகள் ஆனாலும் சில வகைகள் மட்கவே மட்காது" என்று குண்டைத் தூக்கிப் போட்டிருந்தது அந்தக் கட்டுரை. பிளாஸ்டிக் பை என்றால் கேரி பேக், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி, பழங்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள், வீட்டு குப்பை போடும் பைகள், வணிகக் குப்பைப் பைகள், தொழிற்சாலை லைனர்கள், மருத்துவ குப்பைப் பைகள் என்று எங்கும் எதிலும் நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் சேர்த்தால்... எனக்குத் தலை சுற்றியது.

ஊரை, உலகைக் குறை சொல்வதைவிட நாம் ஒரு துமி அளவேனும் ஏதேனும் செய்யலாம் என்று முடிவெடுத்ததன் விளைவாக, உடனடியாக அன்றே செயலில் இறங்கினேன். இதற்கென்று "ரூம் போட்டு யோசிக்க வேண்டியது இல்லை". ஒவ்வொரு அறையாகப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட்டால் போதும்.

முதலில் வரவேற்பறை, கொஞ்ச நேரம் கழித்து என் மகன் கேசவின் அறை, அடுத்து நானும் என் கணவரும் வசிக்கும் அறை, எனது பொருட்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் இரண்டறக் கலந்து போயிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஒவ்வொன்றாக உருவி எடுத்தேன். ஒருவாறாக இந்த அறைகளை முடித்தபோது ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. ஒரு கிரீன் டீ குடித்துவிட்டு, சமையலறைக்குள் புகுந்தேன்.

அதற்குள் தொலைபேசி அடித்தது, அதை எடுக்க ஓடினேன். கணேஷ்தான். "ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு படுத்துத் தூங்காமல், ஏன் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கிறாய். உன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் நீ பசியாறும் நேரத்தில் அழைத்தேன்" என்கிறார்.

சிரித்துக் கொண்டேன். எனக்கு உண்மையில் ஓய்வு என்பது எப்போதும் செய்யும் வேலையை விடுத்து, வேறு வேலை செய்வது. இல்லாவிட்டால் கண்களைமூடி ஒன்று, இரண்டு என்று எண்ணுவதற்குள் தூங்கிவிடுவதும் காலையில் நான்கு மணிக்கு அலாரம் இல்லாமலே எழுந்திருப்பதும் சாத்தியமாகுமா என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சமையலறையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கு முன்னதாக குளியலறையை பார்த்துவிடலாம் என்று அங்கு சென்றேன்.

அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் என்னை வாயடைக்கச் செய்துவிட்டன. அவற்றுக்கான மாற்றுப் பொருட்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, யாரோ வாயில் மணி அடிப்பது கேட்டது. எத்தனை நேரமாக அடிக்கிறார்களோ, யோசனையில் ஆழ்ந்திருந்ததால், கவனிக்காமல் போய்விட்டேனோ என்று நினைத்துக் கொண்டே மரக்கதவை மட்டும் திறந்தேன். பள்ளிச் சீருடையில் ஏழெட்டு மாணவர்கள், கேசவன் வயதுதான் இருக்கும். பதின்ம வயது ஆண், பெண் குழந்தைகள். சரி, அறக்கட்டளைக்கு நிதி கேட்க வந்திருப்பார்கள். அல்லது பள்ளி புறப்பாட நடவடிக்கைகளாக, பழைய செய்தித்தாள்களைச் சேகரிக்க வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பேச்சு கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் கூறியதோ புதுக்கதையாக இருந்தது. அவர்கள் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களாம். இவர்களுக்கான புறப்பாடத் திட்டம், பகல் வேளையில் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பட்டியலிட்டு, அதற்கான வெள்ளிக்காசுகளையும் கொடுத்துவிட்டால், வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பார்களாம். முதியவர்கள், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் நிச்சயம் பேருதவியாக இருக்கும். அலுவலக வேலையாக கணேசும் வெளிநாடு சென்று, கேசவன் கைக்குழந்தையாக இருந்த காலத்தில் நான் நிறையாவே திண்டாடி இருக்கிறேன்.

ஆனால் இன்றைக்கு இவர்களுக்குத் தர என்னிடம் எந்த வேலையும் இல்லை. மூன்று பேர் மட்டுமே வசிக்கும் வீட்டில் என்ன வேலை இருக்கப் போகிறது? வேறு வீடுகளைப் பார்க்கலாமே என்று சொல்லத் தொடங்கினேன். சென்ற வாரமும் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டினோம் என்றார்கள். நாங்கள்தான் பகல் பொழுதில் இங்கு இருப்பதில்லையே.

அதேநேரம் எனக்கு வேறொரு எண்ணமும் தோன்றியது. தாங்களாக வேலை செய்ய முன்வரும் குழந்தைகளை ஏன் வேண்டாம் என்று தடுக்க வேண்டும்? ஏதாவது சிறு வேலையாகக் கொடுத்தால் அவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும். தெம்பனீஸ் மார்ட் கடைத் தொகுதியின் முன்பக்கம் உள்ள மைதானத்தில், வரப்போகும் நோன்புத் திருநாளையும் தீபாவளியையும் ஒட்டி தற்காலிக கூரை வேய்ந்து பல கடைகள் போட்டிருக்கிறார்கள். நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வந்தபோது, அங்கு சில மண்தொட்டிச் செடிகள் சொல்லி வைத்திருந்தேன். இன்று மாலை கணேஷ் சீக்கிரம் வந்த பிறகு, அதை எடுத்துவருவதாக இருந்தோம். அந்த வேலையை இவர்களிடம் சொன்னேன்.

அந்தக் குழந்தைகளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. செம்பருத்தி, வெற்றிலைக் கொடி, ஓமவல்லி, அந்திமந்தாரை, ஆர்கிட்... என்று விவரங்களைக் கேட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். முன்பு நாங்கள் தங்கியிருந்த வீடும் இதேபோல் ஒன்பதாவது மாடிதான். ஆனால் வாசலில் இரண்டு மண்தொட்டிகள்கூட வைக்க இடமின்றி, இரண்டு எட்டிலேயே மாடிப்படி, அடுத்த இரண்டு எட்டிலேயே எதிர்வீடு என்று இடம் குறுகலாகக் கட்டப்பட்டிருந்த அடுக்ககம் அது. இந்தப் புதிய வீடு அத்தளத்தின் மூலையில் உள்ளதால், மண்தொட்டிகள் வைக்க கூடுதலாகவே இடமிருந்தது.

ஆகா, இந்தக் குழந்தைகள் உபயத்தில் செடிகள் வரப் போகின்றன. வீடே நந்தவனமாகப் போகிறது. தேக்கா பகுதியில், செடிகள் விற்கும் நர்சரியில் இரண்டொரு முறை செடிகளைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். அங்கிருந்து எடுத்துக்கொண்டு வர வாடகை வண்டிக்கு வேறு நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஒரு வாரமாக எங்கள் வீட்டு பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் புதிதாய் திறக்கப்பட்ட தற்காலிகக் கடைகள், அந்தப் பக்கம் போவோர் வருவோரின் கண்களையெல்லாம் திருப்பிக் கொண்டிருந்தன.

மாலை மயங்கிய வேளையில் என் மனதை மயக்கியவை அங்கு சமர்த்தாக உட்கார வைக்கப்பட்டிருந்த பலவித மண்தொட்டிச் செடிகள் நிறைந்த கடையும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த கடைக்காரரும்தான். அங்கிருந்தவற்றில் எனக்குப் பிடித்தவற்றை தேர்ந்தெடுத்துவிட்டு, நாளை மாலை எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி முன்பணமும் கொடுத்திருந்தேன். என் வயதை ஒத்த சீனத் தந்தை ஒருவர் தன் மகளுடன் மாதுளைச் செடியையும், குட்டிக்குட்டி எலுமிச்சைகள் பூத்துக் குலுங்கும் செடியையும் தேர்ந்தெடுப்பதை ஆர்வத்துடன் ஓரக்கண்ணால் கவனித்தேன். பெரும்பாலான சீனர்கள் எலுமிச்சை செடியை வீட்டில் வைப்பது வழக்கம். முதலில் சில தொட்டிகள் வாங்குவோம், பராமரிக்க முடிந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கலாம். இந்த "பாசர் மலாம்"மில் கிடைக்காத பொருள் இல்லை. விலையும் மலிவாகத்தான் இருக்கும். ஆனால் எதையும் திருப்பித்தர முடியாது. அப்போது கூட்டம் களை கட்டியிருந்தது. தின்பண்டக் கடையில் கூட்டம் அதிகம்.

இந்தக் குழந்தைகள் இப்போது பகல்வேளையில் போனால் கூட்டம் இருக்காது. சரி வாங்கி வந்த பிறகு, அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு என் வேலையைத் தொடர, எனக்குப் பிடித்த பாடலை பாடிக்கொண்டே அடுக்களை புகுந்தேன். மதிய உணவை முடித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினேன். ஒவ்வொன்றாகக் கழித்துக் கொண்டே வந்ததால், பிளாஸ்டிக் பொருட்கள் தரையில் கடைபரப்பிக் கிடந்தன. எதை மாற்றலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வாயில் மணி ஒலித்தது.

"இந்தத் தொட்டிகளை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இப்பொழுதைக்கு இப்படி அடுக்கி இருக்கிறோம்" என்று பழைய உற்சாகத்துடன் மாணவர்கள் கூவினார்கள். சமையலறைக்குள் நுழைந்தவுடன் ஏப்ரானை அணிந்திருந்தேன். மணி அடித்ததும் அத்துடனே வந்துவிட்டதால், நான் வேலையில் மூழ்கியிருந்ததை அந்தச் சுட்டிகள் அறிந்துகொண்டு விட்டார்கள்.

இதோ நான் ஆசைப்பட்ட பூக்கள், இலைகள். இவற்றுடன் பேச இனி தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி விடுவேன். இருங்கள் உங்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வருகிறேன் என்று உள்ளே திரும்பினேன். "இல்லை ஆண்ட்டி, பள்ளியிலேயே எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்துள்ள மாணவர் அடுத்த பிளாக்கில் கீழே இருக்கிறார். எங்களுடைய பொருட்களையும் அவரிடம்தான் கொடுத்துள்ளோம். இந்த வேலையைச் செய்து முடித்ததாக இந்தப் படிவத்தில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இதை ஆசிரியரிடம் காட்ட வேண்டும்" என்று விடைபெற்றுக் கொண்டார்கள்.

செடிகளுக்கு இன்றைக்குத் தேவையான தண்ணீர் ஊற்றியாகிவிட்டது என்று பொறுப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். எனக்கு ஒழிக்கும் வேலைகள் கொஞ்சம் மீதம் இருந்தன.

சல்லிசான விலையில் கிடைக்கிறது, தெரிந்தவர்கள் வாங்கியிருப்பதால் நாமும் வாங்குவோம்... இது போன்ற காரணங்களுக்காக தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கமும், நினைத்த இடத்தில் எல்லாவற்றையும் வைக்கும் வழக்கமும் இல்லாததால் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் என்னுடைய வேலையை முழுமையாக முடித்து விடுவேன். பின் மண்தொட்டிகளைப் பார்க்க வந்துவிடலாம். நல்ல பெரிய தொட்டிகள், இந்தக் குழந்தைகள் எனக்கு எந்த வேலையும் வைக்கவில்லை.

கறிவேப்பிலைச் செடி வெய்யில் படாத இடத்தில் இருந்தது. அதை இடப்பக்கமாக நகர்த்த வேண்டும். பக்கத்துவீட்டு இந்தோனேசியரிடம் தேவையென்றால் கறிவேப்பிலை பறித்துக்கொள்ளச் சொல்லலாம். ரோஜா இப்போது மலர்ந்து கிடக்கிறது. இதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கென்று அதே கடையில் இருந்து இயற்கை உரம் வாங்கி வைத்திருக்கிறேன். அடுப்பில் பால் பொங்கும் வாசனை வாசல் வரை வந்தது. ஓடிப்போய் அதை அணைத்து மூடிவைத்துவிட்டு வாசலுக்கு வந்தேன். பால் கொஞ்சம் வெளியே வடிந்திருந்தது, கையோடு துடைத்துவிட்டேன்.

கறிவேப்பிலைச் செடி இருக்கும் தொட்டியை மூச்சை இழுத்துக் கொண்டுதான் தூக்க வேண்டுமா? பெரிய தொட்டியாக இருக்கிறதே. அப்படியே தரையோடு இழுத்துப் பார்ப்போமா என்று மெல்ல இழுத்தேன். இதென்ன இவ்வளவு பெரிய தொட்டியாக இருந்தாலும், நான் நினைக்கும் அளவுக்கு கனமின்றி ரொம்ப லேசாக இருக்கிறது?

கவனமாகப் பார்த்தேன். கறிவேப்பிலைச் செடித் தொட்டி மட்டுமல்ல, எட்டு பெரிய தொட்டிகளும் மண்ணாலான தொட்டியின் நிறத்தையும் மொறமொறப்பான மேல்பக்கத்தையும் உடைய, அச்சு அசலாக மண்ணாலான தொட்டியைப் போலவே தோற்றமளித்த பிளாஸ்டிக் தொட்டிகள்!

Pin It