மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரியை வணிக ரீதியில் பயிரிட அனுமதி வழங்குவதைத் தடுக்க நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து, பி.டி. கத்தரிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள், சமூக சிந்தனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்த வேளையில், அனைத்து மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் பின்வாசல் வழியாகத் திணிக்க மத்திய அரசு புதிய அடக்குமுறை சட்டம் ஒன்றை கொண்டு வரத் தயாராகி இருக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சி, இறக்குமதி, உற்பத்தி, போக்குவரத்து, பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவின் பெயர் "இந்திய உயிரிதொழில்நுட்பவியல் ஒழுங்குமுறை ஆணையம்" அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பவியல் துறை இந்த மசோதாவை முன்மொழிந்து இருக்கிறது.

இந்த மசோதாவின் நோக்கம் பற்றி மேலே கூறியவாறு அரசு மறைமுகமாக நீட்டி முழக்கினாலும், இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் "மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக இனிமேல் யாரும் மூச்சுகூட விடக்கூடாது. அதை எதிர்க்கும் எல்லா குரல்களையும் பூண்டோடு நசுக்க வேண்டும்" என்பதுதான்.

இந்த மசோதா சட்டமானால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு பற்றி  ஆதாரமில்லாமலோ, அறிவியலுக்கு முரணாகவோ யாராவது பேசினால், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உள்ள பிரிவே, இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குச் சாதகமான மசோதா என்பதை நிரூபிக்கப் போதுமானது. இது எப்படி இருக்கிறது என்றால், யார் குற்றம் செய்தாரோ அவருக்கு தண்டனை அளிப்பதற்கு மாறாக, யார் புகார் கூறுகிறார்களோ அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற போக்கைக் கொண்டுள்ளது. இது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் அமைப்புகளுக்கு வாய்க்கு பூட்டு போடுவதற்கான சட்டமாகத்தான் தெரிகிறது.

இந்த மசோதாவின்படி மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அங்கீகாரம் பெற பன்னாட்டு நிறுவனங்கள் இனிமேல் வாசல்வாசலாக ஏறி இறங்க வேண்டியதில்லை. தலைவர், இரண்டு உறுப்பினர்களே கொண்ட இந்த புதிய ஆணையம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒற்றைச் சாளர முறையில் அனுமதிக்கும். உலகுக்கு எல்லாம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஏகபோகமாக அனுப்பிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில்கூட இதுபோன்று ஒற்றைச் சாளர அனுமதி முறை இல்லை.

மரபணு மாற்றப்பட்ட பயிர் பாதுகாப்பானதா, இல்லையா என்ற தகவலை சம்பந்தப்பட்ட நிறுவனம் வணிக ரகசியம் என்ற பெயரில் வெளியிடாமல் இருக்கவும் இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. மேலும் இந்தச் சட்டப்படி உயிரிதொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பயிரை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற முடிவை மாநில அரசுகள் எடுக்க முடியாது. இதன்மூலம் அரசியல் சாசனப்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையும் பறிக்கப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வரும் நிலையில், இந்தச் சட்டம் அந்த அங்கீகார நடைமுறையை அப்படியே மூடி மறைக்கப் பார்க்கிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சட்டம் நமது ஒழுங்குமுறை அமைப்பை நீர்த்துப் போகச் செய்வதற்காக இயற்றப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது.

காலங்காலமாக நாம் பெற்ற அனுபவ அறிவு, பாரம்பரிய பழக்கவழக்கங்களில் இருந்து கற்ற பல்லுயிர் வளம் செழித்த இயற்கை வேளாண் முறையை பரவலாக்க வேண்டும் என்று மக்கள் உரிமைக் குழுக்கள் போராடி வருகின்றன. இதற்கு எதிரான நிலையை திணிக்க, இந்த புதிய மசோதா உயிரிதொழில்நுட்பவியல் துறைக்கு வழியமைத்துக் கொடுக்கிறது. இந்த செயல்பாடு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பின்வாசல் வழியாக அனுமதிப்பதற்கான முயற்சி போலவே இருக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக தேசிய அளவில் முன்னணி மூலக்கூறு உயிரியலாளர் புஷ்ப பார்கவா, சூழலியலாளர் கவிதா குருகந்தி, மரபணு பொறியியலுக்கு எதிரான தென்னகம் அமைப்பு உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

நம் நினைவுகளை சற்று பின்னோக்கி ஓட்டினால் ஆறு மாதங்களுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் கையெழுத்திடாமல் தற்காலிகக் கிடப்பில் போடப்பட்டுள்ள வேளாண் மன்றச் சட்டமும் இதுவும் ஒத்திருப்பதை புரிந்து கொள்ளலாம். அந்தச் சட்டப்படி, வேளாண் பட்டப்படிப்பு படிக்காதவர்கள் ஆலோசனை வழங்குவது குற்றம். மீறி ஆலோசனை வழங்கினால் ரூ. 5,000 அபராதம், சிறை தண்டனை என்று அரசு மிரட்டியது. இயற்கை வேளாண் இயக்கத்தின் உத்வேகம், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் நோக்கத்துடன் அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. உயிரிதொழில்நுட்பவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்களோ என்ற வலுவான சந்தேகத்தை இந்தச் சட்டங்கள் ஏற்படுத்துகின்றன.

தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள மசோதா மிகக் கடுமையானது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எப்படியாவது மக்கள் மீது திணித்துவிட வேண்டும் என்ற வணிக நோக்கம்தான் அதன் பின்னணியில் இருப்பதாகப் படுகிறது. தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் உலகை அழிக்க வேண்டுமென்று கவிஞர்கள் பாடியது கடந்த காலமாகிவிட்டது. ஒட்டுமொத்தமாக மக்கள் கூட்டத்திடமிருந்தே உணவுக்கான உரிமையை பறிக்க நடக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக குரல் உயர்த்தாமல் போனால், நாளை நம் கையில் இல்லை. நம் உணவும் நம் கையில் இல்லை.

வாசகர்களுக்கு: "பூவுலகு" இதழை உருவாக்குவதில் நிறைய நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதால், இந்த இதழ் மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கான ஒரே இதழாக வருகிறது. விரைவில் இந்த சிக்கல்கள் களைய நடவடிக்கை எடுக்கப்படும். வாசகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Pin It