‘‘பச்சை மரத்தவெட்டி

பாவி வயிறு கழுவனுமுன்னா..

பாதி உசிரு போகட்டுமே..

மீதி உசிரையும்

பசி தின்னு வாழட்டுமே..”

பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கடும் வறட்சியும் பஞ்சமும் நிலவியபோது, பலர் இடம் பெயர்ந்து சென்றனர். அக்கொடுமையான காலக்கட்டத் தில், இம்மலைகளில் ஏராளமான மரங்கள் நீரின்றி காய்ந்து கருகின. இதில் வயிற்றுப்பாட்டுக்கு வழியின்றி, காய்ந்த விறகுகளையும் சுள்ளிகளையும் பொறுக்கி, அருகிலிருக்கும் திருவண்ணாமலை நகரத்தில் விற்று, கொடுங்காலத்தை கடத்தினர். அப்போது கூட ஒரு பச்சை மரத்தை வெட்டி வாழ்ந்தவர்கள் அல்ல இவர்கள்.’ மலையில் ஒரு மரத்தை வெட்டக்கூட பொறாமல் வெகுண்டெழும் மக்கள், பச்சைப் பிள்ளையப் போல இருக்கும் மலையை எப்படி வெடிவைத்துத் தகர்க்க அனுமதிப்பார்கள்?

thiruvannamalai

 கடந்த முறை 2008ஆம் ஆண்டில் நடந்த கருத்துக் கேட்புக்கூட்டத்தில் பெருங்குரலெடுத்து பேசிய பெரிய பாலிகாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பச்சியம்மாள், இன்று உயிரோடில்லை... ஆனால் அவர் எதை எதிர்த்துப் பேசினாரோ அதே திட்டம் மீண்டும் உயிர்ப் பெற்று வந்திருக்கிறது.

 கௌத்தி, வேடியப்பன் மலைகளில், இரும்புத்தாது எடுக்க ஜிண்டால் குழுமம் 2008&09ஆம் ஆண்டு முயற்சித்தது. இதற்காக ஜிண்டால் குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து ‘‘தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம்” (Tamil Nadu Iron Ore Mining Corporation TIMCO) டிம்கோ நிறுவனத்தை உருவாக்கி இருந்தது. இதில் ஜிண்டால் குழுமத்துக்கு 99 சதவீத பங்குகளும் டிட்கோவுக்கு 1 சதவீத பங்கும் இருக்கின்றன.

ஆனால் அப்போது மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந் தது. இதனால் ஜிண்டால் குழுமத்துக்கு அனுமதி கிடைக்க வில்லை. இந்நிலையில் மீண்டும் தற்போது (2014இல்) கௌத்திவேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது எடுக்க டிட்கோ விண்ணப்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நடுவண் அரசின் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் கௌத்தி, வேடியப்பன் மலைப் பகுதிகளில் இரும்புத் தாது குறித்து ஆய்வு நடத்திச் சென்றிருக்கிறார்.

இத்திட்டத்தைக் கொண்டு வந்ததில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் பங்குண்டு. 2005ஆம் ஆண்டு அப் போதைய அ.தி.மு.க அரசுதான் இரும்புத்தாது வெட்டி எடுப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின் வந்த தி.மு.க. அரசும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஜிண்டால் நிறுவனத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்தது. அந்த நேரத்தில் மக்கள் நடத் திய போராட்டங்களைத் தொடர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதன்படி அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும் இத்திட்டம் 2008 ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்டது.

 மக்கள் அறிந்தவரை ஒரு கருத்துக்கேட்பு கூட்டம் முறையாக நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உண்மை யான ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பியது, தமிழக வரலாற்றில் இதுவாகத்தான் இருக்கும். அதன்படி அப்போதைக்கு ஒரு திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் இத்திட்டம்தான்.

 அதன்பின் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க. அரசு, நடுவண்அரசின் ஒத்துழைப்புடன் பல உண்மைகளை மறைத்து இத்திட்டத்தைச் செயல்படுத்த ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது. முன்பு வனத்துறைக்குச் சொந்தமான 325 ஹெக்டேர் நிலத்தினைக் கேட்டார்கள். தற்போது 23 ஹெக்டர் நிலம் மட்டுமே போதும் என அளவினைக் குறைத்துக்கொண்டு கேட்கிறார்கள். முன்பைப் போல அதிகளவு என்றால் பெருமளவு எதிர்ப்புவரும் என்பதால் புதிய சூழ்ச்சியோடு இம்முறை களமிறங்கியிருக்கிறார்கள்.

 கௌத்தி, வேடியப்பன் மலையின் மடிப்பகுதியில் அமைந்திருக்கும் காப்புக்காடுகள், திருவண்ணாமலையின் மலைச்சுற்றுப்பாதையில் இருந்து சரியாக 4 கி.மீ தொலைவுக்குள் தொடங்கிவிடுகிறது. நகரின் நடுப்பகுதி யிலிருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இம்மலைகளை அடைந்துவிடலாம். வலதுபுறம் வேடியப்பன் மலையும், இடதுபுறம் கௌத்தி மலையும் அமைந்திருக்கிறது. இரண்டு மலைகளுக்கும் நடுவே சாலையன்று அமைந்திருக்கிறது. கௌத்தி மலையானது கடல் மட்டத்திலிருந்து 578மீ உயரமுடைய, பரந்து விரிந்த மலையாகும்.

 இம்மலைகள் வைரம் பாய்ந்த காட்டுமரங்கள், செடிகொடிகள், அரியவகை மூலிகைகள் எனப் பல்வேறு வகையான நிலைத்திணைகளைக் கொண்டிருக்கிறது.

 கருங்காலி, கல்லாத்தி, கீரிமரம், புங்கை, புளி, வேம்பு, நாவல், மலைவேங்கை, காட்டு இலந்தை என பல்வேறு வகையினங்கள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். மான், குள்ள நரி, கீரி, பாம்பு, காட்டுப்பன்றி உள்ளிட்ட எராளமான காட்டு விலங்குகளும் இம்மலைகளை வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன.

 இம்மலைப் பரப்பினை மேலும் பசுமையாக்க மாவட்ட வனத்துறை மூலமாக நான்கு இலக்கம் மரக் கன்றுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடப் பட்டது. மேலும் இம்மலைகளில் நீர்ச்சுனைகள், நீரோடைகள், சிற்றோடைகளும் வாய்த்திருக்கின்றன. தண்ணீரின் சுவையும் சிறப்பாக இருக்கிறது.

 ஒத்தக்கைச் சுனை, வெள்ளச் சுனை, வெள்ளியப்பன் குளம், பாப்பார நதி, பெரிய நதி, இலந்தைக் குளம், துரிஞ்சக் குட்டை எனத் தண்ணீர் மூலங்கள் பல இருக்கின்றது. மலையின் அடிவாரப்பகுதியில், தண்ணீர் திரண்டுவரும் போக்கினையறிந்து பல்வேறு தடுப் பணைகளை அமைத்திருக்கின்றனர். அவற்றின் பயனால் காட்டு விலங்குகளும், ஆடுமாடுகளும் பயன்பெற்று வருகின்றன. அருகில் அமைந்திருக்கும் வேளாண் நிலங்களுக்கும் அதைச் சார்ந்த கிணறுகளில் ஊற்றுப் பெருக்கமும் கிடைத்துவருகிறது.

இம்மலைகளிலும், அடிவாரப்பகுதியிலும் ‘மஞ்சள் புல்’ எனப்படும் புல்வகை நிறைந்து காணப்படுகிறது. இப்புல்வகை இம்மண்ணில் இரண்டடி முதல் ஆறடி வரை செழித்து வளர்ந்து நிற்கிறது. இத்தனை காலம் வரை இந்தப் புல்லினைக் கொண்டுதான் வீடுகளுக்குக் கூரை வேய்ந்து வந்திருந்திருக்கின்றனர். இன்னமும் கூரைவீடுகளுக்கு ‘‘மஞ்சம்புல்லு” என்று மக்களால் அழைக்கப்படும் இப்புற்களை வேய்கின்றனர். ஓர் ஆளால் அணைக்கக் கூடிய அளவுள்ளதை கட்டுக்களாக கட்டி விற்கின்றனர். திருவண்ணாமலையில் குடியேறியிருக்கும் வெளிநாட்டினர் இதன் சிறப்பினை அறிந்து இதையே தேடிவந்து வாங்கிச்செல்வதாகக் கூறுகின்றனர். ஒரு கட்டு இன்றைய விலை 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்புல் ஓசூர் போன்ற ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பச்சிளம் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் கோடைகாலத்தில் வெம்மையைத் தணிக்கும் குடையாகவும், கொடையாக வும் இங்கே விளையும் ‘‘மஞ்சள்புல்” அமைந்திருக்கிறது.

 ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ப மலைகள் ஒவ்வொரு விதமான பயனை அம்மக்களுக்கு அளித்து வருகிறது.

“மஞ்சம்புல்லு வீடு மேய”

“மத்தபுல்லு மாடு மேய”

இப்படித்தான் அம்மக்களால் இம்மலைகளை அணுக முடிகிறது.

 ஐந்திணைகளில் நாமறிந்த, மலையும், மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நில மக்கள் வாழ்வின் நீட்டியாகவே தற்கால குறிஞ்சி மக்களாகவே நம்முன் வாழ்ந்துகொண்டி ருக்கிறார்கள். இப்படி மலையின் புறத்தே விளைந்து கிடக்கும் மரத்தோடும், புல்லோடும் இவர்களின் பொரு ளாதாரப் புற வாழ்வு பிணைந்திருந்தாலும், இம்மலை களோடு, இம்மக்கள் கொண்டிருக்கும் அகப்பிணைப்பு அளப்பரியது.

 கௌத்தி மலைக்கு இவர்கள் கூறும் பெயர்க்காரணம் முன்பொரு காலத்தில் கௌதம முனிவர் தவமிருந்ததால், இம்மலை கௌதம மலையென பெயர்பெற்றதாகக் கூறு கிறார்கள். கௌதம மலை, கவுத்தி மலையாக மருவி நிற்கிறது.

 கௌத்திமலை உச்சியில் ‘‘கன்னிமார்” சாமி உள்ளது. ஏழு சிலைகள் உள்ள இக்கோயிலில் அப்பகுதி மக்கள் ஆடிமாதத்தில் நண்பகலில் சென்று வழிபட்டு இரவு திரும்புகின்றனர்.

 மேலும் அண்ணாமலையார் கால்பாதம் இந்தக் கௌத்திமலையில் இருப்பதாகவும் நம்பிக்கையிருக்கிறது.

 கடலைப் பொரி, மஞ்சள், கொண்டைக்கடலை, வெல்லம், எலுமிச்சை, கருகமணி, காது ஓலை போன்ற பொருட்களைப் படையலிடும் பழக்கமுமிருக்கிறது.

 கௌத்தி மலையிலும், மலையைச் சுற்றிலும் பிள்ளை தந்த வேடியப்பன் கோயில், ஆதாரலிங்கம் கோயில், கன்னிமார்கோயில் தாதன் குளம், கன்னிமார்கோயில் கடப்பன்குளம், சோலையம்மன் கோயில் போன்ற சிறுதெய்வ கோயில்கள் மலையைச்சுற்றி உள்ளன.

 வலதுபுறமாக அமைந்திருக்கும் வேடியப்பன் மலைத் தொடரில், இரு குன்றுகளின் நடுவமாக அமைந்திருக் கிறது, வேடியப்பன் கோயில். மலைத்தலைவனாக வீற்றிருக்கும் வேடியப்பன் ஒரு மக்கள் தெய்வமாக போற்றப்படுகிறார். அப்பகுதியின் சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வம் வேடியப்பன்தான். வேடியப்பன் பெயர் தாங்கியவர்களும் அப்பகுதியில் உண்டு. வேடியப்பன் தீர்த்தம் எனப்படும் “வழிப்பாட்டு மூலிகை நீர்” மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், அருள் நிறைந்ததாகவும், மருத்துவ குணமிக்கதாகவும் கருதப் படுகிறது. அத்தண்ணீரைப் பருகினால் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே நிலவுகிறது. இவற்றைப்பெற வெளிமாநிலங்களிலிருந்து எல்லாம் மக்கள் கூட்டம் வருகிறது.

திங்கள், வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களில் மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது. இரு நாட்களும் நூற்றுக்கணக்கானவர்கள் இவ்விடம் வந்த வண்ணமிருக்கின்றனர்.

 இக்கோயிலை, நடுவமாகக்கொண்டு பலர் தேங்காய், பூ, பழம் என சிறு வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மலைகளோடு தான் மக்கள் அகமாகவும், புறமாகவும் அண்டியிருக்கின்றனர்.

 ‘‘இப்படிப்பட்ட மலையை, மலையென்ற உயிரை, அதைத் தாங்கி நிற்கும் மக்கள் உயிர்களை, அதில் தங்கி யிருக்கும் வன உயிர்களை ஒரு பொருட்டாகக் கருதிடாத, முதலாளியச் சுரண்டல் அரசமைப்புகள், 41 விழுக்காடு இரும்பைக் கொண்டிருக்கிற, 35 மில்லியன் டன் இரும்புக் குவியலாக மட்டுமே இம்மலைகளைப் பார்க்கிறது”.

 பல்வேறு ஆய்வுகள் மூலமாக இதில் இருக்கும் இரும்புத்தாதுக்கள். BMQ (Banded Magnetite Quartzite) பட்டை வடிவில் அடுக்கடுக்குகளாக மேக்னட்டைட்டும், குவார்ட்ஸ்சும் படிந்திருக்கும், குறைந்த தரத்திலான இரும்புத் தாதுக்களில் ஒருவகையைச் சேர்ந்தவை என்ற றியப்பட்டிருக்கிறது. இவற்றில் 41.78 விழுக்காடு இரும்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி பட்டை வடிவில் அடுக்குகளாக பாறைகளில் அமைந்திருக்கும், இரும்புத்தாது படிமங்களுக்கு Banded Iron Formation (BIFs) என்று பெயர். இத்தகைய வடிவில் இரும்புத் தாதுக்கள் படிந்திருந்தால் அவை, Pre Cambrian Era எனப்படும் காலத்தைச் சேர்ந்தவை. இந்த Pre Cambrian Era காலம் எனப்படுவது, சூரியனில் இருந்து நாம் வாழும், இந்தக் கோள் பிரிந்து உருவான 57,04,800 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப் பட்ட காலத்தைக் குறிப்பதாகும்.

 அப்போதுதான் முதன்முதலாக நீலப்பச்சைப் பாசிகளும், பல செல் பாக்டிரியாக்களும் தோன்றத் தொடங்கியிருந்த காலம். அக்காலத்தில்தான், இக்கோளின் அமைவு 90 விழுக்காடு முழுமையடைந்திருந்தது. முதன் முதலில் உயிர்கள் தோன்றவும், கண்டங்களும், கடலும் அமையப்பெற்று முழுமையடைய காத்திருந்த காலத்தைச் சேர்ந்தவை தான் இதில் படிந்திருக்கும் BMQ (Banded Magnetite Quartzite). இது Pre Cambrian E காலத்தை, அதாவது (57,04,800 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட) காலத்தைச் சேர்ந்ததாகும். இப்படிப்பட்ட மலைத்தொடர்கள், உலகம் முழுக்க இருந்தாலும், இந்தவகை இரும்புத்தாது, இந்தியாவில் இருப்பது கிழக்கு தொடர்ச்சி மலைகளில்.

 இப்போது நமக்குத் தெரிய வருவது கௌத்தி, வேடியப்பன் மலையின் வயது, 57,04,800 மில்லியன் ஆண்டுகளுக்கு அருகில்தான்.

இத்தனை ஆண்டுகள்வரை வராத பேரழிவு, பொருள் குவிப்பு என்ற பேராசையின் உற்பத்தி வடிவம் இந்தக் கோளினையே கொல்ல வந்திருக்கிறது.

 கௌத்தி, வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்காக வனத்துறைக்கு சொந்தமான 325 ஹெக்டேர் நிலம் தாரை வார்க்கப்படு வதுடன், 26,918 ஏக்கர் விளை நிலங்களும் கையகப் படுத்தப்படும். இதனால், 51 கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களும், அரிய மூலிகைகளும் அழிக்கப்பட்டுவிடும்.

 அப்பகுதியில் வெட்டப்படும் மரங்களுக்கு முறையாக வனத்துறை அனுமதி பெறப்பட்டு அதற்கு ஈடாக திருநெல்வேலி மாவட்டத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் மரம் நட்டு பசுமை வளையத்தை உருவாக்க உள்ளனர்.

இப்படிச் சொன்னதற்கு ஒரு பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: “நீங்க அம்பாசமுத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா?” என்பதுதான்.

 இந்த இயற்கை வளங்களை அழித்துவிட்டு இரும்புத் தாது தோண்டி எடுத்தால் கிடைக்கும் பயனைவிட அதனால் ஏற்படும் இழப்பு தான் அதிகமாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு முன்பு எச்சரித்திருக்கிறது. அதே உச்சநீதிமன்றம்தான் மீண்டும், ஆய்வுக்குழுவை அனுப்பியுள்ளது.

 மலையைத் தோண்டி இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் அதிர்வு 10 கி.மீ சுற்றளவிலுள்ள கிராமங்களைப் பாதிக்கும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் ஜிண்டால் நிறுவனம் கொழிக்குமே தவிர, தமிழகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்காது. இத் திட்டப்படி ஜிண்டால் ஆலைக்குக் கிடைக்கும் லாபத்தில் ஒரே ஒரு விழுக்காடு மட்டும் தான் 3 ஆண்டுகளுக்குத் தமிழக அரசுக்குக் கிடைக்கும்.

 இரும்பையும் மண்ணையும் பிரிக்க தண்ணீர் வேண் டும். மலையில் உறிஞ்சியது போக, மேலும், தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதனால், வேளாண் தேவைக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

 நட்டாற்றில் நந்தன் கால்வாய்த் திட்டம் ...

 இம்மலைகளில் மழைக்காலத்தில் மட்டுமே உரு வாகும் காட்டாற்று வெள்ளத்தை முறைப்படியாக கடைமடை வரை கொண்டு செல்ல முடியும். அவ்வாறு கொண்டு சென்றால் இரண்டு மாவட்டங்களின், பல ஏரிகள் நிறைந்து பல ஏக்கர்கள் நிலம் பாசனம் பெறும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இதற்காக உருவாக்கப் பட்டது தான் நந்தன் கால்வாய்த் திட்டம்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் உள்ளிட்ட 36 ஏரிகள் பயனடையும் வகையில் நந்தன் கால்வாய்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளது.

 நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி வட்டமும், விழுப்புரம் வட்டமும், பல பகுதிகள் வரை பயன் கொள்ளும்.

 இந்நிலையில் நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் நந்தன் கால்வாயை சீரமைக்க உலக வங்கி நிதியிலிருந்து ரூ.14.30 கோடியை ஒதுக்கியுள்ளனர். இதில் ரூ.9 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட் டத்திற்குட்பட்ட நந்தன் கால்வாயைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்.

 இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட் பட்ட நந்தன் கால்வாய் ரூ. 4 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் வருகின்ற காலங்களில் முடிக்கப்பட உள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

 இப்படி நந்தன் கால்வாய் வழியாகத் தண்ணீர் கொண்டுபோகத் திட்டம் போட்டுவிட்டு, தண்ணீர் உருவாக மூலமாக இருக்கும் மலைத்தொடர்களை அழிப்பது எப்படி சரியாக இருக்கும். இதனால் வரும் இழப்பு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, அருகில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கும்தான்.

 இரும்புத் தூசால், மாசு அடையப்போகும் திருவண்ணாமலை; ................

 ஒவ்வொரு முழு நிலவு நாளன்றின் போதும் ஐந்து இலட்சம் மக்கள்வரை திருவண்ணாமலையின் மலையைச் சுற்ற வருவதுண்டு. இதை ‘கிரிவலம்’ என்பார்கள். இனிவரும் காலங்களில் இந்தக் காட்சிகள் மாறி பெரியளவு பாரம் சுமக்கும் இயந்திர வண்டிகள் இரும்புத் தாதுவை ஏற்றிக்கொண்டு சேலம் உருக் காலைகளை நோக்கிச் செல்லும். இவ்வாறு சென்றால் திருவண்ணாமலையெங்கும் ‘கரிவலமா’கத்தான் காட்சியளிக்கும். “கிரிவலம்” “லாரிவலமாக” மாறிவிடும்.

தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு மிக அருகில்தான் இம் மலைகள் உள்ளன.

 மலையைச்சுற்ற வருபவர்களின் வசதிக்காக மலையை யட்டி இன்னொரு சுற்றுப்பாதை அமைத்தால், பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப் பட்டபோது, ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி’ என்று அனுமதி மறுத்த வனத்துறைதான்,கௌத்திவேடியப்பன் மலையில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும்,மரங்களை வெட்டவும் அனுமதியளிக்கவுள்ளது.

 தழிகத்தின் மிகப் பெரிய ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவண்ணாமலையை ‘பாரம்பரிய நகரமாக’ அறிவிக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்கும் போது, கௌத்தி&வேடியப்பன் மலையைக் காக்கச் சொல்லி யாரும் கேட்பதில்லை.

 திருவண்ணாமலை நகரத்தில் வாழும் மக்களும், அண்ணாமலையாரின் அடிப்பாதத்தில் வாழவேண்டி இடம்பெயர்ந்து வந்திருக்கும் மக்களும், இதன் விளைவுகள் தெரியாது இருக்கின்றனர். இரும்புத்தாதுச் சுரங்கம் தோண்ட வெடிவைத்தால், அதன் அதிர்வுகள் எவ்வளவு தொலைவு, விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கணிக்காமல் இருக்கின்றனர். கௌத்தி மலையும், வேடியப்பன் மலையிலும் இருப்பது வேண்டுமானால் வேறு, வேறு தெய்வங்களாக இருக்கலாம். ஆனால் இரண்டு மலைகளும் இருப்பது கிழக்கு தொடர்ச்சி மலைதான் என்பதை மறந்து விட்டார்கள். வேடியப்பன் மலைக்கு வெடிவைத்தால், அது எங்கே விரிசல் தரும் என்பதை எப்படி உணராமல் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.

 உச்சியில் ஏற்றும் தீபம், பல மலைகளுக்குத் தெரிவது போல், கௌத்தி, வேடியப்பன் மலைக்கு வெடி வைக்கக் காத்திருக்கும்போது இந்த ஒலி மட்டும் மற்ற மலைகளுக்கு கேட்பதில்லையோ?

 கல்லுடைக்கும் ஆலைகளின் தூசு பல மீட்டர்வரை பரவும் போது, ஒரு மலையையே குடையும் போது, அருகிலிருக்கும் நகரத்திற்கு பாதிப்பு வாராதா என்ன?

 ஒரு மாவட்ட தலைநகரத்திற்கே அழிவு நேரக் காத்தி ருக்கிறது. இரும்புத்தாது தூசுக்கள் முதலில் நூரையீரலை பாதிக்கும் புற்று நோய், தோல் பாதிப்புகள், குடிநீரில் பாதிப்பு ஏற்படுதல் என விளைவுகள் விரிவடைந்து கொண்டேச் செல்லும்.

சென்னையிலும், பெங்களூருவிலும் பணிபுரியும் கட்டடத் தொழிலாளிகளை என்ன ஊர் என்று கேட்டுப் பாருங்கள், இவர்களில் பெரும்பான்மையோர் திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

 மலையை உடைத்து, மக்களைத் துரத்தி, நோய் கொண்டு கொல்லச் செய்து, இந்தத் திட்டம் வந்தால் 180 பேருக்கு வேலை தரும் மாபெரும் திட்டம் இவர்களின் மலையைக் குடையும் திட்டம். நாடாளுமன்றத் தேர்த லுக்கு ஓட்டு கேட்டுவந்த மக்கள் தலைவர்கள் இதுபற்றி எந்தக் கருத்தும் கூறாமல் கலைந்து சென்றுவிட்டனர்.

 இதற்கிடையே, இரும்புத்தாது எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரும்புத் தாது எடுப்பதற்கு 51 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். வேடியப்பன் மலையருகேயுள்ள இனாம் காரியந்தல் கிராமத்திலுள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இரும்புத் தாது எடுக்கும் திட்டத்தைக் கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.

 “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ?!” என வெள்ளையர்கள் சுரண்டியபோது பாடிய அதே வரிகளை, இன்றும் ஒரு துண்டறிக்கையில் அச்ச டித்து கொடுத்துக்கொண்டிருந்தார் ஒரு போராட்டக்காரர்.

Pin It