முன்பெல்லாம் ஒரு திட்டத்துக்கு சுற்றுச் சூழல்அனுமதி பெறுவது என்பது வெறும் சடங்காக இருந்தது. ஆனால் இனிமேல் அது அப்படி இருக்காது. காரணம் - ஜெய்ராம் ரமேஷ். அவர் வளர்ச்சியைத் தடுக்கிறார் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை மண்ணையும் மக்களையும் அவர் காப்பாற்றுகிறார் என்று மற்றொரு தரப்பும் கூறுகின்றன. வேறு எந்த சுற்றுச்சூழல் அமைச்சரும் இவ்வளவு அதிகமாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டதில்லை.

செல்வாக்கு மிகுந்தவர்களை, தனது அமைச்சக சகாக்களை அவர் வீழ்த்தும்போது, எங்கிருந்து அவருக்கு இந்தத் துணிச்சல் வந்தது என்ற கேள்வி எழுவது சகஜம். ஒரிசாவில் உள்ள நியமகிரியில் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கம் தோண்டும் திட்டத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி ஆதரவு அளித்திருப்பது, அவரது செல்வாக்கு உயர் மட்டத்தில் இருந்து வருகிறது என்பதை மீண்டும் தெளிவாக நிரூபிக்கிறது.

"சுற்றுச்சூழல்" என்ற விஷயம், இப்போது பரபரப்பு அரசியலின் ஒரு பாகமாகிவிட்டது. இது குறித்து மத்திய அரசு நன்கு அறிந்திருப்பதாகவே தெரிகிறது. பிறகு எந்த தைரியத்தில் "எனது வார்த்தைகள்தான் இறுதியானவை" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு தெளிவான மனிதரா? அல்லது அரசியல் மோதல்களை தீர்த்துக்கொள்ள அவர் பயன்படுத்தப்படுகிறாரா? தில்லியில் ஒரு கருத்தரங்கில் சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட சிலரது கலந்துரையாடலை இடையிட்டு கேட்டபோது:"மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சகத்தை தலைகீழாகத்திருப்பிப் போட்டு விட்டார்."

"ஆனால் அவரது செயல் பாடுகள் நிரந்தரமான தீர்வை உண்டாக்கிவிடுமா? அமைச் சரவை மாற்றத்தில் அவர் மாற்றப்பட்டுவிட்டால், அதன் பிறகு என்ன நடக்கும்? எல்லாம் பழைய கதையாகி விடாதா?"

"ஒரு நிமிஷம். எல்லாம் பழைய மாதிரியே ஆகிவிடாது. சுற்றுச்சூழல் என்பது அரசியல் செயல் திட்டங்களில் இன்றைக்கு இடம்பிடிக்க ஆரம்பித்து விட்டது" என்று அவர்களது பேச்சு சென்றது. "அரசியல் செயல்திட்டங்களில் சுற்றுச்சூழல் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது" என்ற வாக்கியம் என்னை ஈர்த்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சுற்றுச் சூழல் என்பது ஓர் அக்கறையாகிவிட்டதா? அல்லது நமது அரசியல் வர்க்கத்தினர் தங்களது அன்றாட கழைக்கூத்தை நடத்த சுற்றுச்சூழலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களா? அப்படியே சுற்றுச்சூழல் பற்றி பேசினாலும், யாருடைய சுற்றுச் சூழல் அக்கறைகளின் மீது அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்?

இன்றைக்கு கருத்தரங்குகள், மேல்தட்டு வர்க்கத்தினர் - அதிகார வர்க்கத்தினரின் வரவேற் பறைகளில் நடக்கும் விவாதங்களில் முக்கிய இடம் பிடிப்பவராக மத்திய சுற்றுச்சூழல் -வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இருக்கிறார். அவர் தனிப்பொறுப்பு அமைச்சராக நியமிக்கப் படுவதற்கு முன் வரை, தில்லியில் அவரது அமைச்சகம் அமைந்திருக்கும் பர்யாவரன் பவன், வெளிப் பார்வைக்கு தளர்ந்துபோனதாக தெரிந் தாலும்கூட, என்றைக்குமே அதிகார சக்தியும் செல்வாக்கும் நிரம்பிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சகமாக அது இருந்ததில்லை. நியமகிரியில் உள்ள வேதாந்தா அலுமினியம் சுத்திகரிப்பு ஆலைக்கு பாக்சைட் தோண்டுவதை நிறுத்தச் சொல்லி ஜெய்ராம் ரமேஷ் உத்தரவிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு எழுத்தர் ஒருவரைச் சந்தித்தபோது "அவர் அமைச்சரான பிறகு டிவி நிருபர்கள் கூட்டம் இங்கு வருவது வழக்கமாகிவிட்டது" என்றார். ஜெய்ராம் ரமேஷின் செயல்பாடுகளை இதைவிடச் சிறப்பாக வர்ணிக்க முடியாது.

ஆனால் மத்திய அரசில் சுற்றுச்சூழல் அக்கறையின் செல்வாக்கு அதிகரித்ததன் பின்னணியில் உள்ள உண்மையான கதை முற்றிலும் வித்தியாசமானது.மத்திய அரசின் முடிவெடுக்கும் நடைமுறையில் சுற்றுச்சூழல் அக்கறைகள் தற்போது இடம்பெற ஆரம்பித்து வருகின்றன. இதையட்டி பெரும் பாலான அமைச்சகங்கள் சுற்றுச்சூழல் அக்கறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள நேரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் "பசுமை நாயகன்"ஆக ஜெய்ராம் ரமேஷ் என்ற தனிநபர் மாறியது எப்படி?

மற்ற அமைச்சகங்கள் சார்ந்த திட்டங்களைப் பற்றி தீர்மானிக்கும் பொறுப்பில் அவர்இருக்கிறார். மத்திய அரசின் பெரும்பாலான ஒழுங்கு படுத்தும் துறைகள் வளர்ச்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவுக் கரம் நீட்டும் துறைகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், அனுமதி வழங்கும் நடைமுறையின் உச்சியில் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட அமைச்சகத்தை அவர் கையில் வைத்திருக்கிறார். 1991ஆம் ஆண்டில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியதற்குப் பின்னர், இதுவரை பயன்படுத்தப்படாத வகையில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி அவருக்கு வழங்கியுள்ளது.

பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளன. மின்உற்பத்தித் திட்டங்கள், விமான நிலையங்கள், சாலை விரிவாக்கம், சுரங்கம் தோண்டுதல், நகரங்களில் கட்டப்படும் "மால்" வணிக வளாகங்கள், இமயமலை உல்லாச விடுதிகள், காடுகளில் பள்ளிகள் தொடங்க, குடிநீர் குழாய்கள் பதிக்க, நிலத்துக்கு அடியில் கண்ணாடி இழை தொடர்பு பதிக்க, எண்ணெய் குழாய்கள் பதிக்க என பல்வேறு விஷயங்களுக்கு இந்த அனுமதி தேவை. ஜெய்ராம் ரமேஷின் சுற்றுச்சூழல் அமைச்சகம், அதன் கீழ் அதிக கட்டுப்பாடுகளைக் கொண்டிராத மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் மாநில வனத்துறையும் மேற்கண்ட திட்டங்கள் பசுமைச் சட்டங்களை மீறாமல் இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம், காடு பாதுகாப்புச் சட்டம், வனஉரிமைச் சட்டம், காற்று, நீர் சட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த அமைச்சகத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும்கூட, எல்லாமே நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு வரும் 95 சதவீதத் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் அனுமதிக்கப்படும் விகிதம் என்பது, ஜெய்ராம் பொறுப் பேற்ற பிறகும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாததைவிட, அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஒன்றே கால் ஆண்டுகளில் மிக அதிகமான காடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. மற்றொருபுறம், சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்ட திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முறைப்படி பின் பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்க களத்தில் மிகக் குறைவான ஊழியர்களே இருக்கிறார்கள். அத்துடன், கள அளவில் விதிமுறைகளை கைகழுவவும் திட்டங்களை அனுமதிப்பதற்காக லஞ்சம் கட்டுப்பாடின்றி தாண்டவமாடுகிறது. வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்துக்கு அனுமதி ஆர்ப்பாட்டமாக மறுக்கப்பட்ட அதேநேரம், ஒரிசாவில் இன்றைக்கும் நூற்றுக்கணக்கான சுரங் கங்கள் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இது சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தெரியாத ஒரு விஷயமல்ல.

நியமகிரியில் பாக்சைட் தோண்ட வேதாந்தாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அனுமதி மறுத்த செயல், அரசியல் வாதிகளின் கைதேர்ந்த செயல்பாட்டுக்கு மற்று மோர் எடுத்துக்காட்டு. முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கையில் எடுத்துக்கொண்டு, அவற்றில் தலையீடு செய்து சுற்றுச் சூழலைக் காப் பாற்றும் "பசுமை தலையீட்டு அடையாளமாக" மாற்றி விடுவதில் கைதேர்ந்தவர் அவர். மகாராஷ்டி ராவில் நவி மும்பை விமான நிலைய கட்டுமானப் பணியை நிறுத்தினார். ஒரிசாவில் வேதாந்தா சுரங்கத்தை நிறுத்தினார். சத்தீஸ்கரில் ஜிண்டால் மின் நிலையத்தையும், உத்தராகண்டில் உள்ள நூற்றுக் கணக்கான அணைகளில் வெறும் 3 பேரணைகளையும், 12க்கும் மேற்பட்ட உணவுப் பயிர்களில் ஒரு மரபணு மாற்றுப் பயிரை மட்டும், உத்தர பிரதேசத்தில் ஒரே ஒரு பூங்கா அமைப் பதையும் அவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உண்மை யிலேயே அதிகரித்து வருகிறதா? என்ற கேள்வி வரலாம். இந்தக் கேள்வியை யாரிடம் கேட்கிறோம் என்பதைப் பொறுத்து இதற்கான பதில் கிடைக் கும். இந்தியா வில் சூழல் விழிப் புணர்வு அதிகரித்து விட்டதாக, மேற்கண்ட உதாரணங்களை சுட்டிகாட்டிசில சூழலியலாளர்கள்அவல மகிழ்ச்சியுடன்பேசுவார்கள். ஊடகங் களும் இது போன்ற வெற்றிகளின் பின்னால்தான் அலைந்து கொண்டிருக்கின்றன.அரசியல்வாதிகளைக் கேட்டால், அவர்கள் வேறு விஷயங்களை சுட்டிக் காட்டுவார்கள். ஒவ்வொரு திட்டத்திலும் போட்டியிடும் எதிரெதிர் குழுக்களின் நலன்களைப் பற்றி அவர்கள் கூறுவார்கள். ஒவ்வொரு திட்டம் அனு மதிக்கப்படும்போதும் அல்லது நிறுத்தப்படும் போதும் ஒரு கட்சியோ அல்லது ஒரு நிறுவனமோ எப்படி பலன் பெறுகிறது, மற்றொன்று எப்படி நஷ்டமடைகிறது என்றும், எப்படி சுற்றுச் சூழலை காரணம் காட்டி அரசியல் பகை தீர்த்துக் கொள்ளப்படுகிறது என்றும் அவர்கள் கூறு வார்கள்.

சூழலியல் என்பது இன்றைக்கு வளங்களை யார் கைப்பற்றுவது என்ற அசிங்கமான, கொடூரமான போராகிவிட்டது. கனிம வளம், நீராதாரங்கள், காட்டு உற்பத்தி, நகரங்களில் சாலை வசதி போன்றவற்றில் இந்தப் போர் நடைபெறுகிறது. நகரச் சாலைகள் யாருக்கானவை என்று கார் உரிமையாளர்கள் - பேருந்துப் பயணிகள் இடையே போராட்டம் நடக்கிறது. தங்களது நிலத்துக்குள் புதிய வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்த வரும் நிறுவனத்துக்கு எதிராக பழங்குடிகள் வில், அம்பு, கம்பு, கற்கள் போன்றவற்றைக் கொண்டு போராடுகிறார்கள். இந்த மோதல்களை சில மாவோயிஸ்ட் அமைப்புகள் துப்பாக்கி சண்டை யாக மாற்றுகின்றன, ஏழைகளை தங்கள் உறுப்பினர் களாக்கிக் கொள்கின்றன. இதுபோன்ற மோதல் களில் தங்கள் நிறுவன நலன்களுக்கு எதிரான  நிறுவனத்தின் தொழில் திட்டங்கள் சிக்கிக் கொள்ளும்போது, சில வணிகக் குழுமங்கள் அதைக் கொண்டாடுகின்றன.

இந்த மோதல்கள் எதுவும் புதிதல்ல. இந்தியாவில் இவை பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருக் கின்றன. இதற்கு ஜார்கண்டில் உள்ள கொயில் கரோ அணைக்கு எதிராக நடக்கும் மக்களின் நீண்ட கால போராட்டமே சாட்சி. 1974ஆம் ஆண்டு இந்தப் போராட்டம் தொடங்கியது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சி இயற்கை வளங்களை வேகமாகச் சூறையாடி வருவதால், மேற்கண்ட போராட்டங்களின் அளவும் தீவிரமும் அதிகரித்து வருகிறது.

பணத்தை கொள்முதல் செய்ய மேற்கொள்ளப் படும் இந்த முயற்சியின் காரணமாக எழும் மோதல் களும் போராட்டங்களும் ஏற்படுத்தும் பாதிப்பு சாதாரணமாக இருக்காது, அது ஏற்படுத்தும் எதிர் விளைவுகள் விரைவில் தீர்ந்து விடாது என்பது ஐ.மு.கூ ஆட்சியைவிட காங்கிரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே அது ஜெய்ராம் ரமேஷை "பசுமை காவலனாக" முன்னிறுத்துகிறது.

இதற்காக ஜெய்ராம் ரமேஷ் ஒவ்வொரு நாளும் தனது நம்பிக்கைக்கு உரிய இளம் உதவி யாளர்களான வரத் பாண்டே, முகமது கான் ஆகிய இருவரிடமும் தீவிர ஆலோசனை நடத்து கிறார். எந்தெந்த திட்டங்களை கையில் எடுத்து காங்கிரஸ் செயல்திட்டத்துக்கு ஏற்ற அரசியல் அடையாளங்களாக மாற்றலாம் என்பது தான் அந்த ஆலோசனைகளின் மையமாக இருக்கும். பாண்டேதான் இதில் தகவல் களஞ்சிய மாகவும், செயல்பாட்டுத் துறை தலைவராகவும் செயல் படுகிறார். கான் ஒரு வழக்குரைஞர், சட்டச் சிக்கல் - சிடுக்குகளை அவர் அள்ளிப்போடுவார். அமைச் சகத்திலுள்ள மற்ற அதிகாரிகள் ஜெய்ராம் குழுவின் தலையீடுகளுக்கு ஏற்றவாறு தினசரி உழைத்து, அவர்களுக்குத் தேவையான தீனியை வழங்குகிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல்பாடு தி.மு.க அமைச்சர் ஆ.ராசாவின் கைகளில் இருந்த காலத்தில் இருந்து முற்றிலும் மாறிவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக நீண்டகாலம் அவர் இருந்த காலத்தில், அனுமதி கேட்டு வந்த அனைத்து திட்டங்களும் அனுமதிக்கப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் அந்த அமைச்சகம் தனக்குத் தேவையில்லை என்று தி.மு.க கருதிய நேரத்தில் பிரதமரே அந்தப் பொறுப்பையும் சேர்த்து கவனித்தார். கட்டுப்பாடற்ற வளர்ச்சி என்பது தாரக மந்திரமாக கருதப்பட்ட நிலையில், பிரதமர் அலுவலகம் இந்த அமைச்சகத்தை சற்று விலகியிருந்தே கவனித்தது.

ஒழுங்குமுறையின்றி செயல்பட்டு வந்த அமைச் சகத்தை ஜெய்ராம் தனது சுறுசுறுப்பான, உயர்வு நவிற்சி தலையீடுகளால் மாற்றியுள்ளார். அதேநேரம் தனக்கு ஒரு தூய்மையான அடையாளத்தையும் அவர் கட்டமைத்துக் கொண்டுவிட்டார். இதன் மூலம் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் அவர் மீது அனைவரும் வைத்திருக்கும் நல்லெண்ணம் அவருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இவரது பதவிக் காலத்தில் அமைச்சகம் முற்றுகை யிடப்பட்டிருக்கிறது. மற்ற அமைச்சகங்களில் செல்வாக்கு மிகுந்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் சூழ்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் உரிமை குழுக்கள், செயல்பாட்டாளர்கள்கூட இந்த அமைச்சகத்தில் கருத்துகளைத் தெரிவிக்க முடிகிறது. ஆனால் இவர்கள் அனைவரையும் கையாளுவதில் ஜெய்ராம் தேர்ந்தவர். தேவைப்பட்டால் சில நேரம் ஒரு பிரிவை மற்றொரு பிரிவுக்கு எதிராக மோதச் செய்வதிலும் வல்லவர். அவர்கள் மிகப்பெரிய தொந்தரவாக மாறும் நிலைக்குச் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்.

அதேநேரம் ஜெய்ராம் நிரந்தரமான மாற்றங்களைக் கொண்டு வருவாரா? அமைச்சக பொறுப்பில் இருந்து அவர் மாற்றப்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக முக்கியமான கேள்விகள். ஆட்சி அமைப்பில் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்கு ஜெய்ராம் உரிய இடத்தைப் பெற்றுத் தருவாரா? காங்கிரஸ் கட்சி அவரைக் கொண்டு இதைச் செய்யுமா? இந்த ஆட்சியின் அல்லது அவரது அமைச்சரவை காலத்தின் முடிவில்தான் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று தெரிகிறது.

நன்றி: டைம்ஸ் கிரஸ்ட் பதிப்பு,

 

நிதின் சேத்தி

பிரிக்க முடியாப் பசை

கர்நாடகத்திலுள்ள சிக்மகளூரில் 1954ஆம் ஆண்டு பிறந்த ஜெய்ராம் ரமேஷ், பம்பாய் ஐ.ஐ.டியில் பி.டெக்., அமெரிக்காவிலுள்ள கார்னெகி மெலன், எம்.ஐ.டி பல்கலைக்கழகங்களில் எம்.எஸ். படித்தவர்.

1978ஆம் ஆண்டு உலக வங்கியில் முதலில் வேலைக்குச் சேர்ந்த அவர், அடுத்த ஆண்டே தொழில் செலவு - கட்டண அமைப்பில் லோவ்ராஜ் குமார் என்பவருக்கு உதவியாளராக மாறினார். 1991ல் பிரதமரின் ஆலோசகரான அவர், 1992 - 94 வரை திட்டக் குழுவின் துணைத் தலைவருக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். இந்தக் காலத்தில்தான் புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1996 - 98 வரை மத்திய நிதி அமைச்சரின் ஆலோசகராக இருந்தார். 2000 - 02ல் கர்நாடக மாநில திட்டக் குழுவில் துணைத் தலைவர் ஆனார். 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் வியூகங்களை வகுத்தார்.

"இந்தியா ஒளிர்கிறது" என்ற பா.ஜ.கவின் விளம்பர உத்திக்கு எதிராக, சாதாரண மக்களைக் குறிவைக்கும் "ஆம் ஆத்மி திட்டம்" இவரது யோசனைதான். அது காங்கிரசுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுத் தந்தது அனைவரும் அறிந்ததே. அதே ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 - 09 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் வர்த்தகத் துறை இணையமைச்சர். 2009ல் காங்கிரஸ் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பாளராக, வியூகங்களை தீர்மானிக்கும் பொறுப்புக்கு வந்தார். அதே ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் - வனத்துறையின் இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) அமர்ந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். "எல்லா விவகாரங்களிலும் எனது வார்த்தைகளே இறுதியானவை" என்று உறுதியாக அவர் கூறுவதற்கு இதுவே காரணம். 

ஜெய்ராம் பதவிக் காலத்தில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் 

மத்திய இந்தியாவில் காடுகளின் உட்பகுதியில் சுரங்கம் தோண்ட அனுமதி நிறுத்தப்பட்டது.

-உத்தராகண்டில் பாகீரதி நதியில் அணைகள் நிறுத்தப்பட்டன.

-உத்தரபிரதேசத்தில் நொய்டாவில் பூங்கா அமைப்பது தடுக்கப்பட்டது.

-மத்திய பிரதேசத்தில் நான்கு வழிப் பாதையும், சிந்த்வாராவில் கனிமச் சுரங்கம் தோண்டுவதும் நிறுத்தப்பட்டன.

-சத்தீஸ்கரில் ஜிண்டால் அனல் மின் நிலையம் நிறுத்தப்பட்டது.

-ஒரிசாவில் போஸ்கோ இரும்புத் தாது ஆலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

-நியமகிரியில் வேதாந்தா பாக்சைட் சுரங்கம் தோண்டுதல் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுதல், இதரத் திட்டங்களுக்கு இடைக்காலத் தடை.

-நவி மும்பை விமான நிலையத்துக்கு எதிர்ப்பு. -கோவாவில் இரும்புத்தாது தோண்டுதல்  நிறுத்தப்பட்டுள்ளது.

-கர்நாடகத்தில் உத்தர கன்னடத்தில் அனல் மின் நிலையத்துக்கான அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.

-ஆந்திராவில் சிறீகாகுளம் சோம்பெட்டா மண்டல் பகுதியில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட அனல் மின் நிலையம் நிறுத்தப்பட்டது.

-சிறீகாகுளம் மாவட்டம் காக்ராபள்ளி கிராமம் அருகே பாவனப்பாடு பகுதியில் 2640 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் நிறுத்தப்பட்டது.

-விசாகப்பட்டினத்தில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையும் அதன் சார்பு மின் ஆலையும் நிறுத்தப்பட்டன.

Pin It