"ஒரு குடிசைப் பகுதி அருகே கடந்து செல்லும் காரில் ஒரு குழந்தையோ, முதியவரோ அடிபட்டு விடுகிறார்கள். உடனடியாக அங்கு கூட்டம் கூடி விடுகிறது. காரில் இருக்கும் பணக்கார பெண்/ஆணிடம் மருத்துவச் செலவுக்கு பணம் கேட்டு அவர்கள் தகராறு செய்கிறார்கள். பணம் தராத வரை அந்த காரை செல்ல விடுவதில்லை. அந்தக் கார் கடந்து சென்ற பின், சண்டை போட்டவரிடம் இருந்து பணத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டு காயமடைந்தவர் சாதாரணமாக எழுந்து நடந்து சென்றுவிடுகிறார்." 15 ஆண்டுகளுக்கு முன் வரை குடிசைப் பகுதிகள் குறித்து பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் நமக்குத் திரும்பத் திரும்ப தந்து கொண்டிருந்த சித்திரம் இதுதான்.

1967ல் தி.மு.க முதலில் ஆட்சிக்கு வந்தபோது, குடிசைப் பகுதிகள் அடிக்கடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தனவாம். அப்பொழுது இது பற்றி ஆராய தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் என்பவரை அண்ணா நியமித்தாராம். "தங்கள் குடிசைகளுக்கு தாங்களே தீ வைத்துக் கொள்கிறார்கள்" என்று அந்தத் தடயவியல் நிபுணர் கண்டுபிடித்தாராம். காரணம்? அவர்களுக்குக் கிடைக்கும் அற்ப-சொற்ப நஷ்டஈடான ரூ. ஆயிரம் - இரண்டாயிரத்துக்காகத் தான் அப்படியாம். இன்று வரை குடிசைப் பகுதிகள் தீப்பிடித்து எரிவதற்கு அதுதான் காரணம் என்று அரசு தரப்பு கூச்சலிட்டு வருகிறது. இந்த மண்ணில் எந்த அடைப்படை உரிமையையும் பெறாத அந்த குடிசைப் பகுதி மக்கள், இப்படியாக அரசையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் இதன் அடியில் பொதிந்திருக்கும் வாதம்.

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு, பூஜ்யங் களை கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடந்துள்ள நாட்டில், அந்த ஊழலை செய்தவர்கள் ஆளும் "பெருமைமிகு" மாநிலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரம் ஆசியாவின் டெட்ராய்ட். இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் நகரம்... இப்படி, கணக்கிட முடியாத அளவுக்கு நமது மாநிலத் தலைமையகமான சென்னைக்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள்? இந்தப் பெருமைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் சென்னையை குடிசை யில்லா நகரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வை, அடித்தட்டு மக்களால் ஆட்சி அதிகாரம் பெற்ற கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியினருக்கு இருக்க முடியும்? குடிசையில்லா நகரம் என்றால், அடித்தட்டு -ஏழை -தலித் மக்கள் அனைவருக்கும் வீடு தருவது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது உங்கள் தவறு. குடிசையில்லா நகரம் என்றால், நகரத்தில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை அடியோடு ஊரைவிட்டு வெளியே ஒதுக்கி வைப்பதுதான்.

புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் பகுதியில் கூவம் நதிக் கரையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் அகற்றப்பட்டு, ஒக்கியம் துரைப்பாக்கத்துக்கு அப்பகுதி மக்கள் துரத்தப்பட்டு விட்டனர். இது நிறைவு செய்யப்பட்ட காலம் 2010 ஆகஸ்ட் மாதம். கூவம் நதியை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தவென துணை முதல்வர் சிங்கப்பூர் எல்லாம் சென்று திட்டம் தீட்டிக் கொண்டு வரும்போது, கூவம் நதிக்கரையில் இந்த மக்களுக்கு அப்படி என்ன வேண்டாத வேலை? இப்போது லாங்க்ஸ் கார்டன் பகுதியில் ரூ. 1.35 கோடி செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.

லாங்க்ஸ் கார்டன் பகுதியில் இருந்த மக்கள் துரத்தப்பட்டது முதல்கட்டம்தான். அடுத்த 6 ஆண்டுகளில் கூவம் நதிக் கரையில் உள்ள 5 லட்சம் குடிசைவாசிகளையும் சென்னையைவிட்டு துரத்துவதுதான் தமிழக அரசின் திட்டம் என்று தெரிகிறது. இதுதவிர, துறைமுகம் முதல் மதுர வாயல் வரை அமைக்கப்படவுள்ள உயர்நிலை பறக்கும் சாலைக்காகவும் நிறைய மக்கள் அப்புறப் படுத்தப்பட இருக்கிறார்கள்.

இப்படி சென்னையை விட்டு துரத்தப்படுபவர்கள் அனைவரும் சென்னையின் தென்பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சாதி இந்து குடியிருப்புகளுக்குப் பின் புறத்தில் 1997ஆம் ஆண்டு கட்டப்பட்ட 3 ஆயிரம் குடியிருப்புகள் கொண்ட பகுதிக்கு துரத்தப் படுகிறார்கள். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் வெறும் 150 சதுர அடி பரப்பு மட்டுமே கொண்டவை. இன்றைக்கு இது 16 ஆயிரம் குடியிருப்புகளாக, சிமென்ட் கூரைகள் மட்டும் கொண்ட ஒரு குடிசைப் பகுதி யாக மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது மட்டும் ஒரு லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியின் பெயர் கண்ணகி நகர்.

சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்த 64 குடிசைப்பகுதிகள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டு, அங்கிருக்கும் உழைக்கும் ஏழை - தலித் மக்களை கண்ணகி நகருக்குத் துரத்துவதுதான் முழுமையான திட்டம். இவ்வளவு காலம் இந்த மக்களிடம் இருந்து வாக்கு பெறுவதற்காக, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை சலுகை போல வழங்கி, வாக்கு களை பறித்துக்கொண்டு சென்ற இதே அரசியல் கட்சிகள், இன்றைக்கு அந்த மக்களை இப்படி துரத்தியுள்ளன.

ஆனால் அந்த கண்ணகி நகரில் இம்மக்களால் குறைந்தபட்சம் வாழ்க்கையை ஓட்டவாவது முடிகிறதா? எந்த வசதியும் இல்லாத அந்த வீடு ஒன்றுக்கு தலா ரூ. 300 வாடகை. துரைப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இப்பகுதி குழந்தைகளை சேர்த்துக் கொள்வதில்லை. கண்ணகி நகர் ஆட்கள் என்றால் எந்த வேலையும் கூட கிடைப்பதில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

"4 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது. சாலை வசதியில்லை. சாக்கடை சுத்தம் செய்வதில்லை. அதனால் கொசுத்தொல்லை. இன்று வரை மின் வசதியில்லை. வாடகை கரண்ட் வாங்கியிருக்கிறோம். புதுப்பேட்டையில் படித்த பள்ளிக்குச் செல்ல இரண்டு பஸ் மாற வேண்டும். இதனால் பாதி குழந்தைகள் படிப்பை விட்டு விட்டன" என்கிறார் கண்ணகி நகர் சுகன்யா.

இப்படியாக சென்னையில் இருந்து துரத்தப்பட்ட இந்த மக்களிடையே கொலைகள், தற்கொலைகள், பள்ளிப் படிப்பு பறிக்கப்படுதல், விஷக்காய்ச்சல் பலிகள், மருத்துவ வசதியின்மை, குடிநீர் இல்லாமை, கழிப்பிட வசதியின்மை என அனைத்துமே பிரச் சினையாகி இருக்கிறது. கடைசியில் குப்பை பொறுக்கி, பிச்சையெடுக்கும் பராரி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக தொடர்ச்சியாக போராடி வரும் ஆட்டோ ஓட்டுநர் இசையரசு, தலித் முரசு இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கணக்கு, இந்த அவலத்தின் உண்மையை தெளிவாக உணர்த்தும். ரூ. 450 கோடியில் புதிய சட்டமன்றம், ரூ. 171 கோடியில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், ரூ. 100 கோடியில் அடையாறு பூங்கா, ரூ. 8 கோடியில் தாவரவியல் பூங்கா, ரூ. 5.6 கோடியில் அண்ணா நகர் பூங்கா புதுப்பிப்பு, ரூ. 5.70 கோடியில் மின்தூக்கி நடை மேம்பாலம், ரூ. 1.80 கோடியில் நேப்பியர் பால மின்னொளி அலங்கரிப்பு, கூவம் என்ற நதியை சாக்கடையாக்கி - மீண்டும் அதை தூய்மைப்படுத்துவதற்கான செலவு ரூ. 1,200 கோடி. இது எல்லாமே அரசுப் பணம், மக்கள் வரிப்பணம். ஆனால் கூவம் கரையில் வாழ்ந்த மக்களின் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் ரூ. 4 கோடி." இதுதான் திராவிட அரசியல் கட்சி பாரம்பரியம் கண்டுபிடித்த சமூகநீதி.

மக்களைத் துரத்துவதன் பின்னணி என்ன?

சென்னையில் இன்றைக்கு 6 நதிகள் எஞ்சியுள்ளன. ஆனால் அவை எதுவும் நதியாக இல்லை. இவற்றில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்றும் முழுமையாக சூறையாடப்பட்டுவிட்டன. சூறையாடியவர்கள் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் கொள்ளைக்கும்பலும். உடந்தை: அரசு அதிகாரிகள். சென்னையின் பல முக்கியமான கட்டடங்கள் நீர்நிலைகளின் மேலேதான் அமைந்துள்ளன. வள்ளுவர் கோட்டம் ஒரு குளத்தின் மீதும், கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு நீர்நிலையின் மீதும், பறக்கும் ரயில்திட்டம் பக்கிங்காம் கால்வாயின் மீதும் நிறைவேற்றப்பட்டு அந்த நீர்நிலைகள் இருந்த தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. பக்கிங்காம் கால்வாய் ஆந்திரத்தில் தொடங்கி புதுச்சேரி வரை செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்கு இந்த கால்வாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிர மிப்புகள் போதாதென்று, இந்த நதிகளிலேயே சென்னை மாநகரின் கழிவுநீரும் கலக்கப்படுகிறது. கூவமும் அடையாறும் சாக்கடையாவதற்கு சென்னையில் வாழும் படித்த - பணக்கார - நடுத்தர வர்க்கமே காரணம். அவர்கள் சார்பாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் இப்பணியை செவ்வனே செய்து வருகிறது.

உலகிலுள்ள பெருநகரங்கள் எல்லாமே கழிவுநீர் அகற்றுவதற்கு என்றும், சுத்திகரிப்பு செய்வதற்கென்றும் முறையான அமைப்புகளை வைத்திருக்கின்றன. அவற்றையும் உள்ளடக்கித்தான் வளர்ச்சியை மேற்கொள்கின்றன. ஆனால், நம் நாட்டில் மட்டும் கழிவுநீர் பற்றி கவலையே படுவதில்லை. கழிவுநீர் நதிகளிலேயே கலக்கப் படுகிறது. பிறகு, நதி மாசடைந்துவிட்டது, தூர்ந்துவிட்டது என்று கூறி, மக்கள் வரிப்பணத் திலேயே அதை தூய்மைப்படுத்தவும், தூர்வாரவும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணம் அந்தப் பணிகளை காண்ட்ராக்ட் எடுக்கும் அரசியல் வாதி - பினாமிக்குச் செல்கிறது.

நதிகளை தூய்மைப்படுத்துவதற்கான ஒரே வழி, அதில் கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகளை சேர்க்காமல் இருப்பதுதான். அதைச் செய்வதை விட்டுவிட்டு தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்வது வரிப்பணத்தை வீணடிப்பதற்கான மற்றொரு சிறந்த வழி!

பன்னாட்டு முதலாளிகளை சென்னையை நோக்கி ஈர்த்தால்தான், அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்பதை அரசியல்வாதிகள் தெரிந்து கொண்டுவிட்டனர். இதற்காக அவர்களுக்குத் தேவையான நிலங்கள், அவர்களது நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு வீடு கட்டுவதற்கு நிலங்களை உருவாக்கும் வேலையை செய்து வருகின்றனர். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கின்றன. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்குதல் காரணமாகவும், காண்ட்ராக்ட் தொகை மிகப் பெரிய அளவில் கிடைப்பதாலும் சாலை அமைத்தல், பாலம் கட்டும் வேலைகளை அரசியல்வாதிகள் பெரிய அளவில் மேற்கொள்கிறார்கள். அது முடியாதபோது, ஏற்கனவே இருக்கும் பாலத்தையோ, அல்லது பால சீரமைப்பு என்ற பெயரிலோ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இடித்துஇடித்து புதிதாக கட்டுகிறார்கள். இதற்கு நல்ல உதராணம்: அடையாறு பாலம். அத்துடன் சென்னைக்கு ஒவ்வொரு மேயர் பதவியேற்ற பிறகும், சென்னையை அழகுபடுத்துவதாகக் கூறி, நடைபாதை கற்களை மாற்றுவது, கம்பித் தடுப்புகள் அமைப்பது, விளக்குகளை மாற்றுவது, சாலையை பிரிக்கும் மீடியன் அமைப்பது போன்ற வேலை களை கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள், எந்தவித தேவையும் இன்றி. இந் நிலையில் பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கு தல் காரணமாக பூங்காக்கள், சூழல் பூங்காக்கள் அமைக்கப் படுகின்றன. எ.கா. அடையாறு பூங்கா, செம்மொழிப் பூங்கா.

இதுதவிர சென்னையில் கட்டுமானம் செய்யப் படாத நிலப்பகுதி மிகக் குறைவு. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவோ, ரியல் எஸ்டேட்டுக்கோ நிலம் கிடைப்பதோ அரிதாகி விடுகிறது. இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு நீர்நிலை அருகே இருக்கும் நிலப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலையை அரசு செய்கிறது (ஆனால் அடித்தட்டு மக்கள் நதிக் கரைகளை ஆக்கிரமித்திருப்பதாக அரசு புலம்பு கிறது). ஒரு பக்கம் அதிவேக பறக்கும் சாலைகள், சரக்குந்து சாலைகள் நீர்நிலைகளை ஒட்டி அமைக்கப் படுகின்றன. இதன்மூலம் நகருக்குத் தேவைப்படும் போக்குவரத்து வசதிகள், ஏற்கெனவே மதிப்புமிக்க நிலப்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பணக்கார, நடுத்தர வர்க்கத்தினரை தொந்தரவு செய்யாமல் நிறைவேற்றப்படுகின்றன. மற்றொரு பக்கம் நீர்நிலை அருகே இருக்கும் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்துக்கும் பலிகடா அடித்தட்டு மக்கள்.

உழைக்கும் மக்களின் குடியிருப்புகள் வெளியேற் றப்பட்டுவிட்டால், நகரம் அழகாகிவிடும் என்று நினைக்கின்றன இந்த அறிவற்ற அரசுகள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம், ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக்கப்படுவதைத்தான்.

நீர்நிலைகளின் கரைகளிலோ, அவற்றின் மேலே கட்டுமானப் பணிகள் செய்வது அவற்றை எந்த வகையிலும் மேம்படுத்தப் போவதில்லை. அவற்றின் இயற்கையான போக்கை குலைத்து சீரழிக்கவே செய்யும் என்பது அறிவியல் ஆய்வுகளின் முடிவு. இதற்கு நல்ல எ.கா. போரூர் ஏரியை இரண் டாகப் பிளந்து கட்டப்பட்டுள்ள பாலம். இது எல்லாமே மழைக்காலத்தில் வெள்ளமாகவும், புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் பல் வேறு காலநிலை மாறுபாடுகள் காரணமாக இயற்கைச் சீற்றங்களாகவும் எதிர்காலத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Pin It