பசுமைப்புரட்சி, அணு உலைகள், முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ..

பூவுலகு வெளியிடும் அணு உலைகளுக்கு எதிரான நான்காவது இதழ் இது. கூடங்குளம் அணு உலை தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்து அணுசக்திக்கு எதிராகப் பேசிவருகிறது ‘பூவுலகின் நண்பர்கள்’. இன்னும் சொல்லப்போனால், பசுமைப்புரட்சிக்கு எதிராகவும், அதன் வன்முறை குறித்தும் மிகவும் ஆழமாக விவாதித்தும் போராடியும் வருகின்றது. பசுமைப்புரட்சிக்கும், அணுஉலைகளுக்கும், முல்லைப் பெரியாறுக்கும் என்ன தொடர்பு?...

கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்துப் பேசும், அதை முன்வைத்து விவாதிக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களுடைய வாதத்தைத் தொடங்க, ‘பசுமைப்புரட்சி’யை அடையாளங் காட்டுகிறார்கள் இன்றும். நம் நாடு, பஞ்சமும், பட்டினியாயும் இருந்தது. அந்த வேளையில்தான் ‘பசுமைப்புரட்சி’ வந்தது. பிறகு நாடே சுபிட்சமடைந்தது, இந்தக் ‘கதை’யை கூடங்குளம் அணு உலை அதிகாரிகள் சொல்லி, அதேபோல் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின் நிலையம் தேவை என்கிறார்கள்.

அடப்பாவிகளா? பசுமைபுரட்சியினால் விளைந்த கொடூரங்களை இன்னுமா நீங்கள் கண்கொண்டு பார்க்கவில்லை. இன்று இந்தியாவே, விஷமாகி, நோயுற்ற மளிதர்கள் வாழும் ‘உலக அறவி’யாகிவிட்டது. யுத்த காலத்தைப் போல ஹெலிகாப்டரில் வந்து எண்டோசல்பானைத் தூவி மக்களைக் கொன்றதை, மக்கள் இன்னும் செத்துக்கொண்டிருப்பதை எந்த அதிகாரிகளும் இன்னுமா பார்க்கவில்லை? இதுதான் நாட்டின் வளர்ச்சியா? பசுமைப் புரட்சியால் இந்தியா மலடாகிப்போனது, மக்கள் நோயாளிகளானார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள். ‘பசுமைப் புரட்சியைப் போல, மக்களைக் கொல்வதற்கே அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. எனவே அணு உலைகள் வேண்டாம் என நாங்கள் சொல்கிறோம். அபாயகரமான விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத மேம்போக்கான, தவறான வளர்ச்சியையே அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. அவற்றில் ஒன்றுதான் அணு உலைகள்.

பசுமைப்புரட்சி என்பது வெறும் உணவு உற்பத்தி சம்பந்தமுடையது மட்டுமல்ல, அது ‘அதிகத் தண்ணீர் தேவை’ என்ற கருத்தாக்கத்துடனும், தண்ணீரை விரயம் செய்யக்கூடிய தொழில்நுட்பத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. இன்று கேரள அரசின் நயவஞ்சகத்தால் முல்லைப் பெரியாறு மக்கள் போராட்டமாகவும், இரு மாநில மக்களின் வெறுப்புப் போராட்டமாகவும் மாறியுள்ளது. மேலும் கேரளா மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவிலும் இந்த தண்ணீர் சர்ச்சை தொடரும். வெறும் நதிகளின் பிரச்சனையாக மட்டுமின்றி இனப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது.

‘பசுமைப் புரட்சி’ ஏற்படுத்தியுள்ள மிக அபாயரகமான விளைவு இதுதான். ‘பசுமைப் புரட்சி’யை நாம் தொடர்ந்து எதிர்ப்பதுபோல, அணு உலைகளையும் தொடர்ந்து எதிர்ப்போம். கொதி நிலையில் இருக்கும் கல்பாக்கம், கூடங்குளம் பிரச்சனைகளை முன்னிறுத்தியதால் ‘அனைத்துலக காடுகள் சிறப்பிதழ்’ நியூட்ரினோ குறித்த கவனக்குவிப்புடன் அடுத்த இதழாக மலருகிறது.

Pin It