கள் நாற்றமடிக்கின்ற காலிக் கலயங்கள்

புணர்வின் எச்சமென ஓய்வெடுத்த ஒரு பொழுதில்

சுருட்டிற்கான புகையிலைக் கோதுகளைச்

சீர் செய்தாள் பேச்சி.

அலுப்பில் குப்புறக் கவிழ்ந்திருந்த கலயங்களின் விளிம்பில்

கிறக்கத்தின் புன்னகை கரி¢த்துக் கிடந்தது.

ஈசானி மூலைக் கவுளி நல்லதங்காளின்

காவுகளைக் கணித்துச் சொல்லியது.

பனங்குச்சி சுத்திகரித்துக் கீழெறியும்

பேச்சியின் வாய்த் துணுக்குகளைத் தின்று

தள்ளாடின சிற்றெறும்புகள்.

நேர்த்தியாக்கப்பட்ட சுருட்டு தயாராகக் காத்திருந்தது -

பேச்சியின் பெரு உதட்டுத் தீண்டலுக்காய்.

உச்சிப்பொழுதின் தகிப்பில் ஒரு பொட்டெடுத்துப்

பற்றவைத்தாள் முத்தாலம்மா.

நாசி நுகர்வில் வினோதினியின்

அமில நெடி உணர்ந்து விசும்பினாள் சொக்காத்தம்மா.

முந்திச்சீலையில் நிர்பயாவின்

அந்தரங்க நிணம் முகர்ந்து

ஒப்புவைக்க ஆரம்பித்தாள் சீலைக்காரியம்மா.

புகையின் கோடுகளில்

முட்புதர் கிழிபட்ட சங்கீதாவின்

பள்ளிச்சீருடை அரைக்கம்பத்தில் பறப்பதாய்

பிலாக்கணம் வைத்தாள் பிடாரி.

பிறப்புவழி நுழைத்த இரும்புத்தடியென

சுருட்டு உருமாறியதாகப்

பீதியுற்றாள் முத்துமாரி.

கண்மாய்க் கருப்பனின் அருவா முனையில்

அறுந்த ஒரு முலையிருப்பதாய்

அலறினாள் எல்லைக் காளி.

அடிவயிற்று வலி சுமந்த தீட்டுத்துணிகள்

கருவேலங்காட்டைப் பற்றவைத்துவிட்டதாய்க்

கன்னிமார்கள் மூச்சிறைக்கப் பதைத்தார்கள்.

நீதிதேவனின் கறுப்புத் துணியில்

மயக்கமருந்து தடவியிருப்பதாகத்

தயங்கியபடி சொன்னாள் ராக்காச்சி.

கனன்ற சுருட்டணைக்கக் காறித்துப்பினாள் பேச்சி-

சூல் ரத்தம் பனங்காடெல்லாம்.

மண்டியிட்டுத் தேம்பும் கருப்பனின்

கண்ணீரில் கண்மாய் தளும்பத் தொடங்கியது.

Pin It