நேற்றைக்கு முன்னோர்கள் நீரை குளத்திலும் ஏரியிலும், தடுப் பணைகளிலும் சேமித்தார்கள். இன்று குடத்திலும், பாட்டிலிலும் நாளை எதில்.. இந்த கேள்விக்கு விடை தேடுவது மட்டுமல்ல, நீரின்றி அமையாது உலகு... என்பது நாளை நீரில்லாமல் தான் நாம் வாழப்போகிறோம் ...

அதற்கான சாத்தியக் கூறுகள் கண்கள் சுருக்கி தூரப் பார்க்க தேவை இல்லை. பக்கத்திலயே இருக்கிறது என்பதனை நெத்தி பொட்டில் அடித்தார் போல் விளக்கியது பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப்பும் இணைந்து நடத்திய முந்நீர் விழவு கருத்தரங்கம். லயோலா கல்லூரியில் ஜனவரி 26ந் தெதி நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை முதல் மாலை வரை அமர்ந்து குறிப்பெடுத்து நீரியல் வல்லுனர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது இந்தக் கருத்தரங்கத்திற்கான வெற்றி மட்டுமல்ல. தண்ணீரின் தேவை குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் அனைவரும் விழிப்புடன் இருக்க முற்படுகிறார்கள் என்பதையும் உணர்த்தியது, புலப்பட்டது.   

ஆற்று நீர், கடல் நீர், குடி நீர் இந்த மூன்று விதமான தண்ணீர் வளத்தையும் வணிக மயத்தில் வீணடித்திருக்கிறோம் என்பதை பல அரிய தகவல்களுடன் பேராசிரியர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், நீரியல் வல்லுனர்கள் அனைவரும் எடுத்துரைத்தார்கள். சென்னையில் அடையாறு, கூவம், எண்ணூர் உள்ளிட்ட 33 முகத்து வாரங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. இவைகள் சீறி வரும் அலைகளின் கடல் நீரைப் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் பவ்யமாக கொண்டு போய்விடும் வேலையை செய்கிறது. ஆனால் இன்றைக்கு இந்த முகத்து வாரங்கள் சேதமடைந்து முகமின்றிக் கிடப்பது தான் உண்மை.

முட்டுக்காடு படகு சவாரி போனவர்கள் எல்லாம் ஒரு முறை அந்த முகத்துவாரத்தின் முக்கியத்துவத்தை உணராமல் இல்லை. காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்பிடிப்பு பகுதிகள் இருக்கின்றன. மாநில அரசியலில் தண்ணீர் உரிமை மறுக்கபட்டு நீதிமன்றங்கள் ஏறுவது முதல் இந்த நீர்பிடிப்புப் பகுதிகளை சரியாக பராமரிக்காததும், தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதும் உட்பட ஆற்று நீர் மாசுபட்டு பாலாய் போவது குறித்த புள்ளி விவரங்கள் ஒரு பக்கம்,தூர் வாராதது, தேசிய நதி நீர் பிரச் சினை இப்படி தேசம் தண்ணீரால் சிதைவதற்கு ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும் அரசியல் தான் முக்கிய காரணம் என்பதையும் வல்லுனர்கள் உணர்த்தாமல் இல்லை.   

கடலில் கடந்தாண்டு மட்டும் 6 லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தியிருக்கிறது. டன் கணக்கில் நிலகரியும், ஆலைக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அடர்த்தி மிகுந்து இருக்கும் காஸ்பியன், கருங்கடல், அடர்த்தி மிகுந்த கடலில் மீன் வளங்கள் குறைவாக இருந்தாலும் அவை உண்பதற்கு உகந்தது அல்ல. இந்த நிலை இங்கு உருவானால் நாளை இந்தியா போன்ற நாடுகள் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கடல் உணவுகளை அறுவடை செய்பவர்களுக்கு பேரிடியாக இருக்கும் என்று கடல் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர். கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல் வளம் பாதிப்படைவதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொரித்த மீன்களை சுடச்சுட சாப்பிடுபவர் களுக்கு கடல் நீர் மாசுபாடு குறித்த தகவல் முள்ளாய் இறங்கினாலும் கடல் நீர் மாசு என்பது மீனவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் எழுப்பியது. ஏற்கனவே கடல் உள்வாங்குதல் போன்ற இயற்கை பேரிடர்களால் குமரி பகுதி கடலுக்குள் மூழ்கிய வரலாறுகளையும் புரட்டினர் வரலாற்று பேராசிரியர்கள்.   

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃபுளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த அளவு மூன்று மடங்கு அதிகரித்த ரசாயன கனிமங்கள் தான் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிக்கும் நீராக இருக்கிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்பட்டதும் குடிக்க உகந்த நீர் இல்லாமல் போனதற்குக் காரணம் என்று சொன்ன போது அரங்கில் இருந்தவர்களுக்கு இயல்பாய்க் கை தொண்டைக்கு போனதைப் பார்க்க முடிந்தது..    

கேன் வாட்டர் முறைகேடுகள் குறித்த விளக்கம் உமிழ் நீர் இறக்கி எத்தகைய மோசமான நீரைத் தான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று நாம் குடித்துக்கொண்டிருக் கிறோமா என்று சிந்திக்கவும் வைத்தது.மாசுபட்ட குடிநீரினால் ஏற்படக் கூடிய விளைவுகள் சுவாச நோய் ,ரத்த சோகை,பற்களில் கறை, எலும்பு நோய்கள், சீறு நீரகக் கற்கள் போன்ற உடல் சார்ந்த பாதிப்பையும், உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பது அனைவருக்குமான எச்சரிக்கை மணியாக இருந்தது. சுற்றுச்சூழல் சார்ந்தும் பல மாற்றங்கள் இருப்பதை அறிய பல நோய்கள் குறித்த அறி குறிகள் வாழ்வியல் மாற்றங்களால் தொடர்ந்து அரங்கேறுவதும் சர்க்கரை நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றின் பட்டியலில் இந்தியா போட்டி போட்டு முன்னேறுவதையும் உணர்த்தினார்கள்.   

நீர் மேலாண்மையோடு இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டது.. குறைந்த தண்ணீரில் விவசாயம், இயற்கை உரங்கள் பயன்படுத்துவது என்று இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன்னெடுத்து வைத்தனர். இயற்கை விவசாயத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுக்கும் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார், பாமயன் ஆகியோர் விவசாயம் மாற்றங்களை நோக்கி என்பதை எளிமையாக புரிய வைத்தனர். நீரோட்ட பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டு நாகரிகத்தை உணர்த்தியது அந்த காலம். நீரின் அவசியம் அறிந்தும் அலட் சியப்படுத்துவது நீரோட்டங்கள் எல்லாம் நிலங்களாக மட்டுமல்ல பாலைகளாகவும் மாறப் போகிறது என்பது தான் நிதர்சனம். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் லால்மோகன், கடல் ஆரய்ச்சியாளர் ஒடிசா பாலு, பேராசிரியர் ஜனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

கருத்தரங்கைத் தொடர்ந்து மாலையில் மதுரை புத்தர் கலை குழு சார்பில் நடைபெற்ற பறை ஆட்டம் பட்டையை கிளப்பியது. ஆண்களுக்கு நிகராகத் தொடர்ந்து பெண்களும் பறை ஆட்டங் களில் பல சாகசங்களையும் நிகழ்த்திக் காண் பித்தனர். பின்னணி பாடகி மகிழினி மணிமாறன் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஏற்றிய சுதி பறை சத்தித்திற்கு மேலேயும் நிகழ்ச்சி இறுதி வரை ஒலித்தது. காலையிலிருந்து செவிகளையும், கண்களையும் கட்டிப்போட வைத்த இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற தமிழர் பாரம்பரிய உணவு திருவிழாவில் பானகம், வாளைத்தண்டுச்சாறு, தினைப்பொங்கல், மாப்பிள்ளை சம்பா சாம்பார், காய்கறி சாதம், சாமைச் சோறுவரகு நிலக்கடலை சட்னி, கத்திரிக் காய் மசியல், சோள தோசை, நிலக்கடலை சட்னி, நாட்டுக் கோழி வறுவல், குதிரை வாலி தயிர்ச்சோறு ஆகியவை நாவிற்கு சுவையூட்டியது.

Pin It