இசக்கியம்மாள்:

பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியும் இவள் ஆன்மாக்குள் ஒரு பாடலை எழுதிப் போய்க் கொண்டிருந்தது. சடசடவென பெருஞ்சத்தம் எழுப்பி அது பெய்ததில் இவளது தனிமை கலைந்து போன ஒரு உணர்வு மேலோங்கிற்று.அரிசி போட்ட பின்னான குதூகலத்தில் உலை கொதித்து சத்தம் போட்டபடி இருக்கிறது. 

இவளுக்குச் சத்தமாய் பாட வேண்டும் போலிருந்தது. சின்ன வயசில் இவளுக்கு ரஜினி காந்த் என்றால் மிகவும் பிடிக்கும். ரஜினி மாதிரி ஒருவனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெருத்த ஆசை இருந்தது. தலையை ஒரு பக்கமாய் வாரி. மூக்கில் ஒரு தழும்புடன். இப்படி மழைபெய்யும் காலங்களில் பால்ய பருவத்தில் ”ஆகாய கங்கை பூந்தேன் மழை சூடி” என்று பாடுவாள். அப்போது அவள் கண்கள் பெரிதும் மூடியே இருக்கும். ரஜினி மாதிரியான முகத்துடன் ஒருவன் இவளை நோக்கிப் பாட இவள் ஸ்ரீதேவி மாதிரியே வெள்ளை உடை அணிந்து வாயசைப்பாள். 

ஜாதகம் பார்த்து இவளது அப்பா தேர்ந்தெடுத்த சங்கரலிங்கம் ஏறிய நெற்றியும் மூக்குக் கண்ணாடியுமாய் வந்த போது தனது இஷ்டமின்மையைத் தெரிவிக்க தைரியமில்லாமல் கல்யாணம் செய்து கொண்டாள். பிறகான தருணங்களில் சத்தமாகப் பாடுவதை நிறுத்திக் கொண்டாள். அநாவசியமாக யாருடனும் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். ஜன்னலோர மாய் ஒரு சிட்டுக்குருவியின் வருகை இவளுக்கு பிரம்மிப்பூட்டியது. சங்கரலிங்கத்தின் வீட்டுப் புழக்கடை இவளின் தர்பாரானது. 

அப்போது தான் வாசலில் கோலம் போட்ட இடத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்ன மாங்கன்று இருந்ததைக் கண்டுப்பிடித்தாள். அதை வாகாக தண்ணீர் ஊற்றி அரைமணி நேரத்தில் வேரோடு தோண்டி புழக்கடையில் பாத்திரம் தேய்க்கும் இடத்துக்குப் பக்கமாய் குழி தோண்டி வைத்தாள். பாத்திரம் விளக்கும் இடத்திலிருந்து ஒரு வேப்பங்கம்பை வைத்து மாங்கன்றுவை நோக்கி தண்ணீர் போகுமாறு செய்தாள். பின்னர் அவளாகவே அந்தப் பாதையைப் பார்த்து திருப்தியாகப் புன்னகைத்துக் கொண்டாள்.  

மறுநாள் அந்த கன்று கொஞ்சம் தெவங்கி நின்றது. அன்று முழுக்க இவள் சாப்பிடவில்லை. அவள் சாப்பிடாதது கூட வீட்டில் யாருக்கும் பொருட்டில்லை என்று அன்று இரவு தான் தோன்றிற்று. அவள் சாப்பிடாதது கூட யாருக்கும் தெரியவில்லை என்பது தான் நிஜம். சங்கரலிங்கம் அவளது வற்றிய வயிறைப் பற்றி எதுவும் நினைத்துக் கூடப் பார்க்காமல் அன்றிரவு இவளைப் புணர்ந்தான். வெறும் மரக்கட்டையாய் ஒரு பிணத்துக்கு ஒப்பானவளை ஒரு சடங்கு போல் புணர்வது எவ்வாறு சாத்தியமாகிறது என்பது புரியாமல் போனது..

காசு வாங்காமல் பாலியியல் தொழில் செய்வது போல் உணர்ந்தாள். மறுநாள் அந்தக் கன்று கொஞ்சம் நிமிர்ந்திருந்தது. தனக்காகவே வேர் மண்ணோடு புரண்டால் தான் அது சாத்தியம் என்பது தெரிந்தவளாய் இவள் அந்த இடத்து மண்ணை வெகுநேரமாக அழுத்தினபடி இருந்தாள்.   

நித்யலெஷ்மி:

பட்பட்டென தாவும் ஒளியில் தீப்பெட்டிக்குள் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சியின் இருப்பை உணர்ந்தாள் இவள். ஒவ்வொரு மின்மினிப் பூச்சிக்கென்று என்ன பெயர் இருக்கிறது என்று யோசித்தாள். லெக்ஷ்மி, தாரிணி, விஜயா, தெருவெங்கும் இருள் படர்ந்து கிடக்க கறுப்பு காகிதம் மேலே வெளிச்சக் கோடாய் ஒரு வாகனத்தின் ஒளி கடந்து போனது. மனதில் ஒரு குழந்தையின் அழுகுரல் தோன்றி அது மனதை விட்டு வெளியே இவளது இரு கண்கள் வழியாய் பெருகலாயிற்று.   

அறையெங்கும் அந்தக் குழந்தையின் கதறல் எதிரொலிக்க இவள் தாங்க முடியாது காதுகளைப் பொத்திக் கொண்டு ஜன்னலைத் திறக்கிறாள். குழந்தையின் அழுகுரல் இப்போது இருட்டின சாலையினுள் அலைய ஆரம்பித்தது. இவளுக்கு மூடிய காதுகளைத் திறக்க தைரியமில்லை. அடர்ந்த வானத்தில் எங்கிருந்தோ ஒரு நம்பிக்கை வந்து சேர்ந்தது போல அந்த சிட்டுக்குருவி வந்து அந்த குழந்தையின் அழுகையை அள்ளிக் கொண்டது. மார்முட்டிக் கிடக்கும் பால் சிதறி வெடிப்பது போலிருந்தது இவளுக்கு. அந்த அழுகை அவளிலிருந்து பிறந்தது என்பது புரிய கண்களை பெரிதாகத் திறந்து பார்த்தாள். இருட்டினுள் சிட்டுக்குருவி மேலே மேலே பறக்க நினைத்து குழந்தையின் அழுகையோடு கீழே விழுகிறது.   

க்றீச்

இவள் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. தேம்பித் தேம்பி அழுதாள். ஜன்னலை மூடி விட்டு வெளியே கதவைத் திறந்து கொண்டு ஓட எத்தனிக்கிறாள். கதவின் பூட்டு திறப்பதாயில்லை. ஓங்கி கையை வைத்து அழுத்துகிறாள் இவள்.   

“பலனில்லை நித்யா. நான் பல காலமாய் உள்ளவன். அதனால் என்னை நீ உடைத்து விட முடியாது” என்றது பூட்டு. திடீரென அவ்வாறே அவளது கர்ப்பப்பையும் எதிரொலிப்பது போலிருந்தது. மிகுந்த பலத்தோடு அவள் பூட்டை ஒரு இரும்புக்கம்பியால் உடைக்க முயற்சித்தாள். அந்தக் கம்பி இரண்டாய்த் தெறித்தது.   

“நீ பட்ட அவமானங்களை மறந்து விட்டாயா? ஒரு குழந்தையின் அழுகையை மட்டும் தான் நீ பிரசவிக்க இயலும். அழாதே உன்னைப்பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? உன் கணவன் வந்து விடும் நேரம் இது!   

அவள் சுவரோடு சுவராக பதுங்கி நின்றாள். இம்மியளவு கூடவும் இவளோ இவளின் நிழலோ இருட்டில் வேறுபட்டுத் தெரியவில்லை. ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அவசரமாக இருட்டில் தட்டுத்தடுமாறி ஓடி ஜன்னலைத் திறக்கிறாள். அந்த சிட்டுக்குருவி ஜன்னலின் மறுபுறம் பறந்த படியே என்னால் உயரே பறக்க முடியவில்லை. கீழே விழுந்ததில் காலில் அடியும் கூட.. கொஞ்சம் தண்ணீர் தாயேன் “ என்றது.   

கரோலினா:

மண்டியிட்டு ஜெபம் செய்து ஆமென் என்றபடி நெஞ்சில் சிலுவை போட்டுக் கொண்ட பின் கரோலின் எழுந்தாள். தனது இருக்கையில் அமர்ந்தபடி “பரமண்டலங்களில் உள்ள பிதாவே இந்த அணு உலை இல்லாமல் ஆகட்டும். “ என்றபடி ஜெபம் செய்தாள். காரணமே இல்லாமல் அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.   

ஒரே நிமிடத்தில் இறுக்கமாகி ”அழ மாட்டேன். .அழக் கூடாது கர்த்தாவே” என்று பிராயாசைப் பட்டு கண்ணீரை கையில் இருந்த கைக்குட்டை யால் துடைத்தாள். அந்தக் கைக் குட்டையின் ஓரமாய்க் கமலி போட்டுக் கொடுத்த பூக்கூடை எம்ப்ட்ராயிடரி பளிச்சிட்டது. அவளுக்கு திடீரென கமலி ஞாபகம் வர, அந்த இடத்தை வைத்து கன்னத்தை இறுகத் துடைத்தாள்.

“...விடக் கூடாது? கமலிஎன்ன மாதிரி வலியோட சாவக் கூடாது. நீ எமிலி டிக்கன்சன் படிச்சிருக்கே இல்லியோ? சாவு ஒரு பூச்சியின் ரீங்காரமா வரணும். ரத்தம் வடிய வடிய வரக் கூடாது..”   

கமலியின் நாக்கில் புண்கள் தெறித்திருந்தன. வாய்ப்புண் என்று மணத்தக்காளிக்கீரையையும் பழத்தையும் தோட்டத்திலிருந்து பறித்து சாப்பிட்டு வந்தாள். எதற்கும் கட்டுப்பிடியாகாமல் பொத்துப் பொத்துப் புண் தோன்ற டாக்டர் “பயாப்சி” என்று எழுதிக் கொடுத்தார். பதினைந்தே நாட்களில் புற்று நோய் என்பவன் கண்டெறியப்பட்டான். காரணமாய் அவள் வசிக்கும் பகுதியில் இருந்த அணுமின் நிலையம் கைக்காட்டப்பட்டது.

“தைராயிடும் வருமாம் கரோஞ்கையால நாகர்கோவில் பக்கம் தோரியம் அள்ளுறாங்களாம். “   

ஆமா கமலி. கேள்விப்பட்டிருக்கேன்  

“என்னத்த கேள்விப்பட்டா என்ன? நம்ம சாவுக்கு நாம காரணம் இல்ல. நமக்காக இருக்கிறதா சொல்லப்படுற அரசாங்கம் காரணாமா இருக்கு.. நாம தேர்ந்தெடுக்கிற ஜனநாயகம் இதானா கரோ?  

ஒரு கனத்த மௌனம் இருவரையும் படர்ந்து போனதை கரோலின் அறிந்திருந்தாள். தொடர்ந்து கமலி அணு உலைகளுக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்து எழுதிய கட்டுரை களுக்காக கைது செய்யப்பட்டாள். புற்று நோய்க்கான சிகிச்சை சரிவரத் தரப்படாமல் இறுதியில் பேச முடியாத நிலையில் அரசாங்க மருத்துவமனையில் இருந்த போது கரோலின் பார்க்கச் சென்றிருந்தாள்.  

அவளது படுக்கையின் மூத்திர வாடை மிக அடர்த்தியாய் இருந்தது. இவளைப் பார்த்ததும் அவளது கருவிழி மட்டும் அசைந்தது. படுக்கையை சுற்றிப் பறந்த ஈயையே அது தொடர்ந்து பார்த்தபடியே இருந்தது.   

இசக்கியம்மாள்:

அசடு, முட்டாள் ,அறிவு கெட்டவசங்கர லிங்கலம் இவளைக் கூப்பிடும் வார்த்தைகள். ஆனால்அந்த மாமரத்துக்கு இவள் சங்கர் என்று பெயர் வைத்தாள். ஒருவேளை தப்பித் தவறி கனவில் உளறினால் கூட சங்கரலிங்கத்தின் பெயரில் பாதி இருப்பதால் யாரும் தவறாக எடுத் துக் கொள்ள மாட்டார்கள் .சாயங்கால நேரங்களில் சங்கருக்கு ”ஆகாய கங்கை பாடிக் காட்டி னாள். வெகு காலத்துக்குப் பிறகு கண்ணை மூடினால் வெள்ளை உடை அணிந்து ஸ்ரீதேவி பாடினார்.   

சங்கரலிங்கத்துக்கு இவள் சமீபமாய் சந்தோஷமாய் இருப்பது மட்டும் கண்ணில் பட்டது. “ஏய் அறிவு கெட்டவளே சந்தோஷமா இருக்கியே. என்ன விசேஷம்”  

“அதான் அந்த சங்கரு ரெண்டு கொப்பு”

பளாரென அறை விழுந்தது .”பேரையா சொல்லுத நாய. செத்த நாய் ரெண்டு கொப்பா? புத்தி பிசகி சாவுதுகள தலைல கட்டி வச்சிருக்கு. நிம்மதி வேணாம் மனுஷனுக்கு?”

பிறகாய்த் தான் தெரிந்தது. அந்த நிம்மதியின் பெயர் சரோஜா என்று. தைரியமாய் கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டுக்கே கூட்டி வந்தான் சங்கரலிங்கம். யாருமே இவளுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவளும் யாருடனும் எதுவும் பேசாமல் புழக்கடையில் மாமரத்தின் வேர்களில் உட்கார்ந்திருந்தாள்.   

மாமரம் அதன் வேரைப் பரப்பித் தன் தோளில் இவளைச் சாய்த்துக் கொண்டது. ”அழாத இசக்கி”   

தூக்கு வாரிப்போட்டாற் போல இவள் அதன் வேரைப் பற்றிக் கொண்டாள். ”என்னிடமா பேசின சங்கரு? எனக்கு என் பெயர் மறந்து விட்டது பாரேன்”  

“இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. எந்த உறவும் எப்போதும் நம் கூடவே வராது. இதை புரிந்து கொண்டாயானால் உனக்கு ஏமாற்றம் கிடையாது. கண்ணீர் கிடையாது. வலி கிடையாது”

 சங்கரலிங்கத்திடம் குற்றவுணர்வே இல்லை. சரோஜா ஊருக்குப் போன நாட்களில் இவளின் அறைக்குப் படுக்க வந்தான். சரோஜா பிள்ளைப் பெற ஊருக்குப் போன மூன்று மாதங்களில் அவன் இவளிடம் மிகுந்த அன்பு செலுத்து பவனாய் இருந்தான். ஒரு நடுஇரவின் நிசப்தத்தில் புணர்ச்சிக்குப் பிறகான நிசப்தத்தில் இவள்“செந்தில்” என்றாள் முனங்கலாய். அவன் திடுக் கிட்டுக் கோரமாய் கத்தி, அடித்துப் போட்டு வெளியே கிளம்பினான்.   

அந்த நடுநிசியில் இவள் மாமர மூட்டுக்குள் உட்கார்ந்திருந்தாள். மாமர இலைகள் இவளை அள்ளிக் கொண்டன. இவள் அந்த ஸ்பரிசத்தில் நனைந்த படி உரக்க சிரித்தபடி இருந்தாள்.   

நித்யலெஷ்மி:

அந்தச் சிட்டுக்குருவி பல நாட்கள் இவளுடனே தான் இருந்தது. அந்த ஜன்னல் தாண்டி இவளும் வேறெங்கும் சென்றபாடில்லை. சாப்பிடும் போது கூட பகிர்ந்து சாப்பிட்டு அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். எனினும் இவளால் ஜன்னல் கம்பி தாண்டி சிட்டுக்குருவியைத் தொட முடிந்ததே இல்லை.   

ஒரு நாள் இவள் கலகலவென சிரித்ததை பார்த்தபடியே இருந்த சிட்டுக்குருவி “நீ குருவியாய் பிறந்திருந்தால் உன்னை நான் திருமணம் செய்திருப்பேன். நாம் பல தேசங்கள் பறந் திருக்கலாம். பல கடல்களை நம் சிறகால் கடந்திருக்கலாம்” என்றது.   

“நீயேன் மனிதனாகப் பிறக்காது போனாய் ” என்றாள் இவள்.

சிட்டுக்குருவி பதில் பேசவில்லை. அதற்குப் பிறகான நாட்களில் அது இவளின் ஜன்னல் பக்கம் வருவதே இல்லை. ஒரு ராஜகுமாரனுக்காக காத்திருந்த ராஜகுமாரி போலான மனநிலையில் இருந்தாள் இவள். ஒரு நாள் திடீரென இவள் முன் தோன்றி “இனி நான் வருவது சங்கடம்“என்றது. இவள் கீழே தவறிய குழந்தையின் அழுகையைப் போலவே தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.   

“அழுது என்ன பயன்? மூன்றாவது தெருவில் செல்போன் ட்வர் வந்து விட்டது. நீ எனக்காக அழுகிறாய். நான் எங்களுக்காக அழுகிறேன்”  

“என் பிரிவு உனக்கு பிரச்சனையில்லை. அப்படித் தானே?”  

சிட்டுக்குருவி மௌனித்திருந்தது. வெகு நேரம் அவர்களிருவரும் அப்படியே உறைந்தாற் போலிருந்தார்கள்.  

சிட்டுக்குருவி ஏதும் பேசாமல் இருளினுள் மறைந்தது. தன் வயிற்றினுள் பிறந்த ஒரு குழந்தை யின் அழுகை தன்னை விட்டு அயல்தூரம் போவதை இவள் உணர்ந்தாள். அதன்பிறகாய் அவள் அந்த ஜன்னலைத் திறப்பதேயில்லை.

கரோலின்:

ராட்சனாய் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டி ருந்தது. அந்த இரவில் இவள் இப்படி கமலியின் நினைவுகளோடு அலைவாள் என்று யாரும் அறிந் திருக்க மாட்டார்கள். கைக்குள் ஜெபமாலையை வைத்துக் கொண்டு கடல் அலைகளில் காலை நனைத்துக் கொண்டு நடந்த போது கமலி கையைப் பிடித்துக் கொண்டாற் போலிருந்தது.

”கமலி. நாம் இருவரும் மட்டும் தான் இப்போது இங்கிருக்கிறோம் ”

“ ஒரு நண்பனோடு. ஒரு பகைவனோடு.”

இவள் அமைதியாய் இருக்க கமலி” பொறப்பு லருந்தே கால சுத்தி கடல்.வேறேன்ன வாழ்க்கை நமக்கு? காத்து, மீன், அலையத் தவிர?என்றாள்.

இவள் பதிலேதும் சொல்லாமல் கடலுக்குள் பாய்ந்து சகல மூலைகளுள் உறைந்தாள். ஒரு ராட்சசனைப் போல் எப்போது அந்த அணுமின் நிலையம் கடல்புரத்தில் வந்ததென இவளுக்கு ஞாபகமில்லை.கமலியின் மரணத்தைப் போலவே. இவள் கைகள் காற்றில் துழாவி கமலியைத் தேடினபடி இருந்தது. அவளில்லாத வெற்றிடம் இரைச்சலாக மட்டுமே இருந்தது.

“இவனை அழித்து விடு, கரோ! உனக்கு ஜார்ஜை நினைவிருக்கிறதா? எப்படி உன்னால் மறக்க முடியும்? நீ அவனைக் காதலிக்கவில்லை என்றதும் கடலில் விழுந்து பதினெட்டு வயதில் செத்தானே! அவனது ஆன்மாவை நினைத்துக் கொள். அது எப்படி அமைதியாய் அலையும்? அது போலத் தானே என் ஆன்மாவும்.”

நினைவுகள் புரண்டு ஜார்ஜ் கரை ஒதுங்கி னான். கடல் பேரிச்சலோடு அந்த இரவிலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அதன் தனிமை துல்லியமாய் புரிந்ததொரு சம்பாஷணை அலை களிடம் மிஞ்சியிருந்தது. தூரத்தில் ராணுவம் தெரிந்தது. இவள் மேலே நடக்காமல் ஸ்தம்பித்து நின்றாள். கால்களை சுற்றிச் சுற்றி ஒரு நாயைப் போல அலைகள் கவிழ்ந்தன. ”நிற்காதே கரோ. போ. இந்தக் கடல் உனது. இந்தக் காற்று, இந்த அலை உனது. இந்த ராட்சசனை இயங்க விடாதே. நம் ஊரில் என்னைப் போல் பலர் மூத்திர வாடை சூழ்ந்த படுக்கையோடு சாக விடாதே..”

கமலி இவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அந்த இயந்திரத்தை இவள் உடலில் பொருத்தினாள். காலுக்கடியில் கடலை ஒரு கோப்பையாய் இப்போது உணர்ந்தாள். அந்த ராட்சசனை நோக்கி ஓடினாள். காற்றை விடவும் வேகமாய். அலையை விடவும் வேகமாய். ராட்சசனை நெருங்கி மேலே முட்டி சிதறினாள். நெருப்புப் பிழம்பாய் சிதறியவளின் ஓட்டம் நிற்கவில்லை. அலறல்கள் ஏதுமின்றி அந்த நடுநிசி இருளில் நெருப்புத் துகளாய் சிதறி கடலில் கலந்தபடி இருந்தாள் இவள்.

Pin It