அகில இந்திய அளவில் சமகால பெண்ணியச் சிந்தனையாளர்களுக்கு வ .கீதாவிற்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. பூவுலகு பெண்கள் சிறப்பிதழுக்கு சுற்றுசூழல் பெண்ணியம், பெண்களின் சுற்றுசூழல் போராட்டங்கள் குறித்து நடந்த விரிவான உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

சுற்றுச்சூழல்-பெண்ணியம் (eco-feminism) மேலை நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் சமீபத்திய கூடங்குள அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தவிர பெரிய இயக்கமாக ஏன் இல்லை?

சுற்றுச்சூழல் என்பது இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒற்றைப் பரிணாம கருத்தாக்கமாக, போராட்டக்களமாக இருந்ததில்லை. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் என்று மட்டுமில் லாமல் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் காலம் காலமாக இருந்து வந்துள்ள உறவை, அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உறவைத் தக்க வைத்துக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டே சூழலியல் போராட்டங்கள் இங்கு உருவாகி உள்ளன. இயற்கை உலகுடன் அன்றாடம் உறவு கொண்டு அவற்றின் மீது வினை ஆற்றி அவற்றின் போக்குகளை உள்வாங்கிச் செயல்படும் உழைக்கும் மக்களான ஆதிவாசிகள் தலித்துகள் இன்னபிற ஒடுக்கப்பட்ட சமுதாயங் கள் -இவர்களுக்கு வாய்த்துள்ள அறிவும் அவர்கள் முன்னிறுத்தும் உரிமை போராட் டங்களும்தான் சூழலியல் போராட்டங்களாக பரிணமித்துள்ளன.

சூழல் என்பது வாழ்வாதாரம் சார்ந்த பண் பாடோடு இணைந்த ஒரு விஷயமாக இங்கு இருக்கிறது. சுற்றுச்சூழல்-பெண்ணியம் என்கிற கருத்தாக்கம் இங்கு இல்லாவிட்டாலும் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மூல வளங்களை எடுத்து தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட மூலதனங்களை கொண்டு எழுப்பப்படும் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களில் பெண்களே முன்னின்று போராடுகிறார்கள். பாஸ்கோ, நியாம்காரி, கூடங்குளம் போன்ற போராட்டங்களில் பெண்கள் முன்ணனி யில் நின்று போராடுவதை நாம் பார்க் கிறோம். இதுபோன்ற போராட் டங்களில் தாய்மைக்குரிய கூறுகளை முன்வைத்து அவர்கள் போராடுகிறார்கள்.

தாய்மைக்குரிய கூறுகளை முன்வைத்துப் போராடுவதை பாரம்பரிய பெண்ணிய அமைப்புகள் ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும் இல்லையா?

தாய்மை குறித்து ஓர் ஆண் பேசுவதுதான் அடிமைத்தனத்தின் கூறு என்று சொல்லலாம். ஒரு பெண் தாய்மையின் மொழியை பேசும் போது அது மிக வலிமையான அரசியல் கூற்றாக இருக்கும். ஆண்கள் பெண்களுக்குத் தாய்மை ஒன்றே பேறு என்று சொல்லும் போது மற்ற உரிமைகளை மறுக்கும் தன்மை இருக்கிறது. ஆனால் தாய்மையை அனுபவிக்கும் பெண்ணுக்கு அதுகுறித்துக் கூற அதிக உரிமை உண்டு. அந்த வலியை அவள் மட்டுமே உணர்கிறாள். ஆகவே போராட்டத்துடன் தாய்மைக்கூறுகளை இணைத்துப் பெண்கள் பேசுகையில் பொது வெளியில் அவை தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாய் இருக்கிறது. கூடங்குளத்தில் பெண்கள் ‘எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்?” என்று கேள்வியெழுப்பும்போது நாம் அதில் வழக்கமான பெண்ணியத் தளத்தில் யோசித்து தாய்மை குறித்துப் பெண்கள் பேசுவது கூடாது என்று மறுதலித்துவிட முடியாது. தாய்மைக்குரிய கூறுகளை முன்வைத்துப் போராடுவது உலக மெங்கும் ஒரு முக்கிய போராட்ட வடிவமாக இருந்திருக்கிறது. 1980களில் ஜேவிபிக்கு எதிரான அரசு வன்முறையில் காணாமல் போன அல்லது இறந்து போன ஆண்களின், குழந்தைகளின் மனைவிகளும் தாய்மார்களும் தொடங்கிய mother’s front , அர்ஜன்டைனாவில் 1970களில் நடந்த உள்நாட்டு போரில் காணாமல் போன குழந்தைகளின் தாய்மார்கள் தொடங்கிய Mothers of the Plaza de Mayo இயக்கம் வரை போருக்கு எதிரான இயக்கங்களில் பெண்கள் தீவிரமாக பணிபுரிந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறோம். சிஸ்டர்ஸ் ஆப் காஷ்மீர் என்று இங்கேயே கூட நடந்திருக்கிறது.

வங்காளத்தில் தேபாகா இயக்கத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. கொல்கத்தாவில் பட்டினிச் சாவுகள் நடந்த போது பெண்கள்தான் வீதிக்கு வந்து கஞ்சி தயார் செய்தார்கள். வெகுநாட்கள் பட்டினி கிடந்து வருபவர்கள் கொஞ்சம் கடினமாக எதையாவது சாப்பிட்டாலும் இறந்துவிடுவார்கள். அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் பதமாக கஞ்சி தயாரிக்க பெண்களுக்குதான் தெரிந்திருக்கும். பெண்களின் பராமரிப்புப் பண்பு முக்கியமான போராட்ட உத்தியாக வெளிப்பட்ட இடம் அது.

தன்னை அழித்தாவது வேறொன்றைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வருடக்கணக்கில் உண்ணா விரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளாவின் அமைதிப் போராட்டத்தில் தாய்மையின் கூறுகள் இருக்கின்றன. போராடும் மக்கள் தாம் சார்ந் திருக்கும் மலை, ஆறு, கடல் உள்ளிட்ட இயற்கை உலகத்தைத் தாயாக பாவிக்கும் போக்கை பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஆறு, கடல், மலை சார்ந்து போராடும் பெண்கள், உயிரை காக்கும் வளர்க்கும் பராமரிக்கும் ஆற்றலுடன் அடையாளப்படுத்திக்கொள்வதை பார்க்க முடிகிறது.

கூடங்குளம் போராட்டத்திலும் பெண்கள் தாய்மையின் கூறுகளைத்தான் முன்வைத்து போராடுகிறார்களே?

இத்தனைக்கும் ஆண்களுக்கு இருக்கும் அளவுக்கு பெண்களுக்குக் கடலோடு நேரடியான தொடர்பு இருப்பதில்லை. ஆண்களைப் போல பெண்கள் கடலுக்குள் இறங்குவதில்லை. கூடங்குளம் போராட்டம் பல விதங்களில் எனக்கு 1980களில் நடந்த க்ரீன்ஹாம் காமன் பெண்கள் அமைதி முகாம் இயக்கத்தை நினைவுப்படுத்துகிறது.

அமெரிக்கா-ரஷ்யா பனிப்போரின் விளை வாக இங்கிலாந்தில் ஓர் அணுஆயுத ஏவுகணை நிறுவப் பட்ட போது அதற்கு எதிராக சுமார் 30 ஆயிரம் பெண்கள் திரண்டு முகாம் அமைத்து எதிர்த் தார்கள். என்ன செய் தாலும் அவர்களை அப்புறப்படுத்த முடிய வில்லை. குழந்தை களோடு அவர்கள் நடத்திய இந்த அமைதிப் போராட் டத்தின் குறியீடுகள் வெவ்வேறு வடிவங்களில் கூடங்குளம் போராட்டத்திலும் பிரதிபலிக்கிறது. நாங்கள் வாழ்வின் பக்கம் நிற்கிறோம், நீங்கள் மரணத்தின் பக்கம் நிற்கிறீர்கள் என்கிற செய்தியைச் சொல்ல அவர்கள் முகாம்களில் குழந்தைகளின் துணிகளை உலர்த்துவது, சானிடரி நாப்கின்களை தொங்கவிடுவது என்று பல குறியீடுகளை பயன்படுத்தினார்கள்.

சுமார் 19 ஆண்டு காலம் இந்த போராட்டம் நீடித்தது. அந்த ஏவுகணை அப்புறப்படுத்தப்பட்டப் பிறகும் முகாம் கலைக்கப்படவில்லை. கூடங்குளத்தில் இது போன்ற பல குறியீடுகளைச் சொல்லலாம். இரண்டு போராட்டங்களும் சொல்லும் சேதி ஒன்றுதான்: வாழ்க்கை தொடர வேண்டும் என்று விரும்புகிறோம் என்பதுதான். இந்தப் போராட்டங்களின் முக்கியமான முழக்கம் இதுதான் ‘நீங்கள் மரணத்தின் பக்கம். நாங்கள் வாழ்க்கையின் பக்கம்’. க்ரீன்ஹாம் காமன் பெண்கள் அமைதி முகாம் பெண்கள் சிலந்தி வலை போன்ற வடிவங்களை மனிதர்களைக் கொண்டே உருவாக்கினார்கள். அங்கே சிலந்தியைப் பெண் தெய்வங்களுடன் பொருத்திப் பார்க்கும் வழக்கம் இருந்தது. பழைய நாகரீகங் களில் சிலந்தி வலை ஒரு முக்கியமான குறியீடாக இருந்திருக்கிறது. ஆகவே பெண்களின் சக்தியை உணர்த்தும் வகையில் சிலந்தி வலை போன்ற பல வடிவங்களில் தங்கள் உடல்களை அமைத்து போராட்டங்களை நடத்தினார்கள்.

ஆண்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள் என்று உயிரை அழிக்கக்குடிய குறியீடுகளை முன்வைத்த போது சிலந்தி வலை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வின்,ஒன்றில்லாமல் மற்றொன் றில்லை என்கிற தத்துவத்தின் குறியீடாக இருக்கிறது. கூடங்குளத்திலும் பெண்களின் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு விதங்களில் இருந்தன. மண்ணுக்குள் புதைத்துக்கொள்வது, கல்லறை நுழைவுப் போராட்டம், கடல் நீரில் மனிதச் சங்கிலி என்று கூடங்குளத்தின் போராட்டங்களுக்கும் க்ரீன்ஹாம் போராட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நான் பார்க்கிறேன். கூடங்குளம் போராட்டம் ஒரு ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை சூழல் பிரச்சனைகளில் போதுமான அளவு இடதுசாரி இயக்கங்கள் அக்கறை காட்டுவதில்லை சர்வதேச அளவில் left ecology போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் வந்துவிட்டன. இங்கு இடதுசாரி இயக்கங்கள் அக்கறை காட்டவில்லை என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய அறிவு, புரிதல் உள்நாட்டு விவசாயத்தில் அனுபவம் போன்ற பல கூறுகளை வைத்துப் பார்க்கும் போது சட்டிஸ்கர் போன்ற பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சரியான புரிதலோடு கையாளக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இனியும் இடதுசாரி கட்சிகள் எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காமல் இருக்க முடியாது. சூழலை ஒதுக்கி வைத்துவிட்டு முதலாளித்துவ எதிர்ப்பு பேசுவது இனி சாத்தியமில்லை. முதலாளித்துவச் சுரண்டல் என்பது இன்று இயற்கையோடு இணைந்து வாழும் ஆதிவாசிகள், தலித் மக்களைத் தூக்கி எறிந்து தொழில்நுட்பத்தின் உதவியோடு அவர்களின் வளங்களை சுரண்டுவதாக இருக்கிறது. இதற்கு ஆதிக்க சாதிகளும் ஆதரவாக இருக்கின்றன.

பொதுவாக சூழல் குறித்துப் பேசுவது ஒரு மேல்தட்டுவர்க்க பிரச்னையாகவே பார்க்கப்படுகிறதே? உழைக்கும் மக்களின் குறிப்பாக மண்ணோடு கடலோடு காடோடு தொடர் புடைய ஆதிவாசிகளின் வாழ்வில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களின் தேவையை போதுமான அளவு சூழலிய லாளர்கள் உணரவில்லை பல முக்கியப் பிரச்னைகளில் இந்திய சூழலியலாளர்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

உதாரணமாக இயற்கை விவசாயம் பற்றி பேசும் போது அது தலித்துகளை எந்த இடத்தில் வைத்திருக்கப் போகிறது போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டியது அவசியம். விவசாய உற்பத்தி உறவுகளை எந்த நிலையில் புரிந்து கொள்ளப் போகிறோம்? தீண்டாமையை கைப்பிடித்த விவசாயத்தைத்தான் நாம் தொடரப் போகி றோமா? சமூக உறவுகளை மாற்றாமல் இயற்கை விவசாயம் பற்றிப் பேசினால் அது பிரச்னைக் குரியதுதான். உழைக்கும் மக்களுக்கு அதற்குரிய சன்மானத்தை கொடுக்காமல் மாற்றம் பற்றி எப்படி பேசுவது?

இன்று வரையில் கழிவுகளை அகற்றுவது பற்றி இந்திய சூழலியலாளர்கள் அதிகம் பேசாததற்கு, யோசிக்காததற்கு என்ன காரணம்? அது மிகப்பெரிய சூழலியல் பிரச்னை. ஆனால் இன்று வரையில் அது ஒரு சாதித் தொழி லாகவே இருக்கிறது. கிராமம் ஆனாலும் நகரம் ஆனாலும் நம் கழிவுகளுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை ஏன் வெளிப்படையாக பேசுவதில்லை? தொழில் நுட்பத்தீர்வை முன்வைப்பதைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

சூழலியலாளர்கள் இது பற்றி பேசாததற்கு தீண்டாமைப் பற்றியும் பேச வேண்டியிருக்கும் என்பதுதானே காரணமாக இருக்க முடியும்? இங்கு உண்மையிலேயே சில பிரச்னைகள் இருக்கின்றன. சூழலை மாசு படுத்தும் பல தொழிற்சாலைகளில் தலித்துகள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கான மாற்று என்ன? தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு சூழலியல் தீர்வும் சரியான தீர்வாக இருக்க முடியாது. இதை இந்திய சூழலியலாளர்களும் உணர வேண்டும்.

சந்திப்பு: கவின் மலர்,

கவிதா முரளிதரன்.

Pin It