தமிழில் சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த எழுத்துக் களை பல காலமாக படைத்து வரும் அனுபவம் மிக்க இருவரின் கூட்டு முயற்சியில் விளைந்தது இப் புத்தகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் தியடோர் பாஸ்கரன், The Hindu தினசரியின் குழந்தைகளுக்கான இணைப்பான Young Worldல் எழுதிய 11 சிறு கட்டுரை களின் மொழிபெயர்ப்பைக் கொண்டதே இந்நூல். தமிழில் மொழிபெயர்த்தது ஆதி. வள்ளியப்பன். இவர் தமிழில் சூழியல் சார்ந்த பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதிவருபவர். காட்டுயிர்களைப் பற்றி மட்டு மல்லாமல் செல்லப் பிராணிகளைப் பற்றியும் சில கட்டுரைகளை இந் நூலில் காணலாம். பல நூல்களை எழுதியிருந்தாலும் தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியவைகளை ஏன் அவரே தமிழாக்கம் செய்து இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆதி வள்ளியப்பன் குழந்தைகளுக்காகவே தமிழில் பல கட்டுரைகளை எழுதிவருபவர். சிறுவர் களுக்கான ‘துளிர்’ அறிவியல் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இந்நூல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான Books of Childrenன் வெளியீடு. இதனாலேயே ஆதி வள்ளியப்பனின் பங்கை உணரலாம்.

குழந்தைகளுக்காக எழுதப்படும் அறிவியல், காட் டுயிர் சார்ந்த புத்தகங்களில் (உதாரணமாக ஆதி வள்ளியப்பனின் “மனிதர்க்கு தோழனடி”, ரேவதியின் “குருவி நடக்குமா” முதலிய அறிவியல் கதைகள்) யாவிலும் சொல்லப்படும் கருத்துகள் சிறுகதை அல்லது உரைநடை வடிவில் இருக்கும். இவை 10,15 வயதுள்ள குழந்தைகளுக்கானது எனலாம். ஆனால் இப்புத்தகத்தில் கட்டுரைகள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே பதினைந்து வயது குழந்தைகள் முதல், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருக்குமானது இப்புத்தகம்.

அழகிய, பொருத்தமான, வண்ண, வண்ணப் புகைப்படங்களும், ஓவியங் களும் எழுதப்பட்ட கருத்துகளை, விளக்கங்களை வாசகருக்கும் எளிதில் தெளிவுபடுத்தும். அதிலும் குழந்தைகள் புத்தகங்களில் வண்ண ஓவியங்களும், புகைப்படங்களும் அதிகம் இருக்க வேண்டும் என்பது என் அவா. ஆனால் இதில், ஒரு சில புகைப் படங்களை மட்டுமே உள்ளது. அட்டைப்படத்தில் அழகான ஆண் வெளிமானின் (ஆங்கிலத்தில் Blackbuck ஆனால் ஓரிடத்தில் Black buck என இரு வார்த்தைகளாக்கப் பட்டிருந்தது) புகைப்படமும், உள்ளே இரு இடங்களில் பட்டைத்தலை வாத்தின் (புகைப்படக்காரர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை) கருப்பு வெள்ளை படமும் தான் இருக்கிறது. பல கோட் டோவியங்களில் சில அழாகாகவே உள்ளன. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந் திருக்கலாம். கலர் படங்கள் கொண்ட புத்தகங்களை அச்சடிக்க நிறைய செலவாகும். புத்தகத்தின் விலையும் கூடும். எனினும் இந்த நிலை மாற வேண்டும்.

இயற்கையும் காட்டுயிர்களும் கட்டுரையில் பழந்திண்ணி வெளவால் பறக்கும் போது உண்டாக்கும் ஒலியின் எதிரொலி மூலம் வழி கண்டறியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழந்திண்ணி வெளவால்கள் அப்படிச் செய்வதில்லை. அதற்குக் கண்கள் பெரியவை. பூச்சியுண்ணும் சிறிய வெளவால்கள் (Microchiroptera) தான் எதிரொலியை ஏற்படுத்திப் பறக்கவும், அவற்றின் இரையைப் பிடிக்கவும் செய் கின்றன. வானம்பாடியை தரையில் வாழும் பறவை என குறிப்பிடப்பட்டுள்ளது (தரையில் வாழும் வானம் பாடி எனும் கட்டுரை), எனினும் வெட்ட வெளியில், அடர்த்தியில்லாத புதர்க்காடுகளில் வாழும் என்பதே பொருத்தமாக இருக்கும். தரையில் கூடமைத்தாலும் இவை கவுதாரி, காட்டுக்கோழி, மயில் போன்ற தரைவாழ் பறவைகள் (Terrestrial) அல்ல. வெளிமான் களின் வாழிடம் எனும் தலைப்பிலமைந்த கட்டுரையின் இறுதியில் இரைக்கொல்லிப் பறவைகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. விளக்கத்தை வைத்துப் பார்க்கும் பார்த்தால் அது பூனைப்பருந்தாக (Harrier) இருக்க வேண்டும், வல்லூறு (Falcon) அல்ல. தாமரைக்கோழி கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பூனைப்பருந்து Marsh Harrier என ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. பறவைகளுக்கு ஒரு விடுதி கட்டுரையில் சொல்லப்படும் கொம்பன் ஆந்தை/கோட்டான் Barn Owl எனும் பறவை. இதை கூகை என்றும் கூறுவர். Horned Owl ஐ தான் கொம்பன் ஆந்தை என்பர். பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர்களையும் கொடுத் திருக்கலாம். தமிழ்பெயர்கள் மாறி வருவதை கவனித்து திருத்தி அமைத்திருக்கலாம். இது ஆசிரியரின்/மொழி பெயர்ப்பாளரின் தவறில்லை. தமிழ்நாட்டில் ஒரு பறவைக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒவ்வொர் பெயரிட்டு அழைப்பார்கள். க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் எனும் புத்தகத்தில் இவை அனைத் தையும் ஒன்று சேர்த்து வழங்கியுள்ளார். இப்பெயர் களையெல்லாம் ஒருங்கே நெறிப்படுத்த வேண்டிய தருணம் இது.

ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதன் ஆங்கில மூலத்தின் தலைப்பையும், வெளிவந்த நாளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். இதில் உள்ளது மொத்த பக்கங்களே நாற்பத்தி எட்டுத்தான். விலை ரூபாய் 25 தான். நாம் செய்யும் பல தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு புத்தகமாவது வாங்க முடியும். இது போன்ற புத்தகங்களை அல்லது இதிலுள்ள கட்டுரைகளை பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். அல்லது துணைப் பாடநூலாக வைக்கலாம். எல்லாப் பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த கல்வி என்பதே இல்லாத இச்சூழலில் இது போன்ற புத்தகங்கள் அதன் குறையைப் போக்கும். இது போன்ற புத்தகங்களே பொதுமக்கள் மத்தியில் காட்டுயிர் பேணல் விழிப்புணர்வு, இயற்கையின் பால் நாட்டம், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை. இப்புத்தகத்தின் நோக்கமும் அதுதான்.

நூல் பெயர்: நம்மைச் சுற்றி காட்டுயிர்

ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்

தமிழில் : ஆதி வள்ளியப்பன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

 சென்னை

அலைபேசி: 94434 95151

விலை ரூ. 30 பக்கம்: 48

Pin It