வேலூர் சிறைச்சாலையில் அற்புதம் அம்மாளுடன் சென்று தோழர் பேரறிவாளனைச் சந்தித்தேன். பார்த்தவுடன் நீங்கள் சீனிவாசனா என்று கேட்டார். சந்திப்பு உணர்ச்சிகரமாகவும், ஞானத் தெளிவுடன் நம்பிக்கையாக இருந்தது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் முதன்முதலாக தனக்காக, மரண தண்டனைக்கு எதிராக களத்தில் இறங்கியதை நினைவுகூர்ந்தார். மிக உக்கிரமான காலகட்டத்தில் தோழர் நெடுஞ்செழியன் முழுமையாக மரண தண்டனைக்கு எதிரான பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் என்பதையும் தெரிவித்தார். வெளியுலகின் கசப்புகளும் அவநம்பிக்கைகளும் மறைந்து மிக உற்சாகத்துடன் வெளியில் வந்தோம். போராடுவதற்கான மனபலத்தையும் அவர் தந்தார். அவநம்பிக்கை உள்ளவர்களும், உற்சாகமற்றவர்களும் அவரைச் சந்தித்து தங்களைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்தப் புதுவருடம் பொருள் பொதிந்ததாக இடிந்தகரை மக்களுடன் கழிந்தது. மூன்று நாட்கள் அணுஉலை எதிர்ப்பாளர்களுடன் அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொண்டு, இந்தியா முழுமையிலும் இருந்து வந்த சுற்றுச்சூழல் போராளிகளுடனும் ‘எதிர்ப்பைக் கொண்டாடினோம்’. போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள், ஜெய்தாபூர், ஜார்கண்ட், உத்திரப்பிரதேஷ், ஒரிசா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகத்திலிருந்து வந்த போராளிகளுடன் வெறும் எதிர்ப்புணர்வையும் தாண்டி கலை நிகழ்ச்சிகள், மீன் உணவு, கடல் காற்று என்று ஐந்நூறு நாட்களுக்கும் மேலான போராட்டம் வேறொரு மனவெழுச்சிக்கு வந்தது. ஆயிரக்கணக்கான வழக்குகள், கைதுகள், அடக்குமுறை, அரச பயங்கரவாதம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மீண்டும் எழுச்சி மிகு போராட்டத்திற்கு, புதுப்பிப்பதற்கு புதுவருடக் கொண்டாட்டம் மிக அவசியமானதாக இருந்தது.

பத்திரிகைகளில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கசாப்பின் கருணை மனு நிராகரிப்பு செய்தியாக வெளிவந்தது. கூரிய அவதானிப்பு உள்ளவர்களுக்கு நிச்சயம் இது செய்தியல்ல. எதிர்பார்த்தபடியும், யாரும் எதிர்பார்க்காதபடியும் திடீரென கசாப்பிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமருக்கே தெரியாது என்று கப்சா விட்டார்கள். தூக்குத் தண்டனை எதிர்க்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம். ஆனால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட முறை முற்றிலும் சனநாயக விரோதமானது. கசாப்பிற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மக்களிடம் கருத்தும் சொல்லப்படவில்லை. இந்த நடைமுறை ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் தாண்டி கசாப் குற்றவாளியே அல்ல, இவர் 1994இல் நேபாளில் பிடிபட்டவர். இவருக்கும் மும்பை குண்டுவெடிப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்கிறார் எஸ்.எம். முஸ்ரீப். வேண்டுமானால் கர்கரேயைக் கொலை செய்தது யார் என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். நண்பர் குலாம் இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தலைசுற்றுகிறது.

Pin It